Interviews
Zee TV Interview by Aruchana (2018)
Jaya TV Interview by Vivek (2014)
K. Balachander Interview 2010
Fans Meet 2008
Sivaji Special Edition Book (2007)
Vikatan 2005
Kumudam 2005
Kumudam 2004
Ananda Vikatan 1997
Doordarshan- 1995
Kumudam 1995
Film Fare 1993
Ananda Vikatan 1993
Thina Thanthi 1993
Balakumaran Interview in 1991
Chat with Vijayashanthi in 1991
Vannathirai 1989
Kalki 1989
K. Balachander
Raj Bagathoor
About Tamilians
Spiritual
Bloodstone
Thoughts
Rajini & Rajini
Magazine Interview (1984)
Newspaper Interview (1984)
Chat with Sivakumar
Chat with Mrs Latha
Vikatan 1981
Saavi 1981
Newspaper Interview (1979)
Chat with Kamalhassan (1978)
Newspaper Interview (1978)
Pesum Padam 1978
Bommai1977

  Join UsSubscription

 Subscribe in a reader

Exclusive Interviews

Superstar Rajinikanth Interview in Ananda Vikantan (2005)

ஜூன் 10… பெங்களூர் ரேஸ் கோர்ஸ் ஏரியா…

அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பிரபலங்கள் வசிக்கிற வசீகரமான பகுதி. ஏரியாவை இப்போது கூடுதல் முக்கியத்துவத்துடன் கவனிக்கிறது கர்நாடக அரசாங்கம். காரணம், ரஜினி!

”ஹாய்!” கறுப்பு குர்தா, வெள்ளை பைஜாமாவில் துள்ளலாக வரவேற்கிற ரஜினியிடமிருந்து நமக்குள்ளும் பாய்கிறது உற்சாக மின்சாரம்!

”வாங்க, இங்கே இதான்  நம்ம வீடு!” என உள்ளே அழைத்துச் செல்கிறார். ”சும்மா சிம்பிளா, நீட் அண்ட் ஸ்வீட் ஹோம்!” என வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார்… எளிமையான டபுள் பெட்ரூம் ஃப்ளாட்… ஏராளமான சினிமா, மியூஸிக் ஆல்பங்கள். ஒரு ஷெல்ஃப் நிறைய புத்தகங்கள். சுவரில் பாபாஜி படங்கள். ஒரே ஒரு உதவியாளர் மட்டும் உடனிருக்கிறார். ”இங்கே நான் மட்டும்தான்.. திடீர்னு நினைச்சா பறந்து வந்துடுவேன்” எனச் சிரிக்கிறார் ரஜினி.

தமிழ்நாட்டிலேயே பிரபலமான தலைமுடியைக் கோதும் விரல்கள். காற்றில் கபடி ஆடுகிற கைகளே பாதி பேசிவிடுகின்றன. புருவங்கள் வருடியபடி, ஒரு முறை இடம் வலம் நடக்கிற ரஜினி, ”காபி ஆர் டீ? என்ன சாப்பிடலாம்?” எனக் கேட்டு, ”ஹலோவ்” என குரல் கொடுக்க, பெங்களூர் குளிருக்கு இதமான தேநீர் கோப்பைகள் இறக்குமதியாகின்றன.

”ரஜினி சார், நீங்க ரொம்ப அபூர்வமான பொருளா ஆகிட்டீங்க… அதுவும் மீடியா முன் ரஜினி வர்றது அபூர்வத்திலும் அபூர்வமா ஆகிடுச்சு…” என்றதுமே சிரிக்கிறார்.

”இது எப்படி ஆகிப் போச்சுன்னா… முதல்ல ஷூட்டிங் நடத்த வெளியே போகலாம்னா, ‘இல்ல சார்… கூட்டம் தாக்குப் பிடிக்க முடியாது. ஸ்டுடியோவிலேயே செட் போட்டு எடுத்திரலாம்’னு சொல்ல ஆரம்பிச்சாங்க… அப்புறம் மைசூர், பெங்களூர்னு ஷூட்டிங் போக வேண்டியதாச்சு. இது கொஞ்சங்கொஞ்சமா வளர்ந்து, ஒரு கட்டத்தில் சும்மா நான் வெளியே வர்றதே முடியாதுன்னு ஆகிப்போச்சு. ஆனா, எப்பவும் நான் அதே ஆளுதான்!”

”ஏன் மௌனத்தையே உங்க ஆயுதமா தேர்ந்தெடுத்தீங்க?”

”நத்திங் ஸ்பெஷல்! முன்னெல்லாம் பிரஸ்னா ஆறேழு பேர் வருவாங்க.. ஆனா, இப்போ பிரஸ் மீட்னாலே, அது ஏதோ பப்ளிக் மீட்டிங் மாதிரி நடக்குது. இருநூறு பேரெல்லாம் வர்றாங்களே. பொதுவா பிரஸ்ல நிறைய நண்பர்கள் உண்டு. ஆனா ஒரு சிலர்.. ஒரு சிலர் மட்டுமே கொஞ்சம் குறும்பு பண்ணிடறாங்க.. காயப்படுத்திடறாங்க!

என் மேரேஜ்ல ஆரம்பிச்சு, டாட்டர் மேரேஜ் வரைக்கும் என்னென்னவெல்லாம் எழுதிட்டாங்க. அது தப்பில்லையா! பட்.. ஐ ரெஸ்பெக்ட் பிரஸ்!”

 

”நீங்க ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இதுதான் பைரவி வீடா?’னு சரேல்னு கதவைத் தள்ளிட்டு உள்ளே வருவீங்களே… அப்போ அந்த சினிமா பிரவேசத்தை ஒரு வாய்ப்புனு நினைச்சீங்களா, இல்லே, இதுதான் இனி வாழ்க்கைனு நம்பினீங்களா?”

”வாழ்க்கைனுதான்!

எவ்வளவு நாள் கனவு, போராட்டத்துக்கு அப்புறம் எனக்குக் கிடைச்ச வாய்ப்பு அது! சினிமா டிராமானு சான்ஸ் தேடி திரிஞ்சதால், கண்டக்டர் வேலையிலிருந்து என்னை டிஸ்மிஸ் பண்ணின நேரம் அது (பெரிதாகச் சிரிக்கிறார்)! ஹைய்யோ… அது பெரிய கதை!

ஆனால், சினிமா எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தரும்னு நான் நினைச்சுக்கூடப் பார்த்ததே இல்லை… ரொம்ப தூரம் கடந்து வந்துட்டேன்!”

”இதோ இப்போ கோடை விடுமுறை முடிஞ்சு ஸ்கூலெல்லாம்கூடத் திறந்தாச்சு… ஆனாலும், ‘சந்திரமுகி’ எல்லா ஷோவும் ஹவுஸ்ஃபுல் ஆகுது. இந்த வெற்றி உங்களுக்கு உணர்த்தியது என்ன?” - என்றதும் விறுவிறுவென தலை கோதியபடி, நாலைந்து விநாடிகள் தீர்க்கமாக யோசிக்கிற ரஜினி பிரமாதமாகச் சிரிக்கிறார்.

”டெஃபனிட்டா ஹிட்டாகும், நல்லா ஓடும்னு எனக்குத் தெரியும். ஆனா, இத்தனை பெரிய வெற்றி எதிர்பார்க்கலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழ் மக்கள் என் மேல் வெச்சிருக்கிற அன்பு ஒரு துளிகூடக் குறையலைனு உணர்ந்தேன்”.

 

”ஒரு பக்கம் கிளாமரான சினிமா லைஃப் ஸ்டைல்… இன்னொரு பக்கம் ஆன்மிகம். அதுவும் இமயமலைக்கெல்லாம் போய் தனிமையில் தன்னைத் தேடுகிற ஆன்மிகம்.. ஒரே நேரத்தில் எப்படி இரண்டு வேறு தளங்களில் உங்களால் இயங்க முடியுது?”

”ம்ம்ம்… இதுதான் நிஜம்.. சினிமாதான் ரஜினி! ஆன்மிகம்… அது வந்து அப்பப்போ போயிட்டு வர்றது. கொஞ்சங்கொஞ்சமா மனசு அதில் லயிக்க ஆரம்பிச்சிருக்கு. ரெண்டும் கலந்ததுதான் நான்!

மனுஷனுக்கு முதல்ல ஆசைகள், கனவுகள்… ஒரு கற்பனை உலகத்தில் மிதப்பான். அப்புறம் தேவைகள்… அதுக்காக வொர்க்-அவுட் பண்ணுவான். அது கெடைச்சதும், தானாகவே ஒரு ஆடம்பரம் வந்துடும். நினைச்சதெல்லாம் செய்ய ஆரம்பிப்பான். அப்புறம் மலரும் நினைவுகள்! எங்கேயிருந்து வந்தோம்… எப்படி வளர்ந்தோம்னு நினைப்பு ஓடும். இப்படியே போறப்போ சட்டுனு மனசுக்குள் ஒரு ‘வேக்குவம்’ – வெறுமை.. தனிமை வரும். நாம் யாரு, என்ன பண்ணிட்டு இருக்கோம்னு இந்தப் பிறவிக்கு ஒரு அர்த்தம் தரத் தோணும்! எது செஞ்சாலும் சரி, நல்லது செய்யணும்னு ஒரு முடிவெடுத்து செயல்பட்டா நிச்சயம் அந்த வெற்றிடத்தை ஈடுகட்டிடலாம்!”

”ரஜினிக்கு அழகே சிம்ப்ளிசிட்டிதான். இதுதான் உங்க இயல்பா? இந்த லைஃப் ஸ்டைல் உங்களுக்கு அமைஞ்சது எப்படி?”

”தெரியலே… இப்படியேதான் இருக்கேன். பொதுவா எனக்குத் தேவைகள் பெரிசா இருந்ததில்லை. எனக்கு எப்பவுமே மன நிம்மதி மட்டும்தான் முக்கியம். மத்த எல்லாம் ரெண்டாம்பட்சம்தான். இப்படி இருக்கணும்… அப்படி இருக்கணும்னு நான் ஒரு நாளும் நினைச்சதில்லை. இதுக்குப்பேர் சிம்ப்ளிசிட்டின்னா, ஓகே! இதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!”

 

”எல்லாருக்கும் அம்மா – அப்பா சொல்லிக் கொடுத்து இறை நம்பிக்கை வரும். ரஜினி சாருக்கு எப்படி வந்தது?’

”நல்ல கேள்வி! இறை நம்பிக்கை முதல்ல எப்போ எப்படி வந்துச்சுனு சொல்லத் தெரியலை. ஆனா, ஒரு ஏழெட்டு வயசிலேயே எனக்கு மனசுக்குள் மூணு உருவங்கள் வந்துபோகும்… ஒண்ணு ஹிமாலயாஸ்… இன்னொன்னு ஸ்வான் – அன்னப் பறவை! அப்புறம் கமலம்… லோட்டஸ்… தாமரை! இறைவன் மேல ஆழமா எனக்கு நம்பிக்கை வந்ததுக்கு நிறையச் சம்பவங்கள் இருக்கு. அது ரொம்பப் பெரிய ஏரியா!

அப்புறம் என் பிரேயர்…

பொதுவா கடவுள் முன்னால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா நிப்பாங்க.. சில பேரு, ‘சாமி எனக்கு அது வேணும்… இது வேணும்’னு நிறைய கோரிக்கைகளை வெப்பாங்க. சிலருக்கு கோரிக்கையே இருக்காது. டோட்டலா சரண்டர் ஆகிடுவாங்க. இன்னும் சிலர், கடவுளுக்கு நன்றி சொல்லப் போவாங்க… ‘தாங்க்ஸ் கிவிங்’ மட்டுமே அவங்க பிரார்த்தனையா இருக்கும்!

என் பிரேயர் ஒவ்வொரு கட்டத்திலேயும் ஒவ்வொரு விதமா இருந்திருக்கு. இப்ப என் பிரேயர் எல்லாம் ’இறைவா! உன் நினைவோட என்னை வெச்சிரு எப்போதும், அது போதும்!’ அவ்வளவுதான்!”

”நீங்க திட்டம் போட்டு, கணக்குப் போட்டுத்தான் எப்பவும் செயல்படுவீங்களா… இல்லை, உங்க இன்டியூஷன் உங்களை வழி நடத்துதா?”

”நிச்சயமா உள்ளுணர்வுதான்! எப்பவுமே நமக்கு ‘ஆண்டவன் சொல்றான். நாம் செய்றோம்’ தான். இந்தக் கணக்கு போட்டு காய் நகர்த்தற சமாசாரமே தெரியாது. மனசு என்ன சொல்லுதோ அப்படிப் போயிட்டே இருப்பேன்!”

 

”பர்சனலா ஒரு கேள்வி… ரஜினி சாருக்கு ரெண்டும் பெண் பிள்ளைகள். எப்போவாவது ‘அடடா, நமக்கு ஒரு பையன் பிறந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?னு யோசிச்சதுண்டா?”

”(துளியும் தயங்காமல்) நெவர்! ஆண் பிள்ளை இல்லியேனு யோசிச்சதே இல்லை. ரெண்டும் பெண் குழந்தைகள்னு சந்தோஷப்பட்ட நேரங்களே அதிகம். ஐஸ்வர்யா -  சௌந்தர்யானு நான் ரெண்டு பெண்களுக்குத் தகப்பன். காலையில் எந்திரிச்சு வரும்போது, வீட்டில் ரெண்டு மகள்களும் கலகலனு நடமாடுறதைப் பார்த்தாலே ஒரு தனி சந்தோஷம் வரும். ஆமா, ஒரே ஒரு பொண்ணு இருந்தாக்கூட போதும்… அந்த வீட்டுக்கே உயிர் வந்துடும். ஏன்னா.. பெண்தான் சக்தி… தாய்!

ஒரு வீட்ல ஆம்பள கெட்டுப் போயிட்டால், அந்தக் குடும்பத்தை பொண்ணு எப்படியாவது பொழைக்க வெச்சிடுவா. ஆனா, ஒரு பொண்ணு கெட்டுப் போயிட்டா, அந்தக் குடும்பமே அழிஞ்சுபோயிடும்னு சொல்வாங்க! தட்ஸ் வெரி ட்ரூ! பெண் அப்படியொரு மகா சக்தி!”

”வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ரொம்ப கரடுமுரடான பாதையில் பயணம் வந்திருக்கீங்க. இந்த உயரத்துக்கு வர எவ்வளவோ விலை கொடுத்திருப்பீங்க… எங்கேயோ எதிர்பார்க்காத இடத்தில் காயப்பட்டு இருப்பீங்க… அவமானங்களைக்கூட சந்திக்க வேண்டி இருந்திருக்கும். சில சமயம் எதிர்பார்க்காத தோல்விகள்… ஆனால், இது அத்தனையையும் தாண்டி நீங்க  உங்களைக் காப்பாத்திக்கிட்டது எப்படி?”

”டியூட்டி! செய்ற வேலையில் நமக்கு இருக்குற கன்விக்ஷன்தான் எப்பவுமே நம்மைக் காப்பாத்தும்!

ஒரு சகோதரனா, ஒரு நண்பனா, நடிகனா, மகனா, அப்பனா, குடும்பத் தலைவனா நாம என்ன ரோல் எடுக்கிறோமோ, அதைக் கவனமா முழு மனசோட செய்துடணும்.

வாழ்க்கை ஒலிம்பிக்ஸ் மாதிரி… கிரவுண்ட்ல போய் நின்னுட்டோம்னா, எடுத்துக்கிட்ட வேலையைச் சரியா செஞ்சு, சரியா ஓடிப் போய் எல்லையைத் தொட்டுறணும். ‘கடமையைச் செய்!’ தான் என் பாலிசி! நிச்சயம் பலன் தானே பின்னால் வரும்.

ஏன், நான் சினிமா பண்றப்பகூட அப்படித்தான். சமயத்தில் அம்பது அறுபது சதவீதம் படம் நடக்கும்போதே, அது ஓடுமா ஓடாதானு தெளிவாத் தெரிஞ்சுடும். ரெடியான வரையில் அந்தப் படம் நமக்கு புடிக்கலைன்னே வெச்சுக்குங்க.. அதுக்காக அதை விட்டுட்டு விலகிட மாட்டேன். என் ஆர்வத்தையும் குறைச்சுக்க மாட்டேன். அது கமிட்மென்ட். அங்கே நாலு பேர் நம்மை நம்பி இருப்பாங்க. அதனால அந்த வேலையை சின்ஸியரா முடிச்சுக் கொடுத்துருவேன். அப்படித்தான் இருந்திருக்கேன்… இருப்பேன். அந்த உறுதி மனசில் இருந்ததுன்னா ஒவ்வொண்ணா ஜெயிச்சிடலாம்!”

”முடிவுகள் எடுப்பதில் பொதுவா ரஜினிக்கு ஒரு தயக்கம் இருக்கிற மாதிரி தெரியுதே. உதாரணத்துக்கு, ஒரு படம் பண்றதுக்கே மூணு வருஷ இடைவெளி விட ஆரம்பிச்சுட்டீங்க. என்ன கதைனு முடிவெடுக்க அவ்வளவு டைம் எடுத்துக்கறீங்க… ஆனா, பூஜை போட்டுட்டா அடுத்த மூணாவது மாசம் படம் தியேட்டருக்கு வந்துடுது. ஒரு முடிவு எடுக்கிறதுக்கு ஏன் இந்த பெரிய இடைவெளி… முடிவெடுத்த பின் எப்படி இப்படியொரு வேகம்?”

”அதுதான் சொன்னேனே…. எடுத்துக்கற டியூட்டில நாம சின்ஸியரா இருக்கணும்னு! ஒரு விஷயத்தில் இறங்குறதுக்கு முன்னாடி நிறைய யோசிப்பேன். அது சரிதானா, சரியா வருமா, சரியாப் பண்ணனும்னா என்ன செய்யணும்னு யோசிச்சுட்டே இருப்பேன். எதிலும் இறங்கறதுக்கு முன்னால் அதுக்கு நான் என்னைத் தகுதியாக்கிக்கணும். இதோ ‘இன்னிக்கு நாம சந்திக்கலாம்’னு பேசி வெச்சோம். அப்போதிருந்து இதுவும் மனசுக்குள் ஓடிட்டே இருந்தது. சொன்ன நேரத்துக்கு ஒரு நிமிஷம் தள்ளி வந்தீங்கன்னாக்கூட, அது ஒரு நாள் மாதிரி இருக்கும் எனக்கு.

இப்போ சினிமா விஷயம்… நாம என்ன பண்ணாலும் அது டிஃபரென்ட்டா இருக்கும்னு மக்கள்ட்ட ஒரு எதிர்பார்ப்பு வளர்ந்துருச்சு.. அதனால்தான் டைம் எடுத்துக்கிறேன். இதோ ‘சந்திரமுகி’ பிச்சுக்கிச்சு… அப்படி ஒரு சாலிட் ரெஸ்பான்ஸ். குட்… சந்தோஷம். ஆனா, உடனே அடுத்த படம் என்னன்னு உட்கார்ந்துட மாட்டேன். அட்லீஸ்ட் ஆறு மாசத்துக்கு அந்த ஸ்விட்ச்சை ஆஃப் பண்ணிடுவேன். சுத்தமா அதிலேயிருந்து விலகிடுவேன். மனசை ஃப்ரீயா வெச்சுக்குவேன். அப்போதான் அடுத்து ஒரு வேலைக்கு படத்துக்கு உட்காரும்போது முழு சக்தியோட இறங்க முடியும்.

அடுத்த மாசம் ஒரு விழாவுக்கு வர்றேன்னு ஒப்புக்கிட்டா, இப்பவே ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது அந்த நிகழ்ச்சி சம்பந்தமா நினைவுபடுத்திக்குவேன். அது அப்படியே மனசுக்குள் ஒரு பக்கம் ஓடிட்டே இருக்கும். அங்கே யாரைச் சந்திக்கணும், என்ன பேசணும்னு யோசனை துளைச்சுக்கிட்டே இருக்கும். அதுவே ஒரு பெரிய பொறுப்பா மாறிடும். அதனாலேயே பெரும்பாலும் எந்த நிகழ்ச்சிகள்லயும் கலந்துக்கறது இல்லை.

சிலர் சொல்வாங்க… ‘நிகழ்ச்சின்னா அப்படியே நேரா போய் கலந்துக்குவேன்’னு! என்னால அப்படியெல்லாம் முடியாதுங்க. நான் எந்தச் சின்ன நிகழ்ச்சியா இருந்தாலும், என்னைத் தயார் பண்ணிக்கிட்டுத்தான் போவேன். மத்தபடி மனசுக்குள் ஒரு கமிட்மென்ட் வந்துட்டா போதும், தடதடனு வேலையை முடிச்சுக் கொடுத்துடுவேன். அதான் என் கேரக்டர்!”

”கோபதாபமான, கொந்தளிப்பான ஒரு அதிரடி ரஜினியை ஆரம்ப காலம் முதல் தமிழ்நாட்டுக்கு தெரியும். ஆனால் போகப் போக ரொம்பப் பக்குவப்பட்ட மனிதரா தெரியறீங்க…”

”அடி மேல அடி விழுந்தா அம்மியும் நகரும்னு சொல்வாங்கள்ல… அப்படித்தான் வந்துச்சு… ஹாஹ் ஹாஹ் ஹா!”

உரக்கச் சிரிக்கிற ரஜினி, அதன் பிறகு சொல்கிற விளக்கத்தில் அவரது வெற்றியின் ரகசியம் ஒளிந்திருக்கிறது.

''கோபதாபமான, கொந்தளிப்பான ஒரு அதிரடி ரஜினியை ஆரம்ப காலம் முதல் தமிழ்நாட்டுக்குத் தெரியும். ஆனால், போகப்போக ரொம்பப் பக்குவப்பட்ட மனிதராத் தெரியுறீங்க...''

''அடி மேல அடி விழுந்தா அம்மியும் நகரும்னு சொல்வாங்கள்ல... அப்படித்தான் வந்துச்சு... ஹாஹ் ஹாஹ் ஹா!'' - உரக்கச் சிரிக்கிற ரஜினி, தன் கை மடிப்பைச் சரி செய்தபடி சொல்கிறார்...

''காலம்ங்கிற ஒரு சிற்பி இருக்கான்ல... அவன் சும்மா டிங்கு டிங்குனு நம்மளைச் செதுக்கிருவான். 55 வருஷ வாழ்க்கை கத்துக்குடுத்த அனுபவத்தில் எல்லாம் பாத்தாச்சு. நல்லது... கெட்டது... எல்லாம் பாத்தாச்சு!

சரசரசரசரனு தூக்கிட்டு வந்து இங்க உக்காரவெச்ச வாழ்க்கை... இந்த சினிமா, பேர், பணம், புகழ் எல்லாத்தையும் தூக்கித் தூரவெச்சிட்டு, ஒரு நிமிஷம் தனியா உக்காந்து பாத்தா, சம்பாதிச்ச ஒரே விஷயம்... இந்தத் தமிழ் மக்களின் அன்பும், நல்ல நல்ல மனிதர்களின் நட்பும்தான். அதுதான் கிரேட் கிஃப்ட்... சொத்து!

அதனால மனசு செட்டாகிருச்சு; எல்லாத் துக்கும் பழகிருச்சு! தெரிஞ்சோ, தெரியாமலோ யாராச்சும் துன்பம் குடுத்தாலும் சரி... அவங்களுக்கும் சேர்த்து சந்தோஷம் தர ஆரம்பிச்சேன். 'டூ யுவர் டியூட்டி. கிவ் தி பெஸ்ட்!’ அந்த வகையில் ஐ’ம் ஹேப்பி!''

''நட்புக்கு, நண்பர்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிற மனிதர் ரஜினி. ஒரு நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி... கொஞ்சம் சொல்லுங் களேன்?''

''ஃப்ரெண்ட்ஷிப் இஸ் லைஃப்! அதுக்குத் தனியா ஒரு கிராமர் கிடையாது. ஒரு நல்ல நண்பன் அமையறதே வரம். ஏன்னா, யார்கிட்டேயும் பழகிப் பழகித்தான் புரிஞ்சுக்க முடியும். கஷ்டத்தில்தான் நமக்கு நண்பன் யார், பகைவன் யார்னு தெரியும். நம்மோட பழகுறவன் எதுக்காகப் பழகுறான்... அவன் ஆப்பர்சூனிஸ்ட்டா, செல்ஃபிஷா..? அவன் நிஜமாவே நண்பனா, இல்லே பகைவனா அப்படிங்கிறதெல்லாம் காலப்போக்கில்தான் தெரியும்.

நண்பர்கள் ஏன் முக்கியம்னா, நாம் நண்பர்களோடதான் வளர்றோம். சொல்லப்போனா, நல்ல நண்பர்களால்தான் வளர்றோம். கெட்ட பழக்கங்களோ, இல்லே நல்ல பழக்கங்களோ... எது வர்றதும் நட்பினால்தான்! அதனால ஒருத்தன் நல்லவனா இருக்கிறதுக்கும் கெட்டவனா மாறுறதுக்குமே நட்புதான் காரணம். அதனால்தான் யார்கிட்ட பழகும்போதும், அவங்களை நண்பனா ஏத்துக்கிறதுக்கு முன்னால யோசிக்கணும். ஏத்துக்கிட்டா, அந்த நட்பைக் கடைசிவரைக்கும் காப்பாத்தணும். நான் அப்படித்தான்... ஏ டு இஸட் நண்பர்கள்தான் எனக்கு!'' - செல்போன் சிணுங்க, எடுத்துப் பார்க்கிற ரஜினி, பதில் சொல்லி முடித்த இடத்தை மனசுக்குள் ஓட்டிப் பார்த்து, ''நண்பன்!'' எனச் சிரிக்கிறார்.

''தமிழ்நாட்டுல எல்லாருக்கும் தெரிஞ்ச முகம் நீங்க... அதனாலயே உங்களுக்கு பிரைவஸி கிடையாது. நினைச்ச மாதிரி வெளியே நடமாட முடியாது. இது உங்களுக்குக் கஷ்டமா இருக்குமா?''

''கஷ்டம்தான். அதுவும் என்னை மாதிரி ஒருத்தனுக்கு ரொம்பக் கஷ்டம். இந்த உலகத்தில் எதுவும் ஃப்ரீ கிடையாது கண்ணா. ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை இருக்கு. அதைக் குடுத்தே ஆகணும். எனக்கு பயம், பாதுகாப்பு பற்றியெல்லாம் கவலை இல்லை. இது அன்புக்குக் கொடுக்கிற விலை!

அதனால இதுவும் பழகிருச்சு. இதோ, இப்போ சமீபத்துல ஒருநாள்... சும்மா தோணுச்சு. என் ஃப்ரெண்ட் ஒருத்தரைப் பார்க்க சர்ப்ரைஸா அவர் வீட்டுக்குப் போயிட்டேன். போன வேகத்துல கௌம்பி கார்ல ஏறும்போது பார்த்தா, பக்கத்து வீட்டுக்காரங்க, யு.எஸ்-ல இருந்து சம்மர் ஹாலிடேஸ்க்கு வந்தவங்களாம். குழந்தை, அவங்க அம்மா, அப்பா எல்லாரும் திக்குனு என்னை ஆச்சர்யமாப் பார்க்கிறாங்க. நின்னா கூட்டம் கூடிருமேனு, சிரிச்சுட்டே நான் காரை எடுத்து கியர் போட்டுக் கிளம்பினப்போ... அந்த லேடி வீட்டுக்குள்ள போய் ஒரு கேமராவோட ஓடி வர்றதைப் பார்த்தேன். ஆனா, அதுக்குள்ள கார் கிளம்பிடுச்சு.

ரெண்டு தெரு தாண்டி போனப்புறம், 'அடடா, ஆசை ஆசையா ஓடி வந்தாங்களே... அப்செட் ஆகியிருப்பாங்களே?’னு தோணுச்சு. 'திருப்பு வண்டியை!’னு ஒரு யு டர்ன் போட்டு, மறுபடியும் அங்கே போய், அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிட்டு, ஒரு போட்டோ எடுத்த பிறகுதான் வந்தேன். அவங்களுக்கு சந்தோஷம். அந்தக் குட்டிக் குழந்தை க்யூட்டா அப்படி ஒரு சிரிப்பு சிரிக்குது. குட்... அது நல்ல விஷயம்!

ஆனா, எங்கியோ ஒரு ஃப்ரெண்டோட இறப்புக்குப் போய் நிக்கும்போதும் அங்கே என்னை 'ரஜினி, ரஜினி’னு சுத்திச் சுத்தி வந்து பாத்தாங்கனா, தட்ஸ் ரியலி டிஸ்டர்பிங்!'' என்கிறார் தலை உலுக்கி.

''சரி, வெளியிலயே போறது இல்லை. அப்படியிருக்கும்போது, இன்னிக்கு வெளியில் என்ன நடக்குது, எது ஃபேஷன், மக்கள் ரசனை என்ன, அரசியல் நிலவரம் என்ன.. இதெல்லாம் எப்படித் தெரிஞ்சுக்குவீங்க?''

''அதுக்குத்தான் மீடியா இருக்கு; ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அப்புறம், பிரைவஸி இல்லைனு சொல்லி, நான் ஒரே இடத்துல முடங்கிடுற ஆள் கிடையாது. நிறையவே டிராவல் பண்றேனே!''

''சினிமாவில் உங்களுக்கும் இளையராஜாவுக்கும் ஆன்மிகம்னு இன்னொரு பரிமாணம் இருக்கு. இருவரும் உங்களுக்குள் அதுபற்றி பகிர்ந்துக்குவீங்களா?''

''ராஜா சாரை நான் கூப்பிடறதே 'சாமி’னுதான். இதோ, இப்போ பெங்களூர் கிளம்பி வர்றதுக்கு முன்னாடி ராஜாவைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். திருவாசகத்தைப் போற்றிப் பாடி ஒரு மியூசிக் ஆல்பம் பண்ணி முடிச்சிருக்காரில்லையா... அந்த மியூசிக் கேட்டேன்! அப்பிடியே மனசு மிதக்குது. அது சும்மா ஒரு வேலைனு நினைச்சுப் பண்ணியிருந்தா வந்திருக்காது. அதுல பிரமாதமான ஜீவன் இருக்கு. ஒரு தபஸ் மாதிரிதான் அதை செஞ்சிருக்கார் ராஜா!

அதுக்கான விழாவுக்கு நான் வரணும்னு கூப்பிட்டாங்க. ஆனா, விழா நேரத்துல நான் ஊர்ல இருக்க மாட்டேன். அதான், அவர் வீட்டுக்கு சந்திக்கப் போயிருந்தேன். எனக்கும் ராஜாவுக்கும் ஒரு நெருக்கம் உண்டு. அவர்தான் ரமணரிஷியின் போட்டோ, புத்தகம் எல்லாம் எனக்கு முதல்ல தந்தவர். அதுக்குப் பின்னாடிதான் நான் திருவண்ணாமலை போக ஆரம்பிச்சதெல்லாம்! சினிமாவைத் தாண்டி எங்களுக்குள்ள ஆழமான நட்பு எப்பவுமே இருக்கு!''

''இமயமலைப் பயணங்கள்தான் உங்க வாழ்க்கையை மாற்றி அமைச்ச முக்கியமான விஷயமா?''

''யெஸ்! என் வாழ்க்கையில் கடந்த 12 வருஷங்கள்தான் மிக முக்கியமான காலகட்டம். சொல்லப்போனா, இந்த 12 வருஷங்களாத்தான் நான் ஹிமாலயாஸ் போக ஆரம்பிச்சதும்!

அங்கே என்ன ஸ்பெஷல்னா, இயற்கை... பிரமாண்டமா விஸ்வரூபம் எடுத்து நிக்கிறப்போ, அது முன்னால நாம குழந்தை ஆகிடுவோம். பொதுவா குழந்தைங்க மனசுல எதுவுமே இருக்காதுனு சொல்வாங்க. பாஸ்ட், ஃபியூச்சர்னு எந்தக் கவலையும் குழப்பமும் இருக்காது. அது எப்பவுமே க்ளீன் சிலேட்! வெட்கம், அகங்காரம், போட்டி, பொறாமைனு எதுவுமே அவங்க மனசுல இருக்காது. அப்படியொரு லேசான மனசு இமயமலைக்குப் போகும்போது நமக்கும் வாய்க்கும்!''

''எப்பவும் துறுதுறுனு இருக்கிற நீங்க, அங்கே எப்படி பல மணி நேரம் ஒரே இடத்தில் அமைதியா இருக்கீங்க?''

''அங்கே இருக்கிறது நேச்சுரல் வைப்ரேஷன், இங்க இருக்கிறது ஹியூமன் வைப்ரேஷன். ரெண்டுக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.

பாபாஜி குகைக்குப் போறப்போ, அந்த அமைதி தானா வந்துடும். யாரா இருந்தாலும் அப்படியோர் அமைதிக்கு ஆளாகிடுவாங்க. அங்கே இருக்கிற செடி, மண்ணு, கல்லுனு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு செய்தி சொல்லும். சும்மா கரையோரமா உட்கார்ந்து கங்கா நதியைப் பார்த்துட்டிருந்தாலே போதும், நீங்க ஆசீர்வதிக்கப்படுவீங்க!''

''யோகாசனம், தியானம் பழகின பிறகு உங்களுக்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன... அவை பத்தி கொஞ்சம் சொல்லுங்க?''

''நிறைய!

அது வந்து... நேரடியா எக்ஸ்பீரியன்ஸ் பண்ணணும். அப்போதான் அந்தச் சக்தி... பவர் புரியும். சும்மா யோகா, தியானம்னு பேச ஆரம்பிச்சா, 'அட போப்பா!’னுட்டுப் போயிடுவாங்க. யோகா உடம்புக்கு... தியானம் மனசுக்கு!

எல்லோருக்கும் டென்ஷன், பிரச்னை, அவஸ்தை, தலைவலி இருக்கு. காலைல வெளியே கிளம்பறப்போ, 'இன்னிக்குப் புதுசாப் பிறந்தோம்டா!’னு நினைச்சுக்கிட்டுக் கிளம்புங்க. ஈவினிங் வீட்டுக்கு வந்ததும் அப்பிடியே உட்காருங்க... சும்மா அஞ்சு நிமிஷம் கண்ணு மூடி உட்காருங்க. இன்னிக்குக் காலையிலிருந்து சாயந்திரம் வீடு திரும்பற வரை என்னவெல்லாம் நடந்துதுனு நெனச்சுப் பாருங்க.

ஜஸ்ட் திங் அபௌட் இட்! நீங்க யாரையோ காயப்படுத்தி இருக்கலாம். உங்களை யாரோ சந்தோஷப்படுத்தி இருக்கலாம். ஒரு வேலை நல்லபடியா முடிஞ்சிருக்கும். செய்ய நினைச்ச எதையோ மறந்துபோயிருப்பீங்க. அது எல்லாத்தையும் மனசுக்குள் ஒரு ரீப்ளே பண்ணிப் பாருங்க.

முதல் நாள் இது நாலைஞ்சு நிமிஷத்தில் முடிஞ்சுபோயிடும். அப்புறம், அதுவே இன்னும் டைம் கூடும். எங்கியோ ஒரு மொமன்ட்ல தடக்குனு நீங்க உங்களை மறந்து ஒரு சூன்யத்துக்குள் போய் வருவீங்க. அந்த அனுபவம் தனி எனர்ஜி தரும். கிரியா யோகாவை முறையா கத்துத்தர நல்ல மாஸ்டர்ஸ் இருக்காங்க. யோகுடா சத்சங்கில் போய்ப் பாருங்க. கத்துக்கிட்டு இன்னும் நல்லா இருப்பீங்க... இது என் எக்ஸ்பீரியன்ஸ்!''

''வாழ்க்கை உங்களுக்குக் கத்துக்கொடுத்த விஷயம் என்ன?''

''வாழ்க்கை என்பது ஒரு துன்பம். யெஸ்... வாழ்க்கையே துன்பம்தான்! அதில் இன்பம் அப்பப்போ வந்துட்டுப் போகும். இது... இதைப் புரிஞ்சுக்கிட்டாப் போதும். எதையும் ஜஸ்ட் லைக் தட் தாண்டிப் போயிடலாம்!''

''சினிமாவைத் தவிர, கொஞ்ச காலம் வெளியேயும் நடமாட ஆரம்பிச்சதில் நீங்க புரிஞ்சுக்கிட்ட விஷயம் என்ன?''

''அட, எல்லாருமே மனுஷங்கதானே! நம்மைச் சுத்தி ஏமாத்துறவன் நிறைய இருக்கான். அவங்ககிட்டே இருந்து நம்மளைக் காப்பாத்திக்கிட்டாலே போதும். வாழ்க்கையில ஜெயிச்சிடலாம்!'' - கடகடவென ரசனையுடன் சிரிக்கிறார் ரஜினி.

''இதோ, இப்போ 'சந்திரமுகி’ சக்சஸுக்கு அப்புறம் மறுபடியும் ரஜினி ரசிகர்கள் கம்பீரமா நெஞ்சு நிமிர்த்தி நடமாடுறாங்க. ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?''

''நான் அமிதாப்ஜிக்கு ஃபேன்! ரசிகன்னா... சும்மா இவ்ளோ, அவ்ளோனு இல்லை. அப்படி ஒரு ரசிகன் நான்... இப்பவும்!

எப்பவோ அவரிடம் இதுமாதிரி ஒரு கேள்வி கேட்டப்போ, அமிதாப்ஜி சொன்ன ஒரே பதில்... 'ஃபாலோ தி சன்! சூரியனுக்கு முன்னாடி நீ எழுந்திருச்சுடு’னு எங்க அப்பா சொன்னார். வாழ்க்கைல நான் இந்த இடத்தைத் தொட்டதுக்கான ஒரே காரணம் அதுதான். அதைச் செய்ய ஆரம்பிச்ச பிறகு, எனக்கு எல்லாமே நல்லவிதமா நடக்க ஆரம்பிச்சுது!’னு சொன்னாங்க... அது நூத்துக்கு நூறு கரெக்ட்!

இப்பிடி நிறைய சொல்றதுக்கு இருக்கு. முக்கியமான ஒரு விஷயம் சொல்லிடுறேன். ஒண்ணே ஒண்ணு... அதுவும் நான் ஏற்கெனவே சொன்னதுதான். குடும்பத்தைக் கவனிங்க. தாய், தகப்பனை, சகோதரன், சகோதரியை, குழந்தைகளைப் பாருங்க. உங்க குடும்பத்தைக் காப்பாத்துங்க.

அதை ஒழுங்கா செய்ய ஆரம்பிச்சுட் டாலே எந்த மனுஷனுக்கும் தானா ஒரு பவர் வந்துடும். அந்தச் சக்தியை வெச்சு இன்னும் நாலு பேருக்கு நல்லது செய்யலாம். அப்படி வர்றப்போ, நானும் ஒரு சக்தியா இருப்பேன்!''

''தன் படங்கள் மூலமா தமிழ்நாட்டுக்கு ரஜினி தந்தது ஏராளமான சந்தோஷம். ரஜினிக்குத் தமிழ் மக்கள் திருப்பிக் கொடுத்தது அளவில்லாத அன்பு! யோசிச்சுப் பார்த்தால், இது உணர்வுரீதியான பந்தம். இதைத் தாண்டி உங்களை நேசிக்கிற தமிழ் மக்களின் நலனுக்கு ஆக்கபூர்வமா ஏதாவது செய்யணும்னு எப்போவாவது யோசிச்சது உண்டா? அப்படி ஏதாவது ஒரு திட்டம் இப்போ உங்க மனசில் இருக்கா?''

ஓரிரு விநாடிகள் தீர்க்கமான மௌனம் காக்கிற ரஜினி, நம் கண்கள் பார்த்து அழுத்தமாகச் சொல்கிறார்...

''இருக்கு!'' ஹவ்வீஸ் இட்!

 
Website maintained by rajinifans creative team
Designed by Evince webwap tech

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information

MP3 music online

 
Thalaivar's Profile Cinema Closeup Fan's Corner Activities Fun Zone Miscellaneous Visitor's View