ரஜினியின் மொட்டை ஸ்டைல் (பாகம் 26)
குளிரும் நெருப்பும் இணைந்தவர்தான் ரஜினி (Rajini is the combination of fire and cold) என்பார்கள். 'குமுதம்' வார இதழ் ஒரு சமயம் 'தோரணையான நடிகர் யார்?' என்று வாசகர்களிடிடையே ஒரு போட்டி நடத்தியது. அதில் முதலிடத்தில் வந்தவர் ரஜினிகாந்த், இரண்டாவது இடம் சிவாஜிக்கு.
சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் ரஜினியின் ஸ்டைலே அலாதிதான். கண்டக்டராக இருந்தபோது, 'நாம் கறுப்பாக இருக்கிறோம். உடல்வாகும் பெரிசு. நம்மை யாரும் லட்சியம் பண்ணாமல் இருக்கிறார்களே' என்று தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, தலைமுடியை அடிக்கடி ஸ்டைலாக கலைத்துவிட்டுக் கொள்வது, சிகரெட்டை கையால் வீசி வாயில் கவ்விக் கொள்வது, சிகரெட்டை உதட்டின் ஒரு நுனியிலிருந்து மறு நுனிக்கு நாக்கால் நகர்த்திச் செல்வது, எரியும் சிகரெட்டை அப்படியே நாக்கால் மடக்கி வாயிக்குள் தள்ளுவது, அதை மீண்டும் வெளியே கொண்டு வருவது (இந்தப் பயிற்சிக்காக நாக்கு பலமுறை வெந்து போயிருக்கிறது) என்று செய்த சாகஸங்களெல்லாம் பெங்களுர் நகர பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளையெல்லாம் கவனத்திற்குக் கொண்டு வந்தது. இது போக அவருடைய வேகமும் ஒரு ஸ்டைலாக இருந்தது. பாலசந்தரின் பார்வையில் இவையெல்லாம் பட்டு சினிமாவில் காட்சி வடிவமானதெல்லாம் நாம் பார்த்தது.
குளிரும் நெருப்பும் இணைந்தவர்தான் ரஜினி (Rajini is the combination of fire and cold) என்பார்கள். 'குமுதம்' வார இதழ் ஒரு சமயம் 'தோரணையான நடிகர் யார்?' என்று வாசகர்களிடிடையே ஒரு போட்டி நடத்தியது. அதில் முதலிடத்தில் வந்தவர் ரஜினிகாந்த், இரண்டாவது இடம் சிவாஜிக்கு.
ரஜினியின் உருவ அமைப்பே வித்தியாசமானதுதான். இடுப்புக்கு மேல் உடல் அகன்று விரிந்திருக்கும் கால்கள் குச்சி போன்று, ஆனால் உயரமானவை. அந்தக் கால்களின் உயரம்தான் அவரது தோற்றத்திற்கே எடுப்பாக அமைந்திருக்கிறது. அவரது நீண்ட கைகளின் முழங்கை முனை சற்று நீண்டிருக்கும். புஜ பலம் தோற்றத்தில் அவருக்கு கிடையாதுதான். ஆனால் அவரது கைகளில் வலு. சாதாரணமாக உஷ்ணமாக இருக்கும். உறுதியாக இருக்கும்.
கர்லா கட்டையைத் தூக்கிச் சுழற்றிப் பயிற்சி பெற்றதால் எம்.ஜி.ஆரது கரங்கள் எவ்வளவு வலுவாக இருந்ததோ, அதே வலு ரஜினியிடம் இருந்தது. இத்தனைக்கும் ரஜினி உடற்பயிற்சியில் அவ்வளவாக அக்கறை காட்டாதவர். நடுவே உடல் எடை கூடக் கூடாதென்பதற்காக ஸ்கிப்பிங் ஆடியிருக்கிறார். மற்றபடி இயற்கையாகவே வலுவான உடல் அவருடையது. அந்த உடல் அமைப்பு காரணமாக அவர் என்ன ஸ்டைல் செய்தாலும் அது எடுபட்டது.
அவரது யதார்த்தமான வாழ்க்கை முறைகளும் ஒரு ஸ்டைல்தான். "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி" என்று 'பாட்சா' படத்தில் வசனம் பேசினார். அது அவரது நிஜ வாழ்விற்கும் பொருந்தும். அவர் ஒரு விஷயத்தில் 'உண்டு' அல்லது 'இல்லை' என்று சொன்னால் அதைப் புரிந்து கொண்டு அகன்றுவிட வேண்டும். அதற்கு மறு விளக்கம் கேட்டால் அவருக்குப் பிடிக்காது. சொன்ன விஷயத்தைத் திரும்ப திரும்ப சொல்வதோ, வளவளவென்று அரட்டை அடிக்கும் நோக்கில் அவரிடம் யாராவது பேச முயன்றாலோ, "வேறு ஏதாவது இருந்தா பேசுங்க, இல்லைன்னா இடத்தை காலி பண்ணிடுங்க" என்று சொல்லி விடுவார். ஆனால் திருமணத்திற்குப் பின் "தொந்தரவு பண்ணாதீங்க" என்று கூறுமளவிற்கு மாற்றாம். கடந்த சில வருடங்களாக, "டென்ஷனா இருக்கு, அப்புறம் பார்க்கலாம்" என்றும் 'நான் பிஸியா இருக்கேன்' என்றும் சிரித்துக் கொண்டே கூறிவிடுவார். இப்படிச் சொல்லும் போது எதிராளியின் மீதிருக்கும் தன் பார்வையை விலக்கிக் கொண்டு விடுவார். இது பத்திரிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
கடந்த சுமார் 10 ஆண்டுகளாக வருடத்தில் ஓரிரு மாதங்களை ஓய்வுக்காக ரஜினி பயன்படுத்தி வருகிறார்.
சென்னை வடபழனியில் விஜயா மருத்துவமனையிலுள்ள ஹெல்த் சென்டரில் உள்ள காட்டேஜ் ஒன்றில் ரஜினி தனியாகவே தங்கிக் கொள்வார். தேவையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொண்டு ஆன்மிக, தத்துவ புத்தகம் படிப்பது என்று நேரத்தைச் செலவிடுவார்.
அவர் அப்படி ஓய்வெடுக்கும்போது யாரும் அவரைச் சந்திக்க முனையமாட்டார்கள். அதை ரஜினியும் விரும்புவதில்லை. அப்படி அவசரத்திற்கு யாரையாவது சந்திக்க வேண்டுமானால் ரஜினியே நேரடியாகச் சென்றுவிடுவார். இதுபோன்ற சமயங்களில் சினிமா தொடர்பான எந்தச் சிந்தனையும் அவருக்கு இருக்காது. இதுவும் ரஜினி ஸ்டைல்தான்.
ஒரு சில வருடங்களுக்குப் பின் ரஜினி சென்னையைவிட்டு வெளியிடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். ஹைதராபாத், நேபாளம், பெங்களூர், இமயமலைச் சாரல், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுக்குச் சென்று வந்தார். ஒரு படம் முடிந்து அடுத்த படம் துவங்குவதற்கான இடைவெளியை அப்படி பயன்படுத்திக் கொண்டார்.
அயல்நாடுகளில் தன்னை அடையாளம் காண முடியாத இடங்களிலெல்லாம் ரஜினி பெரும்பாலும் நடைப்பயணத்தையே விரும்புவார். பஸ், ரயில் பயணமும் உண்டு. அப்போதெல்லாம் அவரது தோற்றம் மாறிவிடும். தன்னை மறந்து இந்த உலகத்தை மறந்து சாதாரண மனிதனாகிவிடுவார்.
ஒரு முறை அமெரிக்கா சென்றபோது ரஜினி அங்கிருந்து பாரதிராஜாவிற்கு போன் செய்தார். "நான் இப்ப அமெரிக்காவில் எப்படி இருக்கேன் தெரியுமா? மொட்டையடிச்சுக்கிட்டு, அரை நிக்கர் அணிஞ்சுகிட்டு மேலே ஒரு பனியன், அவ்வளவுதான். இந்தக் கோலத்தில் யாருமே என்னை அடையாளம் கண்டுக்கல. ஜாலியா நடந்தே சுத்தறேன்" என்று கூறினாராம்.
கடந்த 1998 ஏப்ரல் 20-ல் அயல்நாட்டிலிருந்து சென்னை வந்த அன்று ரஜினிகாந்த் 36 மணி நேர விமான பயணம் காரணமாக ஓய்வு எடுத்துக் கொள்வார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தார்கள். பத்திரிகையாளர்களிடமும் பயணக் களைப்பு காரணமாக தேர்தல் பிரச்சாரம் பற்றி தன் முடிவை மறுநாள் அறிவிப்பதாகச் சொன்னார்.
அன்று மாலை 'சினிமா எக்ஸ்பிரஸ்' விருது வழங்கும் விழாவில், ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது தரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதில் ரஜினி கலந்தகொள்வாரா என்று ஒரு சந்தேகம் தினசரிகளில் கிளப்பப்பட்டிருந்தது. ஆனாலும் ரஜினியை முறைப்படி வாழ்த்து தெரிவிப்பதற்காக 'சினிமா எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் வி.ராமமூர்த்தி மலர்க்கொத்தோடு அவரது வீட்டிற்குச் சென்றார்.
நீண்ட நேர பயண களைப்பு, நாடுவிட்டு நாடு மாறி வரும்போது சீதோஷ்ண நிலை மாற்றம் எல்லாமும் ரஜினிக்கு அயர்வை உண்டாக்கியிருந்தாலும் மாலை விழாவிற்கு வருவதாக ராமமூர்த்தியிடம் உறுதியளித்தார். மேற்கொண்டு ஏற்பாடுகளைப் பற்றியும், ரஜினி குழுவினருக்கு அரங்கில் இட ஒதுக்கீடு பற்றியும் ரஜினியின் மனைவி லதா, ராமமூர்த்தியிடம் கேட்டுக் கொண்டிருந்தபோது "அவரை (ரஜினி) உங்களை நம்பி அனுப்புகிறோம். பார்த்துக் கொள்ளுங்கள்" என்று தேர்தல் சூழ்நிலையை மனதில் கொண்டு சொல்ல ராமமூர்த்தி அதை ஏற்றுக் கொண்டார். சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அவர் அங்கு இருப்பதைப் பார்த்த ரஜினி, "என்ன சார், இன்னிக்கு விழா நடக்கறப்போ நீங்க இங்கேயே ரொம்ப நேரம் இருந்துட்டா எப்படி? நீங்கதானே விழா ஏற்பாடுகளைப் பார்க்கணும். போங்க சார், போய் மற்ற ஏற்பாடுகளைப் பாருங்க" என்று அங்கிருந்து விடுவித்து அனுப்பி வைத்தார்.
மாலையில் 'சினிமா எக்ஸ்பிரஸ்' விருது வழங்கும் விழா நடந்த காமராஜர் அரங்கிற்கு வருகை தந்த முதல் வி.ஐ.பி.யே ரஜினிதான். அவருக்குப் பின்புதான் மற்ற திரையுலகக் கலைஞர்கள் வந்தார்கள். அந்த முதல் வருகையே ரஜினிக்குப் பெரிதும் பெருமை தேடித் தந்துவிட்டது.
நேரம் செல்லச் செல்ல ரஜினிக்குத் தலைவலி வந்துவிட்டதால் நிகழ்ச்சிகள் முழுவதும் முடிவதற்கு முன்பாகவே புறப்பட முடிவு செய்தார். அதை விழா நிர்வாகிகளிடமும் சொன்னார். விருது பெற்று உரை நிகழ்த்திய பின்பு 8.30-க்கு மேல் விடை பெற்றுக் கொண்டார். விழாவில் பேசும்போது தான் மொட்டையடித்த கதையைச் சொன்னார். மொட்டையடித்தது ஒரு ஸ்டைல் என்றால் அதைச் சொன்னவிதமும் ஒரு ஸ்டைல்தான்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் அமெரிக்காவில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றிருந்தார். அங்கு அவரோடு அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி என்று பெரும் நட்சத்திரக் கூட்டமே கலந்து கொண்டிருந்தார்கள். அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது ரஜினியின் ஹேர் ஸ்டைலே மாறிப் போயிருந்தது. சாதாரணமாக நெற்றியில் வந்து விழும், காற்றில் சிலிர்த்து ஆடும் ஹேர் ஸ்டைல்தான் ரஜினியுடையது. பின்புறம் பங்க் ஹேர்ஸ்டைலில் இருக்கும். ஆனால் ரஜினி முன்புறம் சிலிர்ப்பு முடிக்கற்றைகளை வெட்டியதோடு, பின்புறமும் குறைத்திருந்தார். ரஜினியை அந்தக் கோலத்தில் கண்ட அவரது நண்பர் ராஜ்மதன், "என்னப்பா இது புது ஸ்டைல்?" என்று கேட்டார்.
"அமெரிக்காவில் இப்ப இதுதானப்பா பேஷன். நான் மட்டுமல்ல, அமிதாப்பச்சன், கூட வந்த சில நடிகர்களும் இப்படி ஹேர் ஸ்டைல் பண்ணிக்கிட்டாங்க. ஒரே வேடிக்கைதான் போ" என்றவர், "இரண்டு நாளைக்கு முன்னாடி என் ஸ்டைலைப் பார்த்திருக்கணும். எனக்கே அது பிடிக்காம கொஞ்சம் திருத்தம் பண்ணிக்கிட்டேன்" என்றார்.
ரஜினியுடன் இப்படிப் பேசிய ராஜ்மதன், ரஜினியோடு திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக நடிப்புப் பயிற்சி பெற்றவர்.
'தண்ணீர் தண்ணீர்' படத்தில் அருந்ததியுடன் ஜோடியாக அறிமுகமான ராஜ்மதன், அனல் காற்று, ஒரு இந்திய கனவு, அம்மா (இதிலும் அருந்ததி ஜோடி) செல்வி (வில்லன்) யுத்த காண்டம், பாசம் அது வேஷம், பாண்டியன், வள்ளி, ராஜகுமாரன் (நதியாவின் தந்தை) ஆகிய படங்களில் நடித்தவர்.
கோமல் சுவாமிநாதன் நாடகக் குழுவைச் சேர்ந்த இவர், டி.வி. நாடகங்களிலும் டி.வி. தொடர்களிலும் ரேடியோ நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
ரஜினி திரைப்படக் கல்லூரியில் கன்னடப் பிரிவில் நடிப்புப் பயிற்சி பெற்றபோது தமிழ்ப் பிரிவில் சதீஷ், கே.நட்ராஜ் (அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி படங்களை இயக்கியவர்) ஆகியோருடன் பயிற்சி பெற்றவர், ராஜ்மதன். அன்று முதல் இன்று வரை ரஜினியுடன் தனக்குள்ள நட்பு, நெருக்கம் பற்றி கூறுகிறார் அவர்.
என்ன சொல்கிறார்...
வரும் இதழில்.....
Previous |
|
Next |
|