ரஜினியின் கற்பனையில் விளைந்தவை (பாகம் 49)
ரஜினி திரும்பவும் ஸ்கூட்டரிலேயே வீடு திரும்ப முற்பட்டார். ''வேண்டாம் கார் அனுப்புகிறேன்'' என்றேன். ''ஸ்கூட்டரில் போவதுதான் ஜாலியாக இருக்கிறது'' என்று வீரப்பன் ஸ்கூட்டரிலேயே வீடு திரும்பினார்.
ஏவி.எம். சரவணன் தொடர்கிறார்....
'பில்லா' வெளியாகி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை எட்டி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்த ரஜினி துளியும் பேதம் பார்க்காமல் மழையில் நனைந்த கோலத்தில் ஸ்கூட்டரில் வந்து நின்ற எளிமையைப் பார்த்து மலைத்துப் போனேன். ரஜினி நடிக்கவிருக்கும் படம் பற்றிய விஷயங்களை முடிவு செய்யவிருப்பதைப் பற்றிக் கூறினேன்.
''இப்ப நிஜமாகவே என்னிடம் தேதியில்லை. ஆனா ஏவி.எம். படத்தில் நடிப்பதற்காக நான் எப்படியும் கால்ஷீட் அட்ஜஸ்ட் செய்து தருகிறேன்'' என்ற ரஜினி தனது அன்றைய சம்பளம் பற்றிச் சொன்னார். அது எங்களுக்கு நியாயமாகவே இருந்ததால் ஒத்துக் கொண்டோம். ரஜினி திரும்பவும் ஸ்கூட்டரிலேயே வீடு திரும்ப முற்பட்டார். ''வேண்டாம் கார் அனுப்புகிறேன்'' என்றேன். ''ஸ்கூட்டரில் போவதுதான் ஜாலியாக இருக்கிறது'' என்று வீரப்பன் ஸ்கூட்டரிலேயே வீடு திரும்பினார்.
முதலில் 'முரட்டுக்காளை' யைத் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிப்பதாக இருந்தோம். பின்னர் தமிழில் மட்டும் எடுப்பது என்று முடிவு செய்து ரஜினியிடம் சொன்னபோது அவர் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார். படம் பிரம்மாண்டமாகத் தயாராகி பெரிய வெற்றியைப் பெற்றது.
சுட்டாது உன்னாரு ஜாக்ரதா' (சொந்தக்காரங்க இருக்காங்க ஜாக்கிரதை) என்ற கிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த தெலுங்குப் படமொன்று பார்த்தேன். அது ரஜினிக்குப் பொருத்தமாக இருக்குமென்று நினைத்து, அவரையே நடிக்கச் செய்ய விரும்பிக் கேட்டேன். ஆனால் அதற்கு முன்பே ரஜினி அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறார். தெலுங்குப் படத் தயாரிப்பாளரே ரஜினியைத் தமிழில் நடிக்கச் செய்ய விரும்பியபோது ரஜினிக்குப் படம் பிடிக்காததால், நடிக்க மறுத்து விட்டார்.
அதே படம் பற்றி ரஜினியிடம் நான் பேசியபோது ''இந்தக் கதை எனக்குப் பொருத்தமாக இருக்காது. கமலுக்கு சரியாக இருக்கும். அவரையே நடிக்க வையுங்கள்'' என்றார்.
நான் ரஜினியிடம் ''உங்களுக்குப் பொருத்தமாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். கமல் இதே டைப்பில் ''சட்டம் என் கையில்'' படத்தில் நடித்து விட்டார். அவருக்கு இது புதிதல்ல. ஆனால் உங்களுக்கு இது புதிதாக இருக்கும். உங்களுக்கு இஷ்டம் இருந்தால் இந்தக் கதையில் நடியுங்கள்'' என்றேன்.
ரஜினி சிறிது நேரம் தடுமாற்றமாக இருந்தார். பின் ''சரி படத்தை நான் மீண்டும் பார்க்கிறேன்'' என்றார். அவருக்காக எங்கள் ஸ்டுடியோவிலேயே அந்தத் தெலுங்குப் படத்தினைப் பார்க்க ஏற்பாடு செய்தோம். அன்று ஒரு படப்பிடிப்பில் நடித்து முடிந்த கையோடு இரவில் ஸ்கூட்டரிலேயே வந்து படம் பார்த்துவிட்டு, ஸ்கூட்டரிலேயே வீடு திரும்பினார்.
மறுமுறை என்னைச் சந்தித்துப் பேசிய ரஜினி, அப்போதும் படத்தைப் பற்றி நல்லபிப்பிராயம் தனக்கு ஏற்படவில்லை என்றவர், ''எனக்குப் படத்தின்மீது நம்பிக்கையில்லை. ஆனால் உங்கள் மீது இருக்கிறது. உங்களுக்குப் படத்தின்மீது ஏதோ உறுதியான பிடிப்பு இருக்கிறது. அதனால் நம்பிக்கையோடு நடிக்கச் சொல்கிறீர்கள். உங்கள் நம்பிக்கைக்காக நான் நடிக்கிறேன்'' என்று ஒத்துக் கொண்டார். அவர் தயக்கத்தோடு நடித்த படம்தான் ''போக்கிரி ராஜா''.
தெலுங்குப் படத்தில் இருந்த விஷயங்களில் பலவற்றைத் தமிழில் மாற்றினோம். போக்கிரி ரஜினியின் கேரக்டரில் சில திருத்தங்களைச் செய்தோம். ரஜினி இன்னும் அதை மெருகுப்படுத்தி கொண்டார். கையில் சாராயம் ஊற்றிக் குடிப்பது, போக்கிரியின் சேஷ்டைகள் பல - இதெல்லாம் அவரது கற்பனையில் விளைந்தவை.
ரஜினி ராதிகாவை தோளில் சுமந்தாரா?....
அடுத்த இதழில்....
Previous |
|
Next |
|