நான் எம்.ஜி.ஆர். , நம்பியார் ஆகிய இருவருக்கும் அவர்கள் எனக்கு ஆரம்ப நாட்களில் செய்த உதவிக்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். இன்னும் ஒருவர் இருக்கிறார். அவருக்கு எப்படி நன்றி சொல்ல முடியும் என்றே தோன்றாத அளவுக்கு என்னை அன்புக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்.
இந்த திரையுலகில் அடக்கம் நிறைந்த சூது வாது பொய் கபடம் தெரியாத நேர்மை ஒன்றை மட்டுமே கொண்ட எளிமை விரும்பி மனிதர் வாழ முடியுமா என்று என்னை வியக்க வைத்த மனிதர் ஒருவர் உண்டு. அவர் விரலசைவுக்கு தமிழ் நாடே காத்திருக்கிறது. அது யார் என்று உங்களுக்கே தெரியும். ஆம். அவர்தான் ரஜினி".
அவரோடு நான் நடித்த முதல் படம் ஆறு புஷ்பங்கள். அதில் நடித்த போது ஒரு காட்சியில் அவர் ஒரு நூறு ரூபாய் கட்டை எடுத்து என் மீது அடிப்பது போல் வரும். நான் அவரிடம் நோட்டை கட்டாக அடிக்காதீர்கள், பின்னைப் பிரித்து விட்டு அடியுங்கள், காட்சியும் நன்றாக இருக்கும், எனக்கும் வலிக்காது என்று கூறினேன்.
அவரும் சரி என்றார். ஆனால் காட்சி எடுக்கப்படும் போது இதை மறந்து விட்ட ரஜினி அப்படியே கட்டாக அடிக்க என் முகத்தில் காயம் பட்டு விட்டது. உடனே " நான்தான் அப்பவே சொன்னேனே" என்று சத்தமாக கூறியபடி செல்ல, விஜய குமார் வந்து நான் உண்மையிலேயே சண்டை போடுவதாக நினைத்து என்னை தடுத்தார். ரஜினியும் என்னிடம் வந்து பல முறை மன்னிப்பு கோரினார். நானும் இது போல தவறுவது சகஜம் என்று கூறி விட்டேன்.
பின்னர் அலாவுதீனும் அற்புதவிளக்கும் படத்தில் நாங்கள் நடித்த போது ரஜினி ஒரு பூ ஜாடியை தூக்கி எறிவது போல் ஒரு காட்சி. அப்போது ரஜினி "ஐயா நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க மேல விழுந்திடப் போகுது" என்றார். நான் பழைய விஷயத்தை எப்பவோ மறந்துட்டேன். நான் சத்தமா பேசினதால நான் கோபப்பட்டதாக நினைக்காதீங்க, என் குரலே அப்படித்தான் என்றேன். ரஜினியும் சிரித்தார். என்னோடு எப்பவும் போல பழகினார்.
இது எனக்கு ஒரு ஆச்சர்யம். ஏனென்றால் நான் பல பேரை கடிந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் இது போன்ற ஓர் விஷயம் நடந்தால் அதையே சாக்காக வைத்து என்னோடு விரோதம் காட்டுவார்கள். ஆனால் ரஜினி இதில் நேர் எதிர். எந்த ஈகோவும் பார்க்க மாட்டார்.
பின்னர் வேலைக்காரன் படத்தில் நடித்த போது அவரிடம் எனக்கு ஒரு படம் பண்ணி தருமாறு கேட்டேன். அவரும் கண்டிப்பாக செய்கிறேன் ஆனால் இப்போ கமிட்மேன்ட் இருக்கு என்றார். நானும் வந்து விட்டேன். பிற்பாடு நான் லட்ச லட்சமாக சம்பாதிச்ச பணத்தை சரியான வழி காட்டுதல் இல்லாததால் இழந்து விட்டேன்.
ஒரு நாள் ரஜினியிடம் இருந்து போன் வந்தது. "ஐயா உங்களிடம் நான் பேசணும் " நானும் அவரை சென்று பார்த்தேன். "ஐயா நீங்கள் படம் பண்ணித் தர கேட்டிங்க. என் உடல் நிலை, மன நிலை காரணமாக நான் பல நாட்கள் இமய மலை போயிடறேன். இப்ப உங்கள மாதிரி இன்னும் சில பேருக்கும் சேர்த்து ஒரு படம் பண்ணி தரலாம்னு இருக்கேன், உங்க அபிப்பிராயம் என்ன" என்று கேட்டார்.
நான் "பாத்திரம் அறிஞ்சு போடும்பாங்க. நீங்க செய்யறத உதவின்னு சொல்லறத விட தர்மம்னு தான் சொல்வேன்" அப்படின்னு சொல்லிட்டு நன்றியுடன் திரும்பினேன். அந்த படம் தான் அருணாசலம். அதில் எங்களிடம் ஒரு பைசா கூட அவர் பெறவில்லை. மாறாக எங்களுக்கு தயாரிப்பாளர் என்ற பதவியையும் லாபத்தில் ஒரு பங்கையும் பிரித்துக் கொடுத்தார். என் எஞ்சிய காலத்தை நிம்மதியாய் கழிக்க அந்த பணம் பேருதவியாய் இருந்தது.
மேலும் நான் அவரிடம் அந்த படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த போது, "அண்ணே, உங்களை எல்லாம் பார்த்து பிரமித்துதான் நான் நடிக்க வந்தேன், எந்த வேஷம் வேணுமோ எடுத்து நடியுங்க, இதெல்லாம் என்கிட்டே கேக்கணுமா? "என்றார். எனக்கு நல்ல சம்பளமும் தனியாக கொடுத்தார்.
எங்கோ பிறந்து, வளர்ந்து, தமிழ் நாட்டுக்கு கலைச் சேவை செய்ய வந்த அவர் எனக்கு இவ்வளவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதுதான் அன்பு. பல பேர் அவர் புகழுக்காக செய்கிறார் என்று என்னிடமே சொன்ன போது நான் "இப்படி செய்து புகழ் பெற வேண்டிய நிலையில் அவர் இல்லை. அப்படியே இருந்தாலும், யாருக்கு இப்படி மனம் வரும்? என்று காட்டமாக கூறினேன்.
அந்த நல்ல மனிதர் நல்ல ஆரோக்யத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
- திரு.வி.கே.இராமசாமி.
Courtesy : http://www.eramanathan.blogspot.com/
|