காலா பாடல் விழாவில் செம்ம கூட்டம், நாங்க பின்னாடி அமர்ந்து இருந்தோம், ஒன்றுமே தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் Display Screen வைத்து இருந்த இடம் அருகே சென்று அமர்ந்ததும் பரவாயில்லை என்பது போல ஆனது.
அனைவருமே தலைவர் ரசிகர்கள் என்பதால், ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு நடுவே அமர்ந்து இருந்தது மிக மகிழ்ச்சி. அதிலும் வித விதமான ரசிகர்கள். சிலரின் பேச்சு, கிண்டல், கோபம் என்று களை கட்டியது :-) .
15,000 பேருக்கு மேல் நிச்சயம் இருக்கும், கடல் போல இருந்தது. நண்பர்கள் அனைவரும் YouTube Live செமையா இருந்ததாகக் கூறினார்கள். வாழ்த்துக்கள் தனுஷ்.
பாடல் வெளியீட்டுக்கே அழைப்பிதழ் இருந்தும் இவ்வளவு கூட்டம் என்றால், மாநாட்டுக்கு எல்லாம் எவ்வளோ பேர் வருவாங்க!
தனுஷ்
தனுஷ் பேசியது அவருடைய நடவடிக்கை எல்லாம் ஒரு தலைவர் ரசிகனாகவே இருந்தது. தலைவரை விமர்சிப்பவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடிக்கு ரசிகர்களிடையே பலத்த கரகோஷம்.
அதிர்ந்த சத்தத்தில் தனுஷ் சில நொடிகள் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலையானது.
தலைவரிடம் கற்றுக்கொண்டதாக அவர் விவரித்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இணையத்திலும் தனுஷ் பேச்சுக்கு ரசிகர்களிடையே பரவலாக வரவேற்பு இருந்தது.
தலைவர்
தலைவர் எப்போதும் போலத் தன்னுடைய எளிமையான பேச்சால் அனைவரையும் கட்டிப்போட்டார். அவர் பேசியதுக்கு ரசிகர்கள் ஆராவாரம் செய்து கொண்டே இருந்தனர்.
வில்லன்
தலைவர் படங்கள்ல வில்லனுக்கு அதீத முக்கியத்துவம் இருக்கும், அதனாலே படத்துக்குக் கூடுதல் வரவேற்பு இருக்கும். நடிகர்கள் பலர் தங்கள் மேல் நம்பிக்கையில்லாததால் மற்ற நடிகர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடுவார்கள்.
எங்கே! நம்மை விட இவர்கள் பெயர் வாங்கி விடுவார்களோ என்று!
ஆனால், தலைவர் இதில் பட்டையைக்கிளப்புவார். அவரே ரசித்த ஆண்டனி, நீலாம்பரி க்கு பிறகு காலா தான் கடும் போட்டி தந்ததாகக் கூறி ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார்.
அனுபவங்கள்
கபாலியில் தனது மனைவியை தேடும் பகுதியை நகைச்சுவையுடன் விவரித்ததை ரசிக்காதவர் இருக்க முடியாது :-) .
ரஞ்சித் திறமையையும், அவர் இயக்குநராக மட்டும் தனது வாழ்க்கையை முடித்து விட மாட்டார் என்று தலைவர் கூறியது, ரஞ்சித் மீது வைத்து இருந்த நம்பிக்கையை காட்டியது.
கோச்சடையான், லிங்கா படங்கள் குறித்த கருத்துகள் உண்மையாகவே எந்த ஒரு நடிகரும் இது போலத் தன்னுடைய படங்களைப் பற்றிக் கூறி விட மாட்டார்.
என்ன பிரச்சனை? தான் செய்த தவறு என்ன? என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்.
அதுவும் லிங்கா படத்துக்கு அவர் கூறியதெல்லாம், மற்றவர்கள் நினைத்தும் பார்க்க முடியாது.
ஒருத்தரை என்னவெல்லாமோ விமர்சித்தும் திரும்ப அநாகரீகமாகப் பதில் அளிக்காமல், நம்முடைய வேலையை மட்டும் பார்ப்போம்! என்று கூறுபவரை எப்படித் திட்ட பலருக்கு மனசு வருகிறது என்றே வியப்பாக உள்ளது.
தமிழக அரசாங்கத்தையே தலைவர் நடத்துவது போல எல்லோரும் இப்படிப் பாய என்ன காரணம்?! சம்பந்தப்பட்டர்களைக் கேள்வி கேட்பதை தவிர்த்து அனைவரும் அனைத்துக்கும் இவரையே எதிர்பார்ப்பது ஏன்?
இறுதியில் கூட எப்போதும் போல அம்மா அப்பாவை மதிங்க! எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று நல்லதை சொல்கிறார்.
ஆனாலும், அவர் கூறிய நல்லதையும் எதிர்மறையாகத் தான் ஊடகங்களில் எழுதுகிறார்கள்.
இன்று ஊடகங்கள், சமூகவலைதளங்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன பேசுகிறார்கள், எவ்வளவு எதிர்மறையாகச் சிந்திக்கிறார்கள், அடுத்தவரை குறை கூறுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால், தலைவர் இது போல ஒருமுறை கூடச் சொன்னது இல்லை ஆனால், இவரைத்தான் எல்லோரும் திட்டுகிறார்கள்.
தலைவரே சொன்னது போல அவரோட வெற்றிக்குக் காரணம் "செவுட்டு தவளை" யாக இருப்பது தான். இல்லையென்றால் 40+ வருடங்களைக் கடந்தும் தன்னுடைய நிலையைத் தக்க வைத்து இருக்க முடியுமா!
நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்!
|