2.0 - ஏன் கொண்டாடணும்?
என்னதான் சினிமாங்கிறது அபப்டி இருக்கணும் இப்படி இருக்கனும்னு நாம ஆயிரம் பேசினாலும், ஆக்சுவலா சினிமா ஒரு பொழுதுபோக்கு சாதனம். அதுக்காகத்தான் அது உருவாக்கப்பட்டது. லூமியர் பிரதர்ஸ் ட்ரெயின் ஓடுற அந்த படத்தை முதன்முதலா போட்டு காமிச்சப்போ நிறைய பேர் நிஜ ட்ரெயின் வந்திருச்சின்னு பயந்து எந்திரிச்சி ஓடுனாங்களாம். அப்படி ஓடுன அந்த செகண்ட்ல அது வெறும் நகர்ந்து போற ஒரு புகைப்படம் அப்படிங்கிற இடத்துல இருந்து, ஒரு அனுபவமா மாறிச்சி. வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத ஒரு அனுபவம். ஆக முதல் சினிமா அப்படிங்கிறது வெறும் தொழில்நுட்பம் மட்டுந்தான். அதுல கதை, திரைக்கதை, உள்ளார்ந்த ஒளி தரும் தரிசனம், உலகப்படம் அப்படி இப்படின்னு எதுவுமே கிடையாது. பொழுதுபோக்கை அடுத்த தளத்திற்கு கொண்டுபோற ஒரு விஷயமாதான் சினிமா தொடங்கப்பட்டது.
அந்த வகையில பார்த்தா இந்திய சினிமாவோட புது முகமா 2.0 இப்போ மாறி நிக்குது. ஆசியாவில மிகப்பெரிய பட்ஜெட்-ல தயாரிக்கப்படுற முதல் படம். கிட்டத்தட்ட 600 கோடி. எதுக்கு இவ்ளோ பணம் இந்த படத்துல கொட்டப்படுது? என்ன தேவை இருக்கு? அப்படி என்ன ஊர்ல இல்லாததை பண்றாங்கன்னு பல கேள்விகளும், இது வெட்டிச்செலவு அப்படின்னு சில உளறல்களும் அங்கங்க பார்க்க முடியுது. அப்படி என்னதான் தொழில்நுட்பம் இந்த படத்துல யூஸ் பண்றாங்கன்னு தேடிப்பார்க்க ஆரம்பிச்சா, மலைச்சி போற அளவுக்கு தகவல்கள் வந்து கொட்டுது. ஒவ்வொண்ணா பார்ப்போமா?
1. உலகம் முழுக்க இருக்குற 25 ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஸ்டூடியோல இந்த படத்துக்கான வேலைகள் நடந்திருக்கு. இதுல என்ன விசேஷம்ன்னு கேட்குறீங்களா? சமீபத்துல வெளிவந்து உலகம் முழுக்க சக்க போடுபோட்ட அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்துக்கு மொத்தம் 14 கம்பெனிங்க ஸ்பெஷல் எபெக்ட்ஸ் செஞ்சாங்க. அதைவிட அதிகமா 2.0-வுக்கு 25 கம்பெனிகளோட உதவி தேவைப்பட்டிருக்கு.
2. அவெஞ்சர்ஸ்-ல மொத்தம் 2680 ஷாட்ஸ்-க்கு கிராபிக்ஸ் தேவைப்பட்டது. அதுவே 2.0-வுக்கு 2150 ஷாட்ஸ். அதனால உலகத்துல இருக்குற முக்கியமான பல ஸ்பெஷல் எபெக்ட்ஸ் ஸ்டூடியோவோட உதவி 2.0-வுக்கு தேவைப்பட்டது. ரொம்ப குறிப்பா டபுள் நெகட்டிவ் மாதிரியான மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் 2.0-வுக்கு சிஜிஐ பண்ணியிருக்காங்க.
3. அடுத்த விஷயம் ஹாலிவுட் படங்கள்ல பரவலா உபயோகிக்கப்படுற Pre-Visualization அபப்டிங்கிற விஷயத்தை இந்தப்படம் முழுக்க யூஸ் பண்ணியிருக்காங்க. இது என்னன்னா இப்போ சாதாரணமா ஒரு திரைக்கதை எழுதும்போது அதை கேமரால படம் பிடிக்க எப்படி ஷாட் வைக்கணும், எங்க எடுக்கணும் மாதிரியான விஷயங்களை புரிஞ்சிக்கிறது ரொம்ப ஈஸி. ஆனா 2.0 அப்படி இல்ல. படமே விஷுவலா கதை சொல்றதுதாங்கிறதால, முதல்ல என்னென்ன காட்சிகள்ல என்னென்ன சம்பவங்கள் நடக்குது அப்டிங்கிறதை ஒரு அனிமேஷன் படம் மாதிரி ரெடி பண்ணி வச்சிக்கிட்டாங்க. எந்திரன் படத்துலயே இதை யூஸ் பண்ணியிருந்தாலும் கூட, 3டி-யில எடுக்குறதால, 2.0-வுக்கு அதை இன்னும் பெரிய அளவுல பண்ணவேண்டியதா இருந்தது. மொத்தம் இருக்கும் 2150 ஷாட்ஸ்-ல 1300 ஷாட்டுக்கு முதல்ல அனிமேஷனா கிரியேட் பண்ணிட்டுதான் அதுக்கப்புறமா ஷூட்டிங் போயிருக்காங்க. இதுலயே படத்தோட ஆரம்ப தயாரிப்பை நீங்க தெளிவா புரிஞ்சிக்கலாம்.
4. அடுத்து நேட்டிவ் 3டி அப்படின்னு ஒரு விஷயம். அதென்ன நேட்டிவ் 3டி? இப்போ வெளியாகிற பெரும்பாலான 3டி படங்கள் எல்லாமே முதல்ல 2டி-யில எடுத்து அதுக்கப்புறமா 3-டியில கன்வெர்ட் பண்ணப்பட்ட படங்கள்தான். நேரடியா 3டி-யில எடுக்குறதுல நிறைய சிரமங்கள் இருக்கு. குறிப்பா ஒவ்வொரு பொருளும் சரியான இடத்துல இருக்கணும். சரியான அளவுல இருக்கனும். சரியான விதத்துல அதை ஷூட் பண்ணனும். அதனால தயாரிப்பு செலவும், நேரமும் ரொம்ப அதிகமா இருக்கும். ஆனா ரிசல்ட் அட்டகாசமா இருக்கும். அதுக்கு உதாரணமா நேரடியா 3டி-யில எடுக்கப்பட்ட அவதார், லைப் ஆப் பை, ஹியூகோ மாதிரியான படங்களை சொல்லலாம். அதனாலேயே 2.0 எடுத்து முடிக்க நிறைய நேரமும், நிறைய பொருட்ச்செலவும் ஆனது. அவதார் அளவுக்கான துல்லியமான 3டி-யில ஒரு தமிழ்ப்படம் பார்க்கப்போறோம் அப்படிங்கிற யோசனையே எவ்ளோ அழகா இருக்கு? அதுலயும் முக்கியமா இப்போ இதுல யூஸ் பண்ணி இருக்குற V-CAM Technology கேமராதான் உலகத்துலயே பெஸ்ட் 3டி கேமரா.
5. அடுத்த முக்கியமான விஷயம் அனிமேட்ரானிக்ஸ். இது இல்லாம இன்றைய ஆக்ஷன் படங்கள் எடுக்கப்படுறதே இல்ல. ரொம்ப குறிப்பா சைன்ஸ் பிக்ஷன் படங்கள். அனிமேட்ரானிக்ஸ் பத்தின பல வீடியோக்கள் இணையம் எங்கும் இருக்கு. தேடிப்பார்த்தீங்கன்னா அவ்ளோ சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வருது. எந்திரன் படத்துல பார்த்தீங்கன்னா ரோபோ நடக்குற மாதிரியான காட்சிகள், வாயை, விரலை எல்லாம் அசைக்கிற காட்சிகள், ஒரு கண்ணிவெடியை செயலிழக்க வைக்க போறப்போ சிட்டியோட ஒரு கை அறுந்து தொங்குற காட்சிகள், கடைசி காட்சியில சிட்டியை டிஸ்மான்டலிங் பண்ற காட்சிகள் எல்லாத்துலயும் உபயோகப்படுத்தப்பட்டது இந்த தொழில்நுட்பம்தான். அதையே இன்னும் பலமடங்கு அட்வான்ஸா 2.0 படத்துல உபயோகப்படுத்தி இருக்காங்க. ரொம்ப குறிப்பா மேக்கப். ரொம்ப கடினமான ஒரு வேலையா 2.0 படத்துல இருந்தது வந்து அந்த மேக்கப்-தான். ஏன்னா கிட்டத்தட்ட அது ஒரு மனிதனை டார்ச்சர் பண்ற மாதிரி. அதுவும் தினம் ஷூட்டிங்குக்கு முன்னால ரெடி ஆகணும். அது ஸ்க்ரீன்ல அதே அளவு ரிசல்ட் தரலைன்னா எல்லாமே வேஸ்ட். இந்த படத்துல அனிமேட்ரானிக்ஸ் பண்ணியிருக்குற லெஜெஸி எபெக்ட்ஸ் நிறுவனம்தான் புகழ்பெற்ற அவதார், மார்வல் காமிக்ஸோட கிட்டத்தட்ட எல்லா படங்களுக்கும், லைப் ஆப் பை மாதிரியான பல படங்களுக்கு செஞ்சவங்க.இவங்களோட முதல் படம் 2012. இப்போ வரபோறது நம்ம 2.0.
6. அடுத்து மிக முக்கியமான டெக்நாலஜி லிடார் ஸ்கெனிங். 3டியில படம் எடுக்குறப்போ ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இது. ஒரு இடத்தை ஸ்க்ரீன்ல 3டியில காமிக்கும் போது அது எந்தளவுக்கு தெளிவா இருக்குறமாதிரியே வருதுங்கிறது ரொம்ப முக்கியம். ஒரு பெரிய செட் அட்டகாசமா போட்டுட்டு, அதை ஸ்க்ரீன்ல காமிக்கும்போது மொக்கையா இருந்தா எவ்ளோ வேஸ்ட்? அதை தடுக்கத்தான் இந்த ஸ்கெனிங். இதன் மூலமா போடப்பட்ட மொத்த செட்டையும் அல்லது ஏற்கனவே இருக்குற ஒரு இடத்தையும் முழுக்க ஸ்கேன் பண்ணி அதை டிஜிட்டலா மாத்தி, அதுக்கப்புறம் அதுல ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பண்றதுக்கு யூஸ் பண்ணுவாங்க. LIDAR Scanning அபப்டின்னு சர்ச் பண்ணுங்க. அசந்து போவீங்க. அந்த அசத்தல் இந்த படத்துல இருக்கு.
7. எப்படி மைடியர் குட்டிச்சாத்தான் எடுத்தப்போ அந்த 3டி தொழில்நுட்பம் எல்லா காட்சிகள்லயும் சரியா வருதான்னு பார்க்க ஒருத்தர் கூடவே இருந்தாரோ அதேமாதிரி இந்த படத்தோட ஷூட்டிங் அப்போ ரே ஹன்னிஸன் அப்டிங்கிறவர் இருந்தாரு. இவர் இப்போ இருக்குற லீடிங் 3டி ஸ்டிரியோக்ராபர்-ல ஒருத்தர். இந்த தொழில்நுட்பத்தை பத்தி முழுக்க தெரிஞ்சவர். அதுபோக 25-க்கும் மேற்பட்டவங்க இந்த படத்தோட 3டி தொழில்நுட்பத்துக்காக வேலை பார்த்திருக்காங்க.
8. இந்தப்படத்தோட ஆக்ஷன் டைரக்டர்ஸ்ல மூணு பேர் வெளிநாட்டை சேர்ந்தவங்க.ஷங்கரோட கற்பனைக்கு உயிர் கொடுத்தவங்க. முதல்ல கென்னி பேட்ஸ்.இவர் புகழ்பெற்ற பியர்ல் ஹார்பர், ஆர்மகெடான்,டிரான்ஸ்பார்மர் மாதிரியான படங்களுக்கு ஆக்ஷன் டைரக்டரா இருந்தவர்.அடுத்த ஆளான ஸ்டிவ் க்ரிப்பின் மேட் மேக்ஸ் ஃபியூரி ரோட் படத்துல வேலை பார்த்தவர். மூணாவது ஆளான நிக் பாவல் போர்ன் ஐடன்டிட்டி படத்துல வேலை பார்த்தவர். இது போக நம்ம சில்வா இருக்காரு. அப்போ படத்துல ஆக்ஷன் காட்சிகள் எந்தளவுக்கு தரமா இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
இதெல்லாம் சும்மா பெயர்கள் இல்ல. ஒரு நல்ல அனுபவத்தை ஸ்க்ரீன்ல தரணும்னு முடிவு செஞ்சி ஒரு 3000 பேர் கொண்ட குழு மூணு வருஷமா தொடர்ந்து உழைச்சதோட சரித்திரம். எப்பவுமே தொழில்நுட்பங்கள் சினிமாவை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு போய்கிட்டே இருந்திருக்கு. உலகளவுல ஒரு படம் பெருசா பேசப்படுறதுக்கு முக்கிய காரணமா இந்த தொழில்நுட்பங்கள் இருக்கு. நம்ம ஊர்ல அது இதோ 2.0 மூலமா சாத்தியமாயிருக்கு. உலகத்துல ஏதோ ஒரு மூலையில இருக்குற ரொம்ப சின்ன சினிமா இண்டஸ்ட்ரி நம்மளோடது. இந்திய அளவுலயே கூட கோலிவுட் மூணாவது இடம்தான்.ஆனா நம்மளவுக்கு சினிமாவை கொண்டாடுற, ஆராதிக்கிற ஆட்கள் உலகத்துலயே கிடையாது. அந்த ஆராதனைக்கு கிடைத்த பரிசுதான் ஆசியாலயே பெரிய பட்ஜெட் கொண்ட படமான 2.0.
நான் முதல்லயே சொன்னமாதிரி சினிமா ஒரு அனுபவம். அந்த அனுபவத்தை இன்னும் நெருக்கமா மாத்த இந்த மாதிரியான படங்கள் ரொம்ப அவசியம். தியேட்டர்ல பார்த்தா மட்டுமே அதை நீங்க உணரமுடியும். சில கனவுகள் நனவாகுறதை பார்க்குற ஒரு அற்புத தருணத்துல பங்கெடுக்க விரும்புற ஒவ்வொருத்தரும் கொண்டாட வேண்டிய படமா 2.0 இருக்கும்னு நான் நம்புறேன்.
- சினிமா ரசிகன்
|