முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி (பாகம் 55)
ரஜினி ஒரு மணி நேரத்தில் படகு ஓட்டக் கற்றுக் கொண்டார். ஒரே ஷாட்டில் படமாக்கி விடலாமென்று முடிவு செய்தோம். ரஜினி படகு ஓட்ட ஆரம்பித்தார். அவர் வேகத்தைப் பார்த்து எங்களுக்கெல்லாம் பயமாகிவிட்டது.
எஸ்.பி. முத்துராமன் தொடர்கிறார்:
ப்ரியா: எங்களுக்கும் ரஜினிக்கும் முதல் அயல் நாட்டுப் படம். குறுகிய காலத்தில் நிறைய காட்சிகளைப் படமாக்க ஆசைப்பட்டோம். அதனால் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடக்கும்.
7 மணி படப்பிடிப்பிற்காக அதிகாலை 5 மணிக்கே எழுந்து தயாராகி விடுவோம். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து படப்பிடிப்பு நடைபெறுமிடம் 15, 20 மைல் தள்ளி இருக்கும். படப்பிடிப்பு முடிந்த பின் மறுநாளைய படப்பிடிப்பிற்கான டிஸ்கஷன் நடக்கும். ரஜினி தானும் அதில் கலந்து கொள்வார். எங்களைப் போல் ரஜினிக்கும் 'ப்ரியா' படத்தினால் தூக்கம் இல்லாமல் போனது.
ஹாங்காங்கில் படப்பிடிப்பு நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் மலைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். மிருகங்கள் இருக்கும் இடம், நீச்சல் குளம், டால்பின் மீன் சாகஸங்கள், ஓசியன் பார்க் (மிகச் சிறந்த, பெரிய பார்க்) ஆகிய ஒவ்வொன்றும் ஒவ்வொரு மலையைத் தாண்டி இருக்கிறது. அங்கு செல்ல வாகன வசதிகள் இல்லை. நடைப்பயணம் தான். பணியாட்கள் என்று எங்களுக்கு தனியாக எவருமில்லை. அதனால் படப்பிடிப்பு சாதனங்களை ஆளுக்கு கொஞ்சம் பிரித்து கொண்டு மலையேறினோம். ரஜினி கேமரா பாட்டரிகளைத் தூக்கினார். ஒன்று தூக்கினால் போதும் என்றோம். ''ஒன்றைத் தூக்கினால் மற்றொன்று பாலன்ஸ் வேண்டும்'' என்று இரண்டு பேட்டரிகளை இரண்டு தோள்களிலும் தூக்கினார். ஒவ்வொன்றும் கிலோ கணக்கில் எடையுள்ளது. அப்படி எடையைத் தாங்கிக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரம் மலையேறி கடந்து விடுவார். இப்போது அந்த இடங்களில் 'எஸ்கலேட்டர்' (நகரும் படிக்கட்டு) வசதி வந்து விட்டது. மக்கள் சௌகரியத்திற்காக ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைபகுதிக்கு இப்படி எஸ்கலேட்டர் வசதியுள்ளது உலகிலேயே ஹாங்காங்கில் தான்.
'ப்ரியா'வில் படகு துரத்தல் காட்சி ஒன்று உண்டு. 'க்ளோஸ் அப'¢பில் ரஜினியை படமாக்கி, மற்றதெல்லாம் டூப் போட்டு எடுத்து விட நினைத்தோம். ஆனால் ரஜினி ஒத்துக் கொள்ளவில்லை. 'நானே நடிப்பேன்' என்றார். அவருக்கு படகு ஓட்டவும் தெரியாது. நீச்சலும் தெரியாது.
ரஜினி ஒரு மணி நேரத்தில் படகு ஓட்டக் கற்றுக் கொண்டார். ஒரே ஷாட்டில் படமாக்கி விடலாமென்று முடிவு செய்தோம். ரஜினி படகு ஓட்ட ஆரம்பித்தார். அவர் வேகத்தைப் பார்த்து எங்களுக்கெல்லாம் பயமாகிவிட்டது. தற்காப்புக்கு இன்னொரு படகும் எங்களுடன் இருந்ததால் தைரியமாக படமாக்கினோம். ரஜினியின் படகு சென்ற இடமெல்லாம் கேமராவுடன் துரத்தினோம். ஒரு கட்டத்தில் ரஜினியின் படகு எங்களை இடிப்பது போல் வந்து நீரைத் தௌ¤த்து விட்டுச் சென்றது.
ஆறிலிருந்து அறுபது வரை: குடும்பப் பாங்கான கதை இது. ரஜினியிடம், ''உங்களுக்கு இது மாறுபட்ட கதை'' என்றோம். ஆக்ஷன் கிடையாது. படப்பிடிப்பிற்கு வந்த போது, ''ஒரு குடும்பத்தில் பாசமுள்ள அண்ணனுக்கு எதிராக உடன்பிறந்த தங்கை, சகோதரர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள்'' என்று ஒவ்வொரு நாளும் ரஜினி எங்களிடம் விவாதித்தார். ''எத்தனையோ குடும்பங்களில் நடப்பதைத்தான் பிரதிபலிக்கிறோம்'' என்று நாங்கள் விளக்கம் சொன்னாலும் ரஜினிக்கு சமாதானமாகவில்லை.
''முதலில் 5000 அடி படமெடுப்போம். அதைப் பாருங்கள். உங்களுக்கு திருப்தி இருந்தால் படம் தொடரும். இல்லையென்றால் நிறுத்தி விடலாம்'' என்றோம். படமாக்கியதை போட்டுக் காண்பித்த பின் ரஜினி முழு மனதோடு ஒத்துக் கொண்டார். ''என் அனுபவக் குறைவினால் உங்களிடம் விவாதம் செய்திருக்கிறேன்'' என்று தன் தவறுக்கு வருந்தினார்.
படம் முடிந்து வெளியானபோது விநியோகஸ்தர்களிடம், ''இந்தப் படத்திற்கு வெள்ளி, சனி, ஞாயிறு கலாட்டா இருக்கும். அதனால் பயப்பட வேண்டாம். திங்கள் முதல் பெண்கள் திரண்டு வருவதைப் பாருங்கள்'' என்றோம். ஆனால் எங்கள் எதிர்பார்ப்பையும் மீறி, படத்தின் தன்மையினால் முதல் மூன்று நாட்களும் பெரும் வரவேற்போடு ரசிக்கப்பட்டது. ரஜினிக்கும் எனக்கும் விருதை தேடித் தந்த படம்.
இன்னும் பல படங்கள்....
அடுத்த இதழில்...
Previous |
|
Next |
|