ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட் (பாகம் 46)
''அம்மா... உங்களுக்காக ஆழ்வார்ப்பேட்டை வீட்டை விலைக்கு வாங்கி அங்கேதான் உங்களை உட்கார வைக்கப் போகிறேன்'' என்றான்.
திருமதி ரெஜினா வின்சென்ட் மேலும் கூறினார்:
ஒரு சமயம் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவர், ரஜினியைப் படமெடுக்க விரும்புவதாகப் பலமுறை என்னை தொந்தரவு செய்து அழைத்துச் சென்றுவிட்டார். ரஜினி கவனமாக அவர் கூறுவதையெல்லாம் கேட்டுக் கொண்டு, ''அம்மாவிடம் சொல்லியனுப்புகிறேன்'' என்று நாசூக்காகத் தவிர்த்து விட்டான்.
இந்த விஷயத்தில் நான் வருத்தப்படுகிறேன் என்று ரஜினி நினைத்துக் கொண்டானோ என்னவோ, என்னை சமாதானப்படுத்த நினைத்து ஒரு நாள் போன் செய்து, ''அம்மாவைப் பார்க்க வருகிறேன்'' என்றான். அவன் வரப்போகிறான் என்று விருந்தெல்லாம் தயார் செய்து காந்திருந்தால் ஆளைக் காணோம். மறுநாளும் வருவதாகச் சொல்லி வரவில்லை. எங்களுக்கு காரணம் புரியவில்லை.
திடுதிப்பென்று அன்று இரவு 10.00 மணிக்கு மேல் வந்தான். ''மன்னிச்சிடுங்க அம்மா. நேற்றைக்கும் இன்னைக்கும் எதிர்பாராத பட வேலைகள். ஒருத்தர் கண்டிப்பா படம் பார்க்கணும்னு அழைச்சிட்டுப் போயிட்டார்'' என்று எல்லோரிடமும் வருத்தம் தெரிவித்துப் பேசிக் கொண்டிருந்தான். இரவு 12.00 மணி ஆயிற்று.
''வாருங்கள் வெளியே போய் சாப்பிடலாம்'' என்று ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான். அங்கு சாப்பிட்டு முடிக்க 1.00 மணி தாண்டிவிட்டது. அதற்கப்புறம் தனது 'ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு'' அழைத்துச் சென்று காட்டினான். அப்போது கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதையெல்லாம் பார்த்து வீடு திரும்ப அதிகாலையாகி விட்டது. ரஜினி தனது வீட்டிற்கு சென்றபோது பொழுது விடிந்துவிட்டது.
இதற்கப்புறம் நீண்ட இடைவெளிவிட்டு ரஜினியைப் பார்க்க ஏவிஎம் போனேன். அங்கு படப்பிடிப்பில் இருந்தவன் வேகமாக என்னை நோக்கி வந்தான். ''என்னம்மா உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு? டாடி (என் கணவர்) எப்படி இருக்கிறார்? வாக்கிங் போறாரா? குடிக்கறதைக் குறைச்சிட்டாரா?''
இப்படி என்னைப் பேச விடாமல் தானே பேசிக் கொண்டிருந்தான். திடீரென்று ''அம்மா... உங்களுக்காக ஆழ்வார்ப்பேட்டை வீட்டை விலைக்கு வாங்கி அங்கேதான் உங்களை உட்கார வைக்கப் போகிறேன்'' என்றான். ''உனது அன்பு எப்போதும் போல் இருந்தால் போதும். எனக்காக எதுவும் செய்ய வேண்டாம்'' என்றேன். அழ்வார்ப்பேட்டை வீட்டை இடிக்கப் போகிறார்கள் என்ற விஷயம் அவனுக்குத் தெரியாது.
முன்பு ஒரு சமயம் (திருமணத்திற்கு அப்புறம் என்று நினைக்கிறேன்) ரஜினி என்னிடம் வந்து, '' என்னோட கால்ஷீட், பணவரவு-செலவு- இப்படி எனது சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் நீங்களே பார்த்துக்குங்க அம்மா'' என்று கேட்டான்.
''நான் தனி ஆள் இல்லையப்பா. எனக்கு குடும்பப் பொறுப்புகள், சமூகப் பணிகள் இருக்கு. நீ கேட்கறது நடக்காத காரியம்'' என்று மறுத்துவிட்டேன்.
சந்தோஷத்தை மட்டுமின்றி, சங்கடங்களையும் எங்களோடு பங்கிட்டுக் கொள்கிறவன் ரஜினி
-திருமதி ரெஜினா வின்சென்ட்
-அடுத்த இதழில
Previous |
|
Next |
|