பாட்ஷா வசனம் படத் தலைப்பானது… ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்ற ஜிவி பிரகாஷ்!
பாட்ஷா படத்தில் ஒரு திருப்புமுனைக் காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும் ஒரு வசனம் படு பிரபலம்… அது, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு..’.
இதுவே இப்போது ஒரு படத்தின் தலைப்பாகிறது. படத்தின் ஹீரோ ஜிவி பிரகாஷ். தயாரிப்பது ரஜினியின் 2.ஓ படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம்தான்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், ரஜினியைச் சந்தித்துள்ளார் ஜிவி பிரகாஷ்குமார். படத்துக்கு ரஜினியின் வசனமான ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு’ என்ற தலைப்பு வைத்திருப்பதால், ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்றாராம் ஜிவி பிரகாஷ்.
2.0 படப்பிடிப்பில் இருந்த ரஜினியை ஜி.வி.பிரகாஷும், இயக்குனர் சாம் ஆண்டனும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். ரஜினியும் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்தச் சந்திப்பு குறித்து ஜிவி பிரகாஷ் கூறுகையில், “இந்தத் தலைப்பு ரஜினி சாரின் பாட்ஷா படத்திலிருந்து எடுக்கப்பட்டது. எனவே அதை அவரிடம் முறைப்படி சொல்லி ஆசி பெற விரும்பினோம். 2.ஓ படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி சாரைப் பார்த்து இதைக் கூறியதும் அவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார். டார்லிங் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்ததாகப் பாராட்டினார்,” என்றார்.
-என்வழி
|