ரஜினியின் ஸ்டைலே அலாதி (பாகம் 31)
எங்கள் அறையிலுள்ள கண்ணாடி முன் நின்றபடி ரஜினி அடிக்கடி ஸ்டைல் செய்து கொண்டிருப்பார். ஆனாலும் அதில் திருப்தி இருக்காது. "என் மூஞ்சிக்கு எவன் நடிக்க சான்ஸ் தருவான். ஆனால் உனக்கு சான்ஸ் வரும். நீ நடிகனாகி விட்டால், நான் உனக்கு மானேஜராகி விடுவேன். நல்ல சம்பளம் போட்டுக் கொடுத்து விடு" என்பார் வேடிக்கையாக.
ரஜினி நடித்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தபின் தன் அண்ணனுக்குத்தான் முதலில் ஸ்கூட்டர் வாங்கித் தந்தார். அப்புறம்தான் தனக்கு, ஒன்று வாங்கிக் கொண்டார். பெங்களூர் சென்றால் அண்ணன் ஸ்கூட்டரை எடுத்துச் சுற்றுவார் என்று கூறிய சதீஷ் மேலும் சொன்னார்.
''பெங்களூருக்கு நானும் சென்றால் எனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு ரஜினியுடன் சுற்றுவேன். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டே ஒன்றாக ஸ்கூட்டரில் சென்றபோது எதிரே கார் ஒன்று வேகமாக மோதும் நிலையில் வந்தது. நல்ல வேளையாக நாங்கள் சுதாரித்துக் கொண்டோம். கொஞ்சம் அசந்திருந்தாலும் பெரிய விபத்து நேர்ந்திருக்கும். தைரியமாக இருக்கும் ரஜினியே கொஞ்சம் ஆடிப்போய்விட்டார்.
ரஜினி திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டே பெங்களூரில் அவ்வப்போது கண்டக்டர் வேலையும் பார்த்து வருவார். அந்த சூழ்நிலையில் நான் ஒரு நாள் ரஜினியை கண்டக்டராகவே பெங்களூரில் சந்தித்தேன்.
தன் வேலையிலும் வித்தியாசமாகவே தெரிந்தார். 'ரைட்' என்று குரல் கொடுப்பதிலாகட்டும், பயணிகளுக்கு வேகமாக டிக்கெட் கொடுப்பதிலாகட்டும் ரஜினியின் ஸ்டைலே அலாதி.
"இன்றைக்கு என்னோட செலவு" என்று ரஜினி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட வைப்பார்.
பஸ்சில் சில சமயம் ரஜினி விசித்திரமான வேலை செய்வார். ஆங்கில வார்த்தையே கலவாமல் தூய கன்னடத்தில் பயணிகள் இறங்குமிடத்தைக் குறிப்பிடுவார். 'மெஜஸ்டிக் சர்க்கிள்' என்றால் 'மெஜஸ்டிக் வட்டம்' என்பார். 'காந்திஜி ரோடு' என்றால் 'காந்திஜி ரஸ்தே' என்பார்.
நடிகரான பின் ரஜினியைப் பெரும்பாலும் வீட்டிலேயே சந்தித்து விடுவேன். படப்பிடிப்பிற்கு அதிகம் சென்றதில்லை. வீட்டிற்குச் சென்று மாடியில் அவரது அறையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். சில சமயம் அங்கிருந்து ஓட்டலுக்குச் சென்று பேசுவோம். இதற்கெல்லாம் நேரம் காலமே பார்ப்பதில்லை.
ஒரு முறை என் வீட்டில் டூ-இன்-ஒன் ரேடியோ மற்றும் சில விலை உயர்ந்த பொருட்கள் பகலிலேயே திருட்டு போய்விட்டன. அது எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. ரஜினியிடம் பேசிக் கொண்டிருந்தபோது அதைச் சொன்னேன்.
"டேய் போனது பற்றி கவலைப்படாதே. உனக்கு நான் ஒரு வி.சி.ஆர்., கலர் டி.வி வாங்கி தருகிறேன்" என்றார். நான் வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.
இது நடந்து ஒரு மாதத்திற்குப் பின்பு ஒரு படப்பிடிப்பில் ரஜினியைச் சந்தித்தேன். அப்போது அவர் மீண்டும் நினைவுப்படுத்தி, "உனக்கு ஒரு வி.சி.ஆர்., கலர் டி.வி. வாங்கித் தர்றதா சொன்னேனே. எப்போ வாங்கிக்கிறே?" என்று கேட்டார்
நான் "நீ சொன்னதற்கு ரொம்ப மகிழ்ச்சி. எதுவானாலும் நான் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிக் கொள்ளவே விரும்புகிறேன்" என்றேன். அதற்கு மேல் ரஜினி வற்புறுத்தவில்லை.
'வள்ளி' படம் உருவானபோது முதலில் ஹரிராஜ் (வள்ளியின் முறைப் பையன் வேடம்) நடித்த வேடத்தில் நான் நடிப்பதாக இருந்தது. ரஜினி அதில் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டபின் கதாபாத்திரங்களும், நடிகர்களும் மாறிப்போனார்கள். என்றாலும் திரைப்படக் கல்லூரி நண்பர்களெல்லாம் ஒரே படத்தில் சேர்ந்து நடித்த அனுபவத்தின் முன்னே எனக்கு வேறெதுவும் பெரிதாகப்படவில்லை" என்கிறார் ரஜினியின் நண்பர் சதீஷ்.
அசோக் தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்
பாலசந்தர் இயக்கிய 'கல்யாண அகதிகள்', துரை இயக்கிய 'ஒரு மனிதன் ஒரு மனைவி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் அசோக். 'வள்ளி' படத்தின் பிற்பகுதியில் முதல் அமைச்சராக நடித்தவர் இவரே.
கன்னட நடிகரான இவர் ரஜினியுடன் சென்னை பிலிம் சேம்பர் பயிற்சி பெற்றவர். ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இன்றைக்கும் அவரோடு நட்புடன் இருந்து வரும் இவர். ரஜினியுடன் பழகிய அனுபவங்களை உற்சாகமாக சொல்லத் தொடங்கினார்.
"1972 டிசம்பர் மாதம் என்று நினைவு. சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் நான், ரஜினி, ரவிந்திரநாத், சந்திரஹாச ஆல்வா, ராகவேந்திர ராவ், அமர் முல்லா ஆகியோர் நடிப்புப் பயிற்சிக்காக திரைப்படக் கல்லூரி நடத்திய நேர்முகப் போட்டிக்காக வந்திருந்த கன்னட மாணவர்கள். பெங்களூரிலிருந்து சதீஷ் வந்திருந்தார் என்றாலும், அவர் தமிழ்ப் பிரிவுக்குச் சென்றார்.
நான், ரவிந்திரநாத், சதீஷ் மூவரும் அமைந்தகரை அருண் ஹோட்டலில் தங்கினோம். ரஜினி அப்போது சென்ட்ரல் நிலையம் அருகே உள்ள கிருஷ்ணன் ஹோட்டலில் தங்கி இருந்தார்.
ரஜினி கண்டக்டராக இருந்தபோது ஓடுகிற பஸ்ஸில் ஏறுவதும், அதிலிருந்து இறங்குவதும் அவருக்கு சாதாரண விஷயம். ஆனால் கர்நாடக பஸ் அமைப்புகள் வேறு. அதே நினைப்பில் அன்று ரஜினி ஓடுகிற பஸ்ஸில் ஏறினார். ஆனால் கால் வைப்பதற்குள் கை நழுவி கீழே விழுந்துவிட்டார். எங்கள் கண் முன்னாலேயே இது நடந்தது.
பதறிப்போய் அவரை எங்கள் அறைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தோம். அப்போதுதான் ரஜினியையும் எங்களோடு இருக்கச் செய்வது என்று முடிவெடுத்தோம். ரஜினியும் ஒப்புக் கொண்டு கிருஷ்ணா ஹோட்டலை காலி செய்துவிட்டு வந்தார்.
நாங்கள் இருக்கின்ற அறையின் வாடகை 175 ரூபாய். நான், சதீஷ், ரவிந்தரநாத் மூவரும் 45 ரூபாய் என்று பிரித்துக் கொள்ள, ரஜினிக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி செய்து 40 ரூபாய் மட்டும் கொடுக்கச் செய்தோம். எங்கள் மூவருக்கும் கட்டில் உண்டு. ரஜினிக்கு மட்டும் இல்லை. ஆனால் வசதிக் குறைவுகளை யாரும் பொருட்படுத்திக் கொள்ளாமல் இருந்து வந்தோம்.
யாருக்குப் பணம் வந்தாலும், நால்வரும் பகிர்ந்துக் செலவு செய்வோம். எங்களது இந்த சிரமங்களைப் புரிந்து கொண்டு வேறொரு வகையில் உதவிய நண்பர் ராகவேந்திர ராவ். அவர் நியூ உட்லண்ட்ஸில் பகுதி நேரப் பணியாளராக சர்வராக வேலை செய்தார்.
ஒவ்வொரு நாளும் எங்களைத் தேடி வருவார். வரும்போது குறைந்தது இருபது இட்லிகளைப் பார்சலாக எடுத்துக் கொண்டு வந்துவிடுவார். சில சமயம் வர முடியாமல் போவதும் உண்டு. அவர் கொண்டு வரும் இட்லிகள் எங்களது ஒரு வேளை பசியைப் போக்க உதவும்.
ஒரு சமயம் குறிப்பிட்ட தேதிப்படி சதீஷிற்கு பணம் வரவில்லை. அன்று நால்வரிடமும் பணம் இல்லை. மறுநாள் யுகாதி பண்டிகை.
ஏகாதசி அன்று மட்டும் விரதம் இருப்பானேன் என்று யுகாதியன்றும் விரதம் இருக்கச் சொன்னார் ரஜினி. யுகாதியன்று வயிறு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு எல்லோரும் படுத்துக் கொண்டோம்.
மறுநாள் காலையில் பயங்கர பசி. என்ன செய்வதென்று யாருக்கும் புரியவில்லை. 11.00 மணிக்கு ஆபத்பாந்தவனாக ராகவேந்திர ராவ் இட்லி கொண்டு வந்தார். பசிக்கு முன் கவுரவம் தோன்றவில்லை எங்களுக்கு. நாய்களைப் போல் பாய்ந்தோம். இட்லி பொட்டலத்தின் மீது. இதே அனுபவம் எங்களுக்கு அவ்வப்போது வரும்.
ஒரு நாள் நால்வரும் கன்பத் ஓட்டலுக்கு சாப்பிடப் போனோம். ப்ரட் சிலைஸ், ஆம்லெட் ஆர்டர் செய்தோம்.
சாப்பிட்டு முடிந்தபின் 80 ரூபாய்க்கு பில் வந்தது. எங்களது பாக்கெட்டுகளைக் கிளறினால் நால்வரிடமும் சேர்த்து 40 ரூபாயைத் தாண்டவில்லை. இனி அவ்வளவுதான், கன்பத் ஓட்டலில் மாவரைத்து சரித்திரம் படைக்க வேண்டியதுதான் என முடிவு கட்டினோம். ஆனால் திடுமென எழுந்த ரஜினி எங்கள் மூவரையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வெளியே போனார். நேரம் செல்லச் செல்ல ஹோட்டல்காரர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்க்க பயமாகிவிட்டது.
ஆனால் பத்தே நிமிடத்தில் ரஜினி வந்துவிட்டார். ஸ்டைலாக சிகரெட் பற்ற வைத்தார். பில்லுக்கு பணம் கொடுத்ததோடு, சர்வருக்கு ஐந்து ரூபாய் டிப்ஸ¨ம் கொடுத்தார்.
ரஜினியிடம் அவ்வளவு பணம் ஏது என்று விசாரித்தால் தன் கழுத்து செயினை அடகு வைத்துவிட்டு வந்திருக்கிறார் என்று தெரிந்தது. அவர் மட்டுமல்ல நானும் இப்படி அடிக்கடி கழுத்து செயினை அடகு வைப்பதும் பின் மீட்டுக் கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது.
ஒரு சமயம் கல்லூரி சென்று திரும்பியபின் கைலியை எடுத்து உடுத்தலாமென்று பார்த்தால், அது கிழிந்திருந்தது. அது ரஜினியின் வேலைதான் என்று புரிந்தக்கொண்டேன்.
முதல் நாள் தனது ஒரே கைலியை துவைத்துப் போட்டுவிட்டு எனது கைலியை உடுத்தியிருக்கிறார். கண்ணாடி முன் ஸ்டைலெல்லாம் பண்ணும்போது கைலி கிழிந்திருக்கிறது. நான் ரஜினியிடம் அதைப் பற்றிக் கேட்காமல் கிழிந்த கைலியைத் தைத்துக் கொண்டிருந்தேன். நான் மவுனமாக இருப்பது கண்டு ரஜினிக்கு சங்கடமாகிவிட்டது.
அருகில் வந்த ரஜினி, "உன் கைலியை நான்தான் கிழித்தேன்" என்றார். நான் தைப்பதை நிறுத்தாமல் 'தெரியும்' என்றேன்.
"தெரிந்தும் ஏண்டா சும்மா இருக்கறே. என்னை அடிடா, திட்டுடா" என்றார் ரஜினி. 'பரவாயில்லை விடு' என்றேன். அதைக் கேட்டு ரஜினிக்கு இன்னும் சங்கடமாகிவிட்டது. நான் சமாதானம் செய்த பிறகே அவருக்கு மனம் ஆறியது.
எங்கள் அறையிலுள்ள கண்ணாடி முன் நின்றபடி ரஜினி அடிக்கடி ஸ்டைல் செய்து கொண்டிருப்பார். ஆனாலும் அதில் திருப்தி இருக்காது. "என் மூஞ்சிக்கு எவன் நடிக்க சான்ஸ் தருவான். ஆனால் உனக்கு சான்ஸ் வரும். நீ நடிகனாகி விட்டால், நான் உனக்கு மானேஜராகி விடுவேன். நல்ல சம்பளம் போட்டுக் கொடுத்து விடு" என்பார் வேடிக்கையாக.
ரஜினி கறுப்பாக, குண்டாக இருப்பார் என்பதால் உற்சாகம் வந்துவிட்டால் அவரைக் 'கண்டமராயா' என்று கிண்டல் செய்வேன். அவரும் என்னை பதிலுக்கு 'எபூர்' ('கிராமத்து ஆசாமி') என்று கேலி செய்வார்.
இன்னும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் பகிர்ந்துக் கொள்கிறார் அசோக்.
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|