கமல் அரசியலுக்கு வந்துட்டாரு, தலைவர் ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாரு! என்று தலைவர் ரசிகர்கள் பலர் புலம்பிக்கொண்டுள்ளார்கள்.
ஆனால், கமல் தலைவருக்கு ரொம்ப உதவி பண்ணிட்டு இருக்காரு என்பதை அறியாமலே!
ஒரு கண்ணில் வெண்ணை ஒரு கண்ணில் சுண்ணாம்பு
எல்லோரும் ஒன்றை நிச்சயம் கவனித்து இருப்பீர்கள். கமலுக்கு ஊடகங்கள் தரும் அபரிமிதமான ஆதரவு!
தலைவர் சாதாரணமாக சொல்வதையும் தேடி எடுத்து சர்ச்சையாக்குவதும், கமல் சர்ச்சையாக கூறுவதையும் சாதாரணமாக்குவதையும் உணர்ந்து இருப்பீர்கள்.
கமல் கூறிய இந்து தீவிரவாத கருத்தையும், ரசிகர்களிடம், ஏழைகளிடம் பணம் வாங்குவேன் என்பதை ரஜினி கூறியிருந்தால், என்ன நடந்து இருக்கும் என்ற முடிவை உங்களிடமே விடுகிறேன்.
கமல் சும்மா எதையாவது சொன்னாலும் குறிப்பிட்ட சில ஊடகங்கள் தொடர்ச்சியாக அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகின்றன.
ஆனால் என்னவொரு சோகம் என்றால், எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாலும் செய்திகளில் மட்டுமே பரபரப்பு காட்ட முடிகிறதே தவிர மக்களிடையே எந்த ஒரு பரபரப்பும் இல்லை. அறிவிப்பு குறித்த தாக்கமுமில்லை.
மாற்றி மாற்றி பேசும் கமல்
கமல் துவக்கத்தில் இருந்து மாற்றி மாற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்.
பின்னர் அதற்கு எதிர்ப்புகள் வந்தவுடன் நான் அப்படி கூறவில்லை, ஆங்கிலத்தில் கூறியதை தவறாக மொழிபெயர்த்து விட்டார்கள் என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.
தற்போது விகடன் தொடரில் "இந்து தீவிரவாதம்" என்று கூற, அதனால் கடும் எதிர்ப்பை சந்தித்ததால் நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை, ஊடகங்கள் மாற்றி கூறி விட்டன என்றார்.
பேட்டியில் கூறியதை கூட மாற்றி கூறும் வாய்ப்புள்ளது ஆனால், இவரே எழுதியதை இவர் அனுமதியில்லாமல் விகடன் மாற்ற முடியாது. அவ்வாறு இருக்கையில் "நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை" என்று கூறுகிறார்.
நான் பிராமண சமுதாயத்தில் இருந்து விலகி வந்து விட்டேன். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கிறார்.
அனைத்து சாதியிலும் நல்லவர்களும் உள்ளார்கள், மோசமானவர்களும் உள்ளனர். எனவே, இவ்வாறு கூற வேண்டிய அவசியம் தற்போது என்ன வந்தது?
ஒருவரின் தரத்தைக் கூறுவது அவரது நடவடிக்கைகளும் செயல்களும் தானே தவிர சாதி அல்ல!
கடவுள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது
கடவுள் நம்பிக்கை கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதை எவரும் உணர்ந்து இருக்கலாம். இதற்கான காரணம் என்ன என்பதற்குள் செல்ல வேண்டாம் ஆனால், இது உண்மை.
இந்த நிலையில் தன்னை தனித்துவமாகக் காட்ட கமல் கூறும் பகுத்தறிவு கருத்துகள், நான் நாத்திகன் அல்ல பகுத்தறிவாளன் என்ற குழப்பம் எந்த அளவுக்கு அவருக்கு உதவும் என்று அவருக்கே வெளிச்சம்.
தன்னுடைய தனித்துவத்தைக் காட்ட இந்து மதத்தை சராசரி அரசியல்வாதி போல தாக்குவதும், விமர்சிப்பதும் நியாயமான ஒன்றாக இல்லை.
இந்து மதம் என்றில்லை எந்த மதத்தையும் அவசியமற்று விமர்சிப்பது தேவையற்ற செயல்.
இது போல எண்ணற்ற விஷயங்களை கூறி வருகிறார். எதிர்ப்பு வந்தால், நான் அப்படி கூறவில்லை ஊடகங்கள் திரித்து விட்டன என்று சமாளிக்கிறார்.
இதனால், ஒரு தெளிவான கருத்தை கூறாமல், மாற்றி மாற்றி பேசுகிறார் என்ற பெயரை சம்பாதித்து வருகிறார். இது மக்களின் நம்பிக்கையை இழக்கவே துணை புரியும்.
ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம்
சமீப மாதங்களாக ஊடகங்கள் கமலுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கின்றன, செய்திகளை, சமூக வலைத்தளங்களை தொடர்பவர்களுக்கு புரிந்து இருக்கும்.
இதன் காரணமாகவே என்னவோ தினமும் கமலும் எதையாவது கூறிக்கொண்டு இருக்கிறார்.
கட்சி துவங்குவதற்கான 30 கோடியை ரசிகர்கள் எனக்கு கொடுப்பார்கள் என்றார், அது குறித்த விமர்சனம் வந்தவுடன் நான் ஏழைகளிடம் கட்சிக்கான நிதியை பெறுவேன் என்றார்.
தற்போது எனது கட்சிக்கு வருமான வரி கட்டும் மத்திய தர வர்க்கத்தினர் பணம் கொடுப்பார்கள் என்கிறார்.
ஒரு கேள்விக்கு மூன்று பதில்கள். கேட்டால், தவறாக மொழி மாற்றம் செய்து விட்டார்கள் என்கிறார்.
கூறும் கருத்தில் தெளிவு வேண்டும்
ஒரு அரசியல் தலைவராக வரக்கூடியவர் சாதாரண நபர் போல தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்தால், அவருக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து விடும்.
"அட! இவர் இப்படி தான்ப்பா எதையாவது பேசிட்டே இருப்பாரு.. கேட்டால், அப்புறம் நான் சொல்லலைனு சொல்லிடுவாரு!" என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும்.
பிரச்சனைகளை பேசிக்கொண்டு இருப்பதும் கருத்தை எழுதுவதும் எவரும் செய்யக் கூடிய செயல்.
இதையே ஒரு அரசியல் கட்சி துவங்கப்போகும் நபரும் செய்தால், பொதுஜனத்துக்கும் தலைவருக்கும் என்ன பெரிய வித்யாசம் இருக்க போகிறது.
கமல் அனைவரையும் திருப்தி செய்ய நினைத்து அனைத்துக்கும் கருத்தைக் கூறி வருகிறார். இது நிச்சயம் ஒரு அரசியல் தலைவருக்கு நல்லதுக்கல்ல.
கமலின் இணைய ஆதரவு
ரஜினியை பிடிக்காதவர்கள் அவருக்கு போட்டியாக இருக்கும்!! கமலை இணையத்தில் ஆதரிக்கிறார்கள்.
இது இணையத்தில் மட்டுமே உதவுமே தவிர நடைமுறை எதார்த்தமல்ல.
இதெல்லாம் உண்மையான ஆதரவு என்றால், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகிய "வெற்றி விழா" திரைப்படம் முதல் நாளே காத்தாடிக் கொண்டு இருந்து இருக்காது.
இதே தான் மக்கள் தீர்மானிக்கும் வாக்கு சாவடியிலும்.
கமல் அதிகபட்சம் ஆறு மாதங்களாக அரசை விமர்சித்து கருத்துக் கூறி வருகிறார் என்று நினைக்கிறேன்.
இதற்கு முன்பு வரை அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை, எனக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று கூறி வந்தார்.
தற்போது, நான் வாக்களித்ததில் இருந்து அரசியலில் இருக்கிறேன் என்று கூறி நான்கு மாதத்தில் கட்சியையே ஆரம்பிக்கும் அளவுக்கு வந்து விட்டார்.
கட்சி ஆரம்பிப்பது எவ்வளவு பெரிய விஷயம், அதை நான்கு மாதத்தில் முடிவு செய்து துவங்குகிறார் என்றால், என்னவென்று கூறுவது!
இணையத்தில் இவரை உசுப்பேற்றுபவர்கள் இவரை ஒரு வழி ஆக்காமல் விட மாட்டார்கள் போல உள்ளது.
இவர்களை நம்பி முடிவு எடுத்து இருந்தால், கமலுக்காக பரிதாப்படுவதைத் தவிர ஒன்றுமில்லை.
கமலின் அவசரம்
கமல் கருத்துகள் கூறுவதையும் அதை திரும்ப பெறுவதையும் தொடர்ச்சியாக செய்து கொண்டுள்ளார். இது மக்களிடையே எப்படி வரவேற்பை பெறும்?
இவரே தனக்கு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்.
இப்படியே தொடர்வாரென்றால், ஒரு சராசரி அரசியல் தலைவராக தான் மக்கள் மனதில் இருப்பாரே தவிர மாற்றத்தைக் கொண்டு வரும் தலைவராக இருக்க மாட்டார்.
கமல் இந்த வேகத்தில் கருத்துக்களை அள்ளித் தெளித்தால் ரஜினி அரசியலுக்கு வரும் போது கமல் ஆடி அடங்கி இருப்பார்.
சுருக்கமாக, கமல் ஒரு கட்சி தலைவர் என்னென்னவெல்லாம் செய்யக்கூடாது, கூறக்கூடாது என்பதை தலைவருக்கு அனுபவ ரீதியாக உணர்த்தி வருகிறார்.
அறிவிப்பு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்
கட்சி அறிவிப்பு என்பது ஊடகங்களை மக்களை ஒரு புரட்டு புரட்டிப் போட வேண்டும். அது தான் அறிவிப்பு!
குறைந்தது ஒரு வாரத்துக்காவது மக்களிடையே ஊடகங்களிடையே கடும் விவாதத்தை பரபரப்பை ஏற்படுத்த வேண்டும்.
அடுத்த நாள் இதையும் ஒரு செய்தியாக கடந்து வேறு வேலையை பார்ப்பது அல்ல.
இந்த வித்யாசத்தை ரஜினியின் அறிவிப்பின் போது அனைவரும் உணர்வர்.
தலைவர் ரசிகர்கள் எல்லாம் ஒண்ணு தெரிஞ்சுக்கங்க..
உங்க அவசரத்துக்கு, நீங்கள் கமல் ரசிகர்கள் மற்றும் மற்றவர்களிடையே "பாருங்க எங்க தலைவர் வந்துட்டாரு.. வரமாட்டாருன்னு சொன்னீங்க.." என்று கெத்து காட்டவோ, ஊடகங்கள் சும்மா 12 தேதி அறிவிப்பு விட்டு நெருக்கடி தருவதாலோ தலைவர் அறிவிப்பை வெளியிட மாட்டார்.
முதல்ல தலைவர் டிசம்பர் 12 அறிவிப்பு வெளியாகும்னு சொல்லவே இல்லை.. பிழைக்கவும் பழிக்கவும் ரஜினி.
இவர்களே பாம் வைப்பார்களாம்.... என்பது போல ஊடகங்களே அறிவிப்பும் விடுவாங்க.. பின்னர் அவர்களே ரஜினி எதுவும் சொல்லவில்லை ரசிகர்கள் ஏமாற்றம்!! என்றும் சொல்வார்கள்.
கட்சி ஆரம்பிப்பது என்பது தலைவருக்கு மிகப்பெரிய முடிவு. அவருடைய 44 வருட உழைப்பு, கவுரவம் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறது.
எனவே, சரியான நேரம் வரும் போது, சரியான முன்னேற்பாடுகளுடன், திட்டங்களுடன் உறுதியாக அறிவிப்பார், மற்றவர்கள் அவசரத்துக்கு அல்ல.
அது வரைக்கும் கமலை ரஜினிக்கு உதவி பண்ண விடுங்க!
மகிழ்ச்சி!
|