17 May 2005
ஆசிரியர்,
குங்கும் வார இதழ்,
181, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 34.
நாள் - 12.5.2005
அன்புடையீர், வணக்கம்.
ஜப்பானிய ரசிகர்கள் சந்திரமுகி காண்பதற்காக சென்னைக்கு வந்த விஷயம் குறித்த தவறான தகவல் இவ்வார குங்குமத்தில் வெளியாகியிருப்பது குறித்து அறிந்தோம். ரஜினியோடு தமிழ்க் கலாசாரத்தையும், தமிழக கோயில்களையும், காஞ்சிபுரம் புடவைகளையும் ரசிக்கும் ஜப்பானிய ரஜினி ரசிகர்களின் மனம் புண்படும்படியான தகவலை வெளியிட்டமைக்காக எங்களது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜப்பானில் சந்திரமுகி உடனடியாக வெளியிடப்படாத காரணத்தினால் எங்களது www.rajinifans.com வலைத்தளத்தின் உறுப்பினர்களாக இருக்கும் ஓசாகா நகரத்து ஜப்பானிய ரஜினி ரசிகர்கள், ஏப்ரல் பத்தாம்தேதி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, மகாபலிபுரம் போன்ற சுற்றுலாத்தளங்களுக்கு சென்றுவிட்டு சந்திரமுகி காண்பதற்காக ஏப்ரல் பதிமூன்றாம் தேதி சென்னைக்கு வந்தபோதும் அவர்களுக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது எங்களது இணையத்தளம் மட்டும்தான்.
கடல் கடந்து ரஜினியை ரசிக்க வந்திருக்கும் ஜப்பானிய ரசிகர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவதை எங்களது கடமையாக நினைத்து களமிறங்கினோம். ஜப்பானிய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் எவ்வித முயற்சிகளிலும் சந்திரமுகி தயாரிப்பாளர் தரப்போ, ரஜினி தரப்போ ஈடுபடவில்லை என்பதை இதன் மூலம் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ், 'கல்கி' வார இதழ், என்டிடிவி போன்ற செய்தி ஊடகங்கள் ஜப்பானிய ரசிகர்களின் சென்னை விஜயம் குறித்து விபரமாக செய்திகள் வெளியிட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குங்குமம் போன்ற பிரபலமான, பொறுப்பான பத்திரிக்கைகளில் ரஜினி மீதும் தமிழ்நாட்டின் மீதும் பாசம் வைத்திருக்கும் ஜப்பானிய ரஜினி ரசிகர்கள் மனம் புண்படும்படியான செய்திகள் வெளியாவது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தவிர்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
- for www.rajinifans.com
|