'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி' (பாகம் 6)
மனசு சரியில்லை. உன்னோடு நிறைய பேச வேண்டும்' என்று அண்ணனை அழைக்கும் ரஜினி, இரவு நேரம் கழித்துத்தான் வீட்டுக்கு அனுப்புவார். அந்த வகையில் என் கணவர் ரஜினிக்கு அண்ணன் என்பதைவிட ஒரு நெருங்கிய நண்பரைப் போலத்தான் இருந்தார்.
துளசிக்கு ரஜினியின் மீது கொள்ளை பிரியம். 'சிக்கப்பா' (சித்தப்பா) என்று ஆசையோடு சொல்கிறார்.
எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கும் ஜீஜாபாயை ரஜினி 'அத்திகே' (அண்ணி) என்றே அழைப்பாராம். அண்ணனை 'நாகேஷ்' என்று பெயர் சொல்லியே அழைத்து வந்தாராம்.
"என் கணவருக்குத் தம்பி ரஜினி மீது மிகுந்த பாசம். தம்பியைப் பற்றி யாராவது குறை சொன்னால் கடுமையான கோபம் வந்துவிடும். நானே சில சமயம் ரஜினியைக் குறைத்துக் கூறினால், அதை ஒத்துக் கொள்ளாமல் என்னோடு சண்டைக்கு வந்துவிடுவார்.
ரஜினியின் ஸ்டைலை நான் வீட்டிலெல்லாம் பார்த்ததில்லை. சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். அவர் திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றபோது, என் கணவர் பணம் கொடுத்து உதவினாரா என்று தெரியவில்லை.
ரஜினி சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பின் எங்கள் குடும்பத்திற்கு அடிக்கடி பண உதவிகள் செய்தார். நாகேஷ் அடிக்கடி சென்னை சென்று தம்பியைப் பார்த்து வருவார்.
ரஜினியும் திருமணத்திற்குப் பின், தன் மனைவி லதாவையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கிறார். நாங்களும் சென்னை சென்று ரஜினியையும் அவரது குழந்தைகளையும் பார்த்து வருவோம். என் கணவர் இறந்த பின் ராகவேந்திரா கல்யாண மண்டபத் திறப்பு விழாவிற்கு என் மகள் மகாலட்சுமியுடன் சென்று வந்தேன். அடுத்ததாக 'படையப்பா' விழாவிற்கு குடும்பத்தோடு சென்றேன்.
ஆரம்பத்தில் ரஜினி கண்டக்டராக இருந்தபோது பண்டிகை நாட்களில் எனக்குப் புடவை, அண்ணனுக்கு வேஷ்டி, சட்டையெல்லாம் தவறாமல் எடுத்துக் கொடுப்பார்.
நடிகரானபின் ரஜினி பெங்களூர் வந்தால் தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குத் தவறாமல் அண்ணனை வரவழைத்துக் கொள்வார். அன்றைக்கு என் கணவருக்கு வேலை நாளாக இருந்தாலும் லீவு போட்டுவிட்டு வரச் செய்து விடுவார் ரஜினி.
'மனசு சரியில்லை. உன்னோடு நிறைய பேச வேண்டும்' என்று அண்ணனை அழைக்கும் ரஜினி, இரவு நேரம் கழித்துத்தான் வீட்டுக்கு அனுப்புவார். அந்த வகையில் என் கணவர் ரஜினிக்கு அண்ணன் என்பதைவிட ஒரு நெருங்கிய நண்பரைப் போலத்தான் இருந்தார்.
என் கணவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு எச்.ஏ.எல். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். தான் இறந்துவிடப் போகிறோம் என்று நினைத்தாரோ என்னவோ, தம்பியைப் பார்க்க வேண்டுமென்று துடித்தார். ஆனால் ரஜினி அப்போது படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் நாங்கள் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 11.10.88-ல் என் கணவர் காலமானார்.
மறுநாள் அவரது உடலை இறுதிச் சடங்குக்காக எடுத்துச் சென்றபோது, வழியில் ரஜினியும், அவரது மனைவியும் வந்தார்கள். அண்ணனின் உடல் எரியூட்டப்படும் வரை கூடவே இருந்துவிட்டு, வீட்டிற்கு வந்து எனக்கு ஆறுதல் கூறி, ''பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வருவது என் பொறுப்பு'' என்று சொல்லிவிட்டுப் போனார்.
தன் அண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் ரஜினி வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது என் கணவர் உடல் நலமில்லாமல் இருந்தார்.
ரஜினி அவரிடம், "உன் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படாதே. நல்ல மருத்துவமனையில் சேர்ந்து கொள். அதற்கான செலவை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றவர், மனம் தாளாமல் கட்டிப்பிடித்து அழுதுவிட்டார் என்றார் ஜீஜாபாய்.
ஜீஜாபாய் வீட்டில் ரஜினியின் 'ராகவேந்திரா' தோற்றத்தில் உள்ள பெரிய படம் ஒன்று மாட்டப்பட்டிருக்கிறது. அது நாகேஷ் சென்னை சென்றிருந்தபோது விரும்பி வாங்கி வந்ததாம். 'மூன்று முடிச்சு' படத்திலுள்ள ரஜினியின் மற்றொரு படமும் உள்ளது.
ஜீஜாபாய் குடியிருக்கும் இடம் 500-லிருந்து 600 சதுர அடி இருக்கும். அதற்கு அருகிலேயே அதே அளவுள்ள மற்றொரு வீடு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. அந்த வீட்டில் வசிப்பவர் பத்தாண்டுகளுக்கும் மேலாய் 200 ரூபாய்தான் வாடகை தந்து வருகிறார். வாடகையை அதிகப்படுத்திக் கேட்டாலும், காலி செய்யச் சொன்னாலும் மறுத்து விடுகிறார்.
அத்தோடு நில்லாமல் கோர்ட், போலீஸ் என்று புகார் செய்து ஜீஜாபாய் குடும்பத்தாரை அலைய வைத்தாராம். நாகேஷ் உயிரோடு இருந்தபோதும் இதுபோல் பிரச்னை ஏற்பட்டு கோர்ட்டுக்கு அலையும்படி ஆனதாம்.
"வக்கீலுக்கு ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யும்படி ஆனது. எங்களிடமிருந்த பணம் போதாமல் வாங்கித்தான் சமாளித்தோம். கடைகளின் வாடகை வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். பக்கத்து வீட்டில் நியாயமான வாடகை வந்தால் அது எனக்கு உதவியாக இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு உதவுபவர் யாருமில்லை" என்று வருந்தினார் ஜீஜாபாய்.
ஆக ரஜினி வீடு வாங்கிக் கொடுத்து பேருதவி செய்தும், அதை முழுமையாக அனுபவிக்க இயலவில்லை என்பது துரதிர்ஷ்டமல்லவா?
மீசை வளர்க்கும் முயற்சியில்....
ரஜினிகாந்த் வாழ்க்கையில் மட்டுமின்றி, சினிமாவில் நடிக்கும்போதும் டென்ஷன் (மன உளைச்சல்) விரும்பாதவர். விக் வைத்து நடிக்க வேண்டும். தாடி வைக்க வேண்டும் என்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது.
'ப்ரியா'வில் ஜூலியஸ் சீசர் மீசையுடன் வந்த அதிசயம் ரஜினியால் மட்டுமே நிகழ்ந்தது. டைரக்டர் கேட்டுக் கொண்டும் மீசையை எடுக்க மறுத்துவிட்டார் ரஜினி. 'தில்லு முல்லு'வில் பாலசந்தரிடம் அது பலிக்கவில்லை.
அந்தப் படத்திற்காக ரஜினி மீசை எடுத்துக் கொண்டது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மீசையில்லாமல் ரஜினி கம்பீரமாகவே இருந்தார்.
ரஜினி விக், தாடி வைத்து ஒப்பனைக்காக சிரமப்பட்ட படம் ஒன்று உண்டென்றால் அது 'ராகவேந்திரா' படத்திற்காகத்தான். அந்தப் படத்திற்காகக் கடுமையான விரதமும் மேற்கொண்டார்.
மீசை விஷயத்தில் ரஜினிக்கு சினிமாவைப் பொருத்த வரையில் ஒரு தைரியம் இருந்ததென்றால், பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்தபோது ஒரு தாழ்வு மனப்பான்மையும் இருந்தது. அவர் வேலைக்குச் சேர்ந்த புதிதில் மீசையின்றி இருந்தார். மீசை முளைக்கும் பருவம் என்பார்களே, அது அவருக்கு தாமதமாகவே வந்தது. அதனால் பஸ்ஸில் செல்லும் போதெல்லாம் அவரை ஒரு பையனாகவே கருதிய மரியாதைதான் பிறரிடம் இருந்து கிடைத்தது. அது அவருக்கு உறுத்தலாக இருக்க, வலுக்கட்டாயமாக மீசை வளர்க்கும் முயற்சியில் இறங்கினார். மீசை முளைக்கிறதோ இல்லையோ, அடிக்கடி ஷேவ் செய்து கொள்ளத் தவறுவதில்லை. அதற்குப் பலனும் கிடைத்தது. மீசை வளர்ந்தபின் அவரது தோற்றமே மாறிப்போனது.
'மூன்று முகம்' படத்தில் அலெக்ஸ் பாண்டியன் வேடத்திற்காக ரஜினி தன்னை வருத்திக் கொண்டிருக்கிறார். விக், மீசை இவற்றில் மட்டுமின்றி முகத்தில் மேலும் முரட்டுத்தனம் வேண்டுமென்பதற்காக, கீழ்த்தாடையைப் பெரிதாக்கிக் கொள்ள பொய்யான தாடையைப் பொருத்திக் கொண்டு நடித்தார். தாடையில் அது உறுத்தலாக இருந்ததென்றாலும் கேரக்டரின் சிறப்புக்காக ரஜினி பொறுத்துக் கொண்டார்.
மற்றபடி 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மன்னர் கிருஷ்ண தேவராயர் வேடத்திற்காக விக் அணியாமல், சொந்த முடியுடன் நடித்த தைரியம் ரஜினியைத் தவிர யாருக்கு வரும்?
அது மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை வளைந்து கொடுத்துக் கொள்வதும், அநாவசியமாக வளைந்து விடாமலும் இருப்பதில் ரஜினிக்கு நிகர் அவரே.
பத்தாண்டுகளுக்கு முன் 'பாயும் புலி', 'துடிக்கும் கரங்கள்', 'அடுத்த வாரிசு' ஆகியவை எதிர்பார்த்த அளவில் ஓடாவிட்டாலும், விநியோகஸ்தர்களைப் பொருத்தவரையில் முதல் ஓட்டத்திலேயே லாபகரமாக அமைந்தன. அதனால் முந்தைய படங்கள் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை என்ற காரணத்தைச் சொல்லி சில தயாரிப்பாளர்கள் தங்களது அடுத்த படத்தில் ரேட்டைக் குறைத்துக் கொள்ளச் சொன்னபோது ரஜினி அதற்கு உடன்படவில்லை.
'அன்பிற்கு நான் அடிமை' படத்திற்குப் பின் தேவர் பிலிம்ஸின் அடுத்த படத்திற்காக ரஜினி ரேட்டை உயர்த்தி சொல்ல அவர்கள் பின் வாங்கி விட்டனர். அதற்கடுத்த சில மாதங்களில் ரஜினி கேட்கும் தொகையை ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் கொடுக்கத் தயாராகாத நிலையில் ரஜினிக்குப் பட எண்ணிக்கையில் தொய்வு இருப்பது தெரியவர, தன் தவறை உணர்ந்து தேவர் பிலிம்ஸ் தருகின்ற தொகைக்கு ஒப்புக் கொண்டு 'ரங்கா' படத்தில் நடித்தார்.
'போக்கிரி ராஜா' முடிந்த பின் ஏவிஎம்மின் அடுத்த படத்திற்காக (பாயும் புலி) ரஜினி ரேட்டை உயர்த்திச் சொல்ல, அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. "நீங்கள் நடிக்கின்ற படம் எங்கள் பேனர் வால்யூவில்தான் ஓடுகிறது" என்றார்களாம். ஆனால் 'அம்மா' படம் தோல்வியடைந்ததும் சத்தமேயில்லாமல் ரஜினி கேட்ட தொகையைக் கொடுத்து விட்டார்களாம்.
பாலாஜி சமாச்சாரமும் அப்படித்தான். 'தீ' படத்திற்குப் பின் பாலாஜியிடம் அவரது அடுத்த படத்திற்கு ரஜினி ரேட்டை உயர்த்திச் சொல்ல, அவர் மறுத்துவிட்டார். ஆனால் வியாபார ரீதியில் ரஜினியின் படங்கள் விலை போகுமளவிற்கு மற்றவர்கள் நடித்த படங்கள் போகாததால் பாலாஜி தனது விரதத்தை வாபஸ் செய்து கொண்டு, படிப்படியாக ரஜினியிடம் தொடர்புகொண்டு தனக்கொரு படம் செய்து தரும்படி கேட்டிருக்கிறார் (அவர் கேட்கும் தொகையைத் தர ஒப்புக் கொண்டு). ரஜினியும் கொஞ்சம் பிகு செய்து தட்டிக் கழித்திருக்கிறார்.
'துடிக்கும் கரங்கள்' படத்தின் படப்பிடிபபு ஊட்டியில் நடைபெற்றபோது 'பாயும் புலி' படப்பிடிப்பும் அங்கு நடந்தது. அந்தப் படத்தில் நடிக்க பாலாஜியும் அங்கு சென்றிருக்கிறார். ஒரு நாள் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் விருந்தொன்று நடந்திருக்கிறது. அதில் கலந்து கொண்டு பாலாஜி ரஜினியிடம் கால்ஷீட் சமாச்சாரம் பற்றி பேசியிருக்கிறார். அதற்கு ரஜினி "நீங்க இங்க ஒரு நண்பர் மாதிரி நடந்துகிட்டு பார்ட்டியை என்ஜாய் பண்ணுங்க. பிஸினஸ், கால்ஷீட் பற்றியெல்லாம் இங்க பேச வேண்டாம்" என்று சொல்லிவிட்டார். கடைசியில் ஒரு வழியாக பாலாஜியின் படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டார். கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த முறைதான் இது.
'குழந்தை யேசு' படத்தின் கதைச் சிறப்பினைக் கேட்ட ரஜினி, அந்தப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் விருப்பத்தினைத் தயாரிப்பாளரிடம் சூசகமாகத் தெரிவித்திருக்கிறார். தயாரிப்பாளருக்கு மிகவும் சந்தோஷம். அதனால் தன்னால் முடிந்த அளவிற்கு குறைந்தபட்ச ஊதியத்தை (ஒருலட்சம்) ரஜினியிடம் கொடுத்து ஒப்புக் கொள்ளச் செய்யலாம் என்ற நம்பிக்கையில் மீடியேட்டர் ஒருவரை ரஜினியிடம் விஷயங்கள் பேச அனுப்பியிருக்கிறார்.
ரஜினியின் வீட்டுக்குச் சென்ற அவர் முதலில் அவரது செயலாளரிடம் யதார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கையில் "ரஜினி இல்லையென்றால் (பிரசாந்த் தந்தை) தியாகராஜனைப் போடறதா இருந்தோம்" என்று சொல்லியிருக்கிறார். செயலாளர், ரஜினியிடம் அப்படியே அதை சொல்ல, அவருக்கு மனச் சங்கடம் வந்து கால்ஷீட் உடனே கிடைக்காது என்று (தவிர்ப்பதற்காக) மறுப்பு சொல்லாமல் அனுப்பியிருக்கிறார். அவர்கள் உடனே கால்ஷீட் தேவையென்பதற்காக தியாகராஜனிடம் சென்றதற்கு ஒன்றரை லட்ச ரூபாய் கேட்டாராம். இறுதியில் குறிப்பிட்ட அந்த வேடத்தில் நடித்தவர் விஜயகாந்த்.
ரஜினி சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் செட்டில் மற்ற நடிகர்களைப் போல் (அதாவது துணை நடிகர்களைப் போல்) தனியேதான் நின்று கொண்டிருப்பார். அவருக்குக் கலகலப்பாகப் பழகும் சுபாவம் கிடையாது. அதாவது பழக்கம் இல்லாதவர்களிடத்தில் மற்றவர்களுடன் அரட்டை அடித்தால் அடக்கமே இல்லாமல் திமிராக இருக்கிறான் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் காரணமாகவே அமைதியாக இருப்பார்.
திரையுலகில் ரஜினியின் இன்னும் பல அனுபவங்களை
அடுத்து இதழில் படிக்கலாம்
Previous |
|
Next |
|