லிங்கா படத்தால் தங்களுக்கு நஷ்டம் என்று கூறி, விநியோகஸ்தர் அலுவலகம் முன்பாக சிலர் நேற்று முற்றுகையிட்டனர்.
ஆனால் அப்படி முற்றுகையிட்டவர்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், பொய்யான புகார் கூறி, நன்றாக ஓடும் படத்துக்கு எதிர்மறை பிரச்சாரம் செய்வதாகவும் லிங்கா தரப்பில் போலீசில் புகார் கூறப்பட்டதால், முற்றுகையிட்டவர்கள் திடீரென மாயமானார்கள்.
லிங்கா படத்தை திருச்சி - தஞ்சையில் திரையிட்ட வகையில் தனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறி, விஜயபார்கவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை சிலர் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் தகவல் அனுப்பினர். அந்த நிறுவனத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த நான்குபேர் தங்களை லிங்கா விநியோகஸ்தர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அவர்களில் ஒருவர் தன்னை திருச்சி - தஞ்சை பகுதி விநியோகஸ்தர் என்று கூறி, லிங்காவை வெளியிட்டதிலஸ் தனக்கு ரூ 8 கோடி நஷ்டம் என்றார். மேலும் ரஜினி பிறந்த நாளில் இந்தப் படத்தை வெளியிட்டது தவறு, அது என்ன தேசிய விடுமுறை நாளா, ரஜினி ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்றெல்லாம் அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அவரது புகார் குறித்து லிங்கா தயாரிப்பாளர் மற்றும் பிரதான விநியோகஸ்தரான வேந்தர் மூவீஸிடம் விசாரித்தபோது, இப்படி ஒரு விநியோகஸ்தரே இல்லை என்றும், அவர் கூறும் விலைக்கு படம் விற்கப்படவும் இல்லை என்றும் தெரிவித்தனர்."
படம் வெளியாகி ஒரு வாரம் கூட முடியவில்லை. திரையிட்ட அனைத்து அரங்குகளிலும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் நஷ்டம் என்று எப்படி சொல்ல முடியும்? இதை விநியோகஸ்தர்கள் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் சொல்லாமல், பிரஸ்ஸை அழைத்தது ஏன்? இது திட்டமிட்ட சதி என்பதைப் புரிந்து கொள்ள இதுவே போதும். லிங்கா வசூல் இதற்கெல்லாம் பதிலடியாக அமையும்," என்றனர்.
மேலும் திருச்சி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஏரியாக்களில் முதல் வாரம் வெளியான அனைத்து அரங்குகளிலும் படம் இரண்டாவது வாரமும் நல்ல வசூலுடன் தொடர்கிறது என்றும் தெரிவித்தனர்.
புகார் கூறிய 'விநியோகஸ்தர்' மற்றும் அலுவலக முற்றுகை குறித்து தயாரிப்பாளர் சார்பில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் மாயமாகிவிட்டனர். அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணும் வேலை செய்யவில்லை!
http://tamil.oneindia.com/news/tamilnadu/campaign-against-rajini-s-lingaa-217353.html
|