|
இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி (பாகம் 20)
ரஜினி எங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு திடீரென்று ஒருநாள் வந்தார். அப்போது மணிவண்ணன், சித்ரா லட்சுமணன் மற்றும் என் உதவியாளர்கள் அருகில் இருந்தார்கள். அவர்கள் என்ன நடக்குமோ,
ஏது நடக்குமோ என்று பயந்தார்கள்.
ஒரு சமயம் திரைப்படக் கல்லூரியில் நடந்த கலந்துரையாடலில் சிவாஜியைப் போலவே இருந்தது என்று விரிவுரையாளர் ஒருவர் சொன்னதற்கு ரஜினியின் பதில் எப்படி இருந்தது?
ரஜினி "மறுக்க முடியாத உண்மை இது. அன்று சிவாஜியைப் பிரதிபலித்த சிவாஜிராவ் அடியோடு மாறி இன்றைக்கு ரஜினிகாந்தாக உருமாற்றம் பெற்றிருக்கிறார். நான் பெருமைப்படுகிறேன்.
சிவாஜியிலிருந்து சிவாஜிராவ், சிவாஜி ராவிலிருந்து ரஜினிகாந்த் அசாதாரண வளர்ச்சி இது.
நடிப்பு என்பது 'இமிடேஷன்' ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் அதில் கற்பனை வளமும், திறமையும் சேரும் போது அதில் 'தனித்துவம்' கிடைக்கிறது" என்றார்.
அப்போது சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி "சினிமாவில் நடிக்க சான்ஸ¨க்காக யாருக்கும் நாங்கள் சிபாரிசு செய்வதில்லை. அவரவர் அதிர்ஷ்டம், திறமை, கால நேரம்தான் அவர்களுக்குக் கை கொடுக்கிறது" என்று கூறினாரோ இல்லையோ, ரஜினி ஆவேசமானார்.
"கால நேரம் என்றால் என்ன? இங்கேதான் எனக்கு தயாரிப்பாளர்களின் மனநிலை புரியவில்லை. என்ன அது? 'இப்ப ரஜினிக்கு டாப் மார்க்கெட். அவனையே போடுவோம்' என்று ஓடி வருகிறார்கள். எனக்குப் பின்னால் மார்க்கெட் இல்லாம போயிவிடும் என்றா? தெரியவில்லையே. அவர்கள் சொல்வது புரியவில்லையே. இப்ப ரஜினி 'பீரியட்' என்றால், அது என்ன அர்த்தம்? ஏன் இந்த வீண் பேச்சு? இதையெல்லாம் கேட்டால் எனக்கு ஒரே அலர்ஜி" என்று கைகள் படபடக்க, மேஜையை ஓங்கித் தட்டி, கோபாவேசமாக சீறி நின்றவர் சிறிது அமர்ந்தார்.
சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி ரஜினிக்குச் சமாதானமாக ஏதேதோ சொன்னார்.
அப்போது ஒரு மாணவர் "ரஜினி.....! இங்கே படிப்பை முடித்து விடுகிறோம். டிப்ளமோ வாங்கிவிடுகிறோம். சினிமாவில் சரியான சான்ஸ் இல்லை. அதுவரை சாப்பாட்டுக்கு என்ன செய்வது?"
மாணவர் முடிப்பதற்குள் வேகமாக எழுந்த ரஜினி, "என்ன சொன்னே, வெட்கமாயில்லை, இப்படிச் சொல்ல. சீச்சீ.... இந்த வயசுலே இது மாதிரி ஒரு எண்ணமே வரக்கூடாதே. உள்ளதை உயர்வாக எண்ண வேண்டாமா?
'நான் ஒரு சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் அளவுக்கு வரவேண்டும்' என்று நினை. முயற்சி செய். இடைவிடாது முயற்சி செய். முயற்சி பலன் தரும்.
அப்போதுதான் முடிவில் நீ ஜெய்சங்கர் அளவுக்காவது வருவாய்." கேள்வி கேட்ட மாணவரோ ஆடிப்போய் விட்டார். "நான் சொல்ல வந்தது" என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் "உன்னைப் பற்றி நீ உயர்வாக நினை" என்ற ரஜினி அட்வைஸ் கூறி உட்கார்ந்தார்.
எல்லோரும் அறிந்த ஒன்றே
இப்படி ரஜினி அந்த மாணவருக்குச் சொன்ன பதில் மட்டும் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்பட்டு பத்திரிகைகளில் வந்தபோது, 'ரஜினி ஜெய்சங்கரை மட்டம் தட்டும் வகையில் திரைப்படக் கல்லூரியில் பேசினார்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதற்கு ரஜினி சொன்ன விளக்கம் இது.
"பிலிம் இன்ஸ்டிடியூட்டில் பேசும்போது, ஜெய்யை மட்டம் தட்டும் விதத்தில் பேசியதாகக் திரித்துக் கூறப்பட்டிருக்கும் செய்திக்கு நான் விளக்கம் அளித்தே தீர வேண்டும். யாரையும் மட்டம் தட்ட வேண்டும் என்பது என் நோக்கமல்ல. ஒரு மாணவர் வேண்டுமென்றே கிண்டல் தொனிக்க நடிப்புத் தொழிலைக் குறை கூறும் வகையில், 'நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது' என்று கேட்டார். இந்த வயதில், தான் முயற்சி செய்யும் தொழிலின் மீது நம்பிக்கையில்லாமல், தாழ்வு மனப்பான்மையோடு அவர் அப்படி பேசியதைக் கண்டிக்க நினைத்தேன்.
வாழ்க்கையில் ஒரு பெரிய அளவு லட்சியம் இருக்க வேண்டும். பெரிதாய் நினைத்து செயல்பட்டால் அதற்கடுத்த நிலையையாவது அடைய முடியும் என்ற நோக்கில்தான், சிவாஜி அளவிற்கு உயர முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் ஜெய்சங்கர் அளவிற்காவது வர இயலும்" என்றேன். நான் ஒரு 'கம்பேரிஸன்' கொடுத்தேன். நடிகர் திலகம் சிவாஜியின் நிலை, நண்பர் ஜெய்யின் நிலை, என் நிலை இது எல்லோரும் அறிந்த ஒன்றே."
பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே, கொடி பறக்குது ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே ரஜினி நடித்திருக்கிறார். 'பதினாறு வயதினிலே'யில் ஸ்ரீதேவி, ரஜினி, கமல் ஆகிய நட்சத்திரங்களைவிட அவர்கள் நடித்த மயிலு, பரட்டை, சப்பாணி ஆகிய கதாபாத்திரங்கள், அவர்கள் பேசிய வசனங்கள் இன்றளவும் பேசப்படும் அளவில் படம் அமைந்திருந்தது. குறிப்பாக 'இது எப்படி இருக்கு?' என்று படத்தில் அடிக்கடி ரஜினி பேசிய வசனம் இன்று வரை எதிரொலித்துக் கொண்டிருப்பதன் அடையாளம்தான். அதே ரஜினியால் 'வீரா'வில் 'ஹெள இஸ் இட்' (How is it) என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டது.
இரண்டு படங்கள் தானென்றாலும் ரஜினியுடன் பாரதிராஜாவுக்கேற்பட்ட அனுபவங்கள், அவரது படங்களைப் போலவே வித்தியாசமானவை. அவை என்னவென்பது பற்றி பாரதிராஜா சொல்கிறார்.
டிப் டாப்பாக ஒரு புதுமுகம்
"நான் ரஜினியை முதன் முதலில் சந்தித்தது ஒரு படத்தின் பூஜையில். அப்போது அவர் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். என்னோடு வந்த நண்பர்கள் ரஜினியைக் காட்டி, 'பாலச்சந்தர் படத்தில் நடிக்கும் புதுமுகம் இவர்தான்' என்றார்கள். ஆள் கறுப்பாக இருந்தாலும் டிப் டாப்பாக உடையணிந்திருந்தார். படித்தவர் போலும் என்று எண்ணிக் கொண்டேன். பூஜையின் போது ரஜினி கூட்டத்தோடு சேராமல் தனியாக நின்று கொண்டிருந்தார்.
'பதினாறு வயதினிலே' துவங்கிய போது 'பரட்டை' கேரக்டருக்கு ரஜினியை நடிக்க வைக்கலாம் என்று விரும்பினோம். அதற்காக சந்திக்க விரும்பி, ராயப்பேட்டையில் ஒரு அறையில் தங்கியிருந்த ரஜினியைப் பார்க்கப் போனோம். அவரிடம் படத்தைப் பற்றிய விபரங்களைச் சொன்னோம். 'அப்படியா?' 'ஓகோ' Yes, 'ஆமாம்' என்று ஒற்றை வார்த்தையில் பதில்கள் சுருக்கமாக, ஆனால் வேகமாக வந்தன.
எந்த ஒரு விஷயத்திலும் கறாரார்காரர்
கடைசியில் பணத்தைப் பற்றி பேச்சு வந்தபோது ரஜினி 5 ஆயிரம் ரூபாய் தர வேண்டுமென்றார். குறைந்த பட்ஜெட் படமென்பதால் பணத்தைக் குறைக்கச் சொன்னோம். 3 ஆயிரம் ரூபாய்க்கு இறங்கினார். நாங்கள் 2500 என்று பேசி அவரைச் சம்மதிக்க வைத்தோம். ஆக ஒரு புதுமுகமாக மலரத் தொடங்கிய நேரத்திலேயே ரஜினி எந்த ஒரு விஷயத்திலும் கறாராக இருந்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
படத்தில் கமல்ஹாசனுக்கு 11 நாட்கள் வேலை என்றால், ரஜினிக்கு ஐந்தே நாட்கள்தான். படத்தில் அவருக்கு ஒரு பனியன், லுங்கி-இதுதான் உடைகள். இட வசதி, உணவு வசதி இதெல்லாம் நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடத்தில் இல்லை. ஆனாலும் எந்த முகச்சுளிப்பும் இன்றி நடித்துக் கொடுத்து விட்டுப் போனார் ரஜினி.
படத்தில் ரஜினி ஸ்ரீதேவியைப் பார்த்து, "இவ ஆத்தாளுக்கு தாவணி போட்டாக் கூட நல்லாத் தான் இருக்கும்" என்று வசனம் பேசுவார். அப்போது அருகில் இருப்பவர்களோடு ரஜினி கட்டிப் புரண்டு சண்டை போடுவார். கரடு முரடான இடத்தில் ரஜினி உருண்டு புரண்டு சண்டை போட்டதைப் பார்க்க எங்களுக்கே சங்கடமாக இருந்தது.
இன்னொரு காட்சியில் ஸ்ரீதேவியை வம்புக்கிழுக்கும்போது, ரஜினியின் முகத்தில் அவர் காறி உமிழ வேண்டும். இதற்காக நுரை வரும் நீரைத் தௌ¤க்கலாமென்றிருந்தோம். ஆனால் ரஜினி, "வேண்டாம், வெள்ளை நுரையைப் பார்த்து 'செயற்கையாக இருக்கிறது' என்று ரசிகர்கள் நினைப்பார்கள். ஸ்ரீதேவியே காறி உமிழட்டும். அதனால் ஒன்றும் தப்பில்லை'' என்று கூறி, அவர் விருப்பப்படியே காட்சி படமாக்கப்பட்டது. அந்தளவு காட்சியின் சிறப்புக்கு எந்த அளவிலும் அவர் இறங்கத் தயாராக இருந்தார்.
'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ரஜினியையும் நடிக்கச் செய்ய முயற்சித்தோம். ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
'சிகப்பு ரோஜாக்கள்' படத்திற்கும் அவரை அணுக முயற்சித்து அதுவும் பலிக்கவில்லை. அந்தப் படத்தில் தான் நடிக்கவில்லை என்று ரஜினிக்கு மனக்குறை இருந்தது.
இளையராஜா நடத்திய விருந்தொன்றில் நானும், ரஜினியும் சந்தித்த போது, 'சிகப்பு ரோஜாக்கள்' விஷயமாக கருத்து மோதல் நடந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டோம். அருகிலிருந்தவர்கள் விலக்கிவிட்டனர்.
மறுநாள் அந்த சம்பவம் குறித்து என்னிடம் வருத்தம் தெரிவிக்க விரும்பி ரஜினி தேடியிருக்கிறார். ஆனால் அவரை நான் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக ஒளிந்து கொண்டேன்.
இதற்குப் பின் ரஜினியுடன் எனக்கு சந்திப்பு இல்லை.
ரஜினி உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்து, தேறி, திரும்பி வந்திருந்தார். இதையெல்லாம் கேள்விப்பட்டிருந்தாலும், அப்போதும் அவரைச் சந்திக்கத் தோன்றவில்லை.
பாம்குரோவ் ஓட்டலில் ஒரு படத்தில் கதை ஆலோசனைக்காக தங்கியிருந்தோம். அதே ஹோட்டலில் ரஜினியும் தங்கியிருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் ரஜினி எங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு திடீரென்று ஒருநாள் வந்தார். அப்போது மணிவண்ணன், சித்ரா லட்சுமணன் மற்றும் என் உதவியாளர்கள் அருகில் இருந்தார்கள். அவர்கள் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று பயந்தார்கள். ஆனால் எனக்கருகில் வந்த ரஜினி, "உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்" என்று தனது அறைக்குள் அழைத்துச் சென்றார். எனக்கும் உடம்பில் சற்று உதறல்தான்.
உள்ளே சென்றதும், "பார்த்து ரொம்ப நாளாச்சு, எப்படி இருக்கீங்க?" என்று ரஜினி நலம் விசாரித்தபோதே என் மனமும், உடலும் இளகி விட்டது. நான் பதிலுக்கு ரஜினியின் நலம் விசாரித்தேன்.
"கடவுள் அருளால் காப்பாற்றப்பட்டேன்"
கழுத்தில் போட்டிருந்த கடவுள் உருவம் பதித்த சங்கிலியை எடுத்துக் காட்டி, "கடவுள் அருளால் காப்பாற்றப்பட்டேன்" என்றவர், பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். அவரைச் சந்தித்த பிரமிப்பில் எனக்கு அதிகம் பேசத் தோன்றவில்லை. என்னவோ அன்று என் மனம் கலங்கியது.
அப்புறம் ரஜினி எளிதில் எட்ட முடியாத சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டார். ஆனால் மனிதத் தன்மையில் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அது இன்று வரையிலும் அப்படித்தான். நானும் ரஜினியும் தொலைபேசியில், பொது நிகழ்ச்சிகளில், விழாக்களில் சந்தித்துக் கொள்வோம். பல விஷயங்களைப் பற்றி எங்கள் பேச்சு இருந்தாலும், இருவரும் இணைந்த படம் செய்வது பற்றிப் பேசிக் கொள்வதில்லை.
ரஜினியை வைத்து ஒரு படம் செய்ய வேண்டுமென்று எனக்கே எண்ணம் வந்து, ரஜினியைச் சந்தித்து அது பற்றிச் சொன்னேன். வரிசையாக படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால் உடனடியாகத் தன்னால் இயலாதது பற்றிக் கூறினார். அப்புறம் அது பற்றி நான் ரஜினியிடம் பேசவில்லை.
இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள்
வரும் இதழில்.....
Previous |
|
Next |
| |