இரண்டு தினங்களுக்கு முன்பே கோவாவிலிருந்து சென்னை திரும்பிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடந்த நான்காம் தேதியிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் வெள்ளச் சேத விபரங்களை தனது நண்பர்கள் மற்றும் மண்டப நிர்வாகிகள் மூலம் கேட்டறிந்தவர், உடனடியாக சென்னை திரும்ப முயன்றாலும், கடுமையான மழைச் சூழல் காரணமாக
முடியவில்லை.
நேற்று முன்தினம் அமைதியாக சென்னை திரும்பியவர் முதலில் விசாரித்தது, வெள்ள நிவாரணத்துக்கு அரசை தாண்டி நாம் எப்படி நேரடியாகச் செய்ய முடியும் என்பதற்கான சாத்தியக்கூறுகளைத்தான் (ஆனால் அதற்குள் எந்திரன் 2 ஐ ஆரம்பித்துவிட்டதாக ஏக புரளிகள்).
மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களுடன் கலந்து பேசிய பிறகு, நிவாரணப் பொருள்களை ரசிகர்கள் மற்றும் பிற தன்னார்வலர்களுடன் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தர வேண்டும் என்று முடிவு செய்தாராம்.
சென்னையில் போதிய அளவு பொருட்கள் கிடைக்காததால், பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை அனுப்பச் சொன்ன ரஜினியுடன், ஆர்ட் ஆப் லிவிங் போன்ற அமைப்பினரும் கைகோர்த்துள்ளனர். கூடவே ஏராளமான ரஜினி ரசிகர்கள்.. இணைய வழி செயல்படும் மிக இளம் வயது ரசிகர்கள்.
இந்த முறை நிவாரணப் பொருட்கள் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் இருப்பு வைக்கப்படவில்லை. பொறுப்பை மகள்கள் மற்றும் மருமகன்கள் கையில் ஒப்படைத்தவர், விநியோகத்தை ரசிகர்களை நம்பி ஒப்படைத்துள்ளார்.
கடந்த நான்கைந்து நாட்களாகவே தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் (நுங்கம்பாக்கம் காவல் நிலையம் பின்புறம்) ஒரு வெள்ள நிவாரண விநியோக மையமாக மிக பிஸியாக உள்ளது. ரஜினியின் மகள்கள், மருமகன் தனுஷ், பிஆர்ஓ ரியாஸ் போன்றவர்கள் மிக பிஸியாக அங்கே பொருள்களைப் பிரித்து மாவட்டவாரியாக அனுப்பி வருகின்றனர்.
இதுவரை அனுப்பப்பட்டுள்ள உதவிப் பொருள்களின் மதிப்பு ரூ 5 கோடி என்கிறார்கள். இன்னும் சில தினங்களுக்கு நிவாரணப் பொருள் விநியோகம் தொடர்கிறதாம். இன்று காலை கூட ஹைதராபாத் மற்றும் பெங்களூரிலிருந்து 5-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரணப் பொருள்கள் குவிந்தன.
வெறும் அன்றாடத் தேவைகளுக்கான உணவு, தண்ணீர், போர்வை, நாப்கின், ரொட்டி, பால் பொருட்கள் என்றில்லாமல், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் மறுவாழ்வுக்குத் தேவையான சமையல் சாதனங்கள், முக்கிய வீட்டு சாமான்கள், கட்டுமானப் பொருள்கள் போன்றவற்றை வழங்கவும் முடிவு செய்துள்ளார்களாம்.
இந்தப் பணியிலிருப்பவர்களுக்கு ரஜினி தரப்பிலிருந்து போடப்பட்ட முக்கிய நிபந்தனை…’எக்காரணம் கொண்டும் இந்த உதவிகளை விளம்பரப்படுத்த வேண்டாம்… தன் பெயர், படம் எதையும் பயன்படுத்த வேண்டாம்’ என்பதுதானாம்.
ஏற்கெனவே முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்காக ரூ 10 லட்சத்தை ரஜினி அளித்துள்ளார். சென்னையை மழைவெள்ளம் கடுமையாகத் தாக்குவதற்கு முன்பே இந்தத் தொகையை அவர் தந்துவிட்டார். சமீபத்திய மழை வெள்ளத்தின்போது, தனது ராகவேந்திரா மண்டபத்தை ஏழை மக்கள் தங்குவதற்காகத் திறந்துவிட்டுள்ளார்.
வரவேண்டிய நேரத்தில் கரெக்டாகத்தான் வந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்!
-தமிழ்சினிமாலைவ்
|