எனக்கொரு டி.வி.கிடையாதா? - ரஜினி (பாகம் 52)
எனக்கு இயல்பாகவே கைகளைக் கட்டிக் கொண்டு இருப்பது பிடித்தமான, சுகமான விஷயம். வெளியில் எங்கு சென்றாலும் அப்படிக் கைகளைக் கட்டிக் கொண்டுதான் உட்காருவேன். நிற்பேன். இதை ஒரு செய்தியாக வெளிப்படுத்தியவர் ரஜினிதான்.
ஏவி.எம்.சரவணன் தொடர்கிறார்.....
தற்செயலாக ஏவி.எம். பக்கம் வந்த ரஜினி, திடீரென்று எங்கள் அறைக்குள் நுழைந்தார். ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டவர், ''இந்தப் பாடல் 'மனிதன்' படத்தில் இடம் பெறுகிறதா?'' என்று கேட்டார். ''இல்லை'' என்றதும் முழுப் பாடலையும் திரும்பக் கேட்டார்.
பாடலை மீண்டும் கேட்டுவிட்டு ''என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது. 'மனிதன் மனிதன்' பாடல் படத்தில் வந்தே ஆகவேண்டும். எவ்வளவு நல்ல பாடல்?'' என்று ரசித்து வியந்து கண்டிப்பான வேண்டுகோள் விடுத்தார். 'மனிதன்' படத்தில் அந்தப் பாடல் இடம்பெற்றதென்றால் அதற்குக் காரணம் ரஜினியே!
'சங்கர் குரு' படத்தின் பரிசுப் போட்டிகளில் பங்கு பெற்ற 300-க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு டி.வி., டேப்ரிக்கார்டர், ரேடியோ வழங்கும் விழாவொன்று ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ரஜினி 9 கலர் டி.வி., 9 கறுப்பு வெள்ளை டி.வி. மற்றும் டூ-இன்-ஒன், டேப்ரிக்கார்டர், ரேடியோ இப்படி 300-க்கும் அதிகமான பரிசுகளை அனைவருக்கும் தன் கையாலேயே கொடுத்தார். ஒரு மணி நேரத்திற்குள் கொடுத்து முடித்து விட்டார். நேரம் பொன்னானது என்பதை அவரது வேகம்கூட நிரூபித்தது.
விழா முடிவில் ரஜினி பேசும்போது, ''எல்லோருக்கும் டி.வி., கொடுத்தேன். எனக்கொரு டி.வி.கிடையாதா?'' என்று நகைச்சுவையாகப் பேசினார். நான் அதை ரசித்தாலும் சீரியஸாக எடுத்துக் கொண்டு மறுநாள் காலையிலேயே அவரது வீட்டிற்கு கலர் டி.வி. ஒன்றைப் பரிசாக அனுப்பிவைத்தேன்.
டி.வி.யைப் பார்த்துவிட்டு திருமதி. ரஜினிகாந்த் எனக்குப் போன் செய்தார். ''என்னங்க நீங்க, அவர் (ரஜினி) தான் ஏதோ தாமாஷ§க்குச் சொன்னால் நிஜமாகவே அனுப்பி வைச்சுட்டீங்களே'' என்று சங்கடப்பட்டார்.
நான் பதில் சொல்வதற்குள் மனைவியிடமிருந்து (அருகில் ரஜினி இருந்திருப்பார் போலிருக்கிறது) ரஜினி போனை வாங்கி, ''சார்! நான் தமாஷ§க்காக டி.வி. கேட்கலை. நிஜமாகவே கேட்டேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அனுப்புவீங்கன்னு எதிர்பார்க்கலை. ரொம்ப நன்றி சார்'' என்றபோது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இதை 'மனிதன்' படத்தின் வெற்றி விழாவிலும் குறிப்பிட்டார் ரஜினி.
என் மனைவி என்னிடம் அடிக்கடி ''என்னங்க வீட்டிலே ஒரு டி.வி.தானே இருக்கு. இன்னொரு டி.வி. வாங்கித் தாருங்களேன்'' அப்படீன்னு கேட்டா. அதுக்கு நான் 'அந்த ஒரு டி.வி.யைப் பாருங்க போதும்'னு சொல்லிடுவேன். அடுத்து என் பசங்களும் (பெண்கள்) கேட்க ஆரம்பிச்சாங்க.
அப்பதான் 'சங்கர் குரு' விழாவில் டி.வி.பரிசு கொடுக்க என்னை அழைச்சாங்க. நான் விழாவிற்குப் போவதற்குமுன் என் மனைவியிடம், இதோ பாரு, அங்கே நான் நிறைய பேருக்கு டி.வி. கொடுக்கப் போறேன். அதனால எனக்கும் ஒரு டி.வி.கொடுக்காமலா இருப்பாங்க. நீ புது ஆன்டெனாவோட இரு. நான் டி.வி.யோட வர்றேன்''னு சொல்லிவிட்டு வந்தேன்.
'சங்கர் குரு' விழாவில் நான் நிறைய பேருக்கு டி.வி. கொடுத்துட்டு, நமக்கும் கொடுப்பாங்கன்னு காத்திட்டு இருந்தேன். 'ரொம்ப நன்றி. போயிட்டு வாங்கன்னு அனுப்பிச்சுட்டாங்க. ஆனா மறுநாளே கலர் டி.வி. வீட்டுக்கு வந்து சேர்ந்தது' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
எனக்கு இயல்பாகவே கைகளைக் கட்டிக் கொண்டு இருப்பது பிடித்தமான, சுகமான விஷயம். வெளியில் எங்கு சென்றாலும் அப்படிக் கைகளைக் கட்டிக் கொண்டுதான் உட்காருவேன். நிற்பேன். இதை ஒரு செய்தியாக வெளிப்படுத்தியவர் ரஜினிதான்.
'போக்கிரி ராஜா' படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரஜினி என்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'ஷ¨ட்டிங் நடக்கிறப்போ சரவணன் சார் செட்டுக்கெல்லாம் வரவேமாட்டார். எப்பவாவது வருவார். வந்தா ஒரு ஓரமா கையைக் கட்டிக்கிட்டு நின்னுட்டு வந்தது தெரியாம போயிடுவார்' என்றவர் பேசியபடியே மேடையில் இருந்த என்னைக் கவனித்து, ''பார்த்தீங்களா இப்படித்தான் கையைக் கட்டிக்கிட்டு இருப்பார்'' என்று கூறி வெடிச் சிரிப்பை ஏற்படுத்தினார்.
மேடைப் பேச்சில் ரஜினியிடம் நாளுக்கு நாள் நயமும் லயமும் வெளிப்படுகிறது. மேடையில் இந்தளவு அவர் பேசுவதற்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அவர் முதன் முதலாக மேடையேறி விரிவாகப் பேசியது 'போக்கிரி ராஜா' விழாவில். அவரை அதில் பேச வைத்தோம் என்று சொல்ல வேண்டும்.
விழாவில் ரஜினி பேசவேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். ''மேடையில் பேசறதா.....அதெல்லாம் நமக்கு ஒத்துவராது சார்'' என்றார்.
விழாவில் ரஜினி பேசினாரா?
அடுத்த இதழில
Previous |
|
Next |
|