"நீ ஏன்டா ரஜினிக்கு support பண்ணுற" ? இந்தக் கேள்வியை இந்தக் கட்டுரை படிக்கும் அனைவரும் எதிர்கொண்டு இருப்பிர்கள். இல்லையென்றால் "நீ ஏன்டா ரஜினிக்குச் சொம்பு தூக்குற" ? என்று கேட்டு இருப்பார்கள்.
பலரும் பல விதமான காரணங்களைக் கூறி இருப்போம். நான் கூறப்போகும் காரணங்களில் பல நீங்கள் கேட்டு/சொல்லி இருப்பீர்கள்.
இருந்தாலும் ரசிகன் என்ற நிலையில் இருந்து தொண்டன் எனும் நிலைக்கு மாறும் பொழுது நமது பேச்சில் முதிர்ச்சி இருக்க வேண்டும் என்று கருதி, சில பல கோணங்களில் யோசித்து எழுதுகிறேன்.
குறிப்பாக இளம் ரசிகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற வகையில் எழுதுகிறேன்.
"நீ ஏன்டா ரஜினிக்கு support பண்ற " என்று கேட்ட உடன் "நான் அவர் ரசிகன்" என்று பதில் சொல்பவர் என்றால் தயவு செய்து அதை நிறுத்தி விடுங்கள்.
நடிகனாக இருப்பது நாட்டை ஆள்வதற்குத் தகுதி ஆகாது. பிறகு எப்படி "Ronald Regan" அமெரிக்காவின் அதிபர் ஆனார்? Arnold Schwarzenegger கலிஃபோர்னியாவின் Mayor ஆனார்? என்று கேட்கலாம்.
வருகிறேன்....
"ரஜினி ரொம்ப நல்லவர் , அதனால அவரை அரசியலில் ஆதரிக்கிறேன்" என்று கூறினால் நீங்கள் ஓரளவு தெளிவோடு இருக்கிறீர்கள்.
ஆனால் விஜயகாந்தும் நல்லவர் தான் ஆனால், நம்மில் எத்தனை பேர் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முன்பு அவரை ஆதரித்தோம் ? So நல்லவனாக இருப்பதை மட்டும் ஒரு காரணமாகச் சொல்லிவிட முடியாது...பின் வேறு என்ன காரணம் இருக்கும்...
வருகிறேன் ...
"அவர் மற்ற அரசியல்வாதி போல இல்லை, அமைதியான முறையில் வித்யாசமாக எதையாவது செய்வார் " என்று சிலர் கூறுவீர்கள் .
ஆனால் நீங்கள் சொல்வது உண்மை என்று மற்றவர்கள் உணர அவர் ஆட்சி புரிய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் கட்சியின் கொள்கைகளை அறிவித்து இருக்க வேண்டும்.
அப்படியானால் இப்பொழுது ரஜினியை ஆதரிப்பது கண்மூடித்தனமானதா?
வருகிறேன்...
கூத்தாடிகள் நமது மாநிலத்தை ஆண்டுக் கெடுத்துவிட்டார்கள் என்று பலர் கூறுவார்கள்.
"கேரளாவை பாருங்கள், அவர்கள் தங்கள் தலைவனைத் திரையில் தேடுவதில்லை" ... கேட்கவே உணர்ச்சி பொங்குகிறதல்லவா!
ஆனால் கூத்தாடிகள் ஆட்சி செய்த இந்த மாநிலம் தான் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
Human Development Index, maternal mortality rate, Sex ratio, neonatal mortality ratio போன்ற பல அத்தியாவசிய வளர்ச்சி குறியீடுகளில் தமிழகம், கூத்தாடிகள் ஆட்சி செய்யாத U.P, M.P, Bihar, Rajasthan போன்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னிலையில் இருக்கிறது.
இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று ?
சரி, அப்படியே பார்த்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது யாரை? அனைத்து ஆட்சியாளர்களும் நல்லதையே செய்தால் ரஜினிக்கு அவசியம் என்ன ?
வருகிறேன்...
தமிழக மக்கள் அவ்வளவு எளிதாக எவரையும் தலைவனாக ஏற்றுக்கொள்வதில்லை.
சுதந்திர இந்தியாவில் 70 ஆண்டுகளில் காமராஜருக்கு பிறகு கலைஞர், M.G.R, ஜெ ஆகிய மூவர் மட்டுமே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்கள் .
எத்தனையோ நடிகர்கள் கட்சி துவங்கினாலும் மக்கள் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தியது இல்லை. ஆக இதில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகிறது.
"எவரொருவருக்கு இந்தத் தேசத்தின் மீது உண்மையான அக்கறை இருக்குமோ, எவரொருவர் மக்களின் நலனுக்காக உண்மையாகப் பாடுபடுவார் என்ற நம்பிக்கையை மக்களுக்குள் விதைக்கிறாரோ, அதே சமயம் எவரொருவருக்கு உண்மையில் நிர்வாகத்திறமை இருக்குமோ " - அவரைத் தான் மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்கிறார்கள்.
50 வருட கூத்தாடிகளின் ஆட்சியில் தமிழகம் முன்னேற முடிந்ததும் இதனால் தான். Ronald Regan, Arnold Schwarzenegger போன்றோர் அமெரிக்காவில் தலைவரான காரணமும் இது தான்.
அப்படியானால் தலைமையில் ஏற்பட்டுள்ள "வெற்றிடத்தை" தான் ரஜினி "சிஸ்டம்" சரியில்லை என்று கூறினாரா ? இல்லை... இல்லவே இல்லை...
சிஸ்டம் என்பது வேறு! ஆட்சி என்பது வேறு!! ஆட்சியாளர்கள் என்பது வேறு!!!
நாம் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கிறோமே, அவர்களே ஆட்சியாளர்கள். அந்த ஆட்சியாளர்கள் அளிப்பதே ஆட்சி. அதாவது இது கொள்கையைப் பொறுத்து மாறுபடும்.
உதாரணமாகக் காங்கிரஸ் தன்னை "ஏழைகளின் காவலனாக"வும் பா.ஜ.க தன்னை "இந்து மதக் காவலனாக"வும் முன்னிறுத்திக் கொள்வது அவர்கள் கொள்கை.
அல்லது சென்ற 5 வருட காங்கிரஸ் ஆட்சியையும் தற்போதுள்ள ஆட்சியையும் நீங்கள் ஒப்பீடு செய்து, உங்களுக்கு என்ன வித்யாசம் தெரிகிறதோ, அதுவே ஆட்சிக்கும் ஆட்சியாளர்க்கும் உள்ள ஒரு நூல் அளவு வித்யாசம்...
ஆனால் இங்கே அனைத்தையும் விட முக்கியமானது இந்தச் சிஸ்டம் தான். ஏனென்றால் எவர் ஆட்சி அமைத்தாலும் இந்தச் சிஸ்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும்/ முடியும் .
உதாரணமாகத் தற்போதுள்ள முதல்வரால் தன்னைத் தமிழகத்தின் நிரந்தர முதல்வராக முடிசூட்டிக்கொள்ள முடியாது. 5 வருடங்கள் கழித்துத் தானாக அவரது பதவி காலாவதியாகிவிடும். இது சிஸ்டத்தின் ஒரு பகுதியே.
நல்ல விஷயங்கள் பல இருந்தாலும் தற்போது இந்தச் சிஸ்டத்தில் பல குறைகள் உள்ளது. ரசிகர் சந்திப்பில் நிறைய நேரம் எடுக்காமல் அதில் பல குறை உள்ளது என்பதைத் தான் ரத்தினச்சுருக்கமாக "சிஸ்டம் கெட்டுப்போச்சு" என்று ரஜினி கூறினார்.
அரசியல் என்று வந்துவிட்டால் பணம் நிறையச் செலவு செய்ய வேண்டும், பின்பு போட்ட முதலீட்டை திரும்ப எடுக்கவேண்டும் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லும் அளவிற்கு இருக்கிறோம் அல்லவா, இது தான் சரியான சிஸ்டமா?
பணம் செலவழித்துச் சுலபமாக வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளோமே, இதுதான் சரியான சிஸ்டமா?
ஓவொரு தேர்தல் சமயத்திலும் கட்டுக்கட்டாகப் பணம் சிக்குகிறதே, அண்டை மாநிலத்தின் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் காவேரி விவகாரத்தில் ஒற்றுமையாக நிற்கும் போது நமது மாநிலத்தில் ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் கூட நடைபெறவில்லையே, கேரளாவில் தலித் ஒருவர் அர்ச்சகர் ஆகியும், இந்த "பெரியார்" மண்ணில் இன்னும் நிகழவில்லையே , இது தான் சரியான சிஸ்டமா?
நான் கூறியவை மிகச்சொற்பம்.
அனேகமாகச் சிஸ்டம் ஏன் மாற்றப்பட வேண்டும் என்பதை உணர்ந்து இருப்பிர்கள்.
பல ஆட்சி மாற்றம் வந்தாலும் இந்த அடிப்படை சிஸ்டத்தை மாற்ற அவர்கள் முயலவே இல்லை. மாறாக அதைப் பல வகையில் Damage செய்து இருக்கிறார்கள்.
இந்தச் சிஸ்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. அது ரஜினியால் "மட்டுமே" முடியும் என்று கூறவில்லை ... ரஜினியால் முடியும் என்று கூறுகிறேன் .
ரஜினியின் அரசியலில் ஒரு தெளிவு பிறந்திருக்கும் என்று நம்புகிறேன்.
அடுத்த முறை, ரஜினியால் எவ்வாறு இந்தச் சிஸ்டத்தை மாற்ற முடியும் ? "தலைவர்" என்ற அந்தஸ்தை பெற ரஜினி தகுதியானவரா ? ரஜினினியால் அப்படி என்ன மாற்றம் வந்துவிடும் ? என்பதை எழுதுகிறேன்.
- விக்னேஷ் செல்வராஜ்
|