ரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது (பாகம் 43)
என் மகளை கல்லூரியில் இறக்கிவிட்டு வந்த ரஜினி கண்கலங்கி, குரல் தழுதழுக்க, ''என்னை யாருமே நம்புறதில்லையம்மா. ஆனா நீங்க என்னை நம்பி உங்க மகளை என்னோடு அனுப்பி வச்சீங்களே'' என்று அழுதான்.
திருமதி ரெஜினா வின்சென்ட் மேலும் கூறுகிறார் :
எனது மகள் வழக்கமாக கல்லூரிக்கு எங்கள் காரிலேயே சென்று விடுவாள். ஒரு நாள் கார் டிரைவர் வரக் காணோம். டிரைவரை எதிர்பார்த்து மகளுடன் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ரஜினி, தனது டிரைவர் நாராயணனுடன் வீட்டிற்கு வந்தான்.
விஷயம் அறிந்தவன், ''நான் அழைத்துப் போகிறேனம்மா'' என்றான். சரி என்று மகளை பின் சீட்டில் உட்காரச் சொன்னேன். ரஜினி எப்போதும் பின் சீட்டில் உட்கார்ந்து செல்வதுதான் வழக்கம். ஆனால் அன்றைக்கு ''நான் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்கிறேன்' என்று முன் பக்கம் போனான். நான் தடுத்து, ''இல்லை, நீயும் பின்னால் உட்கார்ந்து போ'' என்றேன்.
அதன்படி என் மகளை கல்லூரியில் இறக்கிவிட்டு வந்த ரஜினி கண்கலங்கி, குரல் தழுதழுக்க, ''என்னை யாருமே நம்புறதில்லையம்மா. ஆனா நீங்க என்னை நம்பி உங்க மகளை என்னோடு அனுப்பி வச்சீங்களே'' என்று அழுதான்.
எங்கள் வீட்டிற்கு அருகில் தமிழ்ப்படத்தின் படப் பிடிப்பொன்று நடந்து கொண்டிருந்தது. அது காலை நேரம். அன்றைக்கு ரஜினிக்கு வேலையில்லை. என்னோடு பேசிக் கொண்டிருந்தவன் படப்பிடிப்பை ஆர்வமாக கவனிக்க ஆரம்பித்துவிட்டான். காரணம் அவனோடு பல படங்களில் ஜோடியாக நடித்த பிரபல நடிகை படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்ததுதான்.
அவள் தன்னைப் பார்த்து பேசுவாள் என்று ரஜினி நினைத்திருக்கிறான். ஆனால் நடிகையோ அவனைப் பார்த்தும் பாராததுபோல் இருந்து விட்டாள். இத்தனைக்கும் ரஜினி எங்கள் வீட்டில் இருப்பதுகூட அவளுக்குத் தெரியும். ரஜினி மனநிலை சரியில்லாதவன் என்று எல்லோரும் ஒதுக்கிக் தள்ளியது போல் அவளும் அப்படி நடந்து கொண்டதை அவனால் தாங்க முடியவில்லை. ''பாருங்களம்மா இப்படி கண்டும் காணாமல் இருக்கிறாளே'' என்று வருத்தப்பட்டான்.
''அவ உன்னைப் பார்க்கலை. உன்னோட பேசலைங்கறதனாலே நீ எந்த வகையிலும் குறைஞ்சு போயிட மாட்டே'' என்று நான் கூறிய பின் மனம் தௌ¤ந்தான்.
ரஜினிக்கு இன்று பல மொழிகள் தெரியும். ஆனால் அன்றைக்கு மராத்தி, கன்னடம் தவிர தமிழ், ஆங்கிலம் அவ்வளவாக வராது. ஒரு நாள் படப்பிடிப்பிலிருந்து திரும்பிய ரஜினியிடம், ''இன்றைக்கு எந்தப் படத்தின் ஷ¨ட்டிங்?'' என்று கேட்டேன். ''முல்லு முல்லு' என்றான். எனக்குப் புரியவில்லை. ''இப்படியொரு டைட்டிலா?'' என்று கேட்டபின், ரஜினி யோசித்து 'தில்லு முல்லு' என்றான்.
இப்படி பேசும்போது செய்கின்ற தவறுகளை அவ்வப்போது திருத்துவேன். ஆங்கிலமும் அவனுக்கு சரியாகத் தெரியாது. பேசினால் நான் ரஜினியுடன் தமிழிலேயே பேசுவேன் அல்லது ஆங்கிலத்திலேயே பேசுவேன். எதில் பேசினாலும் பிற மொழி வார்த்தைகளைக் கலக்கக் கூடாது என்று பேசி வைத்துக் கொண்டபின் ரஜினி அதில் மிக ஆர்வமாக இருந்தான்.
தவறு செய்தபோது நான் திருத்துவேன்.
ரஜினியின் உடல் நலம், மன நலத்தில் படிப்படியான முன்னேற்றங்கள் வந்துவிட்டன. இனி ரஜினியிடம் பயப்படும்படியான விஷயம் இருக்காது என்று நான் தீர்மானித்த வேளையில், என் கணவருடன் ஒரு மாதம் அயல் நாடுகளுக்குப் போக வேண்டியிருந்தது.
திருமதி வின்சென்ட் அயல்நாடு செல்வதை ரஜினி ஏற்றுக்கொண்டாரா?
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|