டல்லாஸ் : காலா திரைப்படத்தின் 100 வது நாளை அமெரிக்க ரஜினிகாந்த் ரசிகர்கள் விருந்து வைத்து கொண்டாடி உள்ளார்கள். கிடாக்கறி, கோழிக்கறி, பாயசம் என பலவகை உணவுகளுடன் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ‘காலா கறி விருந்த’ டல்லாஸ் மாநகரின் இர்விங் ஜெஃபர்சன் பார்க்கில் நடைபெற்றுள்ளது.
இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பூங்கா ‘காந்தி பார்க்’ என்று பரவலாக அழைக்கப்பட்ட நிலையில், பூங்காவின் ஒரு பக்கத்தில் காந்தி சிலையும் சில வருடங்களுக்கு முன்னால் நிறுவப்பட்டது.
பூங்காவின் மறு பகுதியில் உள்ள பிக்னிக் திடலை, நகர நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ‘காலா கறி விருந்து’ க்காக வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ.)சார்பில் விழா ஏற்பாடு செய்து இருந்தனர்.
விழா தொடங்குவதற்கு முன்னதாக திடலுக்கு வந்த ரசிகர்கள், தமிழகத்தைப் போலவே கொடிகள், பேனர்கள் என அலங்கரித்தனர். ஜெனரேட்டர் உதவியுடன் மின்சார வசதி செய்து, ஸ்பீக்கர்கள் மூலம் ரஜினிகாந்த் படப் பாடல்களை ஒலிக்கச் செய்துள்ளனர். அதனால் அந்தப் பகுதியில் காலை முதலாகவே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
காலை பதினோரு மணி முதலாகவே ரசிகர்கள் கார்களில் வரத்தொடங்கினார்கள். 50க்கும் மேற்பட்ட கார்களில் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் விழாவில் பங்கேற்றுள்ளார்கள்.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை சைவ அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. கிடாக்கறி, கோழிக்கறி, இனிப்பு உட்பட 15 க்கும் மேற்பட்ட வகை உணவுகள், விருந்தில் இடம் பெற்றது. ரஜினிகாந்த் படப்பாடல்களை கரோக்கி இசையுடன் பாடினார்கள்.
காலா படத்தை நினைவு கூறும் வகையில் ரஜினி வாசு – விஜய் நடிப்பில் “காலாவும் ஹரிதாதாவும்” நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் காட்சியை அரங்கேற்றி அசத்தினார்கள்.
2 வயதுக் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் 150க்கும் மேற்பட்டோர், இந்த விழாவில் பங்கேற்று ரசிகர்களின் ஆரவாரத்தில் பிரம்மித்துப் போனார்கள். இந்த விழா பற்றி விழா ஏற்பாட்டாளர்கள் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
ரஜினிவாசு, “காலா தலைவரின் வெற்றிப்படம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தலைவரின் வெற்றியை கொண்டாடும் வகையில் க்றி விருந்து வைத்து விழா எடுத்தோம். தெய்வபக்தியும் தேசபக்கியும் கொண்ட தலைவரின் வழியில் என்றென்றும் அயராது உழைப்போம்,” என்று கூறினார்.
அன்புடன் ரவி கூறுகையில், “எனது பிள்ளைகள் காலா படத்தை பார்த்துவிட்டு இந்தியாவில் இது போன்ற நில உரிமை பிரச்சினை இருக்கிறதா?, என்று வருத்தத்துடன் கேட்டார்கள், குழந்தைகளிடம் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது காலா,” என்று தெரிவித்தார்.
ரஜினி ராஜா, “அமெரிக்காவில் தலைவர் ரஜினி படம் எப்போதும் மிகப்பெரிய வெற்றி பெரும். அதுபோல காலாவிற்கு, மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து மாபெரும் வெற்றியடைய செய்தனர். 100 நாள் விழா கொண்டாடியது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. காலா வெளியான முதல் நாள் கொண்டாடத்திற்கு இணையான கொண்டாட்டமாக இந்த 100 வது நாள் விழா அமைந்தது,” என்று கூறினார்.
மிஷிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரிலிருந்து விழாவில் பங்கேற்க வந்திருந்த அருள், “தமிழ்நாட்டுக்குச் சென்று தலைவர் பட விழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தை இந்த விழா தீர்த்து வைத்தது. அமெரிக்காவில் ரஜினி ரசிகர்களின் விழாவில் பங்கேற்பது என்பது பெருமையாகவும் இருக்கிறது. தலைவர் ரசிகர்களை சந்தித்தது, குடும்பத்தினரை சந்தித்து விட்டு வந்து போல் மனநிறைவை தந்தது,” என்று கூறினார்.
இர.தினகர் கூறும் போது, “தலைவர் 40 வருடமாகவே குடும்பத்தை முதலில் பாருங்கள் என்று சொல்லி வருகிறார். அமெரிக்காவில் நேரம் என்பது மிகவும் அரிதாகிவிட்ட வேளையிலும், குடும்பத்தினராக குழந்தைகளுடன் விழாவில் பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்தது. தலைவர் ‘முதலில் குடும்பத்தை கவனியுங்கள்’ என்று சொன்னதாலோ என்னவோ, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ரஜினி ரசிகரின் குடும்பமும் தலைவரின் தீவிர விசுவாசிகள் ஆகிவிட்டனர். வரப்போகும் தேர்தலில் இது நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை தலைவருக்குத் தேடித் தரும்” என்று தெரிவித்தார்.
காலா விருந்து வெற்றிகரமாக நடைபெற உதவிபுரிந்த அனைவருக்கும், பங்கேற்றவர்களுக்கும் ரஜினி வாசு நன்றி தெரிவித்தார். காலா வெற்றிப்படமா தோல்விப்படமா என்ற விவாதத்திற்கு இடமின்றி, காலா ஒரு மாபெரும் வெற்றிப்படம் என்று ரசிகர்கள் கொண்டாட்டம் மூலம் தெள்ளத் தெளிவாக தெறிக்க விட்டுள்ளார்கள்.
விழா ஏற்பாடுகளை வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினிகாந்த் ஃபேன்ஸ், (யு.எஸ்.ஏ). சார்பில் ரஜினிவாசு, இன்பா, சரத்ராஜ், அறிவு, பிரபு, சதிஷ், நாகா, செந்தில், கார்த்திக், சங்கர், சந்தர், ஸ்ரீகாந்த், புனித், அருள், சுப்பு, பாலாஜி, மோனி, ராம்குமார், ரமேஷ், மகேஷ், ஆனந்த், கிருஷ்ணகுமார், ஸ்ரீனிவாசன், ரஜினி ராஜா, அன்புடன் ரவி, இர.தினகர் ஆகியோர் செய்து இருந்தார்கள்.
அமெரிக்காவிலும் ரஜினிகாந்துக்கு இப்படி தீவிர ரசிகர்கள் இருப்பதைப் பார்க்கும் போது, அவருடைய அரசியல் வெற்றி ஒன்றும் ஆச்சரியப்படக்கூடியது அல்ல.
– வணக்கம் இந்தியா
|