Baasha Movie Silver Jubilee Function

பாட்ஷா பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளது பற்றி குறிப்பிட்டார். அந்த பேச்சு பெரும் புயலை ஏற்படுத்தியது. அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட காரணமாக அமைந்தது.
சத்யா மூவிஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த "பாட்ஷா'' படம், 25 வாரங்களுக்கு மேல் ஓடியது. அதன் வெள்ளி விழா, 1995 ஜுலை 14-ந்தேதி சென்னை "அடையாறு பார்க்'' ஓட்டலில் நடந்தது.
படத்தில் நடித்த நடிகர் - நடிகைகள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கு ரஜினிகாந்த் கேடயம் வழங்கினார்.
அவர் பேசுகையில் கூறியதாவது:-
"பாட்ஷா'' படத்தின் வெற்றிக்கு உரிய பெருமை, அதன் திரைக்கதையை உருவாக்கிய ஆர்.எம்.வீரப்பன் அவர்களையே சாரும். படத்தின் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் என் நன்றி.
நான் இந்த விழாவில் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி பேச இருக்கிறேன். அதுதான் சமீபத்தில் டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு. நம் மனதை மிகவும் சங்கடப்படுத்தி உள்ளது.
அதுமட்டுமல்ல. அடுத்தடுத்து பல இடங்களில் வெடிகுண்டு வீசப்பட்டு, அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் சமீபத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு உடனடியாக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
தமிழ்நாட்டு முதல்-அமைச்சருக்கு (ஜெயலலிதா) என்னுடைய வேண்டுகோளை இந்த இடத்தில் வைக்கிறேன். வெடிகுண்டு கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வாருங்கள்.
சிங்கப்பூரில் போதை மருந்து வைத்திருந்தால், அவர்களை விசாரணை இன்றி தூக்கில் போடுகிறார்கள். அதேபோல் வெடிகுண்டு, துப்பாக்கி வைத்திருப்பவர்களை விசாரணை இன்றி தூக்கில் போடவேண்டும். ஒரு 10 பேரை தூக்கில் போட்டால் போதும். எல்லாம் சரியாகிவிடும்.
குற்றம் செய்தவர்களை பிடித்து தண்டியுங்கள். ஆனால் ஒரு குற்றவாளிகூட இன்னமும் தண்டிக்கப்படவில்லையே ஏன்?
தமிழக போலீசார் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. மிகுந்த திறமையானவர்கள். அவர்களிடம் அந்த இடத்தை கொடுங்கள். தலையிடாதீர்கள். அவர்கள் அடக்கி காட்டுவார்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரமே இல்லையென ஆக்கிவிடுவார்கள்.
இனி தமிழ்நாட்டில் வெடிகுண்டு, துப்பாக்கி வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பு. இதை நான் ரஜினிகாந்தாக சொல்லவில்லை. நாட்டில் வாழும் குடிமக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் சொல்கிறேன்.''
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கேடயம் வழங்கினார்.
வழக்கமாக, ரஜினி எந்தக் கூட்டத்தில் பேசினாலும் அரசியல் பற்றி பேசமாட்டார்.
|