மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்! (பாகம் 51)
''எனது சினிமா அனுபவத்தில் வேறு எந்த நடிகரும் பேசிய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டது என்பது பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. அதுதான் ரஜினி.''
ஏவி.எம்.சரவணன் தொடர்கிறார்...
'போக்கிரி ராஜா' படத்தின் படப்பிடிப்பு மைசூர் பகுதியிலும் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வேகமாகச் செல்வதுபோல் ரஜினி நடிக்க வேண்டும்.
இந்தக் காட்சியில் மோட்டார் சைக்கிள் ஓடிக்கொண்டிருக்கும்போது ரஜினி இரண்டு கைகளையும் விட்டுவிட்டு, பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஸ்டைலாக கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு, பின் கைக்குட்டையை மீண்டும் பாக்கெட்டில் வைத்தபின் மீண்டும் ஹாண்டில் பாரில் கைகளை வைத்துக் கொள்வதாக ஒத்திகை பார்க்காமலேயே பேசி முடிவு செய்யப்பட்டது.
கேமரா ஓடத் துவங்கியபோது, ரஜினி சொன்னபடி சரியாகச் செய்து கொண்டு வந்தார். ஆனால் முகத்தைத் துடைத்தபின் பாக்கெட்டில் கைக்குட்டையை வைத்து விட்டு ஹாண்டில் பாரில் கைகளை வைக்கும்போது வண்டி பாலன்ஸ் இழந்து தாறுமாறாக ஓடி சாலையிலிருந்து விலகி ஒரு மரத்தின் மீது மோதி நின்றது.
ரஜினி கீழே விழுந்தாலும் நல்ல வேளையாக பெரிய ஆபத்து எதுவும் நேர்ந்து விடவில்லை. இடது கை கட்டை விரலில் எலும்பு முறிந்து விட்டது. இதெல்லாம் கேமராவில் பதிவாகிவிட்டது. ரஜினியை உடனே மைசூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறச் செய்தோம். மருத்துவர்கள் அவரைச் சில நாட்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும் அவர், ''எனக்குச் கைவிரல் சரியாயிடுச்சு. நான் ரெடி'' என்று தயாராக வந்து நின்றார்.
'மனிதன்' படம் துவங்குவதற்கு முன் ரஜினி என்னிடம் தனக்கு ஊதியமாக இவ்வளவு தொகை வேண்டுமென்று கேட்டார். அது நியாயமானதாகப்பட்டதால் சரியென்று ஒப்புக் கொண்டோம். இந்தச் சந்திப்புக்குச் சில நாட்களுக்குப் பின் ரஜினி என்னைச் சந்திக்க விரும்பி வீட்டிற்கே வந்துவிட்டார்.
''நான் உங்களிடம் 'மனிதன்' படத்திற்கு எனது சம்பளம் பற்றிப் பேசினேன். இதே தொகையை நான் வேறு இரு நிறுவனங்களுக்குச் சொன்னபோது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள் என்ன சம்பளம் தருகிறார்களோ, அதே தொகையைத் தந்து விடுங்கள் போதும்'' என்று தன் சம்பளத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனது சினிமா அனுபவத்தில் வேறு எந்த நடிகரும் பேசிய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டது என்பது பற்றி நான் கேள்விப்பட்டதுகூட இல்லை. அதுதான் ரஜினி. இப்படி எந்தவொரு விஷயத்திலும் தனித்தன்மையோடு விளங்குபவர் ரஜினி.
'மனிதன்' படத்தில் இடம்பெற்ற டைட்டில் பாடல், 'மனிதன், மனிதன்... எவன்தான் மனிதன்'. இது கம்போஸ் செய்யப்பட்ட நிலையில் படத்தின் கதாசிரியர் பஞ்சு அருணாசலம் ''டைட்டில் வந்த சில நிமிடங்களுக்குப் பின் ''வானத்தைப் பார்த்தேன்'' பாடல் வருகிறது. இது ரசிகர்களுக்கு சலிப்பூட்டக் கூடும். இதனால் டைட்டில் பாடல் வேண்டாம்'' என்று சொல்லிவிட்டார்.
இதைத் கேள்விப்பட்ட இசை அமைப்பாளர் சந்திரபோஸ் என்னிடம் வந்து, ''இந்தப் பாடல் (மனிதன் மனிதன்) நல்ல முறையில் வந்திருக்கிறது. இது படத்தில் இடம்பெறாவிட்டாலும் பரவாயில்லை. கேசட்டிலாவது இடம்பெற வேண்டுமென்று விரும்புகிறேன். நான் இசையமைத்த பாடல்களிலேயே இது எனக்கு ஆத்ம திருப்தியளித்த பாடலாகும். பாடல் பதிவாக அதிக செலவும் ஆகாது'' என்று கூறினார்.
சந்திரபோஸின் விருப்பத்திற்குத் தடை போடாமல் பாடல் கேசட்டில் இடம்பெற ஒப்புதல் தந்தேன். பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டபின் ஏவி.எம்.மிலுள்ள ஆலோசனைக் கூடத்தில் எஸ்.பி.முத்துராமன் யூனிட்டிலுள்ளவர்கள் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நானும் அங்கு இருந்தேன்.
'மனிதன் மனிதன்' பாடல் அந்த படத்தில் இடம் பெற்றதற்கு யார் காரணம்....?
அடுத்த இதழில்...
Previous |
|
Next |
|