'சூப்பர் ஸ்டார்' பட்டத்தைக் காட்டிலும் 'சீக்ரெட் ஸ்டார்' என்பதுதான் அவருக்கு அத்தனை பொருத்தமாக இருக்கும். இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் இன்னமும் பல ரகசியப் பக்கங்களைத் தனக்குள் ஒளித்துவைத்திருக்கும் வித்தைக்காரர். அவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாத ஒரு சங்கதி... நடிகரும் இயக்குநருமான மணிவண்ணன், ரஜினிக்கு நெருக்கமான நண்பர் என்பது. சமீபத்தில் மணிவண்ணனின் மகள் திருமணத்துக்கு திரையுலகின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர். மணிவண்ணனின் குருவான பாரதிராஜா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினாலும், மாப்பிள்ளை கையில் தாலி எடுத்துக் கொடுத்தவர்... ரஜினிதான்!
மணிவண்ணன் முகத்தில் ஈரமுஞ் சாரமுமான மகிழ்ச்சி!
''ஆமாங்க... இந்த எளிய நண்பன் கல்யாணத்துக்குக் குடும்பத்தோடு வந்திருந்து தாலி எடுத்துக்கொடுத்துக் கல்யாணம் முடியிற வரை இருப்பார்னு நான் எந்தக் காலத்திலும் நினைச்சது இல்லைங்க!'' என்று வார்த்தைகள் வராமல் அடைத்துக்கொள்கிறது மணிவண்ணனுக்கு. ''டைரக்டரா மட்டும் இருந்த என்னை நடிகனாக்கி அழகு பார்த்ததே ரஜினிதான்.
'கொடி பறக்குது' படத்துல ரஜினிக்கு சவால் விடுற மாதிரியான ஒரு வில்லனை எங்க டைரக்டர் தேடிக்கிட்டு இருந்தப்போ, 'எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே... அவரையே வில்லன் ஆக்கிடுங்க'ன்னு சொல்லி, என்னை கேமராவுக்கு முன்னாடி நிக்கவெச்சார். அந்தப் படத்துல ரஜினி ரொம்ப ஸ்டைலா 'நான் ஈரோடு சிவகிரி'ன்னு சொல்லிட்டே இருப்பார். என்கிட்ட முதல் தடவை அப்படிச் சொல்ற மாதிரி சூட் பண்ணப்போ, நான் அசால்ட்டா 'அட விடுய்யா! அது என்ன காந்தி பொறந்த போர் பந்தரா?'ன்னு நக்கலாப் பேசிட்டேன். உடனே டைரக்டர் என்னைத் தனியா அழைச்சுட்டுப் போய், 'ஏன்யா, ரஜினி எவ்ளோ பெரிய ஸ்டார்! இப்படி எடுத்தெறிஞ்ச மாதிரி வசனம் பேசுறியே'ன்னு என்கிட்டே கோவிச்சுக்கிட்டார்.
அடுத்த டேக்ல 'போர்பந்தர்' டயலாக் பேசாம 'அப்படியா?'ன்னு மரியாதையாப் பேசினேன். அந்த ரியாக்ஷன் ரஜினிக்குச் சுத்தமாப் பிடிக்கலை. 'மணி, முன்னாடி கிண்டலாப் பேசுனீங்களே... அதையே பேசுங்க. அதான் நல்லா இருக்கு'ன்னு பேசவெச்சு ரசிச்சார். தன் இமேஜ் பத்திக் கவலைப்படாம மத்தவங்க திறமையைக் கவனிக்கும் அபூர்வமான நடிகர் ரஜினி.
நான் நாத்திகவாதின்னு தெரிஞ்சிருந்தாலும், ஒரு நண்பனா என்னை ஏத்துக்கிட்டு நெருக்கமானார். 'ஏன் நீங்க பப்ளிக்கா
நாத்திகப் பிரசாரம் பண்றதில்லை?'ன்னு என்னைக் கேட்டார். 'நான் எப்படி பகுத்தறிவுக் கொள்கைகளைத் தீவிரமாக் கடைப்பிடிக்கிறேனோ, அதுபோலத்தானே ஆன்மிகவாதிகளும் கடவுளை நம்புறாங்க. அந்த சென்ட்டிமென்ட்டை நான் காயப்படுத்த முடியாதுல்ல'ன்னு சொன்னேன். 'குட் குட்'னு ரசிச்சார்.
அவர் ஒவ்வொரு படம் முடிச்சதும் உடனே ரிஷிகேஷ் பறந்துடுவார். அதுக்காக நானே முன்னாடி ரஜினியைக் கன்னாபின்னான்னு விமர்சனம் பண்ணிப் பேசியிருக்கேன். 'அதென்ன எதுக்கெடுத்தாலும் ரிஷிகேஷ் பறந்துடுறீங்க?'ன்னு அவரிடமே கேட்டுட்டேன்.
உடனே, பொறுமையா ரிஷிகேஷ்பத்தி என்கிட்டே விவரிச்சார். 'மணி, நான் யாரு... என் பேரு என்னன்னுகூட அங்கே வாழுற மலைவாசி ஜனங்களுக்குத் தெரியாது. அவங்ககிட்டே காசு பணம் கிடையாது. ஆனா, அன்பு காட்டுறதுல அவங்களைப் போல பணக்காரங்க இந்த உலகத்துலயே கிடையாது. அங்கே வசிக்கிறவங்களோடு சேர்ந்து ஓட்டை உடைசலான பஸ்ல போறது, ஜிலுஜிலுன்னு ஓடுற ஐஸ் நதியில குளிக்குறது, அந்த அமைதியான சூழ்நிலைதான் என்னை இன்னமும் உயிர்ப்போடு வெச்சிருக்கு. ரஜினி ஆன பிறகு நான் தொலைச்ச 'சிவாஜி ராவ்' அங்கேதான் மறுபடி வாழ்ந்து பார்க்கறான்.
அங்கே இன்னொரு சுவாரஸ்யம்... சாமியார்கள்! கடவுளைத் தேடி, நிம்மதியைத் தேடித் திரியும் நிஜ சாமியார்கள் அங்கே அதிகம். அந்தப் பக்கம் நேபாள்லகொலை, திருட்டுனு தப்புத்தண்டா பண்ணிட்டு, சாமியார் வேஷத்துல தலைமறைவாத் திரியுற கிரிமினல்சும் அதிகம். அந்தச் சாமியார்கள் கூட்டத்துல உண்மையான சாமியாரையும் போலிச் சாமியாரையும் கண்டுபிடிக்கறதுதான் எனக்குப் பிடிச்ச பொழுதுபோக்கே. அது தனிக் கலை மணி. இதுக்காகத்தான் அடிக்கடி ரிஷிகேஷ் போறேன். கிளம்புறப்போ செல்போனை வீட்லயே வெச்சிருவேன். ரெண்டு மூணு செட் டிரெஸ் மட்டும்தான். அழுக்காயிடுச்சுன்னா நானே துவைச்சுக்குவேன். ஒவ்வொரு தடவை ரிஷிகேஷ் போயிட்டுத் திரும்பி வர்றப்பவும் என் மனசும் உடம்பும் ஃப்ரெஷ்ஷா இருக்கும். இது தப்பா?'ன்னு கேட்டார்.
நான் ஆடிப்போயிட்டேன்.
ரிஷிகேஷ் மட்டுமில்லை... சென்னை, பெங்களூருன்னு அடிக்கடி ரஜினி மாறு வேஷத்துல சுத்திட்டே இருப்பார். இது பல சமயங்கள்ல அவர் வீட்டு வாட்ச்மேனுக்குக்கூடத் தெரியாது. ரஜினி பெங்களூரு போறப்பலாம் முன்னாடி அவர்கூட பஸ்ஸில் டிரைவரா வேலை பார்த்த ராஜ்பகதூருடன் மாறுவேஷத்துல ஊர் சுத்தக் கிளம்பிடுவார். இங்கே சென்னையில் தன்னந்தனியா மவுன்ட் ரோடு, கலைவாணர் அரங்கம், எம்.எல்.ஏ. ஹாஸ்டல், ராஜாஜி ஹால்னு ராத்திரிகளில் சுத்திட்டு இருப்பார். போற இடங்களில் பிளாட்ஃபாரத்தில் படுத்திருக்கும் மக்களிடம் போய் உக்காந்துக்குவார். சும்மா அவங்ககிட்ட பேச்சுக் கொடுப்பார். அரசியல், சினிமா, விலைவாசி, ஆன்மிகம்னு அவங்க மனசுவிட்டுப் பேசுறதை எல்லாம் மௌனமாக் கேட்டுப்பார்.
அதுல சிலர் கோபமா, 'இந்த ரஜினிகாந்த் சுத்த வேஸ்ட்டுய்யா... ஒண்ணு அரசியலுக்கு வரணும்... இல்லாங்காட்டி வரலேன்னு அறிவிக்கணும். ஏன்தான் இப்படிச் சொதப்புறாரோ?'ன்னு திட்டுவாங்களாம். அப்போ இவரும் குரலை மாத்தி, அவங்ககூட சேர்ந்து தன்னைத்தானே திட்டிக்குவாராம். அப்புறம் அவங்களோடவே கொசுக் கடியில் படுத்துட்டு, இருட்டு விலகறதுக்கு முந்தி எந்திரிச்சு வீட்டுக்கு வந்துருவாராம். இதை என்கிட்டே அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னப்போ நான் அசந்துபோயிட்டேன்.
வீட்ல ஓய்வா இருக்கும்போது அடிக்கடி போன் பண்ணுவார். வீட்டுக்கு வரச் சொல்லி பல விஷயங்களை மனசுவிட்டுப் பேசுவார். 'தி.மு.க. கட்சி எப்படி உருவாச்சு? காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பெரியார் வெளிவந்தது ஏன்? அண்ணா எப்படிப்பட்டவர்?'னு விவரிக்கும் பல புத்தகங்களை என்கிட்டே வாங்கி ஆர்வமாப் படிச்சு முடிச்சுட்டார். நானும் ஒருநாள் தயங்கித் தயங்கி, 'நீங்க எப்போதான் அரசியல்ல இறங்கப்போறீங்க?'ன்னு கேட்டுட்டேன். அதுக்கு அவரோட வழக்கமான 'ஹாஹா' சிரிப்புதான் பதில்!
ஏன்னு தெரியலை, அவர் நடிக்கிற பல படங்களில் எனக்கு ஒரு ரோல் நிச்சயம் கொடுத்துடுவார். 'படையப்பா' படத்துல ஒரு ஸீன்ல சிவாஜி, ரஜினி, லட்சுமி, சித்தாரா, சௌந்தர்யான்னு எல்லா ஆர்ட்டிஸ்ட்களும் இருக்குறப்போ, நான் ஒவ்வொருத்தர்கிட்டயும் நீளமா வசனம் பேசணும். 'இவன் மட்டும் நீளமா வசனம் பேசுவான்... நாங்கள்லாம் இவன் மூஞ்சியை வேடிக்கை பார்த்துக்கிட்டு தேமேன்னு நிக்கணுமா?'ன்னு சிவாஜி சாரே ஜாலியாக் கிண்டலடிச்சார். அந்த ஸீன் நடிச்சு முடிச்சுட்டு தனியா போய் நான் அழுதுட்டேன். அதைப் பார்த்த ரஜினி ஷாக் ஆயிட்டார். 'என்ன மணி என்னாச்சு?'னு பதறிட்டே கேட்டார். 'சிவாஜி, ரஜினி முன்னாடிலாம் இவ்ளோ நீளமா நடிக்கிற பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அதான் அழுதுட்டேன்'னதும் கட்டிப்பிடிச்சுக்கிட்டார்.
'சிவாஜி' படத்துலயும் அப்பா வேஷம் கொடுத்து என்னைப் பெருமைப்படுத்தினார். சூட்டிங்குக்கு ரொம்பச் சரியான நேரத்துக்கு வந்துடுவார். எப்பவாவது அஞ்சு நிமிஷம் லேட் ஆனாக்கூட டைரக்டர்ல இருந்து லைட்மேன் வரைக்கும் 'ஸாரி!' கேட்டுட்டே இருப்பார். அவர் ரியல் லைஃப்லயும் சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத ஹீரோதான்!'' என்று நெக்குருகி முடித்தார்.
''என்னதான் ரஜினி உங்க ஃப்ரெண்டா இருந்தாலும், உங்க குருநாதர் பாரதிராஜா கையால் தாலி எடுத்து கொடுக்கச் சொல்லி, உங்க மகள் கல்யாணத்தை நடத்தாம ரஜினி கையால் ஏன் எடுத்துக் கொடுக்கச் சொன்னீங்க?''
''ரஜினிகிட்ட கல்யாணப் பத்திரிகை கொடுக்கும்போதே, 'நீங்கதான் தாலி எடுத்துக் கொடுக்கணும்'னு சொல்லிட்டேன். என் குரு பாரதிராஜாகிட்டதான் நான் வளர்ந்தேன். அதை நான் மறுக்கலை. என் மகள் கல்யாணத்தை பக்கத்துல இருந்து நடத்தற கடமையும் உரிமையும் அவருக்கு இருக்கு. ஆனா, அதைவிட்டுட்டு ரஜினி கல்யாணத்துக்கு வர்றார்னதும், முதல் நாளே ரிசப்ஷனுக்கு வந்து தலைகாட்டிட்டு பொசுக்குனு கிளம்பிட்டார் என் டைரக்டர். அப்படி என்ன ஈகோ வேண்டிக்கிடக்கு? இன்னொரு விஷயம்... என் குருநாதர் பாரதிராஜாவைவிட ரஜினிக்கு என் குடும்ப உறவுகள் மேல் அதிக அட்டாச்மென்ட் உண்டு!'' என்று கரிசனமிக்க தந்தையாக முடித்தார் மணிவண்ணன்.
தொகுப்பு: Shankar
-நன்றி: விகடன்
|