Superstar Rajinikanth Interview in Zee TV in 2018
நான்கு ஆண்டு கால இடைவேளை!! ஒரு ஒலிம்பிக், ஒரு உலகக்கோப்பை போல ஒரு இடைவேளை !!
2010 இல் எந்திரனுக்காக ; 2014 இல் கோச்சடையானுக்காக ; பிறகு இப்பொழுது. ஆனால் முந்தைய இரு பேட்டிகளை விடவும் இதில் முற்றிலும் மாறுபட்ட தலைவர் !!
என்ன ஒரு புத்துணர்ச்சி !! பேச்சில் என்ன ஒரு வேகம் !! ஒரு வரி பேசுவதற்குள் கை விரல்களில் மட்டும் ஆயிரம் அசைவுகள் !! வாரே வா!! என்ன ஒரு ஸ்டைல் !!
ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. இதில் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு வெறித்தனமான, தனது தலைவனை தெய்வமாகப் பார்க்கும் ரசிகனின் அதே மனநிலையில் அவரது கேள்வியும் அதைக் கேட்கும் விதமும் அமைந்து இருந்தது.
பல இடங்களில் தலைவரே வெட்கப்படும் அளவிற்குத் தனக்குள் இருந்த அந்த ரசிகையை வெளிக்கொண்டு வந்திருந்தார்.
ஸ்பெஷல் தேங்க்ஸ் அர்ச்சனா மேடம் !! எங்களது தலைவரை இவ்வளவு சந்தோசமாக, தேஜசுடன் அந்த ஆத்மார்த்தமான சிரிப்புடன் எங்களுக்குக் காட்டியதற்குக் கோடி நன்றிகள் !!
இந்தப் பேட்டி தலைவரின் பேட்டிகளில் எப்போதுமே தனித்துத் தெரியும்.
சமீபத்திய காலங்களில் வாரம் இரு முறை தொலைகாட்சியில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் கிடைத்த கேப்பில் தன்னைப் பற்றிய சுய புராணத்தை மட்டுமே பாடிக்கொண்டிருந்த சமயத்தில் , நான்கு ஆண்டுகள் கழித்துப் பேட்டி கொடுத்தாலும் பிறரை பாராட்டுவதையே பிரதானமாகக் கொண்டு இருந்த தலைவரின் பதில்கள் நெகிழ்ச்சியை உண்டாக்கியது.
ஒன்றரை மணி நேர பேட்டியில் தலைவரை சார்ந்து கேள்வி எழுப்பப்பட்ட போதும் கூட அதற்கு மற்றவர்களையே பாராட்டினார் தலைவர்.
உதாரணமாக என்னுடைய வெற்றிக்குக் காரணம் என்னுடைய டைரக்டர்ஸ், சினிமா யூனிட், தன்னடக்கமாக நான் எம்.ஜி.ஆர் காலத்தில் நடிக்கவில்லை, தன்னிலை உணர்ந்தவராகக் கடவுளின் அருள் என்று கூறியது நினைவிருக்கலாம்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக “அட இதெல்லாம் என்னங்க ஸ்டைல்... சும்மா இருங்க” என்று அவர் கூறியது அவர் மீது இருந்த பிரம்மிப்பை இரு மடங்கு ஆக்கியது.
ஒரு பெண் தன்னை ஒரு பிச்சைக்காரன் என்று எண்ணும் அளவிற்கு எளிமையாய் இருக்கும் அவர், அதே எளிமை பற்றிய மற்றொரு கேள்விக்கு “வாழுறது போயஸ் கார்டன், போவது B.M.W கார், இதுல என்ன சிம்ப்ளிசிட்டி” என கேட்டு அசரடிக்கிறார்.
தன்னையன்றி வேறொருவனைத் "தலைவா!" என்று ஒருவர் அழைத்தார் என்று கூற எவருக்கு மனம் வரும் !!
பெயர் புகழ் ஏதும் நிலையானதல்ல !! எல்லாம் மாயா என்று அவர் கூறுவது பலருக்கு ஒரு தந்தையின் அறிவுரை போல மனதிற்கு நெருக்கமாக அமைந்தது என்பதில் சந்தேகமே இல்லை.
பிடித்த பாடல் “போனால் போகட்டும் போடா”, ‘கனவில் இருக்கும் சந்தோஷம் நிஜத்தில் இருப்பதில்லை’ எனக் கூறிவிட்டு ‘கல்யாணம் உட்பட’ எனச் சொல்லி அந்த டிரேட் மார்க் சிரிப்பெல்லாம் Typical Thalaivar Touch !! அந்தச் சிரிப்பிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் நான் அந்தப் பேட்டியை பார்ப்பேன்.
தங்களுடைய ஈர்ப்பு சக்திக்குக் காரணம் என்ன என்று கேட்ட போது ஆண்டவனைக் கை காட்டி, நான் என் கடமையைச் செய்தேன் ; பலனை அவர் வழங்குகிறார் எனச் சொல்லாமல் சொல்லி விட்டார்.
ஆனால், பொதுவாகப் பிரபலம் என்றால் அண்ணாந்து பார்க்கும் நமது சமூகத்தில் ‘350 ருபாய் சம்பளம் வாங்கிய எனக்கு 3 லட்சம் சம்பளம் தந்த போது நான் ஒரு தனிப் பிறவியோ என்ற எண்ணம் வந்தது, பின்பு தான் என்னக்கென ஒரு காலம் அது எனப் புரிந்து கொண்டேன்’ என்று பக்குவமாக அவர் பேசியது, அவர் பிரபலம் என்ற ஒரு பிம்பத்தைத் தாண்டி நம் குடும்பத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதராக அவரைப் பார்க்க வைத்தது... நான் உணர்ந்த வரையில் இந்த ஒரு Attachment தான் தலைவரின் அந்த ஈர்ப்புக்குக் காரணம் !!
ஒன்றரை மணி நேரத்தில் ஒரு சிறு சுய பெருமை இல்லை; போட்டி பொறமை வஞ்சகம் இல்லை; தன்னுடைய சமகாலப் போட்டியாளராக இருந்த கமல்ஹாசன் பற்றிய கேள்விக்கு ‘கமலோடு ஒரே காரில் பயணம் செய்த போது கிள்ளி பார்த்துக்கொண்டேன்’ எனக் குழந்தை போலக் கூறியதெல்லாம் வேற லெவல்.
அது ஒரு தனி மரியாதையைத் தலைவர் மீது கொண்டு வருகிறது.
இதனால் தான் அந்த நிகழ்ச்சியில் S-U-P-E-R S-T-A-R டைட்டில் கார்டு ஒளிபரப்பான போது அரங்கினுள்ளேயே விசில் பறந்தது.
அர்ச்சனா அவர்களின் கேள்வியே சில இடங்களில் வித்யாசமாக இருந்தது ஆனால், தலைவரின் பதிலோ அதற்கும் ஒரு படி மேலே வித்தியாசம் !!
உதாரணமாக 5 ஹீரோயின்களின் பெயரை அவர் சொன்னாலும் , அந்த லிஸ்டில் இல்லாத இருவரின் பெயரை சொன்னதைக் கூறலாம்.
ஆனால் அர்ச்சனா அவர்கள் Option கொடுக்கும் பொழுது தலைவர் கூறிய இருவரின் பெயர் தான் பெரும்பாலான ரசிகர்களின் மனதிலும் ஓடியது. (என் வீட்டில் கண்கூடாகப் பார்த்தேன்).
நிச்சயமாக ரசிகனின் பல்ஸை இந்த அளவுக்கு வேறு எவரால் அறிய முடியும் எனத் தெரியவில்லை. என்ன மாறி கதை வேண்டும் எனக் கேட்ட போது ‘நமக்குக் கிளாஸ்ஸிக் எல்லாம் ஒத்து வராது, மாஸ் தான்’ எனக் கூறியதும் பொருந்தும்.
மொத்தத்தில் நவம்பர் 29 அன்று தீபாவளி கொண்டாட இருந்த நமக்கு, நேற்றே இனிய தீபாவளியாக அமைத்துக்கொடுத்து விட்டார் தலைவர்.
அந்தப் பேட்டிக்கான வாய்ப்பை அமைத்து கொடுத்த 2.0 குழுவிற்கும், Zee தொலைக்காட்சிக்கும், என்றும் இதை நினைவில் நீங்கா வண்ணம் ஒரு தலைவரின் ரசிகையாகத் தொகுத்து வழங்கிய அர்ச்சனா அவர்களுக்கும் அனைத்து தலைவரின் ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-விக்னேஷ் செல்வராஜ்
Thalaivar Full Interview Video
மேலும் விரிவான தலைவரின் ZEE TV பேட்டி தொடர்ச்சி :
போனால் போகட்டும் போடா பாடல்தான் ரொம்பப் பிடிக்கும் என்று ஆரம்பித்ததில் இருந்து சரவெடி. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது போல முதல் பதிலிலேயே அபாரம்.
கனவாக இருப்பது நனவாகும் போது அவ்வளவு ஈர்ப்பாக இல்லை - அது எல்லாவற்றிலும்தான் - கல்யாணத்தையும் சேர்த்து என்றதில் அடுத்த அட்டகாசம்.
எல்லாரும் சொல்லுற ‘சிம்பிளிசிடி’ பற்றிய கேள்விக்கு வெளிப்படையாக போயஸ் கார்டன், பி.எம்.டபிள்யூ காரிலே போறோம்.. இதிலே என்ன சிம்பிளிசிட்டி என்ற கேள்வி..
ஷங்கரைப் பாராட்டிய விதம்.. மொத்த கிரெடிட்டையும் அவருக்குக் கொடுத்தது.. அவர் செய்ததைப் பார்த்தால் நான் ஒண்ணுமே செய்யலை என்ற தன்னடக்கம். டைரக்டரைக் கேட்காமல் எதுவும் சொல்ல முடியாதுங்க என்பது அருமை. எத்தனை உயரம் தொட்டாலும் இயக்குநரை மதிப்பது கலக்கல்.
என்னோட நல்ல நேரம் ஷங்கர் நடிப்புக்கு வரலை என்றதும், ஸ்டைல் பண்ணனுமுன்னு இப்பவும் நான் பண்றது கிடையாது என்பதும் கூட தன்னடக்கத்தின் உச்சமே.
ஃபடாபட் ஜெயலட்சுமி..ராதிகா.. எதிர்பாராத பதில்
ஈர்ப்பை எப்படி உருவாக்குறீங்க? என்பதற்கு ஆண்டவனைக் கை காட்டியது அருமை.
திடீருன்னு பணம் வந்திடுச்சே.. நாம தனிப்பிறவியோ.. ஆண்டவன் நம்மை தனியா உருவாக்கிட்டானோன்னு ஒரு எண்ணம் வந்துச்சு. எல்லாம் நேரம்தான் என்று அப்புறம்தான் புரிய வந்திச்சு. 60களில் வந்திருந்தால் நாம அவுட்டுதான். நாம வந்தப்ப எம்.ஜி.ஆர்., சிவாஜியெல்லாம் இல்லை.
எப்பவுமே சந்தோஷம் இருக்கும். அதான் பவர் ஆஃப் ட்ரூத்.. இது சத்தியமான உண்மை.
அக்ஷய்குமார்தான் ஹீரோ..அவர்தான் வில்லன். இதில் ரஜினிகாந்தே தேவையில்லை என்பதெல்லாம் வேற லெவல்.
சகநடிகர்கள் எமிஜாக்சன், அக்ஷய்குமார் பற்றியெல்லாம் பாராட்டிப் பேசியது அட்டகாசம். தயாரிப்பாளரை சுபாஷ்கரணைப் பாராட்டியதும் கலக்கல்.
எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க என்று பார்த்ததைப் பிறகும் பாராட்டாமல் விடுப்பது சரியல்ல என்றது நல்ல மனசு.
அமிதாப்ஜியின் பாராட்டு பற்றிய பேச்சு எத்தனை காலமானாலும் மறக்காத தன்மை.
அபூர்வ ராகங்கள் வீடு நமக்குக் கிடைக்கவில்லை என்றவுடன் அதன் பிறகு அது பற்றி யோசிக்கவில்லை என்பது சூப்பர்.
பேட்டியின் போது Sorry to interrupt..ன்னு சொல்லுறதெல்லாம். தலைவருக்கு மட்டுமே உரியது.
மாஸ்.. மனதைத் தொடுவது.. - மக்களின் பல்ஸ
பெங்களூரு கோவில் பெங்காலி அம்மாள் சம்பவம் வேற ரகம். சிலிர்ப்பு & சிறப்பு.
இதில் சினிமாவில் வந்த போது எப்படி எம்.ஜி.ஆர்., சிவாஜி இல்லாததால் பெருவெற்றி பெற முடிந்ததோ, அப்படியே இப்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ள தமிழக அரசியலில் பெரிய வெற்றியை அடையமுடியும் என்றதொரு எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தும். அது ஓரளவுதான் உண்மை. அவர்கள் இருந்திருந்த போதே வந்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றாலும் முன்பு பேசிய வெற்றிடம் இருக்கிறது என்பதன் தொடர்ச்சியாக இதைப் பார்க்க முடிகிறது.
என்னதான் வெற்றிக்கு அதி முக்கிய 90% காரணம் என்றாலும், ‘நான் ஒண்ணும் செய்யலை.. டீம் வொர்க்தான்’ என்பது போலவே தொடரந்து பேசிவருவது ’நல்ல அறிஞர்கள் ஆலோசனையுடன் நல்லாட்சி செய்வேன்’ என்று கூறியதன் தொடர்ச்சியாக பார்க்கலாம்.
ராதிகா போன்றோர் தொடர்ந்து எதிர்கருத்து பேசி வரும் வேளையில் எதிர்பாராவிதமாக அவர் பெயரைக் குறிப்பிட்டது ‘பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்பது போல மனோரமா ஆச்சி சம்பவத்திலிருந்தே நிருபிக்கப்பட்டுவரும் தன்மையின் தொடர்ச்சி.
போன தலைமுறை பெண்கள் இன்னமும் கூட படாபட் ஜெயலட்சுமி, ராதிகா ஆகியோர்தான் தலைவருக்கு சரியான ஜோடி திரைப்படத்தில் என்று இன்னமும் கூட பேசுவதுண்டு. மக்களின் பல்ஸை இன்னமும் தெரிந்தே வைத்துள்ளீர்கள் என்பதற்கு இந்த பதிலே சாட்சி.
திரைப்படத்தில் மட்டுமல்ல அரசியலிலும் கமல்ஹாசன் நமக்கு எதிர் என்பது போல ஊடகங்கள் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைந்தாலும் அப்படியே அவரை தூக்கி வைத்துப் பாராட்டிப் பேசியது தலைவரைத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமில்லை. அதுவும் அவரை சூப்பர் ஸ்டார் என்று! வாய்ப்பே இல்லை.
இந்த மனநிலை வேறு யாருக்கும் வராது. குறிப்பாக கமலுக்கு Sorry to say.
குழந்தைகளைக் கடத்தி கொலை செய்வது, பிச்சை எடுக்கச் செய்வது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.. அவர்களை நடு ரோட்டில் சுடணும்.. இந்த டாபிக் யாரும் பெரிய அளவில் தொட்டதே இல்லை.. மனிதாபிமானம்.
எம்.ஜி.ஆர். ஒரு தெய்வப் பிறவி. அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. இதிலும் அரசியல் சாயல் மீண்டும். :-)
உடல்நிலையைப் பற்றி யார் இப்படி தெளிவாகப் பேசுவார்கள்? அதுவும் திரை மற்றும் அரசியல் உலகில்?
சூப்பர் ஸ்டார் சார் நீங்க என்றதற்கு.. வெட்கத்துடன் சிரிப்பு.. நீங்க வேற என்றதெல்லாம் வேறு யாரால் முடியும்? தூங்குறதிலே என்னங்க ஸ்டைல் இருக்கு? செம்ம.. செம்ம.. Goosebumps.
வெட்கம்..சிரிப்பு.. சிலிர்ப்பு.. பாராட்டு.. என பல வகைப்பட்ட பாவங்களில் தலைவர் அளித்த பேட்டி பலருக்கு பல இடங்களில் ‘நான் தலைவர் ரசிகன்டா’ என்று நெஞ்சு நிமிர்த்தி பெருமிதம் கொள்ளச் செய்யும் விதமாகவே இருந்தது.
- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்
|