ரஜினியின் மனிதாபிமானம் (பாகம் 35)
"என்னுடைய படத்திற்கு விழா எடுக்கிறார்கள் என்பது எனக்குப் பெருமை தரும் விஷயமானாலும் பொது மக்களுக்கு இப்படி ஒரு இடைஞ்சல் ஏற்பட்டுவிட்டதே. இங்கே தேங்கிப் போய் நிற்கும் வண்டியில் இருப்பவர்களில் யாருக்கு என்ன அவசரமோ? பிரசவ ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டியவர்கள் கூட யாராவது இருக்கலாம் என்று நினைக்கும்போது மனசு கஷ்டப்படுகிறது" என்று வேதனையோடு சொன்னார் ரஜினி.
தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், மாவீரன் (தமிழில் முதல் 70 எம்.எம். படம்), மாப்பிள்ளை, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கியவர் காலஞ்சென்ற ராஜசேகர். ரஜினியோடு நல்ல நட்பு கொண்டிருந்த இவர், உயிரோடிருந்தபோது பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்த அனுபவங்களைப் பற்றி நம்மிடம் சொன்னார்.
"ரஜினியுடன் எனது முதல் சந்திப்பு மறக்க முடியாதது. அவர் நான் இயக்கிய 'மலையூர் மம்பட்டியான்' படத்தைப் பார்த்துவிட்டு என்னை வரச் சொல்லி இருந்தார். வாகினி ஸ்டுடியோவில் வேறு வேலையில் இருந்த நான், மதிய உணவு இடைவேளையின்போது அவரைக் காணச் சென்றேன். "ராஜசேகர் சார்! நான் நேத்து படம் பார்த்ததிலே இருந்து அதே ஞாபகமா இருக்கேன்" என்றார் எடுத்த எடுப்பிலேயே. பாராட்டத் தகுதி பெற்ற ஒரு இனிய மனிதனால் உண்மையாகவே பாராட்டப்பட்டதாகவே உணர்ந்தேன். அன்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த நாங்கள், 'மலையூர் மம்பட்டியான்' படத்தை இந்தியில் 'கங்குவா'வாக எடுக்க வேண்டும் என்ற முடிவோடு பிரிந்தோம்.
அதற்கு முன் 'தம்பிக்கு எந்த ஊரு?' படத்தில் முதல் முறையாக இணைந்து பணியாற்றினோம். நான் எழுதி, ரஜினி பேசிய முதல் வசனமே, 'நான் இந்த சாலஞ்சை (சவால்) ஒத்துக்கிட்டேன். இதுலே நிச்சயமா ஜெயித்து காட்டுவேன்'. இது எனக்கு தெரியாமலேயே நான் எழுதிய தீர்க்க தரிசனம்.
ரஜினி யாருடைய மனமும் நோகக் கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதற்கு இரண்டு நிகழ்ச்சிகளை நான் நினைவு கூறுவேன்.
அருணாசலம் ஸ்டுடியோ ஆலமரத்தடியில் ஒரு நாள் 'படிக்காதவன்' படப்பிடிப்பு. இரவு ஒன்பது மணியைத் தாண்டிவிட்டது. எங்களோடு படத்தின் தயாரிப்பாளர் வீராசாமியும் உடன் இருந்தார்.
படத்தில் கதையின்படி ரஜினி, தன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்ட தன் டாக்ஸியை ஒரு கட்டையால் அடித்து நொறுக்குவது போல் ஒரு காட்சி. அதை உடைத்துக் கொண்டிருக்கும்போது ரஜினியின் முகத்தில் ஒரு மாறுதல். ஷாட்டின் குறுக்கே நான் ஓடிச் சென்று அவரைத் தாங்கிக் கொண்டேன். அவரது கை மூட்டு விலகி விட்டது. அங்கேயே சிகிச்சைகள் செய்தோம். பரவாயில்லை என்று மீதிக் காட்சிகளையும் நடித்து முடித்து விட்டு, உடனடியாக வீராசாமியை வீட்டுக்குப் போகச் சொல்லி விட்டு, என்னிடம் தனியாக வந்து, "யாரிடமும் சொல்லி விடாதீர்கள் சார். என் கண்ணைப் பாருங்கள். கண்ணாடித் துண்டு ஒன்று கண்ணுக்குள் போய் விட்டதோ என்று சந்தேகம்" என்றார். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அவரை விஜயா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நல்லவேளையாக ஒன்றுமில்லை. அதை நான் குறிப்பிடக் காரணம், உண்மையிலேயே தனக்கு ஏற்பட்ட வலியைக் கூட்டத்தில் சொன்னால் தன்னை நேசிப்பவர்களின் நெஞ்சங்கள் எவ்வளவு வேதனைப்படும் என்பதால் அவர் அதைப் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.
ரஜினியின் 100-வது படம் என்பதற்காக 'ராகவேந்திரா' படத்திற்கு அவரது ரசிகர் மன்ற நண்பர்கள் சார்பாக தியாகராய நகர் பனகல் பார்க்கிற்கு முன்னால் ஒரு விழாவை நடத்தினார்கள். அதில் கலந்து கொள்வதற்காக, ஏ.வி.எம்.மில் 'படிக்காதவன்' படப்பிடிப்பிலிருந்த நாங்கள் இருவரும் ஒரு மணி நேரம் படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டுப் புறப்பட்டோம்.
ரஜினி அந்தக் கூட்டத்திற்கு வருவது தெரிந்து பாண்டி பஜார், பனகல் பார்க் பகுதிகளில் போக்குவரத்தில் ஏகப்பட்ட நெருக்கடி. எந்த வண்டியும் நகர முடியவில்லை. மாட்டிக் கொண்ட வண்டியொன்றில் நானும் ரஜினியும் பேசிக் கொண்டிருந்தோம்.
"என்னுடைய படத்திற்கு விழா எடுக்கிறார்கள் என்பது எனக்குப் பெருமை தரும் விஷயமானாலும் பொதுமக்களுக்கு இப்படி ஒரு இடைஞ்சல் ஏற்பட்டுவிட்டதே. இங்கே தேங்கிப் போய் நிற்கும் வண்டியில் இருப்பவர்களில் யாருக்கு என்ன அவசரமோ? பிரசவ ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டியவர்கள் கூட யாராவது இருக்கலாம் என்று நினைக்கும்போது மனசு கஷ்டப்படுகிறது" என்று வேதனையோடு சொன்னார் ரஜினி. ஒருவனை ஒருவன் இடித்துக் கொண்டு ஓடும் உலகத்தில் இப்படியும் ஒரு மனிதனா என்றுதான் ரஜினியைப் பற்றி அப்போது எனக்கு நினைக்கத் தோன்றியது.
கொடைக்கானலில் 'தம்பிக்கு எந்த ஊரு?' படப்பிடிப்பு. பனியும், பஞ்சு மேகங்களும் சூழ்ந்து படிப்பிடிப்பை நடத்த விடாமல் மூன்று நாட்களாகி விட்டன. நான்காவது நாள் எங்கேயாவது சென்று படப்பிடிப்பை நடத்தி விட வேண்டும் என்ற வேகத்தோடு கொடைக்கானலை விட்டு கீழே இறங்கி ஒரு சிறிய கிராமத்தில் 'ஆசைக்கிளியே' என்ற பாடலை ஒரு சூரிய காந்தி தோட்டத்தில் ஆரம்பித்துவிட்டேன். இரவு நாங்கள் அங்கேயே தங்க ஏற்பாடுகள் இல்லை.
நானும், கேமராமேன் ரங்காவும், என் குழுவினரும் ஒரு தென்னந்தோப்பில், இரவில் தங்கிவிடுவது என்று முடிவெடுத்தோம். அந்த ஊரில் ரஜினி மட்டும் தங்குவதற்காக ஒரு பெரியவரின் வீட்டை ஏற்பாடு செய்திருந்தோம். படப்பிடிப்பு முடிந்து தனக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்திற்குச் சென்று என்னைத் தேடிய ரஜினி, நான் அங்கு தங்குவதில்லை என்றதும், "நான் டைரக்டர் தங்கும் இடத்தில் தங்கிக் கொள்கிறேன்" என்று நாங்கள் இருந்த தென்னந்தோப்பிற்கு வந்து (உண்மையைச் சொல்கிறேன்-பக்கத்தில் சுடுகாடு) எங்களோடு தங்கிவிட்டார்.
இதற்குப் பின் ஒரு நாள் என்னிடம் வந்த ரஜினி, "சார் ஒருத்தன் தூங்கறதுக்கு முக்கியமா என்ன வேணும் சார்?" என்று கேட்டதற்கு நான், "நீங்களே சொல்லுங்கள்" என்றேன். "தூக்கம் தான் வேணும்" என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
பொதுவாக எந்த ஒரு ஹீரோவையும் நமது கற்பனையில் பலவிதமாக உருவம் போட்டு வைத்திருப்போம். ஒரு படத்தைப் பற்றி சிந்திக்கையில், 'அவர் அப்படி நடித்தால் எப்படி இருக்கும்? எப்படி நடித்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள்' என்று திறமையுள்ள நடிகர்களைப் பற்றி நமக்குள் ஒரு கணிப்பு இருக்கும். அந்த வகையில் 'படிக்காதவன்' படத்தில் ரஜினி அறியாமலேயே அவரை ஈடுபாட்டுடன் நடிக்கச் செய்திருக்கிறேன். குறிப்பாக நடனக் காட்சிகளில் நான் நேரடியாக தலையிடாமல் நடன இயக்குநரிடம், "ரஜினியை ரசிகர்கள் ரசிக்கும்படி நடனமாடச் செய்யுங்கள். ரிஸ்க்காக இருக்குமே கஷ்டப்படுவாரே என்று யோசிக்காமல் கண்டிப்பாகச் சொல்லி விடுங்கள். 'இப்படி ஆடினால்தான் நன்றாக இருக்கும்' என்று தயங்காமல் கூறுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறிவிட்டு ஒதுங்கி நிற்பேன்.
நடன இயக்குநர் சொன்னபடி ரஜினி நடனமாட சற்று சிரமப்படும்போது என்னைப் பார்த்து, "என்ன சார், தேவைதானா?" என்று கேட்பார். நானும் அவர் கேட்பது போலவே, "ஆமா சார், அப்பத்தான் ரசிகர்கள் கைதட்டுவார்கள்" என்று கூறுவேன். அது அவர் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தி நன்றாகச் செயல்படுவார்.
'படிக்காதவன்' இந்தியில் வெளிவந்த 'குத்தார்' படத்தின் தழுவலாகும். அதில் இல்லாத சோகப் பாடல் ஒன்றை தமிழில் இணைத்தோம். அதற்காக பாடல் பதிவானது. ஆனால் ரஜினி, "ஏற்கெனவே படத்தின் நீளம் 17 ஆயிரம் அடி வளர்ந்திருக்கிறது. இன்னும் தேவையா?" என்று கேட்டார்.
நானும் பிடி கொடுக்காமல், "ஆமா சார், எனக்காக இரண்டு நாள் இரவு கால்ஷீட் கொடுங்க போதும்" என்று வற்புறுத்தி நடிக்க வைத்துவிட்டேன். படமாகிய பின், என் அருகில் இருந்து படம் பார்த்த ரஜினிக்கு 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்" பாடல் காட்சியில் தான் நடித்திருப்பது பற்றி அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு என் தொடையை அழுத்தமாகப் பிடித்தபடி, "ஸ்....சார்! இது நான்தானே?" என்று வியந்து கேட்டார். தியேட்டரில் அந்தப் பாடல் காட்சிக்கு கிடைத்த வரவேற்பு ரஜினியை மேலும் உற்சாகப்படுத்தியது.
'படிக்காதவன்' படப்பிடிப்பின்போது ஒரு நாள் இடைவேளையில் ரஜினிகாந்த் என்னிடம் ஓர் வேண்டுகோள் விடுத்தார். "நான் எடுக்கப் போகும் படத்தை நீங்கள்தான் டைரக்ட் செய்ய வேண்டும்" என்பதே அது.
ரஜினியின் வேண்டுகோள் நிறைவேறியதா?
அடுத்த இதழில்...
Previous |
|
Next |
|