சென்னை:''நான் கொஞ்ச நாட்களுக்கு முன், அரசியலில் புது புள்ளி போட்டேன்.அந்த புள்ளி, தற்போது அமைதியாக, யாருக்கும் தெரியாமல், சுழலாக உருவாகி உள்ளது.''இந்த சுழலை தடுக்க முடியாது. அந்த அலை கரையை நெருங்க நெருங்க, தேர்தல் நெருங்க நெருங்க, அரசியல் சுனாமியாக மாறும்,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.
'சாணக்யா' இணையதள சேனல் முதலாம் ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா, சென்னையில், நேற்று நடந்தது. அதில், ரஜினி பேசியதாவது:
''எல்லோரது பேச்சைக் கேட்பவரும் உருப்பட மாட்டார். யார் பேச்சையும் கேட்காதவரும் உருப்படமாட்டார். அரசியலில் நேரம்தான் வேலை செய்யும். சரியான நேரத்தில் ஒரு சுழல் உருவாகும். அது அலையாக மாறும்போதுதான் நாம் இறங்க வேண்டும்.
அலை உருவாக வேண்டும். எம்ஜிஆர் முதல்வராக சினிமா துறையிலிருந்து வந்தார். திமுகவுக்காக உழைத்தார். மிக நல்லவர். கலைஞர் முதல்வராக வருவதற்கு அவரும் ஒரு காரணம். அவரையே கட்சியை விட்டு தூக்கிப் போட்டார்கள்.
திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர் கணக்கு கேட்டதற்காகத்தான் கட்சியில் இருந்து தூக்கிப் போட்டார்கள். அவரே ராஜினாமா செய்திருந்தால் அந்த பேர் வந்திருக்காது. அவரைத் தூக்கிப் போட்டார்கள். அவர் மக்கள் மத்தியில் போய் நான் என்ன தப்பு செய்தேன் என்று கேட்டார். அனுதாப அலையாக அது மாறியது. அவரது புகழும் சேர்ந்து முதல்வர் ஆனார்.
1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது. அப்போது திமுகவுக்கு எதிராக ஒரு அலை உண்டானது. அதனால்1991-ல் ஜெயலலிதா முதல்வரானார். ஆந்திராவில் அதேபோல என் என்.டி.ஆர். ஒரு அலையை உருவாக்கினார். அந்த மாதிரி ஒரு அலைதான் முக்கியம். அந்த அலை மிக முக்கியம்.
நானும் அரசியலில் ஒரு புள்ளி போட்டேன். அது வலுவாக யாருக்கும் தெரியாமல் ஒரு சுழலாக உருவாகிவிட்டது. அதைத் தடுக்க முடியாது. அது மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. அதை அலையாக மாற்ற வேண்டும். அதற்கு ரஜினிகாந்த் மக்களிடம் செல்ல வேண்டும். ரசிகர்கள் மக்களிடம் செல்ல வேண்டும். அந்த அலை கரையை நெருங்க நெருங்க, தேர்தல் நெருங்கும்போது மிகப் பெரிய அரசியல் சுனாமியாக மாறும். அது ஆண்டவன் கையில் உள்ளது. மக்கள் கையில் உள்ளது.
நீங்கள்தான் அதை உருவாக்க வேண்டும். உங்கள் கையில்தான் அது உள்ளது’’.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
|