மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் - கமல் ஹாசன் (பாகம் 13)
''நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' என்று பாட்ஷாவில் ரஜினி பேசிய வசனம் எதிரொலிக்காத தமிழர் வீடே இல்லை எனலாம். சின்னஞ்சிறு மழலைகளுக்கு இது போன்ற ரஜினி பேசிய வசனங்கள், அவர்களது வார்த்தை உச்சரிப்பை மெருகுப்படுத்துவதாக உள்ளது.''
"முன்பொரு சமயம், அரசியலில் ஈடுபடலாமா, வேண்டாமா என்ற குழப்பம் ரஜினிக்கு வந்தபோது என்னிடமும் அது பற்றி அபிப்பிராயம் கேட்டார். வேண்டாம் என்று கூறி, சில விளக்கங்களும் சொன்னேன். ரஜினி அதை ஏற்றுக் கொண்டு "எனது பிற நலம்விரும்பிகளும் இதைத்தான் சொல்கிறார்கள்" என்று கூறினார். அத்தோடு அரசியலில் ஈடுபடும் எண்ணத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தார். 'அரசியலில் ஈடுபடாததே எங்கள் இருவருக்கும் பெரிய ஆரோக்கியமான சொத்தாக'க் கருதுகிறேன். அரசியலைப் பொறுத்தவரையில் இன்றைக்கு ரஜினியின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றாலும் அவர் எச்சரிக்கையோடு அதன் விளைவுகளை எதிர் கொள்ளக் கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
'நாயகன்' படம் பார்த்துவிட்டு நடிகனுக்கு நடிகன் என்று பாராட்டினார் ரஜினி. 'புன்னகை மன்னன்' 100-வது நாள் விழாவில் நான் அப்படத்தில் ஏற்றிருந்த சாப்ளின் செல்லப்பா வேடத்தை, 'இது போல் எந்த நடிகராலும் செய்ய முடியாது' என்று குறிப்பிட்டார்.
'எங்கேயோ கேட்ட குரல்' படத்தில், மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன். அந்தப் படம் பெரிய அளவு வெற்றி பெறாததில் எனக்கும் வருத்தமுண்டு. கலைஞர்களை வெற்றிகள்தான் பெரிய அளவில் உற்சாகப்படுத்த முடியும் என்று நம்புபவன் நான்.'' என்கிறார் கமல்.
'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி' என்று பாட்ஷாவில் ரஜினி பேசிய வசனம் எதிரொலிக்காத தமிழர் வீடே இல்லை எனலாம். சின்னஞ்சிறு மழலைகளுக்கு இது போன்ற ரஜினி பேசிய வசனங்கள், அவர்களது வார்த்தை உச்சரிப்பை மெருகுப்படுத்துவதாக உள்ளது. அவர்கள் தமிழ்ப் பேசக் கற்றுக் கொள்வதற்கு ரஜினியின் படங்கள் நேரடியாக உதவுகின்றன என்பது நடைமுறை உண்மை.
நிஜத்தில் ரஜினி ஒரு தடவை சொன்னால் அதை அந்த சமயத்திலேயே புரிந்துக் கொள்ள வேண்டும். நிஜமாகவே புரியவில்லையென்றால் ரஜினி இன்னொரு முறை சொல்லத் தயங்கமாட்டார். ஆனால் புரிந்து கொள்ள மறுப்பவர்களை ரஜினி சும்மா விடமாட்டார், அல்லது ஒதுக்கித் தள்ளிவிடுவார்.
டெல்லியில் பிரதமர் நரசிம்மராவை சந்திக்கச் சென்ற ரஜினியை, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பத்திரிகை நிருபர்கள், போட்டோகிராபர்கள் முற்றுகையிட்டனர். ஆனால் ரஜினி யாரையும் சந்திக்க விரும்பவில்லை. அதையும் மீறி ஒரு பெண் நிருபர், ரஜினியின் அறைக்குள் அழைப்பில்லாமலேயே நுழைந்துவிட்டார். ரஜினிக்கு கடும் கோபமாகிவிட்டது. கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அவரைத் தரதரவென்று வெளியே இழுத்துக் கொண்டு வந்து விட்டு, "என்னை தொந்தரவு செய்யாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டு உள்ளே போய்விட்டார். ஆனால் அந்தப் பெண் நிருபரோ சக பத்திரிகையாளர்களை அணி சேர்த்துக் கொண்டு ரஜினிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கிவிட்டார். அப்புறம் விஷயமறிந்த காங்கிரஸ் தலைவர்கள் ரஜினியைச் சமாதானம் செய்தபின், அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். உண்மையிலேயே ரஜினியின் மீது எவ்விதத் தவறும் இல்லை. பத்திரிகையாளர்களின் ஆர்வக் கோளாறு, செய்திகளை முந்தித் தரவேண்டுமென்ற வேகத்தில் சில சமயங்களில் எல்லை மீறிப் போய்விடுகின்றனர். இதை ரஜினியோ அறவே விரும்புவதில்லை. வெகு ஜன சாதனமான பத்திரிகைகளுக்குப் பண்பாடு, கொள்கைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களில் அவரும் ஒருவர்.
அப்படிப்பட்ட பண்பாட்டைத் தன் வீட்டிலேயே வளர்த்துக் கொண்டிருப்பவர் ரஜினி. அவரது தனி அறைக்குள் மகள்கள் யாராவது நுழைய வேண்டுமென்றால் அதற்கு அனுமதியும், காரண காரியமும் இருக்க வேண்டும். நினைத்த நேரத்தில் அவரை அவரது பெண்கள் சந்தித்துவிட முடியாது. அப்படி தன் மகள்களுக்கு வாழ்க்கையின் யதார்த்தம் புரிய வேண்டுமென்று நினைப்பவர் ரஜினி.
ரஜினி வளர்ந்து விபரமான பின் தன் தந்தையின் கையில் ஏதோ பச்சை குத்தப்பட்டிருப்பதைக் கவனித்து என்னவென்று கேட்டார். தமிழில் பச்சை குத்தப்பட்டிருந்த எழுத்துகள் அவை. அப்போது ரஜினிக்கு தமிழ்ப் படிக்கத் தெரியாது. ரஜினியின் தந்தை ரானோஜி ராவ் அந்த எழுத்துகள் 'மாணிக்கம்' என்று சொன்னார்.
"மாணிக்கம் என்றால்....?" இது ரஜினியின் கேள்வி
"மாணிக்கம் என் நெருங்கிய நண்பர்.... தமிழர்! ஒரு நாள் அவரும் நானும் நீச்சல் அடிக்கப் போனோம். அப்போது ஏற்பட்ட விபத்தில் தண்ணீரிலேயே இறந்துவிட்டார் மாணிக்கம்.
நீச்சலுக்கு வரமாட்டேன் என்ற மாணிக்கத்தை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனது நான்தான். அந்த மாணிக்கம் மறைய, நாம் காரணமாக இருந்துவிட்டோமே என்று என் மனசாட்சி உறுத்தியது. பொதுவாக நண்பர்களைப் பற்றிச் சொல்லும்போது இவன் வலது கை மாதிரி.... இடது கை மாதிரி என்று சொல்வார்கள். அந்த மாதிரி என் கையாக இருந்த நண்பனை என் கையிலேயே வைத்திருக்கிறேன்" என்றார் ரானோஜி.
ராஜ்பகதூர்
தந்தைக்கு மாணிக்கம் என்ற தமிழர் அப்படி என்றால் தனயனுக்கும் ஒரு தமிழன் வலது, இடது கரமாக இருந்திருக்கிறார். அந்தக் கரங்கள் கண்டக்டராக இருந்த ரஜினியை நடிகனாக்கப் பாடுபட்டிருக்கிறது. அந்தத் தமிழன் ராஜ்பகதூர். ரஜினி கண்டக்டராக இருந்தபோது உடன் பணியாற்றியவர்.
பெங்களூர் சிட்டி மார்க்கெட்டில் இருந்த ஜெயநகர் வரை செல்லும் 10-ம் எண் பஸ்ஸின் டிரைவர் ராஜ்பகதூர். இவரை ரஜினிகாந்த் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மறந்ததில்லை. பல சந்தர்ப்பங்களில் கவுரவித்து மகிழ்ந்திருக்கிறார்.
திரையில் மின்ன ஆரம்பித்த பின் தங்களது வளர்ச்சிக்குக் காரண கர்த்தாக்களாக இருந்தவர்களை மறந்துவிடுவது, ஒதுக்கி விடுவதுதான் பெரும்பாலான நடிகர்களின், நடிகைகளின் பண்பாடு. இதில் ரஜினிகாந்த் போல் ஓரிரு நடிகர்கள் மட்டுமே அபூர்வமான விதிவிலக்கு.
1989 டிசம்பர் 14-ல் ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத் திறப்பு விழா நடந்தபோது அதில் வி.ஐ.பி.க்களாக கவுரவிக்கப்பட்டவர்களில் ராஜ்பகதூரும் ஒருவர்.
திறப்பு விழா அழைப்பிதழில் பத்து வி.ஐ.பி.க்கள் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அன்றைய முதல்வர் கலைஞர், சிவாஜி கணேசன், வாழப்பாடி ராமமூர்த்தி, அர்.எம்.வீரப்பன், ஏவி.எம் சரவணன், பஞ்சு அருணாசலம், இளையராஜா, பாலச்சந்தர் இவர்களுடன் சத்தியநாராயணராவ், ராஜ்பகதூர் பெயரும் இருந்தன. விழாவில் ராஜ்பகதூரும் பேசினார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள ராஜ்பகதூருக்கு முறைப்படி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருந்தாலும் சரியான நேரத்தில் வந்து கலந்து கொள்வாரோ மாட்டாரோ என்று சந்தேகப்பட்ட ரஜினி, விழாவின் முதல் நாளான 13-ம் தேதியே பெங்களூர் சென்று ராஜ்பகதூரை விமானத்தில் அழைத்து வந்தார். கல்யாண மண்டபத் திறப்பு விழாவில் அவர் ராஜ்பகதூரை அறிமுகம் செய்து வைத்தார். விழா முடிந்து படப்பிடிப்பிற்காக பெங்களூர் திரும்பிய ரஜினி, உடன் ராஜ்பகதூரையும் விமானத்தில் அழைத்துச் சென்றார்.
பெங்களூரில் ஸ்ரீநகர் வரை செல்லும் 10-ஏ பஸ்ஸில் ரஜினி கண்டக்டராக இருந்தார். இன்று அந்தத் தடத்தின் எண்.36. ரஜினி கண்டக்டரான போதுதான் முதன் முதலில் ராஜ்பகதூருக்கு அறிமுகமானார். இன்றைக்கும், ராஜ்பகதுரும், ரஜினியும் 'வாடா', 'போடா' என்று சொல்லிக் கொள்ளுமளவில் நட்பின் ஆழம் உடையவர்கள்.
ரஜினி சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு வந்தபோது ஒரு நாள் சத்யா ஸ்டுடியோவில் ரஜினிக்கு படப்பிடிப்பு இருந்தது. அதற்காக ஸ்டுடியோவிற்கு வந்தவர், செட்டுக்குள் நுழைந்தபோது 'டேய் ரஜினி!' என்ற குரலைக் கேட்டுத் திரும்பினார்.
உரிமையோடு ரஜினியை 'டேய்' போட்டுக் கூப்பிட்டது யாராக இருக்கும் என்று அங்கிருந்தவர்களெல்லாம் வியப்போடு கவனித்தார்கள். இரண்டு இளைஞர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி வந்த ரஜினி, அவர்களோடு கைகுலுக்கி மகிழ்ச்சியோடு வரவேற்றார். அதைப் பார்த்து அங்கிருந்தவர்களுக்கு இன்னும் வியப்பாகிவிட்டது.
ரஜினி, இன்று சூப்பர் ஸ்டார். லட்சம் லட்சமாய் பணம் கொட்டி ரஜினியை வைத்துப் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் கூட 'அண்ணே' 'சார்' என்று அவரை மரியாதையாக அழைக்கும்போது, இந்த இளைஞர்கள் ரஜினியை 'டேய்' என்றழைக்கிறார்கள். ரஜினியும் அவர்களோடு கை குலுக்கிறாரே...! என்று குழப்பத்தில் இருந்தவர்களிடம் ரஜினி அவர்களை அறிமுகப்படுத்தினார்.
"இவன், ராஜ்பகதூர், என் உயிர் நண்பன். பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருக்கிறான். இதோ இவன் டிரைவராக இருக்கிறான். அன்னிக்கு ஒண்ணா வேலை பார்த்தபோது எப்படிப் பழகினோமோ, அப்படித்தான் இன்னிக்கும் இருக்கோம். என்னடா சொல்றே?'' என்று ராஜ்பகதூரிடம் கேள்வி எழுப்பினார். அவரும், உடன் வந்தவரும் 'ஆமாம்' என்று தலையசைத்தனர்.
"நடிக்கறதுக்கு ஏத்த முகவெட்டு உனக்கு இருக்குடான்னு சொல்லி, என்னை ஸ்டுடியோவில் போட்டோ எடுக்க வச்சு, திரைப்படக் கல்லூரிக்குப் போகச் சொன்னதெல்லாம் இவன்தான். "என்னடா ராஜ்பகதூர்?" மீண்டும் தன் நண்பன் பற்றி இப்படி விளக்கம் சொன்ன ரஜினி மேலே தொடர்ந்தார்.
"பெங்களூர்ல் ஒரு பஸ்ஸில் இத்தனை பேருக்கு மேலே ஏறக்கூடாது, ஏற்றக் கூடாதுன்னு ஒரு விதி இருக்கு. அதை மீறிப் பயணிகள் ஏறிட்டாங்கன்னா, அதைத் துணிச்சலோட சமாளிக்கிற தைரியம் என் ஒருத்தனுக்குத்தான். 'டேய் சிவாஜி வாடா'ன்னு யாராவது குரல் கொடுத்தாப் போதும். அந்த இடத்துக்குப் போய், என் சொரூபத்தைக் காட்டிடுவேன். சிவாஜி வர்ரான்னா யாருக்கும் கொஞ்சம் பயம் நடுக்கம்தான்.....!" என்று தன் பழைய நினைவுகளில் மூழ்கியவர், அதிலிருந்து மீண்டு நண்பர்களை செட்டுக்குள் அழைத்துச் சென்றார். இந்தச் சம்பவம் நடந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
இதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின் ரஜினி, ராஜ்பகதூர் பற்றி விரிவான அறிமுகம் ஒன்றைச் செய்து வைத்தார்.
"ராஜ்பகதூர் தமிழர். முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். ஓரளவு படித்தவர். பெற்றோருடன் வசதியான, நிம்மதியான வாழ்க்கை. அப்போது என்னுடன் ஒப்பிட்டால் ராஜ்பகதூர் என்னைவிட இருபது மடங்கு வசதி மிக்கவர். படிப்பில் ஆர்வமில்லாமல் டிரைவிங் கற்றுக் கொண்டு கர்நாடகா போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்து டிரைவரானவர். ஆனால் டிரைவராக ஆகி, கஷ்டப்பட்டு உழைக்கிறார்களே. அவர்களில் இருந்து மாறுபட்டவர். வேலைக்குப் போய்ச் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலையோ, பிரச்னையோ இல்லாதவர். இதனால் எல்லோரையும் கவர்ந்த ராஜ்பகதூர் என்னையும் கவர்ந்தார்.
நான் கண்டக்டர் வேலை செய்யும் போது கூட மற்றவர்களுடன் பேச மாட்டேன். தனித்தே இருப்பேன். நான் கோபக்காரன் என்பது அப்போது நடந்த இரண்டு மூன்று சம்பவங்களினால் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டது.
அப்போது ஒரு செக்கிங் இன்ஸ்பெக்டர் இருந்தார். 'கண்டக்டராக இருப்பவர்களெல்லாம் திருட்டுதனமாக நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். ரொம்ப ஜாலியாக இருக்கிறார்கள்' என்கிற எண்ணம் அவருக்கு. கண்டக்டர் வேலை பார்ப்பவர் விலை உயர்ந்த ஆடைகள் அணியக்கூடாது. கையில் வாட்ச் கட்டக்கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் அநியாயமாக கண்டக்டர்கள் மீது பழி சுமத்தி நோட்டீஸ் கொடுப்பார். சஸ்பெண்ட் செய்வார். இதனால் அந்த செக்கிங் இன்ஸ்பெக்டரைப் பார்க்கும் கண்டக்டர்களுக்கெல்லாம் பயம்.
ஒரு நாள் அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் நான் வேலை செய்த பஸ்ஸ¨க்கு வந்துவிட்டார்.
என்ன நடந்தது....
வரும் இதழில்
Previous |
|
Next |
|