![](https://rajinifans.com/news/admin/indeximages/202006141592147357aruna2.jpg) அருணாச்சலம் படத்தைப் பற்றி பார்க்கும் முன் அந்த படம் வெளியான காலகட்டத்தைப் பற்றி நாம் கொஞ்சம் அறிந்து கொள்வது, அந்தப் படத்தைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யத்தை இன்னும் கொஞ்சம் கூட்டும்.
1996 தமிழ் நாடு சட்டசபை தேர்தலை சந்தித்து முடித்து இருந்தது. சூப்பர் ஸ்டார் கைக் காட்டிய கூட்டணி ஆட்சியில் அமர்ந்து இருந்தது.
தமிழகம் எங்கும் சூப்பர் ஸ்டாரின் புகழ் உச்சியில் இருந்த நேரம் அது. தமிழ்நாட்டின் தலைமகனாய் ரஜினி கொண்டாடப்பட்ட நேரம் அது.
அரசியல் மேடைகளில் ரஜினியின் பெயர் தனி மரியாதையோடு உச்சரிக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சொந்த தயாரிப்பில் அருணாச்சலம் 1997ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு திரையைத் தொடுகிறது.
அன்று தமிழ் திரையுலகை தன் பிளாக் பஸ்டர் நகைச்சுவை படங்களால் திரும்பிப் பார்க்க வைத்தவர் சுந்தர் C, தமிழ் மக்களுக்கு நகைச்சுவை வசனங்கள் என்றால் கட்டாயம் நினைவுக்கு வரும் ஒரு பெயர் கிரேஸி மோகன்
இந்த இரு நகைச்சுவை ஜாம்பவான்களும் சூப்பர் ஸ்டார் தன் பொது வாழக்கை உச்சம் தொட்ட நிலையில் கைகோர்த்தனர்.
சூப்பர் ஸ்டார் படங்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு தொண்ணூறுகளில் அது அரசியல் சார்ந்த ஒரு எதிர்பார்ப்பாக அருணாச்சலம் வந்த நேரத்தில் உச்சம் கொண்டிருந்தது.
ரஜினி ரசிகன் ரஜினி படம் பார்த்து பொழுது போக்க மட்டுமின்றி தன் தலைவன் நாட்டுக்காக அடுத்து என்ன செய்தி சொல்லப் போகிறார் என்ற ஒரு ஆர்வத்தோடு படம் பார்க்க ஆரம்பித்து இருந்தான்.
மக்களை மகிழ்விக்க மட்டும் இன்றி அவர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டிய பொறுப்பும் சூப்பர் ஸ்டார் படங்களுக்கு வந்து சேர்ந்தது, இதை ரஜினியும் உணர்ந்தே இருந்திருக்கிறார் என்பது இப்போது நாம் அருணாச்சலம் பார்க்கும் போது நன்றாக புரிகிறது.
சுந்தர் C மற்றும் கிரேஸி மோகனும் இதை நன்கு உள்வாங்கி கொண்டிருந்தார்கள் என்றே தெரிகிறது.
அருணாச்சலம் என்ன மாதிரியான படம், பார்ப்போம் வாங்க.
ரஜினி படங்கள் சூப்பர் ஸ்டார் படங்களில் இருந்து Greatest சூப்பர் ஸ்டார் படமாக முழுதாக மாறியது இங்கு தான்.
அருணாச்சலம் என்பது முழுக்க முழுக்க ரஜினி தான். அண்ணாமலையில் ஒரு பால்காரர் தெரிவார், பாட்ஷாவில் ஒரு ஆட்டோக்காரர் தெரிவார் ஆனால் அருணாச்சலத்தில் ரஜினி மட்டுமே தெரிவார்.
பொறுப்பான ரஜினி,
நியாமான ரஜினி,
அன்பான ரஜினி,
காதலிக்கும் ரஜினி
அவமானப் படும் ரஜினி.,
திருப்பிக் கொடுக்கும் ரஜினி
ஜெயிக்கும் ரஜினி
தத்துவமான ரஜினி
நமக்கு பிடிச்ச ஸ்டைல் ஆன ரஜினி
இதை வைத்து இதை சுற்றி சம்பவங்கள் சண்டைகள் ஆடல் பாடல் தேடல் பிரிவு கூடல் கொண்டாட்டம் என ஒரு பிரமாண்டமான படத்தை கட்டி எழுப்பி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் C.
அதற்கு மற்ற கலைஞர்கள் அழகு தோரணங்கள் கட்டி மெருகு கூட்டி இருக்கிறார்கள்.
அதில் உயர பறக்கிறது சூப்பர் ஸ்டாரின் வெற்றி கொடி
ஒரு அரசனுக்குரிய அறிமுகம் இந்த படத்தில் ரஜினிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பக் காட்சிகள் அலங்காநல்லூர் என்ற ஊரின் முடி சூடா மன்னனாக அருணாச்சலத்தை நமக்கு காட்டுகிறது.
ரஜினி இல்லாமலே அவர் பெயர் சொன்ன உடனே தவறுகள் தடுக்கப் படுகின்றன, தவறு செய்பவர்கள் பதறுகிறார்கள்.
அப்படிப் பட்ட சர்வ வல்லமை வாய்ந்த அருணாச்சலம் என்ற கேள்வியும் ஆர்வமும் அலங்காநல்லூருக்கு அருணாச்சலம் வீட்டு திருமண நிகழ்வுக்கு வரும் அவன் அத்தை குடும்பத்திற்கு ஏற்படுகிறது. முக்கியமாக முதல் முறையாக அந்த ஊருக்கு வரும் அருணாச்சலம் அத்தை மகள் வேதவல்லிக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
ரசிகர்களும் அட சீக்கிரம் அருணாச்சலத்தைக் கண்ணுல்ல காட்டுங்க என்று ஆர்வம் கூடி நிற்கிறார்கள்.
அருணாச்சலத்தின் தரிசனம் யானை பிளிற மணிகள் ஒலிக்க கோயிலின் மையத்தில் பக்தி மணம் கமழ நடக்கிறது.
ஒரு குதூகலம் நிறைந்த அறிமுகப் பாடலை அடுத்து கதை சுந்தர் C யின் வழக்கமான பிராண்ட் நகைச்சுவை பாதையில் முழு வேகத்தில் பயணிக்கிறது.
சுந்தர் C படங்களில் சின்னஞ் சிறு மாற்று புரிதல்களை அடிப்படையாக கொண்டு அதை நகைச்சுவை சம்பவங்கள் ஆக்கி படத்தை நகர்த்தி செல்வது வழக்கம்.
அருணாச்சலத்திலும் அந்த கலகலப்பு இருக்கிறது. அருணாச்சலத்தின் மாமா அறிவழகனை அருணாச்சலம் என்று வேதவல்லி தவறாக எண்ணி அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள் எல்லாம் நல்ல நகைச்சுவை.
ஒரு கிராமம், அங்கு ஒரு பெரிய வீடு, வீடு நிறைய உறவுகள் இதெல்லாம் சுந்தர் C படங்களில் வரும் முத்திரை சங்கதிகள். அது அருணாச்சலம் படத்திலும் இருக்கிறது.
அருணாச்சலம் தங்கை திருமணம் தான் படத்தின் ஆரம்பக் காட்சிகள் நகர்கின்றன. அருணாச்சலம் - வேதவல்லி அறிமுகம், கொஞ்சும் கலகல காதல், அதில் இடைப்படும் அறிவழகன் என்று வெறும் சம்பவங்களாலே படம் ஓடி விடுகிறது.
இரண்டு பாடல்களும் முடிந்து விடுகிறது.
தங்கையின் திருமணக் கொண்டாட்டம் என படம் போய் கொண்டிருக்கும் போது, சண்டைக்காட்சிக்காக ஒரு இடம் வருகிறது. திருமணத்தை நிறுத்த அருணாச்சலத்தின் மாமனும் அவர் மகனும் வருகிறார்கள்.
இந்த சண்டைக்காட்சி மிகவும் ஜனரஞ்சகமான முறையில் அமைக்கப் பட்டிருக்கும், குறிப்பாக கம்பை தரையில் குத்தி எழுப்பி ரஜினி நடந்துப் போவதும் மணிக்கட்டில் இருக்கும் காப்பை நொடிப் பொழுதில் கையில் எடுத்து எதிரியின் முகத்தில் குத்தும் லாவகமும் இன்றும் தமிழ் திரையில் மாஸ் தருணங்களுக்கான ஒரு இலக்கணம்.
எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கும் போது அருணாச்சலம் அந்த குடும்பத்தின் மூத்த மகன் அல்ல, அவன் ஒரு அனாதை என்ற ஒரு முடிச்சை படத்தில் போடுகிறார் இயக்குனர்.
அதைத் தொடர்ந்து அருணாச்சலம் தன் வீட்டை விட்டு கிளம்பிப் பட்டணம் போகிறான். அங்கே ஆதரவின்றி இருக்கும் பீடா கடைக்காரன் காத்தவராயன் நட்பு கிடைக்கிறது.
பட்டணத்தில் ஒரு புது வாழ்க்கை துவங்குகிறான் அருணாச்சலம். ஆனால் அவன் மனத்தில் தான் ஒரு அநாதை என்று குத்தப்பட்ட முத்திரை பெரும் வருத்தத்தை தந்து கொண்டே இருக்கிறது.
நந்தினி என்ற பெண்ணுக்கு அருணாச்சலம் உதவ நேர்கிறது. அதன் மூலம் அவனுக்கு அந்தப் பெண்ணின் நட்பும் கிடைக்கிறது.
நந்தினிக்கு உதவும் கட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கும் சண்டைக் காட்சியும் ரசிக்கும் படியாக அமைக்கப்பட்டிருக்கும்.
பட்டணத்தில் வேதவல்லி அருணாச்சலத்தை சந்திக்கிறாள். அவளைக் கண்டு சந்தோசப்படும் நிலையில் அருணாச்சலம் இல்லை.
வேதவல்லி அருணாச்சலத்தை வீட்டுக்கு அழைத்து செல்கிறாள், அங்கு அவள் தந்தையால் அருணாச்சலம் கடுமையாக அவமானபடுத்தப்பட்டு அனுப்பப்படுகிறான்.
நந்தினியிடம் அருணாச்சலத்திற்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு காத்தவராயன் கேட்கிறான்.
வேலைத் தேடி செல்லும் இடத்தில் ஒரு முடிச்சை அவிழ்ந்து இன்னொரு முடிச்சு விழுகிறது.
அருணாச்சலம் தன் தந்தை யார் என்பதை நந்தினியின் தந்தை வக்கீல் ரங்காச்சாரி மூலம் அறிந்து கொள்கிறான்.
தமிழகத்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர் வேதாச்சலம் தான் தன் தந்தை என்பது அறிந்து மிகவும் மகிழ்கிறான் அருணாச்சலம். தந்தையின் பணத்தை விட தான் அனாதை இல்லை என்ற உண்மை அருணாச்சலத்திற்கு போதுமானதாக இருக்கிறது.
வேதாச்சலம் சொத்தை எல்லாம் வக்கீல் ரங்காச்சாரி தான் பராமரித்து வருகிறார் பல ஆண்டுகளாக அவர் வாரிசான அருணாச்சலத்தைத் தேடி வருகிறார்.
வேதாச்சலம் தன்னுடைய முப்பதாயிரம் கோடி சொத்தை மகனுக்கு கொடுக்க வக்கீலிடம் சில நிபந்தனைகள் விதித்திருக்கிறார்.
அருணாச்சலமோ பணத்தாசை இல்லாதவனாக இருக்கிறான். தன் தந்தையின் சொத்து தனக்கு வேண்டாம் என்றும் அதை தன் தந்தை விருப்பப்படி ஏழைகளுக்கு கொடுத்து விடுமாறு கூறிவிட்டு கிளம்புகிறான்.
நகைச்சுவைப் படமாக சென்று கொண்டிருந்த படத்தில் இறை நம்பிக்கை விதைக்கப்படும் இடம் இது தான்.
தொண்ணூறுகளின் பிற்பாதி ரஜினி படங்களில் ஆன்மீக தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது. ஆனால் அதை பிரச்சார நெடி இன்றி பாமர மக்கள் விரும்பும் வண்ணம் அமைந்தது கூடுதல் பலம்.
படத்தில் நான்கு வில்லன்கள் இந்த நிலையில் தான் அறிமுகம் ஆகிறார்கள்.
இவர்கள் நால்வரும் வேதாச்சலம் சொத்தை அபகரிக்க காத்து இருக்கிறார்கள்கள்
பணம் வேண்டாம் என்று கிளம்பும் அருணாச்சலம் மீண்டும் திரும்பி வர சொல்லும் காரணம் ஆத்திகர்கள் கொண்டாடும் விதமாக சொல்லப்படுகிறது.
லேசா சோர்ந்த திரைக்கதை மீண்டும் நிமிர்ந்து எழுகிறது.
முப்பது கோடி பணம் அருணாச்சலத்துக்கு கொடுக்கப்படுகிறது அதை முப்பது நாட்களில் செலவழித்தால் தந்தையின் முப்பதாயிரம் கோடிக்கான உரிமை கிடைக்கும் என்று வக்கீல் சொல்லுகிறார்.
ருசிகரமான விதிகளோடு போட்டி ஆரம்பிக்கிறது. அருணாச்சலம் போட்டியில் ஜெயிக்கக் கூடாது என அவனுக்கு எதிராக நால்வர் குழுவும் களம் இறங்குகிறது.
இந்தப் போட்டியின் பொருட்டு அருணாச்சலம் காதலிலும் விரிசல் விழுகிறது.
அருணாச்சலம் பிரச்சனைகளைத் தாண்டி முப்பது கோடி பணத்தை முப்பது நாட்களில் செலவழித்து போட்டியில் வென்றானா என்பதை இரண்டாம் பகுதி சொல்லுகிறது.
கிட்டத்தட்ட இரண்டாம் பகுதி ரஜினி என்ற தனி மனிதனின் எண்ண ஓட்டங்களை திரையில் கொண்டு வரும் பெரும் முயற்சியாகவே இயக்குனர் செய்து இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
வாழ்க்கை பணம், சினிமா அரசியல் குறித்த எள்ளல் என்று மீண்டும் சம்பவக் கோர்வைகளாக படம் செல்கிறது.
படத்திற்கு இசை தேவா, சூப்பர் ஸ்டார் உடன் இவர் கைகோர்த்து பணியாற்றிய மூன்றாம் படம் தான் அருணாச்சலம்.
படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்,
மூன்று பாடல்கள் வைரமுத்துவும், இரண்டு பாடல்களை பழனிபாரதியும், ஒரு பாடலை காளிதாசனும் எழுதியிருக்கிறார்கள்
அருணாச்சலத்தின் அறிமுகப் பாடல் "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நான் தாண்டா... " இன்றும் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப் படும் ஒரு பாடலாக இருந்து வருகிறது.
"அன்னைத் தமிழ் நாட்டில் நான் அனைவருக்கும் சொந்தமடா" வரிகள் அன்றைய நிலையில் ரஜினிக்கு தமிழ் நாட்டில் அபரிதமான செல்வாக்குக்கு கட்டியம் கூறும்.
இந்தப் பாட்டில் வரும் வரிகள் பெரும் வரவேற்பை பெற்றவை. ரஜினி வைரமுத்து கூட்டணியில் உருவான மறக்கமுடியாத பாடல்களில் முக்கிய இடம் இந்தப் பாட்டுக்கு உண்டு.
கர்நாடக மாநிலம் சோம்நாத்புராவில் உள்ள ஒரு புராதனக் கோயிலில் தான் இந்தப் பாட்டு படமாக்கப் பட்டிருக்கிறது.
"மாத்தாடு மாத்தாடு மல்லிகே..." இந்த பாடல் மிகவும் சுவாரஸ்யமான முறையில், விடுகதைகளின் பின்னணியில் ரசனையாக அமைக்கப்பட்டு இருக்கிறது. பழநிபாரதிக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த ஒரு பாட்டு இது.
"நகுமோ.." காதல் செறிந்த ஒரு இனிய மெல்லிசை பாடலாக படத்தில் வருகிறது.
"அல்லி அல்லி அனார்கலி..." கொஞ்சம் வேகமானப் பாட்டு, ரஜினியை விட ரம்பாவுக்காக அமைக்கப்பட்ட பாட்டு என்றும் சொல்லலாம். அக்காலத்தில் சுந்தர் C படங்கள் என்றால் அதில் நிச்சயம் ரம்பாவுக்கு ஒரு வேடம் இருக்கும் என்பது எல்லாரும் அறிந்த செய்தி.
"தலை மகனே கலங்காதே", ரஜினி புகழ் பாடும் ஒரு பாடல், ரஜினி ரசிகர்கள் அதை நிஜ வாழ்வின் ரஜினிக்கும் பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி கொண்டனர்.
"சிங்கம் ஒன்று புறப்பட்டதே " ரஜினி அரசியலுக்கு முன்னுரை எழுதிய ஒரு பாட்டு, ரஜினி அரசியல் குறித்த எத்தனையோ காணொளிகளில் இன்றும் இந்தப் பாட்டுக்கு கட்டாயம் இடம் உண்டு.
தேவா இந்தப் படத்துக்கு போட்டு இருக்கும் பின்னணி இசையையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். முந்தைய ரஜினி படங்களில் இருந்து கொஞ்சம் வேறு சாயலில் இருக்கும்.
இதற்கு பிறகு ஏனோ தேவா ரஜினி கூட்டணி அமையவே இல்லை.
படத்தில் கிரேஸி மோகன் வசனங்கள் பற்றி சொல்ல வேண்டும். அது வரை வெறும் நகைச்சுவை மட்டுமே தொட்டு எழுதிய கிரேசியின் பேனா இதில் சூப்பர் ஸ்டார்க்காக வாழ்க்கையையும் தொட்டு எழுதி இருக்கிறது என்பேன்.
"பார்த்து வேலை செய் பார்த்தவுடன் வேலை செய்யாதே. "
"தான் சம்பாதிச்சதை சேர்த்துட்டே போறான் பார் அவன் முட்டாள், தான் சம்பாதிக்கும் காசை அவனே செலவழிக்கிறான் பாரு அவன் தான் புத்திசாலி "
"மீசை வச்சவன் எல்லாம் ஆம்பளை இல்லை, மீசை முளைச்ச அப்பன் காசில் சாப்பிடாமல் தான் சம்பாதிச்சு அப்பா அம்மாவை உக்கர வச்சு சோறு போடுறானோ அவன் தான் ஆம்பளை "
"சில பேர் சொல்லி திருத்துவாங்க, சில பேர் அனுபவத்தில் திருந்துவாங்க, சிலர் உதைப்பட்டு தான் திருந்துவாங்க "
"ஒரு அப்பா அம்மா தன் புள்ளைங்களுக்கு கொடுக்கற பெரிய சொத்து நோய் நொடி இல்லாத உடம்பு, தெளிவான அறிவு "
"ஆண்டவன் எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுத்துற மாட்டான், ஏதாவது ஒரு குறை வைக்கிறான், அப்படிக் குறையே வைக்கலன்னு நாம் ஆண்டவனையே மறந்துடுறோம்"
இப்படி கிரேஸி வசனங்களை அடுக்கி கொண்டே போகலாம். கிரேஸி மோகனுக்கு இது ஒரு மைல் கல் படம்.
எல்லாவற்றையும் மிஞ்சும் வண்ணம் இன்றும் ரஜினியின் டாப் பத்து பஞ்ச் வசனங்களில் ஒன்றான, "ஆண்டவன் சொல்லுறான் அருணாச்சலம் செய்யுறான்" என்பதும் கிரேசியின் கைவண்ணம் தான்.
இதை எல்லாம் தாண்டி கிரேஸி மோகன் அருணாச்சலம் படத்தில் ஒரு குறிப்பிடத் தகுந்த வேடத்திலும் நடித்து உள்ளார்.
அருணாச்சலத்தில் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்து உள்ளார்கள்.
குறிப்பாக பெண் நட்சத்திரங்கள் ரொம்பவும் அதிகம், அதில் முதலில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ஆச்சி மனோரமா அவர்கள்.
படம் வரும் முன் நடந்த தேர்தலில் மேடைக்கு மேடை மனோரமா ரஜினியைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ரசிகர்களின் கடும் கோபத்தையும் சம்பாதித்து வைத்திருந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில் ரஜினி படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். ரசிக்கும் படியான கதாபாத்திரத்தில் வந்து ரஜினி ரசிகர்களின் அன்பை மீண்டும் பெற்று கொண்டார். இதுவே ஆச்சி சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடித்த கடைசிப் படமும் ஆகும்.
படத்தில் இன்னொரு முக்கிய பெண் வேடம் அருணாச்சலத்தின் பாட்டியாக வரும் வடிவக்கரசி, அருணாச்சலத்தின் மீது வெறுப்பை உமிழும் ஒரு பாத்திரம், கூன் போட்ட கெட்டப்பில் அசத்தியிருக்கிறார்.
படத்தில் இரண்டு நாயகிகள், சவுந்தர்யா அழகே உருவாக வந்து ரஜினியைக் காதலிக்கிறார், பின்னர் கொஞ்சமே நோகவும் அடிக்கிறார். ரஜினிக்கும் இவருக்குமான காதல் காட்சிகள் கலகலப்புக்கு உத்திரவாதம்.
இன்னொரு நாயகி ரம்பா, குளுகுளு என்று வந்துப் போனாலும் இவரது பாத்திரம் படத்தின் கிளைமேக்சில் முக்கியத்துவம் பெறுகிறது.
படத்தில் முந்தைய தலைமுறை நடிகர்களான மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோர் முக்கிய பாத்திரங்ககளில் வருகிறார்கள்.
படத்தில் இரண்டு நகைச்சுவை நடிகர்கள், செந்தில் மற்றும் ஜனகராஜ்.
கிராமத்துக்கு செந்தில் பட்டணத்துக்கு ஜனகராஜ் என்று பிரித்துக் கொடுத்து சிரிப்பு பட்டாசைக் கொளுத்திப் போடுகிறார்கள்.
ரஜினி படங்களின் ஆஸ்தான நடிகர் வினுச்சக்ரவர்த்திக்கு இதில் சின்ன வேடம் என்றாலும் நின்று விளையாடுகிறார்.
வில்லன்கள் நான்கு பேர்கள் என்று சொன்னோம் இல்லையா, அதற்கு தலைமை ரஜினிக்கு சரியான மல்லு கட்டும் ரகுவரன், அவரோடு இணைந்து நிழல்கள் ரவி, கிட்டி, மற்றும் விகேஆர்.
நான் அப்போவே சொன்னேன் என்று விகேஆர் யதார்த்தமாக ஆரம்பிக்கும் வசன மொழிக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அருணாச்சலம் ஒரு அரசியல் படம் என்று குறிப்பிட்டு இருந்தேன். அதைப் பற்றி கொஞ்சம் பேசுவோம்.
அருணாச்சலம் பணம் செலவழிக்க கட்சி ஆரம்பிப்பதாகவும் அதை தொடர்ந்து சில அரசியல் காட்சிகள் படத்தில் வருகிறது.
அந்த சிலக் காட்சிகளில் ரஜினி தன் அரசியல் சார்ந்த எண்ணங்களைக் கோடிட்டு காட்டி இருப்பார். தான் கட்சி ஆரம்பித்தாலும் அதில் தான் போட்டி இட மாட்டார். தன் நண்பனைத் தான் வேட்பாளராக நிறுத்துவார்.தான் மக்களோடு மக்களாக இருப்பதையே விரும்புவதாக சொல்லுவார். கட்சிக்கு என்னவோ அருணாச்சலம் கட்சி என்றே பெயர் இருக்கும்.
கட்சிக்கு சின்னமாக ருத்திராச்சையை அறிவிப்பார், அது அந்த ஆண்டவனின் சின்னம் என்றும் குறிப்பிடுவார்.ஆன்மீக அரசியலின் சின்ன முன்னோட்டமாக தான் அதை இப்போது பார்க்க தோன்றுகிறது தான்.
ஜனகராஜ் செந்தில் பொதுக்கூட்டம் பேசும் காட்சியில் கிரேஸி இன்னும் கொஞ்சம் புகுந்து விளையாடி இருக்கலாம், கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ரஜினிக்கு அருணாச்சலத்தைப் பொறுத்த வரை பெரிய வேலை இல்லை என்றே சொல்ல வேண்டும், அவர் வந்து நின்றாலே போதும் என்று தான் அருணாச்சலம் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ரஜினி வருகிறார், தன் சுறுசுறுப்பான திரை ஆளுமையால் அருணாச்சலமாக நின்று சுழன்று அடிக்கிறார். களத்தைத் தனதாக்கி தன் முத்திரையை மிகவும் எளிதாக்கா பதித்து கடந்து செல்கிறார்.
அருணாச்சலம் வெளியான ஆண்டு - 1997
இயக்கம் - சுந்தர் C
இசை - thevaa
ஒளிப்பதிவு - UK செந்தில் குமார்
வசனம் - கிரேஸி மோகன்
தயாரிப்பு - அண்ணாமலை சினி கம்பைன்ஸ் ( இதன் லாபம் ரஜினியோடு பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றிய எட்டுப் பேருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது )
சில தகவல்கள்
சுந்தர் C க்கு ரஜினி சொன்ன கதைப் பிடிக்காதபோதும் ரஜினியை இயக்கும் ஒரே வாய்ப்புக்காக இந்த படத்தை ஒப்புக் கொண்டாராம்.
அதாண்டா இதாண்டா பாட்டில் வரும் சிவலிங்கத்தை நன்றாக கவனித்தால் அது ஒரு அண்டா என்பது தெரியும், ரஜினியின் வேண்டுகோளுக்கு இணங்க கலை இயக்குனர் தயார் செய்த லிங்கம் அது.
அருணாச்சலம் படம் "Brewsters Millions" என்ற ஆங்கில நாவலை மேலாக தழுவி எடுக்கப்பட்டது என்ற பேச்சு உண்டு.
அருணாச்சலத்தில் ரஜினி அணிந்து இருக்கும் காப்பு அவருக்கு சொந்தமானது திருப்பதியில் நடைப்பெற்ற ஒரு பட விழாவில் அப்போதைய இணைந்த ஆந்திரா முதல்வர் கையால் சூப்பர் ஸ்டார்க்கு அணிவிக்கப்பட்டது.
அருணாச்சலம் படம் முடிந்த பிறகு வரும் படப்பிடிப்பு தளக் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு போனஸ் முதல் நாள் முதல் காட்சியில் அதை தவற விட்டு அதற்காகவே படத்தை மறு முறை பார்த்த ரசிகர்கள் ஏராளம்
ரஜினி ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட நடிகர், அவருடைய காமெடி டைமிங் சென்ஸ் உலகறிந்த விஷயம். அதைக் கருத்தில் கொண்டு அவருக்கு இன்னும் ஒரு நல்ல விளையாட்டு களம் அமைத்து கொடுத்து இருந்தால் அருணாச்சலம் 90களின் தில்லு முல்லுவாக கூட வந்து இருக்கலாம்
ரஜினியை நம்பி படமெடுத்து இருக்கிறார்கள், ரஜினிக்கு நம்பிக்கை கொடுக்கும் அளவுக்கு இருந்ததா என்று கேட்டால் விடை கொஞ்சம் குழப்பமாகவே இருக்கும்
அருணாச்சலம் - சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டு சூப்பர் ஸ்டார்க்காகவே வெற்றி வரலாறு படைத்த படமென்றால் அது மிகையாகாது.
|