நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி - டாக்டர் செரியன் (பாகம் 39)
ஒரு நேரம் சாதாரணமாக இருப்பதும், சிறு விஷயங்களுக்காகக் கோபப்படுவதுமாய், காரணமில்லாமல் கோபப்படுவதுமாய், ரஜினி இருக்க அவனது தயாரிப்பாளர்கள் சங்கடப்பட்டனர்.
திருமதி ரெஜினா வின்சென்ட் மேலும் சொல்கிறார்:
எங்கள் வீட்டில் விருந்தினர் வருகை அதிகமாக இருக்கும். அதனால் வாரம் ஒரு முறையாவது வீட்டில் விருந்து நடக்கும். விருந்தில் ரஜினியும் கலந்து கொள்வான்.
விருந்தினர்களுக்கு என் பிள்ளைகளையும், பெண்ணையும் அறிமுகம் செய்து வைக்கும்போது, ரஜினியையும் ஒரு மகனாக அறிமுகம் செய்து வைப்பேன். முதல் முறை அப்படி ஒரு சம்பவம் நடந்தது. விருந்து முடிந்த பின் ரஜினி என்னிடம் வந்து, ''அம்மா! என்னையும் ஒரு மகனாக நீங்கள் மதித்து நடத்துனீங்களே, அதுவும் மத்தவங்ககிட்ட!'' என்று சொல்லி அழுததைப் பார்த்து என் கண்கள் கலங்கி விட்டன.
ஒரு நாள் விஜயா மருத்துவமனையிலிருந்து எனக்கு போன் வந்தது. டாக்டர் செரியன், ''ரஜினிகாந்த் இங்கு இருக்கிறார். அவர் 'அம்மாவைப் பார்க்க வேண்டும்' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரென்று கேட்டால் உங்கள் பெயரைச் சொன்னார். உடனே வர முடியுமா?'' என்று கேட்டார்.
விஷயம் புரியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி பெற்று நான் விஜயா மருத்துவமனைக்குப் போனேன். அங்கு ரஜினியைப் பார்த்து அதிர்ச்சியுற்றேன். கூண்டில் அடைபட்ட புலிபோல் ரஜினி கொந்தளித்த நிலையில் இருந்தான். ரஜினியை அங்குள்ள யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அது செரியனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
ஆனால் ரஜினி என்னைப் பார்த்ததும் அவனது ஆர்ப்பாட்டம் போன இடம் தெரியவில்லை. புலியாக இருந்தவன் பூனைக்குட்டியைப் போல் அருகில் வந்தான். அதைப் பார்த்ததும் ரஜினிக்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர்களுக்கு போன் செய்து ரஜினியை என்னோடு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்களும் ஒப்புதல் தந்தார்கள்.
அன்றிரவு ரஜினியை என் வீட்டிலேயே தங்க வைத்தேன். கீழ்த்தளத்தில் அவனுக்கு அருகில் சமையல்கார மீரான் உதவியாக இருந்தான். மறுநாள் காலைவரை ரஜினியால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நிம்மதியாகத் தூங்கினான்.
காலையில் ரஜினியின் டாக்டர்களுக்கு போன் செய்து, ''ரஜினி இரவில் நன்றாகத் தூங்கினான். இப்போது அமைதியாக இருக்கிறான்'' என்றேன். அதைக் கேட்டு அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.
''ரஜினியை எப்படித் தூங்க வைத்தீர்கள்? எங்களால் மாபியாவினாலும் (பெத்தடின் போன்ற மருந்து) அவரைத் தூங்க வைக்க முடியவில்லை'' என்றார்கள்.
டாக்டர் செரியன் எனக்கு போன் செய்து, ''மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத ஒருவனுக்கு நீங்கள் மறுவாழ்வு தந்திருக்கிறீர்கள். இதற்கு முன் நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி இது'' என்றார் வியப்புடன்.
இதற்குபின் ரஜினி இரவிலும், தொடர்ந்து வீட்டிற்கு வந்து தங்க ஆரம்பித்தான். வீட்டிற்கு வருபவன் யாரிடமும் எதுவும் கேட்காமல் நேராக பின் பக்கம் சென்று படுத்துவிடுவான். நான் அவனிடம் வந்து சிறிது நேரமாவது பேசினால்தான் அவனுக்கு மனம் நிம்மதியாகும்.
ரஜினியின் வழக்கங்களில் ஒன்று வீட்டிற்கு வந்தால் நேராகச் சென்று ஊஞ்சலில் ஆடுவது அல்லது பியானாவை வாசிப்பது. இதை வைத்து மாடியிலிருந்து நான், ரஜினி வந்திருக்கிறான் என்று ஊகித்துக் கொள்வேன். பியானா வாசிப்பு தாறுமாறாக இருந்தால் அது ரஜினியின் வேலை என்று தெரிந்து விடும்.
ஒரு நாள் டாக்டர் செரியனைப் பார்க்க நேரம் கேட்டிருந்தேன். 'மூலிகை மணி' கண்ணப்பர், அவரது மகன் வெங்கடேசன் இவர்களோடு ரஜினிக்கும் சேர்த்து மாலை 5.00 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ரஜினியை நேராக மருத்துவமனைக்கு வரச் சொல்லி விட்டேன். நாங்கள் அங்கு போனால் ரஜினி வரக் காணோம். அதனால் காத்திருந்தோம். சற்று நேரத்தில் ரஜினி சாவகாசமாக நண்பர் ஒருவருடன் வந்தான். வாயில் பீடா போட்டுக் குதப்பியபடி தள்ளாடிய நிலையில் வந்தவனை டாக்டர் செரியன் கவனித்து மருந்து கொடுத்து ஒரு அறையில் படுக்க சொன்னார்.
உதவியாக ரஜினிக்கு அருகில் நானும் இருந்தேன். அங்கு உதவி டாக்டர் ஒருவரும் இருந்தார். டாக்டர் சொன்ன மருந்தை ரஜினிக்கு நான் கொடுக்க முன் வந்த போது, உதவி டாக்டர், ''நான் கொடுத்துக் கொள்கிறேன். நீங்கள் போகலாம்'' என்றார் ஆங்கிலத்தில். நான் ஒரு பெண் என்பதால் டாக்டர் என்னை போகச் சொல்கிறார் என்று புரிந்து கொண்டு வெளியில் காத்திருந்தேன்.
சற்று நேரத்தில் ரஜினி இருந்த அறை பக்கம் கூச்சலும், ரகளையுமாக இருக்க, திரும்பிப் பார்த்தால் ரஜினியோடு இருந்த உதவி டாக்டர் ஓடி வந்தார். பின்னால் ரஜினி ஆக்ரோஷமாய் ஓடி வந்தான்.
உதவி டாக்டர் என்னை வெளியில் போகச் சொன்னதை ரஜினி தவறாகப் புரிந்து கொண்டு, ''என்னோட அம்மாவையே அவமதிக்கிறாயா?'' என்று அருகில் இருந்த தண்ணீரை அவர் மீது வீசியடித்திருக்கிறான். அவர் நீரில் நனைந்த கோலத்தைப் பார்த்த டாக்டர் செரியன், ''ரஜினியை என்னால் கவனிக்க முடியாது'' என்று சொல்லி விட்டார்.
நான் அவரோடு சற்று நேரம் பேசி விட்டு, ரஜினி எங்கே என்று தேடினால் தூரத்தில் அவனது காருக்குள் உட்கார்ந்திருந்தான். நான் எனது காரில் ஏறி வீட்டுக்குப் புறப்பட, பின்னாலேயே அவனும் வந்தான். வீட்டிற்கு வந்ததும் ரஜினியிடம், ''ஏன், அப்படிச் செய்தாய்?'' என்று கேட்டேன். அவன் நடந்ததைச் சொன்னான். டாக்டர் என்னை தப்பாகச் சொல்லவில்லை என்று அவனுக்கு விளக்கம் தந்த பின், ''நான் செய்தது தப்புதானம்மா!'' என்று ஒத்துக் கொண்டான்.
இப்படி ஒரு நேரம் சாதாரணமாக இருப்பதும், சிறு விஷயங்களுக்காகக் கோபப்படுவதுமாய், காரணமில்லாமல் கோபப்படுவதுமாய், ரஜினி இருக்க அவனது தயாரிப்பாளர்கள் சங்கடப்பட்டனர்.
ரஜினியின் மன நிலையில் மாற்றம்....
அடுத்த இதழில
Previous |
|
Next |
|