கடந்த சில வாரங்களுக்கு முன்பு, துவங்க வேண்டிய ‘ராணா’ சூப்பர் ஸ்டாரின் உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால், அவர் குணமாகும் வரை ஒத்திவைக்கப்பட்டது. அவர் பரிபூரண குணம் பெற்று படப்பிடிப்புக்கு ஆயத்தமானவுடன் துவக்கவிழா தேதி ஏப்ரல் 29 என இறுதி செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், படத்துவக்க விழாவுக்கு இண்டஸ்ட்ரியின் பல சீனியர்களை அழைக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் முடிவு செய்த சூப்பர் ஸ்டார், அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாமே தனித் தனியாக ஃபோன் செய்து அழைப்பு விடுத்தார். அத்துணை பேருக்கும் நலம் விசாரித்துவிட்டு அழைப்பு விடுத்து, அவர் பேசிமுடிப்பதற்குள் 28 வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியாகிவிட்டது.
மறுநாள், காலை 9.00 மணிக்கு ஏ.வி.எம்.மில் பூஜை. அதற்காக காலை சீக்கிரமே எழுந்து தயாராகவேண்டிய நிர்பந்தம். எழுந்து தயாராகி, ராகு காலம் முடிந்த பின்பு, வீட்டை விட்டு கிளம்பி ஏ.வி.எம்.எம்முக்கு வந்தார் தலைவர்.
அப்போதே அவரை பார்த்தவர்கள் “தலைவர் ரொம்ப டல்லா இருக்காருப்பா… ” என்று பேசிக்கொண்டனர்.
விழாவுக்கு இதுவரை ரஜினி படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், ஏ.வி.எம் சரவணன், பஞ்சு அருணாசலம், வாலி போன்றோர் காலை தொட்டு ரஜினி வணங்கினார்.
எஸ்.பி. முத்துராமன், எஸ்.ஏ. சந்திரசேகரன், RC சக்தி, RB Choudhary, கே. நடராஜ், மகேந்திரன், கலைபுலி தாணு, எழுத்தாளர் சோ, வைரமுத்து, நடிகர் பிரபு, ராம்குமார், கே.ஆர்.ஜி., டி.எம்.சௌந்தரராஜன், கலைஞானம், முக்தா சீனிவாசன், சுரேஷ் கிருஷ்ணா, ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் அஸ்வின் மற்றும் சி.வி. ராஜேந்திரன், ஐஸ் அவுஸ் தியாகு, மக்கள் தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, சிங்கார வேலன், மவுனம் ரவி, ரியாஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.
இதற்கு பிறகு, மேக்கப் ரூமுக்கு சென்றவர், மேக்கப் போட்டவுடன் வெளியே வந்து, பட பூஜையில் கலந்துகொண்டார். (இதன் விபரங்கள் தனியாக தரப்படும்).
பின்னர் பஞ்சு அருணசாலம் கிளாப் அடிக்க, முதல் காட்சி படமானது. படத்தின் ஸ்க்ரிப்ட்டை பிள்ளையார் முன் வைத்து, பூஜை நடைபெற்றது. பின்னர் க்ரூப் போட்டோவில் காமிராக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, படத்தில் நடிக்க செட்டுக்குள் போய்விட்டார் ரஜினி.
வந்த வி.ஐ.பி.க்கள் மன நிறைவுடன் ஒவ்வொருவராக திரும்பி சென்றனர்.
இதனிடையே, செட்டுக்குள் நடந்துகொண்டிருந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சியில் தீபிகாவுடன் நடித்தார். சற்று நேரத்தில் அசௌகரியமாக இருப்பதாக கூறி, வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றார். உடல்நிலை மேலும் சற்று முடியாமல் அங்கு அவர் VOMIT செய்ய, பதறிப்போன குடும்பத்தார், உடனடியாக அவரை இசபெல்லா மருத்துவமைனயில் சேர்த்தனர். அவர் எத்துனை பெரிய வி.ஐ.பி…. சும்மா சாதாரண ட்ரீட்மென்ட் கொடுக்க முடியுமா? எனவே சிறப்பு பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்குள் விஷயம் காட்டுத் தீயாக பரவியது. சானல்கள், என்ன ஏது என்று சரிவர விசாரிக்காது அவர்கள் கேள்விப்பட்டதைஎல்லாம் தலைப்பாக இட்டு FLASH செய்தனர். நல்ல செய்தியையே என்றும் சொல்லி பழக்கமில்லாத ஜெயா டி.வி. இது போன்ற செய்திகளை விட்டு வைக்குமா? எல்லோரையும் முந்திக்கொண்டு செய்தி வெளியிட்டது. ஆங்கில சானல்கள் சும்மாயிருப்பார்களா? அவரவர்கள், அவர்களது பங்குக்கு B.P. மூச்சுத் திணறல் அது இது என்று செய்திகள் வெளியிட்டனர்.
விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இசபெல்லா ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர். சாட்டிலைட் டி.வி.க்களும் அந்த பகுதியை முற்றுகையிட, அங்கு கடும் கூட்டம் கூடி அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் லதா அம்மா மிகவும் டென்ஷனாகி அனைவரையும் கூட்டம் கூட வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக்கொண்டார்கள். (அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்) சௌந்தர்யா, அஸ்வின், ஐஸ்வர்யா, மற்றும் தலைவர் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் இருந்தனர்.
இதற்கிடையே, மீடியாவின் தொந்தரவு அதிகமாக இருக்கவே, சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் வெளியே வந்து, “அவருக்கு ஒன்னும் இல்லை. ஜஸ்ட் சாதாரண dehydration & food poison தான். அவரு ரெண்டு மூணு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும். அவரு எவ்வளோ பெரிய வி.ஐ.பி. சும்மா ஜெனரல் வார்டுல வெச்சு ட்ரீட்மென்ட் பண்ணமுடியுமா? அதான் இன்டென்சிவ் கேர்ல எந்த தொந்தரவும் இல்லாம் ட்ரீட்மெண்ட் கொடுத்தோம்” என்று சொல்லிவிட்டுபோனார். அடுத்து வந்த லதா அம்மா, “ரசிகர்கள் பயப்பட ஒண்ணுமில்லே. அவருக்கு food poison ஆயிடுச்சு. காலைல சாப்பிட்டது ஒத்துக்கலை. இப்போ அவர் ஆல்ரைட். நீங்கல்லாம் கிளம்பி போகலாம்” என்று அந்த டென்ஷனிலும் பொறுமையாக கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, முதல்வர் கருணாநிதி, சூப்பர் ஸ்டாரை மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு, உடனே வந்துவிட்டார். வந்தவர், தலைவரை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். “தம்பிக்கு ஒண்ணுமில்லை. அஜீரணம் தான். இப்போது நலமுடன் இருக்கிறார்” என்றார் அங்கிருந்த செய்தியாளர்களிடம். மனக்கசப்புக்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு முதல்வர் வந்து பார்த்தது, ரசிகர்களை நெகிழச் செய்துவிட்டது என்றால் மிகையாகாது.
முதலுதவி மற்றும் சரியான சிகிச்சைக்கு பிறகு ரஜினி மாலை 7 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆனார். மருத்துவர்கள் இன்னும் நான்கைந்து நாட்கள் அவர் முழு ஓய்வெடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
முன்னதாக மாலை கிரீன்பார்க் ஹோட்டலில் தீபிகா உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘ராணா’ படத்தின் பிரஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தனை களேபரங்களுக்கிடையே அது நடைபெறுமா என்று தெரியாது செய்தியாளர்கள் மற்றும் விஷயம் தெரிந்த ரசிகர்கள் உட்பட அனைவரும் தவித்துக்கொண்டிருந்தனர். ஆனால், ரஜினி, “பிரஸ்மீட்டை கான்சல் செய்யவேண்டாம். நான் கூட வருகிறேன்” என்று சொன்னார். ஆனால், ரவிக்குமார் உட்பட குடும்பத்தினர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “நீங்கள் எங்கேயும் வரவேண்டாம். கம்ப்ளீட் ரெஸ்ட் எடுங்க. பிரஸ் மீட் உட்பட எல்லாத்தையும் நாங்க பார்த்துக்குறோம்” என்றனர்.
தலைவரும் “எக்காரணத்தை கொண்டும் பிரஸ் மீட்டை ரத்து செய்யவேண்டாம். நீங்களே நடந்தவற்றை செய்தியாளர்களுக்கும் மக்களுக்கும் தெரிவித்துவிடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
எனவே, திட்டமிட்டபடி மாலை 7.30 க்கு ராணா பிரஸ் மீட் ஹோட்டல் கிரீன் பார்க்கில் துவங்கியது. சௌந்தர்யா ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், ரத்னவேலு, சுனில் லுல்லா, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
படம் குறித்து பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொண்ட ரவிக்குமார் இதையே தான் கூறினார். “நேத்து நைட் முழுக்க அவர் பர்சனலா ஃபோன் பண்ணி எல்லாரையும் கூப்பிட்டாரு. லேட்டா தான் படுக்கபோனாரு. காலைல ரெஸ்ட்டே இல்லாம ஷூட்டிங் வந்துட்டாரு. சாப்பிட்டது வேற ஒத்துக்கலை. அதான் இவ்வளவு பிரச்னையும். இந்த பிரஸ்மீட்டுக்கு கூட அவர் வர்றதா இருந்துச்சு. ஆனால் நாங்க தான் வரவேண்டாம்னு சொல்லிட்டோம். படத்தோட கதை அவரு தான் ரெடி செஞ்சார். நான் வெறும் ஸ்க்ரீன்ப்ளே மற்றும் டைரக்ஷன் தான்” என்று செய்தியாளர்களிடம் கூறினார் ரவிக்குமார்.
சூப்பர் ஸ்டாரின் நான்கு நாள் ஓய்வுக்கு பின்னர், மறுபடியும் ‘ராணா’ படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, விஷயத்தை கேள்விப்பட்டு பதைபதைத்து போன ரசிகர்கள் பலர் எனக்கு போன் செய்த வண்ணமிருந்தனர். “தலைவருக்கு food poison ஆயிடுச்சு. வேரொன்னுமில்லே. வதந்திகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். நீங்களும் பரப்பாதீர்கள். உண்மை என்னவோ, அதை தீர விசாரித்துவிட்டு, நமது தளத்தில் நான் தெரிவிக்கிறேன். நீங்கள் எது குறித்தும் கவலைப்படவேண்டாம்” என்று கூடுமானவரை அனைவரிடமும் ஆறுதலாக கூறினேன். அலுவலகத்தில் இருந்தபடியால் ஒரு கட்டத்துக்கு மேல், ஃபோனை எடுக்க முடியவில்லை… அந்தளவு கால்கள் வரத்துவங்கின. எனவே ஒவ்வொரு செய்தியாக நமது டுவிட்டரில் வெளியிட்டோம்.
தலைவருக்கு பயங்கர திருஷ்டி. வேறென்ன சொல்வது? திருஷ்டி கழிந்துவிட்டது என்று நினைத்துக்கொள்வோம்.
இனியெல்லாம் நலமே…!
|