சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் புதிய வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“The Deadly Doctor – Dharman Schedule 2 Begins” என்ற வாசகத்துடன் வெளியான இந்த வீடியோவில், படப்பிடிப்பு தளத்தில் புதிய தோற்றத்தில் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் ரஜினிகாந்த் உரையாடும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, ரஜினியின் புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் கையில் அணிந்துள்ள வேல் வடிவிலான பிரேஸ்லெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த பிரேஸ்லெட் படத்தின் கதையில் முக்கியத்துவம் பெற்றிருக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து படக்குழு இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

வீடியோ வெளியானதும் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக புதிய லுக்கைப் பார்த்த ரசிகர்கள், ‘Deadly Doctor’ என்ற கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதல் கட்ட படப்பிடிப்பில் அறிமுகப் பாடல் மற்றும் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டத்தில் முக்கியமான வசனக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

‘தர்மன்’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.