மின்னலைப் போல வந்தார் ரஜினி - ஏ.வி.எம்.சரவணன் (பாகம் 48)
''நீங்கள் எப்போது என்னை நடிக்கச் செய்கிறீர்களோ, அப்போது எனக்கு மார்க்கெட்டில் என்ன சம்பளம் இருக்கிறதோ அதைத் தந்து விடுங்கள். கூடுதலாக இருந்தால் கூடுதலாகத் தாருங்கள். குறைவாக இருந்தால் அதையே கொடுங்கள். மார்க்கெட் மங்கிப் போனால் நீங்கள் என்னை வைத்து படமே எடுக்க வேண்டாம்'' என்றார் மிக இயல்பாக ரஜினி.
ஏ.வி.எம்.சரவணன் ரஜினியுடனான தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:
ஏ.வி.எம். நிறுவனம் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்க எண்ணிய நேரம் அது. இரண்டு பிரபல டைரக்டர்களைக் கொண்டு இரண்டு படங்களை உருவாக்க முடிவு செய்திருந்தோம். அதில் ஒரு படத்தில் பிரபல கதாநாயகன் நடிப்பதாக இருந்தார். ஆனால் அவரது தேதிகள் எப்போது எங்களுக்குக் கிடைக்கும் என்பது முடிவாகவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று ஒருநாள் என்னைப் பார்க்க வந்தார். அப்போது வடபழனி பிரஸ்ஸில் இருந்தேன். வில்லனிலிருந்து ஹீரோவாக மாறி பரபரப்பாக ரஜினி முன்னேறிக் கொண்டிருந்த நேரம் அது. எடுத்த எடுப்பிலேயே ''உங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை'' என்றார்.
அவரது விருப்பம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. சம்பள விவரம் கேட்டேன். ''இப்போது நான் ஒரு தொகை வாங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எப்போது என்னை நடிக்கச் செய்கிறீர்களோ, அப்போது எனக்கு மார்க்கெட்டில் என்ன சம்பளம் இருக்கிறதோ அதைத் தந்து விடுங்கள். கூடுதலாக இருந்தால் கூடுதலாகத் தாருங்கள். குறைவாக இருந்தால் அதையே கொடுங்கள். மார்க்கெட் மங்கிப் போனால் நீங்கள் என்னை வைத்து படமே எடுக்க வேண்டாம்'' என்றார் மிக இயல்பாக ரஜினி.
முதலில் அட்வான்ஸ் தருவதாகச் சொன்னேன். ரஜினி ஒப்புக் கொள்ளவில்லை. 'முதலில் கால்ஷீட் தேதிகளைத் தந்து விடுகிறேன். படப்பிடிப்புக்குப் போகும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அவர் வந்ததும் போனதும் ஏதோ மின்னலைப் போல் இருந்தது. எந்த ஒரு கதாநாயக நடிகருடனும் எனக்கு அப்படி ஒரு அனுபவமே ஏற்பட்டதில்லை.
நாங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்த படத்தின் நாயகன் தனது கால்ஷீட் தேதிகளைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். அதனால் ரஜினியின் தேதிகளை நான் மாற்றிக் கொண்டே இருந்தேன். ரஜினியும் அதை வேறு படங்களுக்கு மாற்றிக் கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த ஹீரோ தனது கால்ஷீட்டை முடிவு செய்ய முடியாத சூழ்நிலையில் ரஜினியை வைத்துப் படமெடுத்துவிட உறுதி செய்தேன்.
அதற்காக ரஜினியிடம் பேச அவரை எப்போது சந்திக்கலாமென்று கேட்பதற்காக எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த கே.வீரப்பனை அனுப்பி வைத்தேன். ரஜினி அந்த நேரம் வீட்டில் இருந்தார். ''சரவணன் சார் என்னைப் பார்க்க வருவதா? நானே பார்க்கிறேன்'' என்றவர், தன்னிடம் கார் இல்லாததால், வீரப்பன் வந்திருந்த வெஸ்பா ஸ்கூட்டரில் அவரைப் பின்னால் உட்கார வைத்து ரஜினியே ஓட்டிக் கொண்டு என் வீடு தேடி வந்து விட்டார். அப்போது நல்ல மழை வேறு பெய்து கொண்டிருந்தது.
ரஜினியின் நடவடிக்கைகளைக் கண்டு மலைத்தார் ஏ.வி.எம். சரவணன்......
அடுத்த இதழில்.....
Previous |
|
Next |
|