ரஜினி விரும்புவது எது? வெறுப்பது எது?

Rajinikanth rajini157
ரஜினிகாந்த் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசுமë "ராஜதந்திரம்'' எல்லாம் அவருக்குக் கிடையாது. மனதில் உள்ளதை "வெட்டு ஒன்று, துண்டு இரண்டு'' என்று வெளிப்படையாகப் பேசிவிடுவார்.

"அன்புள்ள ரஜினிகாந்த்'' படம் வந்த காலக்கட்டத்தில், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

"எல்லோரையும் மதிக்கிறேன்

"நான் எனக்காக வாழ்கிறேன். மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. நான் யாரையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், எல்லோரையும் மதிக்கிறேன்! பூர்வ ஜென்மம் - மறுபிறவி ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு.

"நான்'' என்கிற என்னுடைய ஜீவாத்மா, எல்லாம் வல்ல பரமாத்மாவின் ஒரு பகுதியே. என் ஜீவாத்மாவுக்கு ஒரே சொந்தம் பரமாத்மாதான். இந்த ஜீவாத்மாவின் நீண்ட, பல ஜென்மங்களின் பயணத்தில் உறவு, நட்பு என்று பல தொடர்புகள் ஏற்படுகின்றன. ஆனால், அவற்றுக்கும் இந்த ஜீவாத்மாவுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

என்னால் முடிந்த அளவு சம்பாதிப்பேன். சந்தோஷமாக வாழ்வேன். குழந்தைகளுக்கு நல்ல படிப்பும், ஆரோக்கியமான வாழ்க்கையும் அமைத்துக் கொடுப்பேன். அந்தப் படிப்பின் மூலம் அவர்கள் சிந்திக்கும் திறமையை வளர்த்துக் கொண்டு சொந்தக் காலிலேயே நின்று சம்பாதிக்க வேண்டும்.

நிலையானதல்ல

என் குறைந்த கால அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டவை பணமும் புகழும் நிலையானதல்ல. அவை கிடைத்ததும், வாழ்க்கையில் எல்லாமே கிடைத்து விட்டதுபோல் நிம்மதி அடைவது பைத்தியக்காரத்தனம்.

தொடர்ந்து ஏதாவது சாதனைகளைச் செய்யவேண்டும் என்று துடிப்புடன் செயல்படுவதுதான் உத்தமம்.''

இவ்வாறு ரஜினி கூறினார்.

Rajinikanth rajini158

விருப்பு - வெறுப்பு

ரஜினியின் விருப்பு - வெறுப்புகள் பற்றி நிருபர்கள் கேட்டனர். அவர் கூறியதாவது:-

விரும்புவது: தொழிலை; தனிமையாகக் கார் ஓட்டுவதை.

மறக்க விரும்புவது: மனத்தை அலைக்கழிக்கும் விஷயங்களை.

மகிழ்ச்சியளிப்பது: பிறருக்கு உதவுவது, தனிமையில் இருப்பது.

தவிர்க்க விரும்புவது: ஜால்ரா போடுகிறவர்களை.

தெரிந்து கொள்ள விரும்புவது: மன நிம்மதியோடு வாழ்வது எப்படி என்பதை.

வரவேற்பது: நடிப்புத் தொழிலைப் பாதிக்காத கிசுகிசுக்களை.

இதுவரை பழகியதில் பிடித்த நடிகர் நடிகையர்:

ஸ்ரீபிரியா, கமலஹாசன், விஜயகுமார், சுஜாதா.

வாழ்க்கையில் மறக்காமலிருக்க விரும்பும் மனிதர்:

கே.பாலசந்தர்.

விருப்பமான உணவு: காரமான சூடான சிக்கன், மட்டன் வகை.

விருப்பமான உடை: கறுப்பு உடைகள்.

கேள்வி:- முதல் சம்பளத்தில் பிரியமாக வாங்கிய பொருள்?

பதில்:- சிகரெட் பாக்கெட்!

கேள்வி:- `ஏண்டா சென்னைக்கு வந்தோம்' என்று தோன்றியது உண்டா?

பதில்:- உண்டு; மதுவிலக்கை அமல்படுத்தியபோது.

கேள்வி:- உங்களால் தாங்கிக்கொள்ள முடியாத பிரிவு?

பதில்:- கண்டக்டர் வேலையை விட்டது!

கேள்வி:- உங்களிடமுள்ள மைனஸ் பாயிண்ட்?

பதில்:- கோபம்!

கேள்வி:- செக்சைப் பற்றி உங்கள் கண்ணோட்டம்?

பதில்:- தெய்வீகம்!

கேள்வி:- அதிகமாகக் கோபம் வந்தால் என்ன செய்வீர்கள்?

பதில்:- வேகமாக கார் ஓட்டுவேன்.

கேள்வி:- உங்களால் இரக்கம் காட்ட முடியாத ஒரு விஷயம்?

பதில்:- உழைக்காமல் வாழ்கிறவர்களிடம்.

கேள்வி:- எந்தச் சூழ்நிலையிலும் உங்களால் மாற்றிக்கொள்ள முடியாத ஒரு குணம்?

பதில்:- `ஸ்ரெயிட் பார்வர்ட்னஸ்.' வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகப் பேசும் குணம்.

கேள்வி:- உடல் அழகில் உங்களைக் கவர்ந்த நடிகை?

பதில்:- ரேகா!

Rajinikanth rajini159

கேள்வி:- உண்மையான சந்தோஷம் எதில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?

பதில்:- நேர்மையான - நாணயமான வாழ்க்கையில்!

கேள்வி:- நீங்கள் விரும்பிச் சாப்பிட்ட உணவு?

பதில்:- காஷ்மíரின் மேத்தா மென்தீஸ்!

கேள்வி:- உங்கள் கனவில் அடிக்கடி வரும் பெண்?

பதில்:- காளி.

கேள்வி:- உங்கள் வீட்டில் நீங்கள் அதிக நேரம் செலவிட விரும்பும் இடம்?

பதில்:- பூஜை அறை.

கேள்வி:- நீங்கள் பத்திரப்படுத்திப் பாதுகாக்கும் பொருள்?

பதில்:- `முள்ளும் மலரும்' படம் பார்த்துவிட்டு டைரக்டர் பாலசந்தர் எனக்கு எழுதிய கடிதம்!

கேள்வி:- டைரக்டர் பாலசந்தரிடம் இன்றும் நீங்கள் மரியாதை காட்டுவது அவர் உங்களை அறிமுகப்படுத்தினார் என்ற ஒரே காரணத்தினாலா?

பதில்:- இல்லை. அவர் ஒரு மகத்தான மனிதர் என்பதால்தான்!

கேள்வி:- உங்களால் நன்றிக்கடன் செலுத்த முடியாமல் உங்களுக்குக் கிடைத்த உதவி?

பதில்:- என்னைப் பெற்றெடுத்ததன் மூலம் என் தாய் செய்த உதவி.''

இவ்வாறு ரஜினி பதில் அளித்தார்.