Rajini's Thoughts
"நீ லாயக்கில்லை'' என்று யாராவது என்கிட்ட சொன்னா, `நான் லாயக்கு'ன்னு நிரூபிப்பேன்.
பெங்களூரில் கண்டக்டராக இருந்தபோது சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஒரு வெறியே இருந்தது. என் தந்தையோ, "ஆமா, நீ பெரிய மன்மதன்! சினிமாவிலே சேர்ந்து ஹீரோவாகப்போறே'' என்று இளப்பமாகச் சொன்னார். அதுவே எனக்கு பெரிய சவாலாக இருந்தது.
நான் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டதே கிடையாது. வில்லனாகத்தான் வரவேண்டுமென்று நினைத்தேன். முதலில் கன்னடப் படத்தில்தான் நடிப்பேன் என்று நினைத்தேன். தமிழில்தான் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆரம்பம் முதலே தமிழ் கற்றுக்கொண்டு என் சொந்தக் குரலில் பேசவேண்டுமென்று தீர்மானமாக இருந்து அதை செயல்படுத்தி வந்தேன்.
அதுபோல் `அந்தா கானூன்' இந்திப்படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது, `ஸ்டண்ட் மாஸ்டர்களெல்லாம் என்னை மதிக்கவே மாட்டார்கம். படப்பிடிப்பில் ஷாட்டுக்கு என்னை அழைக்கும்போது கூட, சொடக்கு போட்டுத்தான் கூப்பிடுவார்கம். நான் விதம் விதமாக ஸ்டைல் செய்வதற்கு என்னை அனுமதிக்கவே மாட்டார்கம். தாங்கம் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்ய வேண்டுமென்பார்கம்.
`அந்தா கானூன்' ஹிட்டாகி, `கங்குவா' ஹிட்டாகி, அடுத்து `ஜான் ஜானி ஜனார்த்தன்' உருவானபோது எனக்குக் கிடைத்த மரியாதையே வேறு.
ரஜினி `சுயதரிசனம்' 2
நம் வாழ்க்கையில் அம்மா, அப்பா, நேரம் ஆகிய மூன்றும் முக்கியம். இந்த மூன்றையும் இழந்து விட்டால், மீண்டும் பெறமுடியாது.
அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடத்தை நேரத்துக்கு - அதாவது காலத்துக்கு கொடுத்திருக்கிறேன். இன்றைய தினத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இன்றைய தேதி மீண்டும் நம் வாழ்க்கையில் வராது. நேரத்தை நாம் ஏமாற்றக்கூடாது. நேரத்தை நாம் ஏமாற்ற ஆரம்பித்தால், நேரம் நம்மை ஏமாற்ற ஆரம்பித்து விடும்.
நேரத்தை சரியாப் பயன்படுத்தி, நமக்கும், நம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் பயன்படுகிற முறையில் நாம் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.''
ரஜினி `சுயதரிசனம்' 3
"பணம், புகழ், இமேஜ் இவைகளுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டு நிற்கிறேன். ஆசாபாசம் அதிகம் உள்ள இந்த உலகத்தில் உழன்று கொண்டிருப்பதை விடுத்து, அமைதியாக என் கடமைகளைச் செய்ய விரும்புகிறேன். பணத்தால் என்னை யாரும், எப்போதுமே வாங்க முடியாது. நான் விரும்பினால்தான் எதையும் செய்வேன். விருப்பம் இல்லாவிட்டால், யார் சொன்னாலும் கேட்கமாட்டேன்.
அமைதியான சூழ்நிலையில், மனம் ஆழமாக பக்தி மார்க்கத்தில் ஆழ்ந்திருந்தால், அடையப்போகும் இன்பத்திற்கு ஈடு இணையே இல்லை.
ரஜினி `சுயதரிசனம்' 4
"எப்படியும் வாழலாம் என்று நினைக்கக்கூடாது. இப்படித்தான் வாழணும் என்று வாழ்ந்தால்தான் அது வாழ்க்கை. வசதி, வாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடாது.
எல்லோரும் வாழணும், எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைப்பவன்தான் மனிதன். அந்த மனிதன் தர்மத்தை மீறக்கூடாது.
இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால்தான் மன நிம்மதி கிடைக்கும். மன நிம்மதி இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இல்லை என்றால் அது வாழ்க்கை அல்ல.''
ரஜினி `சுயதரிசனம்' 5
"ஆரம்ப காலங்களில் நான் முரட்டுத்தனமாகப் பலரிடம் நடந்து கொண்டதை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன். ஆனால் அதற்குக்காரணம், குறுகிய மனப்பான்மை அல்ல. அவர்களின் அணுகுமுறையும் ஒரு காரணம்.''
ரஜினி `சுயதரிசனம்' 6
"நான் இந்த உலகத்தில் இரண்டே இரண்டு பேருக்கு மட்டும்தான் பயப்படுவேன். அதில் ஒருத்தர் கடவுள். மற்றொருவர் என் மனச்சாட்சி.
இந்த இரண்டு பேருக்கு மட்டும் பயந்தால் போதும். மற்றபடி வேறு யாருக்கும் இந்த உலகத்தில் பயப்படத் தேவை இல்லை.
இதை நான் கற்றுக்கொண்டது, மறைந்த பட அதிபர் சின்னப்ப தேவரிடம் இருந்துதான்.''
ரஜினி `சுயதரிசனம்' 7
"நான் உண்மையே பேசிப் பழகிவிட்டேன். இந்தப் பணம், புகழ், பேர் வந்திட்டா பொய் பேசவேண்டிய நிலைமையும் வந்துவிடும்.
சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்ட காலத்திலேயே உண்மை பேசிவிட்டு, வசதியான வாழ்க்கை அமைந்தபின் இப்போது பொய் பேச மனதுக்கு பிடிக்கவில்லை. இனிமேல் வாழப்போற காலம் முழுவதும் பொய் பேசாமல் இருந்து விடவேண்டும் என்று தோன்றுகிறது.''
ரஜினி `சுயதரிசனம்' 8
"அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் யானையுடனும், "பைரவி''யில் பாம்புடனும் நடித்தபோது, மனிதர்களை விட அவை பாசம் கொண்டவையாகவே எனக்குத் தோன்றியது.
மனிதர்களைக் குறை சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். சில நல்ல மனிதர்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.
ரஜினி `சுயதரிசனம்' 9
நமக்கு மொழிப்பற்று இருக்கலாம். ஆனால் மொழி வெறி இருக்கக் கூடாது.
நமக்கு இந்தியன் என்ற உணர்வு எப்போது வருமோ, அப்போதுதான் இந்த நாடு உருப்படும்.
ரஜினி `சுயதரிசனம்' 10
நான் நிறைய விஷயங்களை, சின்னக் குழந்தைங்க கிட்டே இருந்து கத்துக்கிட்டேன்; கத்துக்கறேன். ஏன், பறவைகள், மிருகங்கள் கிட்டே இருந்து கூட கத்துக்கறேன்.
சில விஷயங்களில், மனுஷனை விட மிருகங்கள் உயர்ந்து நிற்கின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்துப் பொறாமைப் படுவான். ஆனால், மிருகங்கள் அப்படி இல்லே. ஒரு ஆடு, தான் புலியா மாறணும்னு புழுங்குதா? ஒரு மாடு, தான் யானையா மாறணும்னு நினைக்குதா?
ரஜினி `சுயதரிசனம்' 11
"இந்தப் பணம், புகழ், அதிகாரம் எல்லாமே ஒரு மாயைதான். நடிப்பது என் தொழில் மட்டும். இவ்வளவு பணம் கிடைத்தால் போதும், வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்தால், எங்கே புல்ஸ்டாப் போடறதுன்னு யாருக்கும் தெரியாது; போடவும் முடியாது.
நான் முதலில் நடிக்க வந்தபோது, மாதத்துக்குப் பத்தாயிரம் கிடைத்தால் போதும், வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஐம்பதாயிரம் ஆச்சு, இரண்டு லட்சம் ஆச்சு... பத்து லட்சம் ஆச்சு... ஆனால் பணத்தினால் மட்டும் நான் சந்தோஷம் அடைய முடியலே...''
ரஜினி `சுயதரிசனம்' 12
"நான் ஆன்மீகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டும் அளவுக்கு ஆன்மீகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரியான ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை.''
ரஜினி `சுயதரிசனம்' 13
நான் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, அரசியல்வாதியாக ஆகணும் என்றோ எப்போதும் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. திடீரென்று அரசியலுக்கு வாங்க, வாங்க என்று சொன்னால், அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எந்த ஒரு வேலையாகட்டும், காரியமாகட்டும், அதை ஒழுங்கா செய்யணும்; கரெக்டா செய்யணும்னுதான் நான் நினைப்பேன். தனி ஒரு மனிதனால் எந்த நாட்டையும் திருத்திவிட முடியாது. நம்ம நாட்டை திருத்தணுங்கிற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வரணும்.
ரஜினி `சுயதரிசனம்' 14
"ரசிகர் மன்றங்கள் அமைப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம். நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவையா, இல்லையா என்கிற ஆராய்ச்சியும் தேவையற்றது. அது நடிகர்களின் சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. என்னைக் கேட்காமல் ஏன் மன்றம் வைத்தீர்கள் என்று யாரையும் நான் கேட்கமாட்டேன். எனக்குக் கெட்ட பெயர் ஏதும் வராமல் பார்த்துக்கொண்டாலே போதும்.''
ரஜினி `சுயதரிசனம்' 15
"எனக்கு நான்தான் நல்ல நண்பன். அதாவது சிவாஜிராவ். அதற்கு இன்னொரு பெயர் மனசாட்சி. தூங்குவதற்கு முன்னும், தூங்கி எழுந்தபின்னும் கிடைக்கும் தனிமையில்தான் என் நண்பனிடம் மனம் விட்டுப் பேசிக்கொள்வேன்.
ரஜினி `சுயதரிசனம்' 16
"புத்திசாலிகள் மீது எனக்கு கோபமில்லை. ஆனால் வருத்தம் உண்டு. வெறும் படிப்பை வைத்துக்கொண்டு, இப்படி வாழ்க்கையை வீணாக்குகிறார்களே என்று வருத்தப்படுவேன். வெறும் புத்தகப்படிப்பு போதவே போதாது. அனுபவம்தான் பெரிய படிப்பு.''
ரஜினி `சுயதரிசனம்' 17
உலகத்தில் எப்போதும் சந்தோஷமா இருக்கிறவங்க மூணு பேர். ஞானி, குழந்தை, பைத்தியக்காரன்.
ஞானி - எல்லாவற்றையும் அறிந்தவர். குழந்தை-எதையும் அறியாதது. பைத்தியக் காரன் - எதுவும் தெரியாது; எதுவும் புரியாது.
ரஜினி `சுயதரிசனம்' 18
"தமிழ் மக்களின் நெஞ்சங்கள், ஈரம் உள்ள இரும்பு நெஞ்சங்கள். அந்த நெஞ்சுக்குள்ளே போவதுதான் கஷ்டம். ஒரு தடவை உள்ளே போயிட்டா, யாரும் வெளியே எடுக்க முடியாது.''
ரஜினி விரும்பும் பொன்மொழி
"எவன் ஒருவனும் ஒன்றை விரும்பி விட்டால், அதை அடைவதில் இருந்து அவனை உலகின் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.''
- இது ரஜினி வீட்டு வரவேற்பு அறையில் பளிச்சிடும் பொன்மொழி. இது விவேகானந்தர் கூறியதாகும்.
ரஜினியின் கனவு
ரஜினிகாந்துக்கு, சினிமா உலகில் நுழையும்போது, ஒரு சின்ன ஆசை இருந்தது.
"காலை நீட்டிப்படுக்க ஒரு சின்ன பிளாட். ஊரைச் சுற்ற ஒரு ஸ்கூட்டர். இது கிடைத்தாலே போதும் என்றுதான் அப்போது நினைத்தேன். அதைவிட நூறு மடங்கு சம்பாதிச்சாச்சு. அதைக் கொடுத்தது தமிழ் மண்தான்'' என்கிறார், ரஜினி.
|