ரஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் - எஸ்.பி.முத்துராமன் (பாகம் 54)
கிணறு ஒன்றைத் தேடினோம். அதிக ஆழமில்லாத கிணறு ஒன்று கிடைத்தது. ஆனால் 'மணம்' கமழும் அழுக்குத் தண்ணீர். எங்களுக்குத் தயக்கமென்றாலும், ரஜினி முகம் சுளிக்காமல் அழுக்குத் தண்ணீரில் குதித்து நடித்தார்.
எம்.ஜி.ஆரை வைத்து அதிக படங்கள் இயக்கியவர் எம்.ஏ.திருமுகம், ப.நீலகண்டன் (20 படங்கள்). அதுவும் தேவர் பிலிம்ஸ் படங்கள் மட்டுமே. சிவாஜியை அதிக படங்களில் இயக்கியவர் ஏ.பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர் (20 படங்கள்). ஆனால் குறுகிய காலத்திற்குள் ரஜினியின் 25 படங்களை இயக்கிய சாதனைக்குரியவர் எஸ்.பி. முத்துராமன். அந்தப் படங்களிலெல்லாம் ரஜினியுடன் தனக்கேற்பட்ட அனுபவங்களை எஸ்.பி.முத்துராமன் வரிசைப்படுத்துகிறார்.
புவனா ஒரு கேள்விக்குறி: ஸ்டைல், வேகம் இல்லாமல் மிதமான, நிதானம் தவறாதவராக ரஜினி இதில் வர வேண்டும். தவிர இதில் வசனங்கள் அதிகம். அதிலும் பாரசீக ரோஜா என்றெல்லாம் பேச வேண்டிய இலக்கிய வசனங்கள் அதிகமிருந்தது.
படப்பிடிப்புக்கு வந்த ரஜினி வசனங்களை பார்த்து மலைத்துப் போனார். தயங்கினார். ''நீண்ட வசனங்களை ஒரே வாட்டில் பேச வேண்டிய அவசியமில்லை. முடிந்த மட்டும் பேசுங்கள். ஷாட்ஸை கட்பண்ணி எடுத்துக் கொள்ளலாம்'' என்றோம்.
முதலில் சிறிய வசனங்களை பேசிப் பேசி, அப்புறம் ஒரே ஷாட்டில் நீண்ட வசனங்களைப் பேசுமளவில் முன்னேற்றம். அது மட்டுமல்ல 'டேக்' நேரத்தில் ரஜினி சேர்த்துக் கொண்டே, தான் பேசுவதற்கேற்ற பொருத்தமான புது வார்த்தைகளும் சேர்ந்தன. வில்லனாக இருந்த ரஜினியை வசனம் பேசி நடிக்கச் செய்து பாராட்டு பெற வைத்த படம்.
ஒரு காட்சியில் கிணற்றில் விழுந்த தன் காதலி மீராவை, ரஜினி காப்பாற்ற வேண்டும். போரூர் அருகில் படப்பிடிப்புக்காக கிணறு ஒன்றைத் தேடினோம். அதிக ஆழமில்லாத கிணறு ஒன்று கிடைத்தது. ஆனால் 'மணம்' கமழும் அழுக்குத் தண்ணீர். எங்களுக்குத் தயக்கமென்றாலும், ரஜினி முகம் சுளிக்காமல் அழுக்குத் தண்ணீரில் குதித்து நடித்தார்.
பாடல் காட்சியொன்றை (விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது என்ற பாடல்) ஒரே நாளில் படமாக்க வேண்டியிருந்தது. சத்தியவேடு அருகில் இடம் தேர்வு செய்தோம். படப்பிடிப்பு நடைபெற்ற போது ஒலியமைப்பு கெட்டுப் போனது. அதனால் மற்றதை மறுநாள் படமாக்க எண்ணினோம். இரவில் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. தங்குவதற்கு அந்தப் பகுதியில் எந்த வசதியுமில்லை. தன் வீட்டு மொட்டை மாடியில் தங்க இடமளித்தார் ஒருவர். விரிப்பதற்கு எதுவுமின்றி வெறும் தரையில் படுத்துறங்கினார் ரஜினி.
ஆடு புலி ஆட்டம்: இதில் ரஜினிக்கு 'புவனா ஒரு கேள்விக்குறி'க்கு நேர் எதிரான வேடம். தவறான இளைஞர்கள் கூட்டத் தலைவனாக வருவார். நடிப்பில் மட்டுமின்றி சண்டைக் காட்சிகளிலும் ஸ்டைல் புகுத்தினார். இந்தப் படத்திற்காக மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்ட கற்றுக் கொண்டார்.
ரஜினியை வைத்து இயக்கிய பல படங்களின் வரிசை...
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|