`ஹரிதாஸ்' சாதனையை `சந்திரமுகி' முறியடிக்குமா?
700 நாட்களை தாண்டி ஓடுகிறது
ரஜினிகாந்த் நடித்த `சந்திரமுகி' படம், 700 நாட்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. `ஹரிதாஸ்' படத்தின் சாதனையை, `சந்திரமுகி' நெருங்கிக்கொண்டிருக்கிறது.
`ஹரிதாஸ்'
தமிழ் பட வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம், `ஹரிதாஸ்.' இந்த படம், ஒரே தியேட்டரில் 784 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்தது.
இது, தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்த படம். அவருக்கு ஜோடியாக பிரபல பாடகி என்.சி.வசந்த கோகிலம் நடித்து இருந்தார். டி.ஆர்.ராஜகுமாரி, `ரம்பா' என்ற தாசியாக வில்லியாக நடித்து இருந்தார். இவருடைய அழகில் மயங்கி, பாகவதர் தனது சொத்துக்களை எல்லாம் இழப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
1944-ம் வருடம் தீபாவளி பண்டிகை அன்று `ஹரிதாஸ்' திரைக்கு வந்தது. சென்னை பிராட்வே தியேட்டரில், தினசரி 2 காட்சிகளாகவும், சனி, ஞாயிறில் 3 காட்சிகளாகவும் 112 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.
`சந்திரமுகி'
பாகவதர் நடித்த `ஹரிதாஸ்' படத்தின் சாதனையை, ரஜினிகாந்த் நடித்த
`சந்திரமுகி' படம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 2005-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி, இந்த படம் திரைக்கு வந்தது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, பி.வாசு டைரக்டு செய்திருந்தார்.
ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாராவும், பிரபு ஜோடியாக ஜோதிகாவும் நடித்து இருந்தார்கள். தமிழ் பட வரலாற்றில், மிக அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்த பட வரிசையில், `சந்திரமுகி' யும் இடம்பெற்று இருக்கிறது.
700 நாட்கள்
சென்னை சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்ட `சந்திரமுகி,' தொடர்ந்து 700 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து 800 நாட்கள் வரை `சந்திரமுகி' படம் ஓடி, `ஹரிதாஸ்' படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று சிவாஜி புரொடக்ஷன்ஸ் ராம்குமார் தெரிவித்தார்.
Source : Thina Thanthi
|