ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள் (பாகம் 57)
ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்
ரஜினி தன் நடிப்பு திறமையைக் காட்டிய படங்கள் பற்றி எஸ்.பி.முத்துராமன் தொடர்கிறார்:
அடுத்த வாரிசு: நாடோடி கதையம்சமுள்ள படம். ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ரோஜர்மூர் நடித்த 'ஆக்டோபஸி'
இந்தியாவில் - உதய்ப்பூரில் படமாக்கப்பட்டதைவிட, 'அடுத்த வாரிசு' படத்திற்காக நாங்கள் படமாக்கியது நன்றாக வந்ததாக பார்த்தவர்களெல்லாம் சொன்னார்கள்.
ஆனந்துடன் ரஜினி வாள் வீசி நடித்தார். வாள் வீச்சில் அவரது ஸ்டைல் வித்தியாசமாக அமைந்தது.
இதில் செந்தாமரையும், ரவீந்தரும் ரஜினியைக் கட்டி வைத்து உதைப்பதாக ஒரு காட்சி வரும். செந்தாமரையைக் கூட ரசிகர்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் ரவீந்தரை ''எங்கள் ரஜினியை எப்படி உதைக்கலாம்'' என்று ரசிகர்கள் தேட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் ரவீந்தர் ஒரு மாதம் தன் இருப்பிடத்தை விட்டு வெளியே போக முடியவில்லை.
புதுக்கவிதை: இப்படத்திற்காக தீப்பந்த சண்டைக் காட்சியொன்றை படமாக்கிக் கொண்டிருந்தோம். எதிரிகள் ரஜினிமீது தீப்பந்தங்களுடன் பாய்வது போல் படமாக்கியபோது பாலசந்தர் செட்டுக்கு வந்திருந்தார். சண்டைக் காட்சிகளுக்கும் அவருக்கும் வெகுதூரம் என்பதால் படப்பிடிப்பைப் பார்த்து பயந்து விட்டார். ''ரஜினிக்கு ஏதும் ஆபத்து உண்டாக்கிடாதீங்கப்பா, ஜாக்கிரதை'' என்று எச்சரிக்கை செய்தார். ''நீங்கள் இங்கிருந்தால் வேலை நடக்காது'' என்று பாலசந்தரை முதலில் அங்கிருந்து அனுப்பிய பின்பே படப்பிடிப்பைத் தொடர்ந்தோம்.
நான் மகான் அல்ல: ரஜினி வக்கீல் வேடத்தில், பக்கம் பக்கமாக வசனங்களைப் பேசி நடித்தார். கோர்ட் காட்சியொன்றில் 'Revolving Shot' ஒன்று நீதிபதியில் தொடங்கி கோர்ட் முழுவதும் சுற்றி வந்து கடைசியில் நீதிபதியின் முன்பே ஷாட் முடிவுறும். சுழலும் டிராலி மீது ரஜினியை நிறுத்தி படமாக்கினோம். 200 அடி நீள ஷாட்டில் ரஜினி வசனங்களைத் தௌ¤வாகப் பேசி, படப்பிடிப்பு நேரத்திலேயே கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார்.
கிளைமாக்ஸ் கண்ணாடி மாளிகை செட்டில் படமாக்கப்பட்டது. கண்ணாடிகளெல்லாம் நொறுக்கப்பட்டு முகத்தில் தெறித்து விழும் அளவில் ரிஸ்க்கான அந்தக் காட்சியில் ரஜினி தைரியமாக நடித்தார்.
நல்லவனுக்கு நல்லவன்: முற்பகுதியில் ரௌடியாகவும், இரண்டாவது பகுதியில் கண்ணியம் மிக்க தொழிலதிபராகவும் வித்தியாசம் காட்டி, பாலன்ஸ் செய்து நடித்தார் ரஜினி. 'சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு' என்ற சோக பாடலுக்கு தன் நடிப்பின் மூலம் கைதட்டல்களைப் பெற்றார்.
ஸ்ரீராகவேந்திரர்: ராகவேந்திரராக நடிக்க வேண்டுமென்பது ரஜினியின் நீண்ட நாள் ஆசை. அதை என்னிடம் அவர் சொன்ன போதெல்லாம் வியாபார பயம் காரணமாக தள்ளிப் போட்டு வந்தேன்.
100-வது படமாக எதைச் செய்வது என்று குழப்பம். ரஜினி பாலசந்தரிடம் சென்று 'எனது 100-வது படம் ராகவேந்திரராக இருக்க வேண்டும்'' என்றார். பாலசந்தர் உடனே என்னை அழைத்து, ''ஸ்ரீ ராகவேந்திரர் ரஜினியின் 100-வது படம். அதை கவிதாலயா தயாரிக்கிறது. நீங்கள் செய்து கொடுக்கிறீர்கள்'' என்றார்.
படப்பிடிப்பு நடந்த ஆறு மாதமும் ரஜினியுடன் நாங்களும் விரதம் இருந்தோம். படத்தில் நிறைய இலக்கிய வசனங்கள். ரஜினி வழக்கம் போல வேகமாகப் பேசினார். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது வேகத்தைக் குறைத்து வசனம் பேசச் செய்தோம். அடிக்கடி வேகத்தைக் குறைக்கச் சொன்னதால், 'உயிரை வாங்கிடுவீங்களே' என்று சிரித்துக் கொள்வார். அப்படி உழைத்ததற்கு ரசிகர்களிடம் பலன் இல்லை. அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ராகவேந்திரர் ஒரு மைல் கல். இந்தப் படம் பார்த்து (மறைந்த) முதல்வர் எம்.ஜி.ஆர். பாராட்டியதோடு மறுநாள் மதுரையிலிருந்து டிரங்கால் மூலம் உத்தரவு போட்டு வரிவிலக்களித்தார்.
தொடரும்...
Previous |
|
Next |
|