ரஜினியிடம் கண்ட மாற்றம் - திருமதி ரெஜினா வின்சென்ட் (பாகம் 45)
என்னைக் (திருமதி. வின்சென்ட்) கண்டதும் ரஜினி, தான் நின்ற இடத்திலிருந்தே சாஷ்டாங்கமாக என்னை நோக்கி விழ, வந்திருந்தவர்கள் மத்தியில் அன்றைக்கு நான் காட்சிப் பொருளாகிவிட்டேன்.
திருமதி வின்சென்ட் மேலும் கூறுகிறார்:
'ப்ளட் ஸ்டோன்' ஆங்கிலப் படத்தின் டப்பிங்கிற்காக அமெரிக்கா சென்று திரும்பியதிலிருந்து ரஜினி காலில் விழுவதைத் தவிர்த்து கைகுலுக்க ஆரம்பித்திருக்கிறான். இப்போதாவது காலில் விழும் பழக்கத்திலிருந்து விடுபட்டானே என்று சந்தோஷப்பட்டேன்.
ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டு கிரஹப்பிரவேசத்திற்கு எனது கணவர், இரண்டாவது மகன் பிரடெரிக்குடன் போயிருந்தேன். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்-நடிகையர் என்று பெரும் கூட்டம். அவர்களுக்கெல்லாம் நாங்கள் புதுமுகங்கள்.
ரஜினி மாடியில் இருப்பதாக அறிந்து மேலே சென்றோம். என் கணவர் முன்னே செல்ல அவருக்குப் பின் என் மகன், அப்புறம் நான், நான் சற்று குள்ளம். என் கணவரைப் பார்த்ததும் ''வாங்க...வாங்க...'' என்று வரவேற்ற ரஜினி, நான் இருப்பது தெரியாமல் ''எங்கே மம்மி?'' என்று கேட்டான்.
அவரும், மகனும் விலகிக் கொண்ட பின்பே நான் தெரிந்தேன். என்னைக் கண்டதும் ரஜினி, தான் நின்ற இடத்திலிருந்தே சாஷ்டாங்கமாக என்னை நோக்கி விழ, வந்திருந்தவர்கள் மத்தியில் அன்றைக்கு நான் காட்சிப் பொருளாகிவிட்டேன். ரஜினி காலில் விழுவதை அன்றைக்குத்தான் என் கணவரும் பார்த்தார். அத்தனை பேர்களும் என்னைச் சுட்டிக் காண்பித்து பேசிக் கொண்டிருந்தனர். இதன் பிறகு என் கணவருக்கும் ரஜினியின் மீது ஈடுபாடு வந்தது.
ரஜினி வாங்கிய போயஸ் கார்டன் வீட்டை, முரளி மற்றும் அவனது நண்பர்கள் முதலில் வாங்க வேண்டாம் என்றார்கள். அவர்களிடம் ''அம்மா தான் வாங்கச் சொன்னார்கள்'' என்று என்னைச் சொல்லி நழுவிக் கொண்டான். வீடு வாங்கிய பின் அதை அலங்காரம் செய்யவே நிறைய செலவு செய்திருக்கிறான்.
ஒரு நாள் ஒரு பெண்ணை அழைத்து வந்து, ''இவளைத் தான் திருமணம் செய்யப் போகிறேன்'' என்றான். அதுதான் லதா. திருமணத்திற்கு முன்பே மூன்று முறை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான். அவர்களுக்குத் திருப்பதியில் திருமணம் நடந்தபோது நானும் சென்றிருந்தேன்.
திருமணத்திற்கு பின் ரஜினி தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் பிஸியாகி விட்டான். எங்களது சந்திப்புகள் குறைந்து போனது. ஆனாலும் அவனுக்கு நேரம் இருக்கும்போது நேராக வீட்டிற்கு வந்து விடுவான். எனது வீட்டு விசேஷங்களில் தவறாமல் கலந்து கொள்வான்.
ரஜினி நல்ல அசைவ பிரியன். விருந்தில் கலந்து கொள்ள வந்தால் வெறும் அசைவ பதார்த்தங்களாக எடுத்துச் சாப்பிட்டு விடுவான். அவன் விருப்பத்திற்காக அவற்றைக் கொஞ்சம் அதிகமாகவே சமைக்கச் சொல்வேன்.
நான் எது சொன்னாலும் ரஜினி கேட்பான் என்று எனக்கு வேண்டிய பலரும் ரஜினியைத் தங்கள் பள்ளி அல்லது கம்பெனி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி அழைக்கச் சொல்வார்கள். எனக்கு அது தர்மசங்கடமான ஒன்று. கூடுமானவரை அவர்களைத் தவிர்த்து விடுவேன். சிலரைச் சமாளிக்க முடியாமல் ரஜினியிடம் அழைத்துச் செல்வேன். இதுபோல் சமயங்களில் ரஜினி யாருடைய மனமும் கோணாத வகையில் நடந்து கொள்வான்.
ரஜினி ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு அழைத்து சென்றான்.....
-திருமதி ரெஜினா வின்சென்ட்
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|