ரஜினி திரையில் தோன்றியதும், ஏன் படம் முடியும் வரையிலும்கூட பத்தாயிரம் வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்ததுபோல அதிரும். அப்படி ஒரு திரைப்படம் 90'ஸ் கிட்ஸ்க்கும் சரி, ரஜினி ரசிகர்களுக்கும் சரி... காலத்துக்கும் மறக்க முடியாத ஒரு படமாக மாறியது. அப்படிப்பட்ட ஒரு படம்தான், 'படையப்பா'. இப்படம் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. இப்படத்தைக் கொஞ்சம் ரீவைன்ட் செய்யலாமா?
'படையப்பா' உருவான கதை :
பாலச்சந்தர் : (விழா ஒன்றில்) 'உனக்குப் பிடிச்ச புத்தகம்?'
ரஜினி : 'பொன்னியின் செல்வன்'
- ஆம். கல்கியின் தீவிர ரசிகர் ரஜினி. கல்கி எழுதிய அத்தனை புத்தகங்களையும் படித்திருக்கிறார். ரஜினிக்கு 'பொன்னியின் செல்வ'னில் பிடித்த கதாபாத்திரம் நந்தினியுடையது.. அந்த நந்தினியின் வில்லத்தன குணாதிசயங்களை அடிப்படையாக வைத்து ஒரு படம் செய்யவேண்டும் என்ற நீண்ட நாள்களாக ரஜினி மனதில் இருந்தது. அதை கே.எஸ்.ரவிக்குமாரிடம் சொல்ல, 'படையப்பா' கதையை உருவாக்கினார், அவர். படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம் என யோசித்தபோது, 'படையப்பா' எனச் சொன்னது ரஜினிதான். 'இந்த மாதிரி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதே இல்லையே' என ரவிக்குமார் சொல்ல, 'நான் கூடத்தான் கேட்டதில்லை' என நக்கலாகப் பதில் சொன்னார், ரஜினி.
இரண்டு சிவாஜிகள் :
'இனிமே நாங்க எல்லோரும் உன் பின்னாலதான்!'
'என்னைக்குமே எங்க எல்லோருக்கும் நீங்கதான்பா முன்னோடி'
'படையப்பா' படத்தில் கோட், அதற்குள்ளே சட்டை, வாயில் மவுத் ஆர்கன், கழுத்தில் ருத்ராட்சம், கையில் காப்பு, முன்னதாக நீட்டியிருக்கும் நான்கு முடி.. என மரண மாஸான லுக்கில் இருப்பார், ரஜினி. அவர் ஃபிரேமில் இருக்கிறார் என்றால், அவரைத் தாண்டி வேறு யாரையும் கண்கள் பார்க்காது. அதுதான் ரஜினி மேஜிக். அந்த மேஜிக் இந்தப் படம் முழுவதும் நிரம்பியிருந்தது.
தனது முந்தைய படமொன்றில் பாம்பைக் கண்டால் 'ப்பா.. பா.. பாம்பு' என பதறிச் சிரிப்பூட்டிய ரஜினி, இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியிலேயே புற்றுக்குள் இருக்கும் பாம்பைக் கையால் பிடித்து, அதற்கு முத்தமும் கொடுத்து நீலாம்பரி வசுந்தராவின் மனதைக் கொள்ளையடித்ததோடு, ரசிகர்களையும் வசீகரித்தார். இரண்டாம் பாதியில் மேல் துண்டை எடுத்து ஊஞ்சலை இழுத்துப் போட்டு உட்காரும் ரஜினியின் ஸ்டைல் வேற லெவல்!
'மாப்பிள்ளை இவர்தான். இவர் போட்டிருக்க சட்டை என்னது' என ரஜினி சொல்லும் வசனம், இன்றைய தேதி வரை பிரபலம். அதேசமயம், சென்டிமென்ட்டிலும் ரஜினி சளைத்தவரில்லை. தனது தங்கை சித்தாராவிடம், 'உன் மனசுக்குப் புடிச்ச மாப்ளையை.. மனசுக்குப் புடிச்ச மாப்ளை. அது முடியாதும்மா' எனச் சொல்லிவிட்டு, கண்ணீர் சிந்தும் காட்சிகளில் பெர்ஃபாமராகவும் பட்டாசு கொளுத்தியிருப்பார்.
படப்பிடிப்பின்போது கே.எஸ்.ரவிக்குமார், 'படத்துல நீலாம்பரி கதாபாத்திரத்தோட ஆதிக்கம் அதிகமா இருக்கு. அந்தக் கேரக்டரைக் கொஞ்சம் குறைச்சிடலாம்னு இருக்கேன்' என ரஜினியிடம் சொல்ல, 'எப்படி எழுதுனீங்களோ அப்படியே எடுங்க, நான் என் வசனத்தை வெச்சு மேட்ச் பண்ணிக்கிறேன்' என்றாராம், ரஜினி. ரஜினி, நீலாம்பரியை வசனத்தாலேயே மேனேஜ் செய்தாரா, இல்லையா என்பது 'படையப்பா'வைப் பார்த்த பச்சைக் குழந்தைகூட சொல்லும்.
சிவாஜி இறுதியாக நடித்த திரைப்படம் இதுதான். படத்தில் ரஜினிக்கும், சிவாஜிக்குமான தந்தை - மகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கும். சிவாஜி ரஜினியிடம் 'அது... நீ இந்த ஸ்டைல்லா அப்டி ஒரு சல்யூட் போடுவியே, போடு பாக்கலாம்' எனச் சொல்லும் காட்சியாகட்டும், மணிவண்ணனுக்கு சொத்துகளை எழுதிக் கொடுத்துவிட்டு, ரஜினியைக் கை காட்டி 'எனக்கிருக்கிற ஒரே சொத்து இவன்தான். இவன் இருக்கும்போது ஏன்யா கவலைப்படணும்' என்னும் காட்சிகளாகட்டும். அவ்வளவு நெகிழ்ச்சியாக அந்தக் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். படத்தில் சிவாஜியின் உணர்ச்சிகரமான நடிப்பைப் பார்க்கும்போதெல்லாம், பின்பாதியில் 'உங்களுக்கு வயசாகலை' என்று ரஜினியைப் பார்த்து அப்பாஸ் சொல்வாரே, அதை சிவாஜிக்கும் சொல்லத் தோன்றும்.
மீண்டும் படையப்பாவை பார்த்தது போல இருந்தது .. அருமை பதிவு ... கீழே சில சங்கிகள் Comment, அவர்களின் வைத்தெரிச்சலை காட்டுகிறது ...
நீலாம்பரி :
ரஜினிக்கு நிகரான அறிமுகக் காட்சியும், சில இடங்களில் மிடுக்கு, ஆணவப் பேச்சு, கம்பீர நடை, திமிரான பார்வை... என்று ரஜினியையே தூக்கிச் சாப்பிடும் கணமான கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனுக்கு! சௌந்தர்யாவின் கன்னத்தைக் காலால் வருடிக்கொண்டு தற்பெருமை வசனங்கள் பேசுவது, வீட்டிற்கு வந்த ரஜினியிடம் ரஜினி ஸ்டைலிலேயே சல்யூட் அடிப்பது, 'மின்சாரக் கண்ணா' பாடல் எனப் படம் முழுக்க ரஜினிக்கு நிகராக ஒரு கலக்கு கலக்கியிருப்பார், இந்த நீலாம்பரி. பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரும்போது, சூரிய வெளிச்சத்தால் கண்கள் கூச நாசர் அணிந்திருக்கும் கண்ணாடியைக் கழட்டி ரம்யா கிருஷ்ணன் ஸ்டைலாகப் போட்டுகொள்ளும் காட்சி அட்டகாசமான கிளாஸிக் ஏரியா.
'படையப்பா' படத்தில் 'நீலாம்பரி' கதாபாத்திரத்தின் குணாதிசயங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நீலாம்பரிக்குப் படையப்பா கிடைக்காததுகூட அடுத்த பிரச்னைதான். ஒரு வேலைக்காரியிடம் தோற்றதுதான், அவளுக்குப் பெரும் பிரச்னை. அதுதான், தாய் இறந்ததுக்குக்கூட வராமல் பதினெட்டு வருடங்கள் ஒரே அறையில் முடங்கியிருக்கும் பிடிவாதக்காரியாக நீலாம்பரியை மாற்றுகிறது. மேலும், இந்தப் படத்தில் இரண்டு மூறை நீலாம்பரியையும், ஒரு முறை வசுந்தராவையும் மாடு முட்ட வரும். வசுந்தராவை மாடு முட்ட வரும்போது, அவரது சுபாவத்துக்கு ஏற்றதுபோல அலறியடித்துக் கொண்டு பயந்து ஓடுவார். ஆனால், நீலாம்பரி கண்ணை மூடுவாளே தவிர, அலறியடித்து ஓடமாட்டாள். இப்படி, சின்னச் சின்ன இடங்களில்கூட நீலாம்பரியின் தன்மை நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ரஜினி படங்களில்தான் அதிக வில்லிகள் நடித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு கட்டத்தில் ரஜினியின் ஆதிக்கத்தில் அடங்கிவிடுவார்கள். இதிலும், 'என்னை மன்னிச்சிடு படையப்பா. நீ மனுஷன் இல்லை. தெய்வம்' எனத் திருந்திவிட்டதுபோலச் சொன்னாலும், அடுத்த நொடியே தனக்கே உரிய திமிர் சிரிப்போடு, 'நீ போட்ட உயிர் பிச்சையில வாழ்றதுக்கு நான் வேலைக்காரி வசுந்தரா இல்லை' எனச் சொல்லி தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறாள். இந்த இடத்தில்தான் மற்ற ரஜினி வில்லிகளிலிருந்து நீலாம்பரி வித்தியாசப்படுகிறாள்.
இசை, வசனம், இயக்கம் :
படத்தில் ரஹ்மானின் இசை பாடல்களைத் தாண்டி, பின்னணி இசையிலும் அபாரமாக இருக்கும். படையப்பா, நீலாம்பரிக்குக் கொடுக்கப்பட்ட பின்னணி இசைக்கு சில்லறைகளைச் சிதறவிடாத ஆள்களே இல்லை. தவிர, 'வெற்றிக்கொடி கட்டு' பாடலைக் கேட்கும்போது, நாடி நரம்பு புடைக்கும். அதேபோல, படத்தின் மற்றொரு பெரும் பலம், வசனங்கள். 'என் வழி தனி வழி', 'கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்கும் நிலைக்காது' போன்ற வசனங்களெல்லாம் அவ்வளவு பவர்ஃபுல்!
'படையப்பா' சாதாரண கதைதான். ஆனால், தனது வித்தியாசமான திரைக்கதையால், ஒவ்வொரு காட்சியின் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக்கொண்டது கே.எஸ்.ரவிக்குமாரின் மேக்கிங் ஸ்டைல்.
அரசியல் :
'ஆட்சியே அவங்க பக்கம் இருக்கு?'
'போடா, ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்'
திரையில் ரஜினி, 'அரசியல்' என்ற வார்த்தையை உச்சரிக்க ஆரம்பிக்கும்போதே, ரசிகர்களின் கரவொலியால் திரையரங்கம் தீப்பிடித்துக் கொள்ளும். இந்தப் படத்திலும் அரசியலுக்குப் பஞ்சம் கிடையாது. நாசருக்கு அரசியல்வாதி வேடம் தந்து அடிக்கடி கட்சி தாவுபவுர்களை 'சூர்யபிரகாஷ்' கதாபாத்திரத்தின் மூலம் நக்கலடித்திருப்பார்கள்.
ஒரு காட்சியில், தனது நண்பர் ராஜ்பகதூர் அரசியலுக்கு வரச்சொல்லி வற்புறுத்தும் காட்சியில், 'நான் நல்லாயிருக்கிறது உனக்குப் பிடிக்கலையா' எனப் பதிலளிப்பார் ரஜினி. (இருபது வருடங்களுக்கு முன்பு வந்த படம் என்பதை மீண்டும் நினைவில் கொள்க!). படத்தில் ரஜினி பேசும் அரசியல் வசனங்கள் ஒன்றிடண்டுதான். ஆனால், ரஜினியை சுற்றியிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் கணக்கே இல்லாமல் அரசியல் பேசுவார்கள். 'நாட்டுல கலர்களைவிடக் கட்சிக்கொடிதான் அதிகமாகிப்போச்சு' என அனுமோகனும், 'ஓடுற நாய்ங்க, தாவுற நாய்ங்கெல்லாம் உங்க பக்கம் அரசியல்ல' என ரமேஷ் கிருஷ்ணாவும் அரசியல் பேசுவதெல்லாம், ரஜினி படம் என்பதால்தான் சாத்தியம்.
சகாப்தம் :
தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு 'படையப்பா' ஓடிய திரையரங்குகளில் ஒரு புரட்சிபோலப் பெண்கள் கூட்டம் அலைமோதியது. பல நாளிதழ்களில், 'திரையரங்கில் படம் பார்க்க வரும் பெண்கள் கூட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது' என செய்திகள் வந்தன. கோவையில் உள்ள திரையரங்கில் 100 நாள்கள் கழித்தும் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுவதை முன்னிட்டு, ரஜினி ரசிகர் ஒருவர் ஒரு மூட்டை மிளகாயைப் போட்டு திரையரங்கைத் திருஷ்டி கழித்தது முதல் பல கிராமங்களில், கூட்டம் கூட்டமாக வண்டி கட்டிச் சென்று படம் பார்த்தவர்கள் வரை 'படையப்பா'வுக்குப் பல கதைகள் உண்டு. தமிழ்நாட்டில்தான் இப்படிக் கூட்டம் அள்ளியது என்றால், தெலுங்கு தேசத்தில் 'நரசிம்மா' என்று டப்பிங் செய்து படத்தை வெளியிட, தமிழகத்தைவிடக் கூட்டம் அதிகம் வருகிறது என்று சிலாகித்தார்கள் ஆந்திரவாசிகள்.
'படையப்பா' படம் வெளியான பிறகு விற்பனைக்கு வந்த 'படையப்பா சேலை' படு ஜோராக விற்பனையானது. பிறகு, விற்பனைக்கு வந்த படையப்பா கூல் ட்ரிங்ஸ், படையப்பா சோப்பு என ஏராளமான லோக்கல் மார்க்கெட் பொருள்களுக்கு, 'படையப்பா' என்ற பெயர்தான் அடையாளம்.
ரஜினியின் 25-வது ஆண்டு திரைப்படம் இது. படத்தின் டைட்டிலில் ரஜினியின் 25-ஆம் ஆண்டில் வெளிவரும் திரைப்படம் என்பதை எங்கும் குறிப்பிடவில்லை. படம் வெளியாகி மெகா ஹிட் ஆனபிறகுதான், இந்தத் தகவலைச் சொன்னார்கள். இறுதியாக, படத்தின் 175-வது நாள் போஸ்டரில் 'எனது வெள்ளிவிழா ஆண்டு படத்தை வெள்ளிவிழா படமாக்கிய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி' என்ற அறிவிப்பு வெளியிட்டார், ரஜினி.
ரஜினி பார்முலாவில் வெளிவந்த படங்களில் டாப் 5 பட்டியல் எடுத்தால், அதில் 'படையப்பா'வுக்கு நிச்சயம் இடமுண்டு. ஒரு கமர்ஷியல் படத்தின் வெற்றி என்பது பாக்ஸ் ஆபிஸில் மட்டும் கிடையாது. அந்தப் படத்தை மக்கள் எந்தளவுக்கு ரசிக்கிறார்கள். எத்தனை முறை திரையரங்கில் படத்தைப் பார்க்கிறார்கள் என்பதிலும் அடங்கியிருக்கிறது. அந்த வகையில், 'படையப்பா' ஒரு சாகப்தம்தான். இன்றும் இந்தப் படத்தை டிவியில் ஒளிபரப்பினால், உட்கார்ந்து பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு இருப்பதே சாட்சி!
20 வருடங்களுக்குப் பிறகு படையப்பா, நீலாம்பரிக்கு மட்டுமல்ல... படக்குழுவுக்கு மனமார்ந்த நன்றியும், வாழ்த்துகளும்!
- நன்றி : விகடன்
வீடியோ : இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் விரிவாக படையப்பா பற்றி பேசுகிறார் :
|