அறிவும் கலையும் மிக்க மனம் என்பது ஒரு தெய்வத்தின் வரம், அந்த வரம் நிரம்பியவர்களுக்கு மனதில் சில விஷயம் சட்டென புரியும், யாரால் எதை சாதிக்க முடியும் என்பதை மிக அழகாக உணர முடியும்.அக்கால சாணக்கியன் முதல் பிற்கால புலவர்கள் வரை உதாரணம் ஏராளம். தமிழ்நாட்டில் இதை முதலில் பரிசீலித்தது அண்ணாதுரையும், கருணாநிதியுமே. மிகச்சரியாக எம்.ஜி.ஆரை கண்டெடுத்து உருவாக்கினார்கள்; ஆனால் அவரோ அரை பிரகலாதனாக மாறி முழுவதும் நாத்திகத்தை அழிக்காமலே மறைந்தார்.
சோ ராமசாமி எனும் கலைஞனுக்கு ஜெயலலிதா சரியாக தெரிந்தார். மிகப்பெரும் பிம்பமாக நிறுத்திவைத்தார் சோ ராமசாமி, இல்லையேல் தமிழகம் மேற்கு வங்கம் அளவு நாசமாயிருக்கும்.பாலச்சந்தர் எனும் மகா கலைஞனுக்கு அந்த சிவாஜிராவ் மிக சரியாக தெரிந்தார். சிவாஜிராவினை ரஜினியாக மிக சரியாக செதுக்கி வளர்த்தார். அந்த ரஜினிதான் இனி தமிழ்நாட்டில் மாபெரும் திருப்பம் கொடுக்க போகின்றார், திராவிடத்தை வீழ்த்தும் பாசுபத கணை அவரிடம்தான் இருக்கிறது.
சூப்பர் ஸ்டார்
ரஜினி நிச்சயம் ஒரு அதிசயம். நிறமானவர்களும் ஒருமாதிரி நாகரிக வடிவம் கொண்டவர்களுமே இங்கு சினிமாவினை ஆளமுடியும் என்பதை நொறுக்கி போட்டவர் அவர். கருப்பு நிறமும் பரட்டை தலையுமாய் ஒரு அடியாள் வேடத்துக்கும் லாயக்கற்ற அவர் நடிகராக வந்தது அதிசயம், சூப்பர் ஸ்டாரானது அதை விட அதிசயம்.தமிழே தெரியாத அவர், தமிழறிஞர் மகனான மு.க.ஸ்டாலினை விட நன்றாக தமிழ் பேச பயின்றது ஆச்சரியம். 6 வயதிலே நடிக்க வந்து உழைப்புக்கும் அறிவுக்கும் அழகுக்கும் பெயர் போன கமலஹாசனை துாக்கிவிழுங்கியது ஆச்சரியம்.திரைஉலகில் 40 வருடமாக நம்பர் 1 இடத்திலே நிலைத்திருப்பது மாபெரும் ஆச்சரியம். இதுவரை அச்சாதனையினை செய்தவர் யாருமில்லை, எம்.ஜி.ஆர்., கூட 23 ஆண்டுகள்தான் முதலிடத்தில் இருந்தார்.
ஆன்மிகவாதி
ஒரு ஆன்மிகவாதி இங்கு நடிகராய் வெல்வது பல கருப்பு சக்திகளுக்கு பிடிக்காது.ரஜினி 1980களிலே கவனிக்கப்பட்டார். அன்றில் இருந்தே அவருக்கு எதிர்ப்பு, அவரை குடிகாரன் பெண் பித்தன் என ஏக புரளிகள். அவர் எதையும் மறுக்கவுமில்லை, ஏற்றுகொள்ளவுமில்லை. புன்னகைத்தபடி கடந்தார்.ஜெயலலிதாவிடம் பெரிதாக மோதிவிட்டு பின் பக்குவமாக மீண்டார். கருணாநிதியிடம் இருந்து தப்பி அவரை தள்ளியும் வைக்காமல் நெருங்கவும் விடாமல் ரஜினி கையாண்டதில் கருணாநிதிக்கே தலை சுற்றியது.தமிழகத்தில் நல்ல கலைஞனுக்கு வரும் சாபம் இரண்டு. ஒன்று அரசியல் இன்னொன்று குடியும் பெண்களும் அகங்காரமும். இதில் தப்பித்த ரஜினி 3வதும் ஒரு கோஷ்டியிடம் இருந்து தப்பினார்.
அது பிரிவினைவாத நாத்திக கோஷ்டி. அது மதம், மொழி, இனம் என பிரித்துபேசி அழிச்சாட்டியம் செய்யும், அவற்றின் பிடி சினிமாவிலும் உண்டு.சினிமாவில் ஒரு கோஷ்டி பெரியார், ஈழம், தனிதமிழ் என என்னவெல்லாமோ சொல்லித்திரிய தன் வழியில் இந்திய தேசியமும் ஆத்திகமும் பேசியவர் ரஜினி.ராகவேந்திரா முதல் பாபாஜி வரை தயக்கமின்றி பேசி நடித்தார், அதன் வெற்றி தோல்வி எல்லாம் பற்றி கவலையே இல்லை. பாலசந்தர் காலத்தில் வந்து, கார்த்தி சுப்புராஜ் காலம் வரை ஈடுகொடுத்து நம்பர் 1 இடத்தில் ரஜினி இருப்பது சாதனை.
உலக நட்சத்திரம்
இங்கு தன் நிலையிலே கடைசிவரை நின்ற நடிகன் என யாருமில்லை. பாகவதர், சின்னப்பா வகை ஒருவகை. எம்.ஜி.ஆர்., அரசியல்வாதியாய் போராடி வென்றார், சிவாஜி கணேசனின் நிலை உலகறிந்தது அது தனி வகை. அவ்வகையில் புரூஸ்லி, ஜாக்கிசான் என வெகுசிலருக்கே அந்த யோகம் உண்டு, அதில் ரஜினி மிக அட்டகாசமாக பொருந்துவார். அவர் தமிழக எல்லைகளை தாண்டி இந்திய எல்லையினை தாண்டி இன்று உலக நட்சத்திரமாக மாறிவிட்ட பின் அவருக்கான எல்லை பெரிது, அமெரிக்கா தொடங்கி ஜப்பான் வரை எல்லா நாட்டு மக்களும் ரசிக்கின்றார்கள்.அந்த இடத்தில் தொடர்ந்து மின்னிக்கொண்டே இருப்பது என்பது ஒரு சாதனை அல்லது வரம்.அவரிடம் நியாய தர்மம் இருக்கிறது, ஒரு சத்தியத்துக்கு கட்டுபட்ட யானை போல நிற்கின்றார்.
தன் படம் என்பது தயாரிப்பாளரின் முதலீடு, அதற்கு நஷ்டம் வராமல் பார்க்கின்றாரே தவிர தன் தொண்டனை வைத்து எப்படி எல்லாம் லாபம் சம்பாதிக்கலாம் எனும் ஏமாற்றுதனம் அவரிடமில்லை.ரஜினி இங்கு சிலரால் சாடபட காரணம் இரண்டு, ஒன்று அவர் ஹிந்து அபிமானி இரண்டாவது தேசியவாதி. இந்த இரண்டில் ஒரு குணம் இருந்தாலே இங்கு விடமாட்டார்கள், அந்த மாபெரும் சாதனையாளனுக்கு இரண்டு அபூர்வமும் இருந்தால் விடுவார்களா?அன்றிலிருந்து இன்றுவரை கடவுளை தேடி தேடி வணங்கும் ஒரே நடிகன். தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தியே தன்னை வழிநடத்தி இவ்வளவு உயர்த்தியதாகவும் நம்புகின்றார்.தன்னில் தன்னை தேடி ஞானத்தை அடைய துடிக்கும் யோகியே இமயமலைக்கு செல்வான், அது தான் ரஜினி. அது ஞானத்தை மகா அமைதியினை அந்த பரம்பொருளின் ஜோதியினை கண்டறிய துடிக்கும் யோகியின் மனம். இப்படி ஒரு மனிதன் இனி எக்காலமும் வரமாட்டான் , இந்த மனம் யாருக்கும் அமையாது.ஒரு ஆன்மிக மனநிலையில் அவரை நோக்கினால் கையெடுத்து வணங்கத்தான் தோன்றும்.
தி.மு.க.,வினருக்கு பயம்
ரஜினி அவரை புரிந்தோருக்கு மாபெரும் அதிசயம். புரிந்து கொள்ளமுடியாதோருக்கு புதிர்.ரஜினி மேல் தி.மு.க,வினருக்கு கோபம் அல்ல பயம்.ஜெயலலிதாவை எதிர்த்தபொழுது மிக பிடித்தது. 1996ல் திமுக கூட்டணிக்கு அவர் ஆதரவு சொன்னபொழுது பிடித்தது. 1996ல் இன்னிங்க்ஸை தொடங்கினார் ரஜினி, அது எங்கெல்லாமோ சுற்றி மூப்பனாரிடம் ரஜினியினை இழுத்து சென்றது.1996ல் நடந்த தவறு, மூப்பனாருக்கு தன் பலம் தெரியாமல் இருந்ததும், ரஜினிக்கும் அப்படி இருந்ததுமே.தி.மு.க., அங்கு தேவையற்ற ஆணி, ஆனாலும் உள்ளே புகுந்து பலனை அனுபவித்தது, நிச்சயம் அன்று தி.மு.க., இல்லை என்றாலும் மூப்பனார் ரஜினி கூட்டணி சாதித்திருக்கும்.
அதன் பின் மூப்பனார் பிரதமராக கூடாது என தி.மு.க., சிரித்துகொண்டே கழுத்தறுத்தபின்பு ரஜினி மனதால் அழுதார். என்னடா அரசியல் இது என்ற வெறுப்பு அவருக்கு மேலோங்கிற்று, துரோகம் என்றால் என புரிய ஆரம்பித்தது.காங்கிரஸின் உட்கட்சியும் அதன் ஒருமாதிரி தன்மையும் புரிய ஆரம்பித்தபின், அவருக்கு பா.ஜ., தவிர வேறு வாய்ப்பில்லை. எனினும் உள்ளே செல்லவில்லை. துரோகத்தில் சரிந்த மூப்பனார், ஜெயலலிதாவிடமே செல்ல மனம் வெறுத்தார் ரஜினி. ஆள் அம்பு சேனை வாய்த்தும் அரசியல் என்றால் என்ன என்பதை 1997லே புரிந்த ரஜினி தள்ளி நின்றார்.அரசியல் சாணக்கியனான கருணாநிதியே ரஜினி நிலைப்பாடு தெரியாமல் தலையினை பிய்த்த காலங்கள் உண்டு.
ஜாதி இல்லை
அன்றே நல்லவர் மூப்பனாரை பிரதமராக்கியிருந்தால் ரஜினிக்கு ஏன் இந்த வெறுப்பு வரபோகின்றது. இப்போது தங்களின் அரசியலுக்கு ரஜினி பெரும் அச்சுறுத்தல் என அஞ்சி அலறுகின்றார்கள். ரஜினி ஜாதியில் அடைபட மாட்டார், தமிழக இனம் மற்றும் இதர எல்லையில் அவரை அடைக்க முடியாது. பா.ம.க.,வும் இன்னும் பலரும் அவரை குறிவைத்தது அதனால்தான்!தங்களுக்கு பிடித்தமாதிரி ரஜினிஎனும் காளைக்கு சிலர் மூக்கணாங்கயிறு போட பார்த்தார்கள்.ரஜினி எனும் டைனோசரை என்ன செய்வது என அவர்களுக்கும் தெரியவில்லை பாவம். அவர் வெளியில் வரவும் முடியாது, வந்தாலும் குற்றம், வந்து பேசினாலும் குற்றம்,பேசாவிட்டால் அதை விட குற்றம். விரட்டும் அரசியல்வாதிகள் ஒருபக்கம்.அரசியலுக்கு வா என அழைக்கும் ரசிகன் ஒருபக்கம். இதில் யாரை பகைக்க என தெரியாத ரஜினி வருவேன் ஆனால் வரமாட்டேன் என ஒருமாதிரி விலகி சென்றார்.அந்த அற்புதமான நடிகனை அவன்போக்கில் விடுவதுதான் சரி. வைடூரியம் என்பது பலவகைகளில் மின்னகூடியது, அதனை திருப்ப திருப்ப பலமாதிரி ஒளிரும், அதை பார்த்து ரசிக்கலாம்மாறாக நீதான் ஓளிகொடுக்க வேண்டும் எண்ணெய் விளக்குக்கு பதிலாக தொங்கு என்பதெல்லாம் சரி அல்ல. அந்த வைடூரியம் எவ்வளவோ சிக்கலுக்கு இடையில்தான் மின்னுகின்றது, இன்னும் மின்னட்டும்அதை தெருவிளக்கு ஆக்கிவிடாதீர்கள்
ஞானி ரஜினி
எங்களின் அபிமான ரஜினியே, தன்னை அறிந்தவன் ஞானி. நீர் உம்மை நன்றாக அறிந்திருக் கின்றீர், எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது என்பது உமக்கு நன்றாய் விளங்கியிருகின்றது.உங்களிடம் உண்மை இருக்கின்றது, அந்த உண்மையில் தெய்வம் வாழ்கின்றது.ராகவேந்திரா முதல் பாபா, விசிறி சாமியார் வரை உங்களை ஆசீர்வதிக்கட்டும், இறைவன் உங்களை இன்னும் உயர்த்தட்டும். காரணமின்றி நீங்கள் இங்கு வரவில்லை. நாத்திக பிரிவினை கொள்கையினை பிழைப்பாக கொண்டிருக்கும் அரக்க கூட்டத்தை அழிக்க வந்த அவதாரம் நீங்கள்.
அதை நோக்கித்தான் ஒவ்வொரு காட்சியாக நடந்து இப்பொழுது அரசியல் களத்துக்கும் வந்துவிட்டீர்கள்நேரமும் காலமும் கூடிவிட்டது, பாஞ்சசன்யம் ஊதியாகிவிட்டது, உங்களுக்கு தேரோட்ட பல தெய்வ சக்திகளும் வந்து அமர்ந்துவிட்டன.உங்கள் சேனைகள் காத்திருக்கின்றன, அந்த கொடிய அரக்க கூட்டம் பாதி அழிந்த நிலையில் மீதி வால்கள் ஆடிகொண்டிருக்கின்றன.பானுகோபனின் அஸ்திரம் போல், சிங்கமுகனின் கரங்கள் போல், சூரபதுமனின் தலை போல், ராவணனின் தலைபோல் அவை வந்து கொண்டே இருக்கும். துரியோதனின் தொடை போல திராவிடத்தின் கால்களும் வலுவானவை. அந்த கூட்டத்தை மொத்தமாக முடித்து வைக்கும் சக்தி உங்களிடமே இருக்கிறது.
இது கடைசி யுத்தம், அதை வெற்றிகரமாக முடித்து வைத்து உங்கள் அவதார நோக்கத்தை நிறைவேற்றுங்கள்.அதற்குத்தான் உங்கள் வனவாசம், மனவாசமெல்லாம் முடிந்து களத்துக்கு காலம் உங்களை இழுத்து வந்தது. அஞ்சாதீர்கள், மாய கண்ணன் உங்களுக்கு தேரெடுக்கின்றான், அனுமன் உங்களுக்கு காவல் இருக்கின்றான்,மாபெரும் சேனை கொடியோடும் ஆயுதத்தோடும் ஆர்பரிக்கின்றது.கலையுலகில் கண்ட ஒரே ஒரு யோகிக்கு, ஆத்ம ஞானிக்கு வாழ்த்துக்கள்.-ஸ்டான்லி ராஜன்சமூக ஊடக எழுத்தாளர்
நன்றி : தினமலர்
|