"என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். அதற்கு பதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்’’ என்று ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு வரும் 12-ம் தேதி 65-வது பிறந்த நாள் வரும் நிலையில், பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை இரண்டு மாதத்துக்கு முன்பிருந்தே செய்து வந்தனர்.
இந்நிலையில், பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை ரஜினிகாந்த் திடீர் என்று ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அவர், "எனது பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரத்து செய்துள்ளனர். ரஜினிகாந்தின் வேண்டுகோள்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகளில் இறங்கி உள்ளனர்.
ரஜினிகாந்தும் ரசிகர்மன்றங்கள் மூலமாக உணவு, துணிமணிகள், போர்வை, மருந்து மாத்திரைகள், பாய்கள், தலையணைகள் உள்ளிட்ட உதவிப்பொருட்களை வழங்கி வருகிறார். தமிழகம் முழுவதும் இதுவரை ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரண உதவிப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் அனுப்பி வைத்து இருப்பதாக ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தனது பிறந்த நாளையொட்டி தனது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் விருந்து அளிக்க ஏற்பாடு செய்து இருந்ததையும்
ரஜினிகாந்த் ரத்து செய்துவிட்டார்.
|