ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள் (பாகம் 27)
'வாழ்க்கையில் யார் எந்த நிலையில் உயர்ந்தாலும் கடைசி வரை நட்பு மாறாமல் பழக வேண்டும்' என்ற அந்த தீர்மானத்தை ரஜினி இன்று வரை கடைப்பிடித்து வருகிறார்.
ரஜினி திரைப்படக் கல்லூரியில் கன்னடப் பிரிவில் நடிப்புப் பயிற்சி பெற்றபோது தமிழ்ப் பிரிவில் சதீஷ், கே.நட்ராஜ் (அன்புள்ள ரஜினிகாந்த், வள்ளி படங்களை இயக்கியவர்) ஆகியோருடன் பயிற்சி பெற்றவர், ராஜ்மதன். அன்று முதல் இன்று வரை ரஜினியுடன் தனக்குள்ள நட்பு, நெருக்கம் பற்றி கூறுகிறார் அவர்.
அப்போது திரைப்படக் கல்லூரியானது பிலிம் சேம்பர் (சபையர் தியேட்டர் அருகிலுள்ளது) வளாகத்தில்தான் அமைந்திருந்தது. நகர வசதிகள் உடனுக்குடன் கிடைக்கும் இடம் அது. திரைப்படக் கல்லூரியில் எங்களது வகுப்புகள் துவங்குவதற்கு முன் தமிழ், கன்னட, மலையாள, தெலுங்கு மாணவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்து, அறிமுகம் செய்து கொள்ளும் வகையில் கல்லூரி முதல்வர் ஒரு தேர்வு வைத்தார்.
மிருக காட்சி சாலைக்கு ஒவ்வொருவரும் சென்று சுற்றிப் பார்க்கும்போது, அங்குள்ள மிருகங்களைக் கண்டால் என்னென்ன ரியாக்ஷன் செய்வார்கள் என்பதை நடித்துக் காட்டச் சொன்னார். அவரவர் செய்து காட்டியபோது ரஜினியும் வந்தார். கறுப்பாக குண்டாக இருந்த ரஜினி ரியாக்ஷன் செய்து காட்டியபோது, அவரைப் பார்த்து அனைவரும் சிரித்து விட்டார்கள். ரஜினி பயந்து போய் கூட்டத்திலிருந்தே ஓடிப்போனார்.
கல்லூரியில் நடிப்பு பற்றிய பாடங்கள், நடனம், உடற்பயிற்சி, யோகா ஆகியவை எல்லா மாணவர்களுக்கும் பொதுவாக இருக்கும். ரஜினியுடன் எனக்கு நட்பு ஏற்பட அதுவும் ஒரு காரணம்.
தவிர அப்போது தெலுங்கு, மலையாள மாணவர்கள் வசதி படைத்தவர்களாக, வீட்டிலிருந்து தாராளமாக பணம் பெற்று வந்தார்கள். ஆனால் தமிழ், கன்னட மாணவர்களில் பெரும்பாலோர் வீட்டை எதிர்த்துக் கொண்டு பயிற்சி பெற வந்து அவதிப்பட்டவர்கள். எனது நிலைமையும் அப்படித்தான். ரஜினி, அசோக், ரவீந்திரநாத், நட்ராஜ் ஆகிய நால்வரும் இந்த விஷயத்தில் என்னோடு ஒன்றுபட, நாங்கள் நெருங்கிய நண்பர்களானோம். நட்ராஜ் கூச்ச சுபாவமுள்ளவர். பகுதி நேர வேலை செய்து கொண்டே பயிற்சி பெற வந்ததால், அதிகம் எங்களோடு பட்டுக் கொள்வதில்லை.
நாங்கள் அடிக்கடி டிரைவ்-இன்-உட்லாண்ட்ஸ் ஹோட்டலுக்குச் செல்லும் வழக்கம் உண்டு. பெரும்பாலும் எங்களிடம் பணம் குறைவாகவே இருக்கும். அதனால் ஐவருக்கும் சேர்த்து இரண்டு அல்லது மூன்று காபி வாங்கி பகிர்ந்து கொள்வோம். சில சமயம் எங்களோடு பயிலும் மாணவிகளையும் பெருமைக்காக டிரைவ்-இன் அழைத்து வந்துவிடுவோம்.
மாணவிகளுக்கு மட்டும் காபி வாங்கித் தந்துவிட்டு நாங்கள் ஒவ்வொருவரும், 'இப்பதான் காபி சாப்பிட்டு வந்தேன்', 'நான் காபி சாப்பிட மாட்டேன்' என்று கூறி சமாளித்துவிட்டு வருவோம். எல்லோரிடமும் பணம் இருந்தால் முழு காபியாக சாப்பிடுவதை விருந்தாகவே நினைத்துக் கொள்வோம்.
அப்போது நாங்கள் மதிய சாப்பாட்டிற்கு அண்ணாசாலை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள 'ஆயிரம் விளக்கு கபே' செல்வோம். அங்கு ரூ.1-50க்கு அளவு சாப்பாடு.
எல்லோரும் டோக்கன் வாங்கி வரிசையாக அமர்ந்து கொள்வோம். முதலில் கூட்டு பரிமாறப்படும். பரிமாறப்பட்ட உடனேயே ரஜினி அதை சாப்பிட்டு விடுவார். சாதம் வரும்போதும் ஒரு முறை கூட்டு பொரியல் வாங்கி அதையும் காலி செய்யும் ரஜினி, நான்கைந்து முறை கூட்டு வாங்கிவிடுவார்.
"ஏனப்பா இப்படி சாப்பிடுகிறாய்?" என்று கேட்டால், "இந்த அளவு சாப்பாடெல்லாம் நமக்கு போதாதுப்பா. கூட்டுலதான் என் பசியை அட்ஜஸ்ட் பண்ண முடியும், கண்டுக்காதே" என்று எங்களிடம் சொல்லிவிடுவார். ரஜினியைப் பார்த்து நாங்களும் ஒன்றுக்கு இரண்டு முறை கூட்டு பரிமாறச் சொல்வதைப் பார்த்து, பரிமாறுபவர் எங்களைக் கண்டாலே பயந்து ஒதுங்க ஆரம்பித்தார். நாங்களும் அவரை விடுவதாக இல்லை. கலாட்டா செய்து பரிமாற வைப்போம்.
ரஜினியும், நானும் ஒரு நாள் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு திரும்ப பிலிம் சேம்பருக்கு வந்தபோது அங்கு நின்றிருந்த அசோக்கிடம் பத்து ரூபாய் கேட்டேன். அவரும் கொடுத்தார்.
ரஜினி என்னைத் தனியே அழைத்து, "ஆமா, என்கிட்ட ஏன் பணம் கேட்கலை?" என்று கேட்டார். நான், "நீயே பணத்துக்கு ரொம்ப சிரமப்படுறே. உன்னை ஏன் தொந்தரவு செய்யணும்னு அசோக்கிடம் கேட்டேன்" என்றேன்.
"உன் கிட்ட பணம் இருந்தா பரவாயில்லை. இல்லைன்னா கேட்ட எனக்கும் சங்கடம். உனக்கும் சங்கடம்" என்று நான் பதில் சொன்னாலும் ரஜினி சமாதானமாகவில்லை. ரஜினியைப் பார்த்து எனக்கு சங்கடமாகிவிட்டது.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், உதவி செய்யும் மனப்பான்மை அப்போதே ரஜினிக்கு இருந்து வந்தது. ரஜினியின் அந்த உணர்வைக் கண்டு எனக்கு அவர் மீது அன்பும், நட்பும் பெருகியது.
ரஜினிக்கு அப்போது சத்ருகன் சின்ஹா படங்கள் என்றால் மிகுந்த விருப்பம். தவறாமல் பார்த்து விடுவார். தோஸ்த், ராம்பூர்காலட்சுமண் ஆகிய படங்களை ரஜினியுடன் நானும் பார்த்திருக்கிறேன். சத்ருகன் சின்ஹா ஸ்டைல் நடிப்பு மீது ரஜினிக்கு அப்படி ஒரு ஈடுபாடு.
அப்போது ரஜினிக்கு இருந்த ஆசை, கன்னடத்தில் பிரபல வில்லனாக வரவேண்டுமென்று. வித்தியாசமான வில்லனாக வரவேண்டுமென்பதற்காகத்தான் பல புதிய ஸ்டைல்களை உருவாக்கிக் கொண்டார்.
பிலிம் சேம்பர் கல்லூரியில் ஒரே ஒரு பாத்ரூம் உண்டு. அங்கு அகலவாட்டில் பெரிய கண்ணாடி இருக்கிறது. ரஜினி உள்ளே போனால் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியே வர குறைந்தது அரை மணி நேரமாகும்.
எங்களுக்கு முதலில் காரணம் புரியவில்லை. அதனால் "பாத்ரூம் போனா சீக்கிரம் வரத் தெரியாதா? எவ்வளவு நேரம் காத்திருக்கிறது" என்று சத்தம் போட்டோம். மற்றொரு முறை எங்களுக்குப் பயந்து ரஜினி கதவைப் பூட்டாமலேயே உள்ளே போக, வெளியே வர நேரமானதால் நாங்கள் கதவைத் தட்டினால் அது திறந்து கொண்டது. உள்ளே கண்ணாடி முன் ரஜினி ஸ்டைல் பண்ணிக் கொண்டிருந்தார்.
அதற்குப் பின் ரஜினியோடு நாங்கள் பாத்ரூம் பக்கம் போனால், நாங்கள் முதலில் போய்விட்டு ரஜினியைக் கடைசியில் அனுப்புவோம்.
நான் அப்போது பரங்கிமலையிலுள்ள என் வீட்டிலிருந்து நேராக கல்லூரிக்கு வந்து சென்றேன். ரஜினி மற்றும் நண்பர்களெல்லாம் அமைந்தகரையிலுள்ள அருண் ஹோட்டலில் இருந்ததால், நான் அவர்களை அங்கு அடிக்கடி பார்க்கச் செல்வேன். அங்கு நால்வரும் செய்யும் கலாட்டாக்களைக் கேட்டு ரசிப்பேன். அப்படி ரசித்த சம்பவங்களில் ஒன்று இது.
நால்வரில் அசோக்கின் டூத்பிரஷ் ஒரு நாள் காலையில் ஈரமாக இருந்தது. 'நான் இன்று இன்னமும் பல் துலக்காத போது எப்படி ஈரமானது?' என்று புரியாமல் குழம்பிப் போனார். சதீஷ¨க்கும் இதே சந்தேகம் இன்னொரு நாள். ரவீந்தரநாதுக்கும் டூத் பிரஷ் அனுபவம் தொடர்ந்தது. (ரவீந்திர நாத் கன்னடத்தில் படங்களை இயக்குபவர். சந்தன வீரப்பன் பற்றிய படமொன்றை அவர் இயக்கி அது பெரும் பரபரப்பாக ஓடியிருக்கிறது. அது 'வாண்டட் வீரப்பன்' என்று தமிழில் டப் செய்யப்பட்டு வந்தது).
மாறி மாறி மூவரும் சந்தித்துப் பேச, ஈரத்திற்கு காரணம் ரஜினி என்று தெரிந்தது. அந்த சமயம் ரஜினியிடம் டூத் பிரஷ் வாங்க பணமில்லை. அதனால் நண்பர்களுடையதை மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொண்டார். சதீஷ் மூன்று டூத் பிரஷ்களையும் தூக்கிப் போட்டுவிட்டு நால்வருக்கும் சேர்த்து புதிதாக வாங்கி வந்தார். பெங்களூரிலிருந்து வந்த அசோக், ரவீந்திரநாத், சதீஷ் இவர்களில் சதீஷ் கொஞ்சம் வசதியானவர்.
திரைப்படக் கல்லூரியில் எங்கள் பயிற்சி முடித்து பட்டம் வாங்கிய பின், நானும் ரஜினியும் ஒரு நாள் பேசிக் கொண்டோம். 'வாழ்க்கையில் யார் எந்த நிலையில் உயர்ந்தாலும் கடைசி வரை நட்பு மாறாமல் பழக வேண்டும்' என்ற அந்த தீர்மானத்தை ரஜினி இன்று வரை கடைப்பிடித்து வருகிறார்.
பயிற்சி முடிந்தபின் ஒவ்வொருவருக்கும் பட வாய்ப்புகள் சம்பந்தமாக தகவல் சேகரிக்க தினமும் பிலிம் சேம்பர் வருவோம். அப்படி வரும்போது ஒரு நாள் நான் புதிதாக சட்டையொன்று அணிந்திருந்தேன்.
அதைப் பார்த்த ரஜினி, "உன் சட்டையைக் கொடு. இன்று ஒரு டைரக்டரைப் பார்க்க வேண்டியிருக்கிறது. என்னிடம் நல்ல சட்டை இல்லை" என்றவரிடம் நான் 'தாராளமாக' என்று சட்டையைக் கழற்றிக் கொடுத்து அவரது சட்டையைப் போட்டுக் கொண்டேன்.
மூன்று நாட்களுக்குப் பின் என்னைச் சந்தித்த ரஜினி, "உன் சட்டைக்கு நல்ல மதிப்பு. நானே வைத்துக் கொள்கிறேன்" என்றார். ரஜினிக்கு அப்படியாவது உதவ முடிந்ததே என்று சந்தோஷப்பட்டேன்.
'அபூர்வ ராகங்கள்' படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிய கையோடு ரஜினி தனக்கு புதுத் துணிகள் வாங்குவதற்காக என்னையும் பாரீஸ் கார்னர் அழைத்துச் சென்றார். அங்குள்ள துணிக்கடையொன்றில் தனக்கு மூன்று செட் ஆடைகளை வாங்கிக் கொண்ட ரஜினி, எனக்கும் ஒரு சட்டை, பேண்ட் எடுத்துக் கொடுத்தார்.
நான் "என்னிடம் சட்டை வாங்கினதுக்கு இது பதிலா?" என்று கேட்டேன்.
ரஜினி விடவில்லை. "நிச்சயமாக அதுக்காக இல்லை. நான் கொடுத்தா நீ வாங்கிக்க மாட்டியா?" என்று கேட்டபின் என்னால் பதில் பேச முடியவில்லை. நான் ரஜினிக்கு கொடுத்தது நல்ல டிசைன் சட்டை. அவ்வளவு விலை இல்லை. ஆனால் ரஜினி எடுத்துக் கொடுத்ததோ விலை உயர்ந்த துணிகள்.
ரஜினிக்கு 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அருண் ஹோட்டலை விட்டு ராயப்பேட்டை-புதுப்பேட்டை கார்டனில் இருந்த வீட்டுக்கு குடி போனார். அங்கு பணம் செலுத்திவிட்டு சாப்பிட்டு தூங்கும் பேயிங் கெஸ்ட் (paying guest)-டாக தங்கியிருந்தார். ரஜினியை நான் அடிக்கடி பார்க்கப் போவேன்.
இன்னும் சொல்கிறார் ராஜ்மதன்....
அடுத்த இதழில்......
Previous |
|
Next |
|