உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம் (பாகம் 40)
''உங்க பேச்சைக் கேட்காமல் நான் மறுபடியும் அடிச்சிட்டேன். எனக்கு நானே தண்டனை கொடுக்க வேண்டாமா? இந்த விரலுக்கு சிகிச்சையே செய்ய மாட்டேன்''
திருமதி ரெஜினா வின்சென்ட் மேலும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்:
ரஜினியை வைத்து படம் எடுத்தவர்கள் டாக்டர் செரியனுக்கு போன் செய்து, ரஜினி படப்பிடிப்புக்கு வந்தால் நடிக்கின்ற நிலையில் இருக்கிறாரா என்று கேட்பார்கள். அவர் என்னைத் தொடர்பு கொள்ளச் செய்து விபரம் தெரிவிப்பார்.
இதனால் ரஜினியின் கால்ஷீட் விவகாரங்களை நானே ஒழுங்குபடுத்துமளவில் ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, ரஜினியின் பணம் யாரிடம் இருக்கிறது. எவ்வளவு பணம் வாங்குகிறான் என்ற விவரமெல்லாம் எதுவும் புரியாமல் இருந்தது. ஏனென்றால் நான் பார்த்த பல சந்தர்ப்பங்களில் ரஜினியிடம் பணமே இல்லை.
வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென்று ரஜினி என் பையன்களை அழைத்து, ''வாங்க வெளியில் போய் சாப்பிடலாம்'' என்று பெரிய ஓட்டல்களுக்கு கூட்டிப் போவான். அங்கு போய் சாப்பிட்டபின், பணம் ஏதும் கொடுக்காமல் புறப்பட்டு விடுவான்.
இவர்களும் ரஜினியிடம் பணம் இருக்கும் என்று நம்பி வந்தவர்கள் தானே. அதனால் ஹோட்டலிலிருந்து எனக்கு போன் செய்து பணம் கேட்டு, நான் கொடுத்தனுப்பிய பின் வந்திருக்கிறார்கள். இதனால் ரஜினியின் பண விவகாரங்களை ஒழுங்குபடுத்த எனது ஆடிட்டர்களையே பயன்படுத்தினேன்.
ஆடிட்டர்கள் என் வீட்டிற்கு வந்து ரஜினியிடம் பேச விரும்பியபோது, ரஜினியை வரச் சொன்னேன். கறுப்புக் கண்ணாடி சகிதமாக கறுப்பு ஷர்ட், கறுப்பு பேண்ட் அணிந்து ஸ்டைலாக வந்த ரஜினி, இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேடிக்கையாக அவர்கள் முன் போட்டான். அவர்கள் பயந்து போனார்கள். நான் அவர்களுக்கு ரஜினியைப் பற்றி விளக்கம் சொல்லி, ரஜினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்புக்காகக் கத்தி வைத்திருப்பதாகச் சொன்னேன்.
ரஜினி அப்போது ஒரு நடிகையைக் காதலிக்கிறான் என்று நினைத்து, அந்த நடிகையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் ஆட்களை வைத்து தாக்கிவிட்டார். ரஜினி உடம்பெல்லாம் ரத்தக் காயங்களோடு வீட்டிற்கு வந்தான். அவனுக்கு சிகிச்சை செய்து குணப்படுத்திய பின்பே, கத்தி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு வந்தது.
ரஜினி வீட்டுக்கு வரும்போது எல்லாம் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். உடையெல்லாம் அழுக்காக இருந்தது. அவன் இருக்குமிடத்தில் துணிகளைத் துவைத்துக் கொடுக்க யாருமில்லை என்று தெரிந்து கொண்டேன். ஆளனுப்பிப் பார்த்தால் அங்கு அறையிலுள்ள பொருள்கள், துணிகள் தாறுமாறாகக் கிடந்திருக்கின்றன.
அழுக்குத் துணிகளையெல்லாம் வீட்டிற்குக் கொண்டு வரச் செய்து வாஷிங் மிஷினில் சுத்தம் செய்து மீண்டும் அவனது அறையிலேயே வைக்கச் செய்தேன். ஆனால் இந்தச் சுத்தம் செய்யும் வேலையெல்லாம் யார் செய்தார்கள் என்பதைக் கூட ரஜினி அறியவில்லை.
''சரியம்மா. இனி நான் அடிக்க மாட்டேன்''
ரஜினியின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் தனக்குப் பிடிக்காத விஷயத்தை யார் செய்தாலும் பொறுமையுடன் அதை சகித்துக் கொள்ளாமல் உணர்ச்சி வசப்பட்டு கை நீட்டி அடித்துவிடும் பழக்கம் இருந்தது.
இதுபோல பல நிகழ்ச்சிகள், சந்தர்ப்பங்கள். அதேபோல பலர் கூட்டமாகக்கூடி படப் பிடிப்பிலோ அல்லது வேறு இடங்களிலோ தன்னை வேடிக்கை பார்ப்பதையும் ரஜினி அப்போது விரும்பாமல் இருந்தான். யாரையும் அவன் அடித்து விட்டான் என்று நான் கேள்விப்பட்டால் உடனே புத்திமதி கூறுவேன்.
''அப்படியெல்லாம் யாரையும் அடிக்கக் கூடாது. அவர்கள் உன்னிடம் அன்பு கொண்டவர்கள். உன்னுடன் பேச வரும்போது அன்போடு நாலு வார்த்தை பேசினால் தானே அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அடித்தால் அது எவ்வளவு தப்பு தெரியுமா?'' என்று ஒரு முறை கண்டித்தபோது, ''சரியம்மா. இனி நான் அடிக்க மாட்டேன்'' என்றான். ஆனால் அதில் அவனால் உறுதி காட்ட முடியவில்லை.
மதுரையில் சிவாஜியின் 200-வது படவிழாவிற்குப் போன ரஜினி திரும்புகையில், விமான நிலையத்தில் யாரிடமோ தகராறு ஏற்பட அவர்களை பெல்ட்டால் அடித்து இருக்கிறான்.
அந்தச் சமயத்தில் பெல்ட்டை அருகிலிருந்த யாரோ பிடுங்கிக் கொள்ள, கையினால் ரஜினி ஓங்கி அடிக்கப் போய், வலது கை கட்டை விரல் எலும்பு நீட்டிக் கொண்டு விட்டது. அதனால் வீட்டிற்கு வந்த ரஜினி வலியால் அவதிப்பட்டிருக்கிறான். என்ன வலி என்று கேட்ட போதுதான் நடந்த விஷயம் தெரிய வந்தது.
நான் விரலைப் பிடித்து இழுத்து சரி செய்தேன். எலும்பு பழையபடி பொருந்திக் கொண்டாலும், என்னை மேற்கொண்டு மருந்து போட ரஜினி அனுமதிக்கவில்லை.
''உங்க பேச்சைக் கேட்காமல் நான் மறுபடியும் அடிச்சிட்டேன். எனக்கு நானே தண்டனை கொடுக்க வேண்டாமா? இந்த விரலுக்குச் சிகிச்சையே செய்ய மாட்டேன்'' என்று பிடிவாதமாக இருந்துவிட்டான். நான் சங்கடப்பட்டாலும் ரஜினி அதில் உறுதியாக இருந்தான். இதனால் அந்த விரலில் அவனுக்கு நீண்ட நாட்களாக வலியும் பிரச்னையும் இருந்தது.
ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?
அடுத்த இதழில்..
Previous |
|
Next |
|