மலேசியா வாசுதேவனின் AI-குரலில் வேட்டையன் முதல் சிங்கிள் மனசிலாயோ பாட்டுக்கு தலைவர் பட்டையைக் கிளப்புகிறார்
(Tuesday, 10th September 2024)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் மனசிலாயோ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடல் AI தொழில்நுட்பம் மூலம் பிரபல பாடகர் மலேசியா வாசுதேவன் குரலில் உருவாகியுள்ளது.
'ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ’வேட்டையன்’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். 'வேட்டைன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபகத் பாசில், ராணா டகுபதி ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர். மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்ஷன் உள்படப் பலரும் நடித்துள்ளார்கள்.
4ஆவது முறையாக இணைந்த ரஜினி - அமிதாப்
"வேட்டையன்" படத்தில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்திருக்கிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார்கள். அமிதாப்பச்சன் மூத்த வழக்கறிஞராக நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அந்தா கனூன், கெராஃப்தார் மற்றும் ஹம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இந்தப்படத்தில் இணைந்து இருக்கின்றனர்.
அனிருத் இசை
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் எடிட்டிங்கினை மேற்கொண்டார்.
மனசிலாயோ பாடல் ரிலீஸ்
இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. கடந்த சில வாரங்களாக படத்தின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ' பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார்.
27 ஆண்டுகளுக்கு பிறகு
27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு மலேசியா வாசுதேவன் பாடலை பாடியுள்ளார். அவரது குரலை ஏ.ஐ தொழில் நுட்ப உதவியுடன் மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளனர். இப்பாடலில் மலையாள வரிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், மனசிலாயோ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. செம குத்து பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் மஞ்சு வாரியார் செம குத்தாட்டம் போட்டுள்ளார். சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் வரிகளில் உருவான இப்பாடலை அனிருத், யுகேந்திரன் வாசுதேவன், தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும், இப்பாடல் இந்தாண்டின் வைரல் பாடல்களில் ஒன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் பான்-இந்தியா சினிமா என்பது குறிப்பிடத்தக்கது.