லாபத்தை எதிர்பார்க்காதே, மனித நேயத்தையும் பார் என்ற வாசகங்களை தனது தாரக மந்திரம் என்கிறார் ரஜினி கணபதி. விருதுநகர் மாவட்டம் மேட்டுப்பட்டி என்ற இடத்தில், இவர் சாதாரண டீ கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் சிறப்பே கடையில் இருக்கும் எந்தப் பொருளை வாங்கினாலும் ஒரு ரூபாய் ஜம்பது காசு தான்.
ஒரு டீ, காபி, பஜ்ஜி, உளுந்த, பருப்பு வடை, ரொட்டி, மற்றும் 50 கிராம் சீவல், 50 கிராம் இனிப்பு, 50 கிராம் காரம் என எல்லாமே இவரது கடையில் ஒரு ரூபாய் ஜம்பது காசு தான். மற்ற டீ கடைகளில் இவைகள் அனைத்துமே இரண்டு ரூபாய் ஜம்பது காசு, மூன்று ரூபாய் என்று விற்பனை செய்யப்படுகிறது. இவரால் எப்படி சமாளிக்க முடிகிறது என்று இவரிடம் கேட்ட பொழுது.......
நான் நடிகர் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர். அதனால் தான், கணபதி என்ற எனது பெயரை ரஜினி கணபதி என மாற்றிக் கொண்டேன். உன் வாழ்க்கை, உன் கையில் என்ற எங்கள் தலைவரின் வார்த்தைக்கு ஏற்ப வாழ்ந்து வருகிறேன். சுமார் 10 ஆண்டுகளாக டீ கடை தான் நடத்தி வருகிறேன். எனது கடைக்கு அனைத்து பிரிவு மக்களும் வந்தாலும் பெரும்பாலும் உடல் உழைப்பை மட்டுமே இருக்கின்ற ஏழை, நடுத்தர மக்கள் தான் அதிகம் வருகிறார்கள். இவர்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை கொடுக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு தான் இந்தக் கடையை ஆரம்பித்து நடத்தி வந்தேன். ஆரம்பத்தில் அனைத்துமே ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தேன். இப்படி ஒரு ரூபாய்க்கு அனைத்தப் பொருட்களையும் 6 ஆண்டுகளாக விற்பனை செய்து வந்தேன். அதன் பின் விலைவாசி கடுமையாக உயர்ந்த காரணத்தினால் தற்பொழுது வரை அனைத்துப் பொருட்களையும் ஒரு ரூபாய் ஜம்பது காசுக்கு விற்பனை செய்து வருகிறேன். எனக்கு இது எப்படி கட்டுபடி ஆகிறது என மற்ற கடைக்காரர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைவருமே கேட்கிறார்கள். இந்த வியாபாரத்தால் எனக்கு நஷ்டம் என்றுமே வந்தது கிடையாது. நான் யாரையும் வேலைக்கு வைத்துக் கொள்வது கிடையாது. அனைத்து வேலைகளையும் நானும், எனது மனைவியுமே செய்து விடுவோம். அதனால் வேலை ஆட்களுக்கு கொடுக்கும் சம்பளம் மிச்சமாகி விடும். அதே போல் அனைத்து பொருட்களையும் மொத்தமாக வாங்கி விடுவோம். அதனாலும் ஓரளவு விலை குறைவாக கிடைக்கும். இப்படித் தான் கடையை நடத்தி வருகிறோம்.
ஆரம்பத்தில் எனது மனைவி உள்பட அனைவரும் இப்படி தனியாக கஷ்டப்பட்டு ஏன் குறைந்த விலையில் விற்கிறாய் மற்றவர்கள் போல் விற்பனை செய்து கொள்ளை லாபம் பார் என திட்டினார்கள். இன்றும் திட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அரம்பகாலத்தில் ஒரு வியாபாரம் என்பது, லாபத்தை மட்டுமே முக்கியமானதாக கருதாமல் மக்களுக்கு செய்கின்ற ஒரு சேவையாக இருந்தது. ஆனால் இன்று அனைத்து விதமான வியாபாரிகளுமே பணம் சம்பாதிப்பதே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பொருட்களுக்கும் இவர்கள் வைப்பது தான் விலை. இவர்கள் வைத்தது தான் சட்டம். அப்பாவி விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி, கொள்ளை விலைக்கு விற்று கொள்ளை அடித்து வருகின்றனர். இவர்களின் குறிக்கோள் எப்படியாவது மக்களிடம் பணத்தை கறக்கவே குறியாக இருக்கின்றனர். இவர்களின் அராஜகத்தை ஒழிக்கத் தான் இன்று பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் மொத்த, சில்லரை வணிகத்தில் இறங்கி இருக்கிறது. இதனை நாம் வரவேற்க வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு குறைந்த விலையில், நஷ்டம் இல்லாமல் விற்பனை செய்ய வேண்டும். இப்படி நான் இந்த டீ கடையை நடத்தி வருவதால் எனக்கு எந்த தீங்கும் இது வரை எனக்கு வந்ததில்லை. இந்தத் தொழிலால் நானும் பணம் சம்பாதிக்கிறேன். பணம் சேமித்துக் கொண்டு தான் வருகிறேன். நோய் நொடி இல்லாமல் எனது வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. பிற டீ கடைக்காரர்கள் ஒரு லீட்டர் பாலில் இரண்டு லிட்டர் தண்ணீர் கலந்து டீ போடுவார்கள். நான் அப்படி செய்வது கிடையாது. ஒரு லீட்டருக்கு ஒரு லிட்டர் தான் தண்ணீர் கலப்பேன். அதே போல் தரமான 3 ரோஸஸ் டீ தூளைத் தான் பயன்படுத்தி வருகிறேன். ஒரு முறை எனது கடையில் டீ, காபி குடித்து விட்டு சென்றவர்கள் மறு முறை எனது கடையை தேடி வருவார்கள். இது தான் எனது தொழிலின் வெற்றியாக நான் நினைக்கிறேன் என நெகிழ்ச்சியாக சொல்கிறார்.
கடை முழுவதும் ரஜினியின் புகைப்படங்கள், அவரது பஞ்ச் டயலாக்குகளை ஒட்டியிருக்கிறார். அதில் ஒன்று. என் வழி தனி வழி. ரஜினி கணபதியின் வியாபார வழியும் தனி வழிதான் போல.
Source : http://www.tamiloviam.com/unicode/03080703.asp
|