ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை! (பாகம் 47)
ரஜினி எங்களோடு வந்து பேசிக் கொண்டிருக்கையில் பேரன் அவனிடம், ''என்ன அங்கிள் போரடிக்கிறீங்க? ஒரே கிஸ்ஸிங், கிஸ்ஸிங்...! நோ பைட்டிங்...!'' என்று அங்கலாய்த்தது கண்டு ரஜினி 'ஓ'வென்று பலமாக சிரித்தான்.
திருமதி ரெஜினா வின்சென்ட்:
ரஜினி முதன் முறையாக அமெரிக்கா போவதற்கு முன் கலந்து கொண்ட படப்பிடிப்பு 'அதிசயப் பிறவி'. அருணாசலம் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடந்தபோது இலங்கையிலிருந்து வந்திருந்த எங்கள் குடும்ப நண்பரான டாக்டர் ஒருவரையும், எனது பேரனையும் (பமேலாவின் மகன்) அழைத்துச் சென்றிருந்தேன்.
நாங்கள் போனபோது ரஜினி கதாநாயகியான ஷீபாவைக் கட்டிப்பிடித்து ஆடுவது, முத்தமிடுவது ஆகிய காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன. என் பேரன் எதிர்பார்த்து வந்ததோ ரஜினி சண்டை போட்டு நடிப்பதைப் பார்க்க. அன்று சண்டைக் காட்சிகள் படமாகலாம் என்று ரஜினி தகவல் சொன்னதால், அதற்காக அவன் காத்திருந்தான்.
அதற்கு மேல் பேரன் பொறுமை இழந்து போனான். ரஜினி எங்களோடு வந்து பேசிக் கொண்டிருக்கையில் பேரன் அவனிடம், ''என்ன அங்கிள் போரடிக்கிறீங்க? ஒரே கிஸ்ஸிங், கிஸ்ஸிங்...! நோ பைட்டிங்...!'' என்று அங்கலாய்த்தது கண்டு ரஜினி 'ஓ'வென்று பலமாக சிரித்தான். ரஜினியிடம் அப்படி சிரிப்பைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று?
சில வருடங்களுக்கு முன் ரஜினிக்கு ஏதோ மனப் பிரச்னை. ரஜினி வேதனையுடன் வீட்டிற்கு வந்தான். அப்படி அவன் வேதனைப்பட்டு நான் பார்த்ததேயில்லை. ''யாரை நம்பறதுன்னு தெரியலயே. முன்னை மாதிரி உடம்பு கெட்டுப் போய் இங்கேயே வந்துடலாம் போலிருக்கு'' என்றான்.
அவனுக்கு ஆறுதல் கூறி, ''வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். பெரிசு பண்ணாதே'' என்று அனுப்பி வைத்தேன். தன்னுடைய சந்தோஷத்தை மட்டுமின்றி, சங்கடங்களையும் எங்களோடு பங்கிட்டுக் கொள்கிறவன் ரஜினி.
முதல் முறை அமெரிக்கா செல்வதற்கு முன் ரஜினியைப் பார்த்தபோது, ''அம்மா நாம் வெளியில் போய் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் போகலாம்'' என்றான்.
என் கணவரைக் கண்டால் வணக்கம் சொல்லிவிட்டு அதிகம் பேசாதிருந்த ரஜினி, அப்போதிருந்துதான் அவரிடம் சகஜமாக பேச ஆரம்பித்தான். அவர் ஜோக் சொல்லி சிரிக்க வைக்க மாட்டாரா என்று ரஜினி எதிர்பார்ப்பது வழக்கம்.
ரஜினியை பின்னர் பொட்டானிகல் கார்டனில் 'பாண்டியன்' படப்பிடிப்பிலும், வாகினியில் 'உழைப்பாளி' படப்பிடிப்பிலும் சந்தித்தேன். மலேசியாவிலிருந்து வந்த குடும்ப நண்பர்களை அழைத்துக் கொண்டு வாகினி சென்றபோது, ரஜினி தூங்கிக் கொண்டிருந்தான். அவன் எழும்புகிறவரையில் காத்திருந்தேன். ஷாட்டுக்கு அவன் அழைக்கப்பட்டபோது எழுந்த ரஜினி, என்னைக் கண்டு வியந்த ரஜினி, ''என்னம்மா வந்து ரொம்ப நேரமாச்சா? என்னை எழுப்பியிருக்கக் கூடாதா?'' என்று கேட்டு விட்டு நடிக்கப் போனவன், திரும்ப வந்து பேசிக் கொண்டிருந்தான். அதற்கு பின் ரஜினியை நான் சந்திக்கவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மிக நெருக்கமான பட நிறுவனங்களில் ஏ.வி.எம்.ஒன்று. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.வி.எம். சரவணன் தங்களுடன் பழகிய ரஜினியைப் பற்றிச் சொன்னார்.
ஏ.வி.எம்.சரவணன் என்ன சொல்கிறார்...
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|