அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ராமர் கோயிலை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிய அவர், இதுபற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும் எனக் கூறினார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. மிக கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர், ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். இதனை சுட்டிக்காட்டி அவர் மீது சிலர் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு விட்டு சென்னைக்கு ரஜினிகாந்த் இன்று திரும்பினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்வியெழுபபினர். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "அயோத்தி ராமர் கோயிலை முதலில் பார்த்த 150 பேரில் நானும் ஒருவன் என்ற வகையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வு ஆன்மீகமா அரசியலா என பல பேர் கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை இது ஆன்மீகம் தான். ஒவ்வொருவரின் கருத்து ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். எல்லோருடைய கருத்தும் ஒரே மாதிரயாக இருக்கணும்னு அவசியம் கிடையாது" எனக் கூறினார்.
ராமர் கோயில் திறப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தில் தனக்கு மாற்றுக் கருத்து உள்ளது என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்து இருக்கிறார். "நடிகர் ரஜினிகாந்த் அங்கு சென்றது அவரது விருப்பம். இதுபோன்ற விசயங்களில் அவருடைய கருத்தை ஏற்கனவே சொல்லிவிட்டார். 500 ஆண்டுகள் பிரச்சனை தீர்ந்துவிட்டது என சொல்கிறார். ஆனால், அந்த பிரச்சனையின் பின்னால் உள்ள அரசியலை நாம் கேட்க வேண்டி உள்ளது. தவறு சரி என்பதை மீறி அதில் விமர்சனம் எனக்கு இருக்கிறது." என்றார்.
|