ரஜினியும் ரசிகர் மன்றமும் (பாகம் 34)
''அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் நிறையப் படங்கள் வந்துவிடுமாமே! திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே கலைத் துறையில் நிலைத்து நிற்க முடியும்.
I must stand on my own leg.'' என்கிறார் ரஜினி
''முள்ளும் மலரும்' வெற்றிக்குப் பின் நிறைய ரசிகர்கள் எனக்குக் கிடைத்தார்கள். மன்றம், சபாக்கள் என் பெயரில் அமைத்தார்கள். ஆனால் எனக்கு இதெல்லாம் பிடிக்காது. நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவையா, இல்லையா என்ற ஆராய்ச்சி தேவையற்றது. அது நடிகர்களின் சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் எனது பெயரில் ரசிகர் மன்றம் அமைத்துக் கொண்டு ரசிகர்கள் தங்கள் சக்தியை விரயம் செய்ய வேண்டாமென்று நினைக்கிறேன்.
ஆனாலும் பல ஊர்களில் எனக்கு மன்றம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'என்னைக் கேட்காமல் ஏன் மன்றம் வைத்தீர்கள்?' என்று நான் கேட்கமாட்டேன். எனக்கு கெட்ட பெயர் வராமல் பார்த்துக் கொண்டால் சரி.
இந்த மாதிரி அமைப்புகள் வியாபார நோக்கில் செயல்படக்கூடாது என்பதே என் கருத்து.
நான் பெங்களூரில் இருந்தபோது சிவாஜி ரசிகனாக இருந்தேன். அங்கு சிவாஜி நடித்த படங்கள் திரையிடப்பட்டால் தோரணங்கள் கட்டுவார்கள். வாண வேடிக்கைகள் நடத்துவார்கள். அந்த மாதிரி ஆர்ப்பாட்டங்களில் எனக்கு விருப்பம் கிடையாது. வேடிக்கை பார்ப்பதுடன் சரி.
ஒரு நடிகருக்கு இப்படி இருப்பதில் தவறில்லை. அந்த நடிகர்தான் தலைசிறந்தவர் என்று மற்றவர்களைப் பழித்துப் பேசுவது தவறு. இது எனது சொந்தக் கருத்து.
அது போலவேதான் அரசியலும்.
"ரஜினி நீயும் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துவிடு. நிறையப் படங்கள் வரும்" என்று சிலர் என்னிடம் சொல்லியதுண்டு.
அதெப்படி? ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டால் நிறையப் படங்கள் வந்துவிடுமாமே! திறமையை வளர்த்துக் கொண்டால் மட்டுமே கலைத் துறையில் நிலைத்து நிற்க முடியும். I must stand on my own leg.
என்னுடைய சுய முயற்சியால், உழைப்பதினால் மட்டுமே சந்தர்ப்பங்கள் கிடைத்தால் போதும். வேண்டாம் இந்த அரசியல்! அதென்னமோ இந்த அரசியல் என்றாலே எனக்கு அலர்ஜிதான்!''
(1980-ல் ரஜினிகாந்த்).ரஜினியின் மரியாதை
பத்தாண்டுகளுக்கு முன் ரஜினிகாந்துடன் படப்பிடிப்புக்கு ஒரு சிறுவனும் கூடவே வருவான். அப்போது படப்பிடிப்பில் ரஜினியின் பிரதான உதவியாளனாக இருந்தது அவன்தான். ரஜினிக்குச் சிகரெட், நெருப்புப் பெட்டி இவற்றைக் கொடுப்பது போன்ற வேலைகள் அவனுக்கு. ரஜினி சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டதும் நெருப்புப் பெட்டியை ரஜினி தூக்கித்தான் போடுவார். அதை அவன் கீழே விழாமல் பிடித்துக் கொள்வான். அவன் எப்போதும் விழிப்போடு இருக்கிறானா என்றறியவே ரஜினி அப்படிச் செய்தார்.
அவனது நிஜப்பெயர் வேணு என்றாலும் ரஜினி அவனை ராகவேந்திரா என்றுதான் அழைத்தார். ராகவேந்திரா சுவாமிகள் மீதுள்ள பக்தியின் காரணமாக அவன் பெயரை அப்படி மாற்றியிருந்தார்.
ரஜினி அவனை 'வா போ' என்றழைக்காமல் 'வாங்கோ, போங்கோ' என்றே மரியாதையோடு அழைத்தார். ஏனென்று கேட்டதற்கு, "நான் எல்லோரையும் அப்படி மரியாதையாகத்தான் அழைப்பது வழக்கம்" என்று காரணம் கூறினார்.
அப்புறம் அந்தச் சிறுவனைக் காணவில்லை. அவனுக்குப் பின் உதவியாளராக வந்தவர்தான் இப்போதைய ஜெயராம்.
இன்னும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை
அடுத்த இதழில் காணலாம்..
Previous |
|
Next |
|