நட்பில் எந்தக் குறையும் இல்லை (பாகம் 28)
நீண்ட நாட்களாகவே ரஜினிக்கு ஒரு எண்ணம். தனது திரைப்படக் கல்லூரி சக மாணவர்களுக்காக ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று. இந்த எண்ணம் அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்ததிலிருந்தே இருந்தது.
ஒரு நாள் ரஜினி என்னிடம் (ராஜ்மதன்), "ஹோட்டல் சாப்பாடு எனக்கு அலுத்துப் போய்விட்டது. வீட்டு சாப்பாடு மீது ஆசையாக இருக்கிறது" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
"என் வீட்டுக்கு வாயேன்" என்று அழைத்தேன். "அசைவ சாப்பாடெல்லாம் போடுவியா?" என்று கேட்டார். "விருந்தே போட்டுடறேன்" என்றேன். நானே வந்து அழைத்துப் போவதாகச் சொன்னபோது, "வழி சொல்லு-நானே வந்துவிடுகிறேன்" என்றார் ரஜினி.
அதன்படி குறிப்பிட்ட நாளில் ரஜினியை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வந்துவிடச் சொன்னேன்.
ரஜினி வீட்டிற்கு வருவதால் அசைவ சாப்பாட்டிற்குத் தேவையானவற்றை மார்க்கெட் போய் வாங்கிக் கொடுத்துவிட்டு, ரஜினி தாமதமாக வரலாமென்று நினைத்து 10.30-க்கு ரயில் நிலையம் சென்றால் அங்கே எனக்கு முன்பே சிகரெட் புகைத்தபடி நின்று கொண்டிருந்தார்.
"என்னப்பா வந்து எவ்வளவு நேரமாச்சு?" என்று கேட்டேன்.
"காலை ஒன்பது மணிக்கே வந்துட்டேன்" என்றதும் எனக்கு இன்னும் அதிர்ச்சி.
"நீ என்னைத் தேடி வர்றதுக்கு முன்னாடியே உன் வீட்டுக்கு வந்து ஷாக் கொடுக்க நினைச்சேன். அட்ரஸ் கண்டுபிடிக்க முடியாம போச்சுன்னா என்ன பண்றதுன்னு இங்கேயே நின்னுட்டேன்" என்ற ரஜினியை "நல்ல ஆளுப்பா" என்று வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.
ரஜினி ஆர்வமுடன் சாப்பிட்டபோது எங்களுக்கெல்லாம் திருப்தியாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு ரயில் நிலையம் திரும்பியபோது அருகிலிருந்த மதி தியேட்டரில் 'அவள் ஒரு தொடர்கதை' ஓடிக் கொண்டிருந்தது. "இந்தப் படத்தை ஏற்கெனவே ஒரு தடவை பார்த்திருக்கேன். இப்ப பாலச்சந்தர் சார் டைரக்ட் செய்யப்போற 'அவள் ஒரு தொடர்கதை' தெலுங்கு படத்தில் என்னை ஜெய்கணேஷ் ரோலில் நடிக்க சொல்லியிருக்கார். அதனால் இன்னொரு தடவை பார்ப்போம்" என்ற ரஜினியுடன் நானும் படம் பார்க்கப் போனேன்.
ரஜினி என் வீட்டில் சாப்பிட்ட அனுபவம் பற்றி படப்பிடிப்பு சமயங்களில் பல முறை நினைவுப்படுத்திச் சொல்வார். "மதன் வீட்டிற்கு போனா அட்டகாசமான சாப்பாடு கிடைக்கும். தினமும் அப்படி சாப்பிட்டா குண்டாயிடலாம்" என்று மற்றவர்கள் முன்னிலையில் வைத்துச் சொல்வார்.
'அபூர்வ ராகங்கள்' படம் வெளிவந்த பின் அதை ரஜினியோடு சேர்ந்து பிலிம் சேம்பரில் பார்த்தேன். மீண்டும் ரஜினியுடன் நண்பர்கள் ஒருமுறை சேர்ந்து மிட்லண்ட் தியேட்டரில் பார்த்தோம்.
அப்போது ரஜினி படத்திற்காக வளர்த்திருந்த தாடியை எடுத்துவிட்டிருந்தார். அதனால் ரசிகர்கள் அவரைச் சந்தேகமாகப் பார்த்தார்களே தவிர நிச்சயப்படுத்திக் கொள்ளவில்லை.
'அபூர்வ ராகங்கள்' படத்தினைப் புறநகர்ப் பகுதியில் ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை அறிய ரஜினி ஆசைப்பட்டார். அதை என்னிடம் சொன்னபோது, பல்லாவரம் ஜனதா தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன்.
அங்கு மேல் வகுப்பு போகலாம் என்று சொன்னபோது ரஜினி மறுத்து கீழ் வகுப்பில் குறைந்த டிக்கெட் எதுவோ, அதில் போய்ப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அதனால் இருவரும் வரிசையில் போய் நின்றோம்.
ரஜினிக்கு முன்பாக நின்று கொண்டிருந்தவர் ஏற்கெனவே படத்தைப் பார்த்தவர் போலும். அவர் உற்றுக் கவனித்துவிட்டு, "ஏன் வரிசையில் நின்று சிரமப்படறீங்க. மானேஜரிடம் போய், நான்தான் இந்தப் படத்தில் நடிச்சிருக்கேன்னு சொல்லி டிக்கெட் கேட்டா தந்துட்டு போறாரு. நீங்களும் இந்தப் படத்தில் வரும் புதுமுகம் மாதிரியே இருக்கீங்க" என்றார்.
ரஜினி அதைக் கேட்டு சிரித்தபடியே, "ஆமா என்னைப் பார்த்து எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க. அதுதான் பார்க்க வந்தேன்" என்றார்.
டிக்கெட் எடுத்து உள்ளே முன் வரிசையில் பெஞ்சில் அமர்ந்து பார்த்தோம். ரஜினி, ஸ்ரீவித்யாவின் வீட்டு கேட்டை திறந்து அறிமுகமாகும்போது இடைவேளை டைட்டில் கார்டு வரும்.
இடைவேளையில் ரஜினியைக் கவனித்த எங்களருகில் இருந்த ஒருவர், மீண்டும் படம் நடந்து கொண்டிருந்த போது ரஜினி வரும் காட்சிகளில் திரையைப் பார்ப்பதும், ரஜினியைத் திரும்பப் பார்ப்பதுமாக இருந்தார். அவரது நடவடிக்கையை கவனித்த நான் ரஜினியிடம், "படம் முடியும் போது உன்னை எல்லோருக்கும் தெரிஞ்சு போகும். கூட்டம் கூடினா கஷ்டம்" என்று சொல்லி, படம் முடிவடைவதற்கு முன்பே வெளியேறிவிட்டோம்.
'அபூர்வ ராகங்கள்' வெளியானதும் தனக்குப் புதிதாகப் படங்கள் வரும் என்று ரஜினி எதிர்பார்த்தார். ஆனால் யாரும் வரவில்லை. நாட்கள் செல்லச் செல்ல ரஜினி சங்கடப்பட்டுப் போனார். கையில் பணமில்லாமல் விட்டல் வீட்டில் இருந்து கொண்டு அவர்களுக்கு சிரமம் வைக்க ரஜினிக்கு விருப்பமில்லை. தீபாவளி வேறு நெருங்கிக் கொண்டிருந்தது.
தீபாவளியன்று பெங்களூரில் உள்ள தன் வீட்டிற்குப் போய் அண்ணன்மார் குடும்பங்களுக்குப் புதுத் துணிகள் எடுத்துக் கொடுத்து அவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென்று நினைத்தார் ரஜினி. ஆனால் பணம் இல்லாமல் என்ன செய்ய முடியும்?
மேலும் ஒரு மாதம் பொறுத்துப் பார்த்து, வாய்ப்பு ஏதும் வராவிட்டால் மீண்டும் பெங்களூருக்கே சென்று கண்டக்டர் வேலையில் சேர்ந்துவிடும் முடிவை என்னிடம் சொன்னபோது நான் அவருக்கு ஆறுதல் கூறினேன்.
"ஊர் திரும்புவதற்கா இரண்டு வருடங்கள் சிரமப்பட்டு கல்லூரி வாழ்க்கையை முடிச்சிருக்கே? கொஞ்சம் பொறுமையாக இரு. நல்லது நடக்கும்" என்றேன்.
நம்பிக்கை வீண் போகவில்லை
எங்களது நம்பிக்கை வீண் போகவில்லை. தீபாவளிக்கு முன்னதாகவே ஒரு படம் ரஜினிக்கு ஒப்பந்தமாகி, கையில் அட்வான்ஸ் பணமும் வந்தது. தன் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை முதலில் வாங்கி வைத்துக் கொண்ட ரஜினி, மறுநாள் ரயிலில் பெங்களூர் செல்வதற்காக டிக்கெட் ரிசர்வேஷன் செய்ய சென்ட்ரலுக்கு என்னையும் அழைத்துச் சென்றார்.
அண்ணா சாலை புகாரியில் இருவரும் டிபன் சாப்பிட்டு விட்டு சென்ட்ரல் செல்ல பஸ்ஸைப் பிடிக்க வேண்டும். பஸ் நிறுத்தம் அப்போது சாந்தி தியேட்டருக்கு எதிரில் இருந்தது. சாந்தி வரை சென்று சாலையைக் கடந்து செல்ல பொறுமையில்லாமல் புகாரிக்கு அருகிலேயே சாலையைக் கடக்க முனைந்தபோது போக்குவரத்து போலீஸாரிடம் மாட்டிக் கொண்டோம்.
அப்போது அண்ணா சாலையை நினைத்த இடத்தில் கடக்க முடியாது. அபராதம் விதித்து விடுவார்கள். எனவே போலீஸ்காரர்கள் எங்களை ஆளுக்கு இவ்வளவு பணம் கட்டுங்கள் என்று அவர்கள் சொன்ன தொகையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். ஏனென்றால் அவ்வளவு தொகை எங்களிடம் இல்லை.
அவர்களிடம் கெஞ்சிப் பார்த்தும் மசியவில்லை. "பணம் இல்லைன்னா போலீஸ் ஸ்டேஷன் வாங்க" என்று அழைத்தார் அவர்களில் ஒருவர். எனக்கு ஒரு யோசனை தோன்றி, அவரிடம் ரஜினியைக் காட்டி, "சார் இவர், 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடச்சிருக்கார்'' என்றேன். அவரோ, "அந்தக் கதையெல்லாம் என்கிட்டே வேணாம்" என்றவர், எதிரே இருந்த மற்றொரு போலீஸ்காரரிடம் அனுப்பி வைத்து பணம் கட்டச் சொன்னார். நாங்கள் அந்தப் போலீஸ்காரரை அணுகியபோது, அவர் ஏற்கெனவே சிலரைப் பிடித்து அபராதம் கட்டச் சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் அவர் பின்புறமாக நின்று விழித்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு பணம் இருக்கிறது என்று கணக்குப் போட்டால், ரஜினியின் டிக்கெட்டுக்கு 30 ரூபாய். திரும்பி பஸ்ஸில் வர ஆகும் செலவு போக மீதி இரண்டு ரூபாய்க்கு மேல் பணம் இல்லை.
ரஜினி சட்டென்று என் கையை அழுத்தினார். கண் ஜாடை காட்ட அடுத்த நொடி மடமடவென்று பஸ் நிறுத்தம் நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தோம். போலீஸ்காரர் திரும்பிப் பார்த்தால் என்ன ஆவது என்று நெஞ்சம் பதைபதைக்க பஸ் ஏறி சென்ட்ரலில் இறங்கிய பின்பும் பயம் விட்டபாடில்லை.
அந்த நேரத்தில் ரஜினியின் வேகம்தான் கை கொடுத்தது. சட்டென்று எடுத்த முடிவை தாமதிக்காமல் செயல்படுத்தியதால் தப்பித்தோம். அதைப் பல நாட்களாக சொல்லிச் சொல்லி சிரிப்போம்.
ரஜினி அப்புறம் பிஸியாகி மிக மிக உயர்ந்துவிட்டார். ஆனால் எனக்கு இன்றும் அவர் பழைய நண்பனே. நாங்கள் இருவரும் படங்களில் சேர்ந்து நடிக்கவில்லை என்பதைத் தவிர எங்களது நட்பில் எந்தக் குறையும் இல்லை.
'வேலைக்காரன்' படத்தில் நடிப்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த சமயம் வேறொரு இடத்தில் எனக்கு வேலை இருந்ததால் வாய்ப்பை இழக்க வேண்டியதாயிற்று. ரஜினி கூடக் கோபித்துக் கொண்டார். "ஏன் வாய்ப்பே நழுவ விட்டே?" என்று.
'பாண்டியன்' படத்தில் ரஜினியின் சகோதரியாக வந்த ஜெயசுதாவை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வேடத்தில் நடிக்க ஒரு அழைப்பு வந்தது. நடித்தேன். அது ரஜினி சொல்லி வந்த வாய்ப்பு என்பது பின்னர் தெரிய வந்தது. அடுத்து 'வள்ளி'.
நீண்ட நாட்களாகவே ரஜினிக்கு ஒரு எண்ணம். தனது திரைப்படக் கல்லூரி சக மாணவர்களுக்காக ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று. இந்த எண்ணம் அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்ததிலிருந்தே இருந்தது. ராகவேந்திரா கல்யாண மண்டபம் திறக்கப்பட்ட பின் அவரது அடுத்தத் திட்டம் அதுவாகத்தான் அமைந்தது.
தனது நண்பர்கள் அனைவருக்கும் அதில் வாய்ப்பு தர வேண்டுமென்பதற்காக அவரே கதை, வசனம் எழுதினார். இதற்கான பூஜை, தொடக்க விழா ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் எளிமையாக, அதே சமயம் பரபரப்போடு நடந்தது. விழாவில் பங்கேற்க திரைப்படக் கல்லூரி நண்பர்களாகிய நாங்கள் ஒவ்வொருவராக கல்யாண மண்டபம் போய்ச் சேர்ந்த போது அங்கே வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டையில் இருந்த ரஜினியைப் பார்த்து வியப்படைந்தோம். அவர் வேஷ்டியில் ஒரு விழாவில் கலந்து கொண்டிருக்கிறாரென்றால், அது 'வள்ளி' தொடக்க விழாதான். தன்னோடு நிற்காமல் எங்கள் அனைவருக்கும் வெள்ளைச் சட்டை, வேஷ்டியை மொத்தமாக வாங்கி வைத்திருந்தார். அதை அணியச் சொல்லி மேடைக்குப் போகச் சொன்னார். மேடையில் அன்று வெள்ளை வெளேர் மயமாக இருந்தோம்.
எப்போதும் வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருக்கும் பாலச்சந்தர் அவர்கள் கூட அன்று விழா மேடைக்கு வந்த போது எங்களையெல்லாம் பார்த்து வியந்து போய், "அடடா, நீங்களெல்லாம் இப்படி இருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நானும் வேஷ்டியில் வந்திருப்பேன்" என்றார்.
இன்னும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை ராஜ்மதன் கூறுகிறார்....
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|