"பாட்ஷா" வெள்ளி விழா ரஜினி பேச்சு எழுப்பிய புயல்

Rajinikanth rajini280
பாட்ஷா பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளது பற்றி குறிப்பிட்டார். அந்த பேச்சு பெரும் புயலை ஏற்படுத்தியது. அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது.

சத்யா மூவிஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த "பாட்ஷா'' படம், 25 வாரங்களுக்கு மேல் ஓடியது. அதன் வெள்ளி விழா, 1995 ஜுலை 14-ந்தேதி சென்னை "அடையாறு பார்க்'' ஓட்டலில் நடந்தது.

ரஜினி பேச்சு

படத்தில் நடித்த நடிகர் - நடிகைகள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கு ரஜினிகாந்த் கேடயம் வழங்கினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

"பாட்ஷா'' படத்தின் வெற்றிக்கு உரிய பெருமை, அதன் திரைக்கதையை உருவாக்கிய ஆர்.எம்.வீரப்பன் அவர்களையே சாரும். படத்தின் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் என் நன்றி.

வெடிகுண்டு

நான் இந்த விழாவில் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி பேச இருக்கிறேன். அதுதான் சமீபத்தில் டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு. நம் மனதை மிகவும் சங்கடப்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்ல. அடுத்தடுத்து பல இடங்களில் வெடிகுண்டு வீசப்பட்டு, அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் சமீபத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு உடனடியாக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

தமிழ்நாட்டு முதல்-அமைச்சருக்கு (ஜெயலலிதா) என்னுடைய வேண்டுகோளை இந்த இடத்தில் வைக்கிறேன். வெடிகுண்டு கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வாருங்கள்.

தூக்கு தண்டனை

சிங்கப்பூரில் போதை மருந்து வைத்திருந்தால், அவர்களை விசாரணை இன்றி தூக்கில் போடுகிறார்கள். அதேபோல் வெடிகுண்டு, துப்பாக்கி வைத்திருப்பவர்களை விசாரணை இன்றி தூக்கில் போடவேண்டும். ஒரு 10 பேரை தூக்கில் போட்டால் போதும். எல்லாம் சரியாகிவிடும்.

குற்றம் செய்தவர்களை பிடித்து தண்டியுங்கள். ஆனால் ஒரு குற்றவாளிகூட இன்னமும் தண்டிக்கப்படவில்லையே ஏன்?

தமிழக போலீசார் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. மிகுந்த திறமையானவர்கள். அவர்களிடம் அந்த இடத்தை கொடுங்கள். தலையிடாதீர்கள். அவர்கள் அடக்கி காட்டுவார்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரமே இல்லையென ஆக்கிவிடுவார்கள்.

பொறுப்பு

இனி தமிழ்நாட்டில் வெடிகுண்டு, துப்பாக்கி வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு. இதை நான் ரஜினிகாந்தாக சொல்லவில்லை. நாட்டில் வாழும் குடிமக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் சொல்கிறேன்.''

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கேடயம் வழங்கினார்.

பரபரப்பு

வழக்கமாக, ரஜினி எந்தக் கூட்டத்தில் பேசினாலும் அரசியல் பற்றி பேசமாட்டார்.

Rajinikanth rajini281

பாட்ஷா வெள்ளி விழாவில் அவர் அரசியல் பற்றி பேசியதோடு, ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்துப் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அதுமட்டுமல்ல; அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட இந்தப் பேச்சு காரணமாக இருந்தது.

கண்டன ஆர்ப்பாட்டம்

அப்போது ஜெயலலிதா மந்திரிசபையில் உணவு அமைச்சராக ஆர்.எம்.வீரப்பன் பதவி வகித்தார்.

ஆர்.எம்.வீரப்பனுக்கும், ரஜினிகாந்துக்கும் எதிராக அ.தி.மு.க. வினர் கண்டன கூட்டங்கள் நடத்தினர்; அறிக்கைகள் வெளியிட்டனர்.

ஆயினும், ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, ஆர்.எம்.வீரப்பன் அடுத்த நாள் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அதன்பின், அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தன. "துரோகியை நீக்குங்கள்'' என்று அ.தி.மு.க. பிரமுகர்கள் அறிக்கை விட்டனர்.

இதைக்கண்ட ரஜினியின் ரசிகர்கள், "ரஜினி அரசியலில் தீவிரமாக ஈடுபடவேண்டும்; தனிக்கட்சி தொடங்க வேண்டும். அ.தி.மு.க.வினருக்குப் பாடம் புகட்டவேண்டும்'' என்று வலியுறுத்தத் தொடங்கினார்கள்.

"தீவிர அரசியலுக்கு ரஜினி வரவேண்டும்'' என்று காங்கிரஸ் தலைவரான குமரிஅனந்தனும் அறிக்கை விடுத்தார். ரஜினியின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறமுடியும் என்பது அவரது நம்பிக்கை.

மவுனம்

தன்னைச்சுற்றி நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டு மவுனமாக இருந்தார், ரஜினி.

"புலி பதுங்குவது, பாய்வதற்குத்தான்'' என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்தனர்.

(ஆர்.எம்.வீ. பதவி இழந்தார் - நாளை)

ரஜினி `சுயதரிசனம்'

"இந்தப் பணம், புகழ், அதிகாரம் எல்லாமே ஒரு மாயைதான். நடிப்பது என் தொழில் மட்டும். இவ்வளவு பணம் கிடைத்தால் போதும், வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்தால், எங்கே புல்ஸ்டாப் போடறதுன்னு யாருக்கும் தெரியாது; போடவும் முடியாது.

நான் முதலில் நடிக்க வந்தபோது, மாதத்துக்குப் பத்தாயிரம் கிடைத்தால் போதும், வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஐம்பதாயிரம் ஆச்சு, இரண்டு லட்சம் ஆச்சு... பத்து லட்சம் ஆச்சு... ஆனால் பணத்தினால் மட்டும் நான் சந்தோஷம் அடைய முடியலே...''

- ரஜினிகாந்த்.